இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். சூசையப்பரின் பாதுகாவல்

சேசுகிறீஸ்துவிடம் அர்ச். சூசையப்பரின் பரிந்துரை எவ்வளவு வல்லமையுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, ""அவர் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்'' (லூக்.2:51) என்ற நற்செய்தி வாக்கியத்தை அறிந்திருப்பது ஒன்றே போதுமானது. முப்பது வருடங்களாக, தேவசுதன் சூசையப்பருக்கும் மாமரிக்கும் மிக கவனமாகக் கீழ்ப்படிந்திருந்தார். சூசையப்பர் ஒரு வார்த்தை அல்லது ஒரு சைகை மூலம் தமது சித்தத்தை அவருக்குக் குறித்துக் காட்டுவது மட்டுமே தேவையாயிருந்தது. சேசுநாதர் உடனே அவருக்குக் கீழ்ப்படிந்தார். கீழ்ப்படிவதில் சேசுநாதர் கொண்டிருந்த இந்தத் தாழ்ச்சி, அர்ச். சூசையப்பரின் மகத்துவம் தேவமாதா நீங்கலாக மற்ற எல்லாப் புனிதர்களின் மகத்துவத்திற்கும் மேலானது என்று நமக்குக் கற்பிக்கிறது.

அர்ச். சூசையப்பரின் பாதுகாவலில் நாம் கொண்டிருக்க வேண்டிய நம்பிக்கை பற்றி அர்ச். தெரேசம்மாள் கூறும் காரியத்தை நாம் சிந்திப்போம்: ""நம் ஆண்டவர் ஒரு தேவையில் நமக்கு உதவும் வல்லமையை மற்றப் புனிதர்களுக்குத் தந்துள்ளதாகத் தோன்றுகிறார்; ஆனால் இந்தப் புனிதர் எல்லாவற்றிலும் நமக்கு உதவுகிறார் என்பதை அனுபவம் நமக்கு எண்பிக்கிறது; பூலோகத்தில் தாம் சூசையப்பருக்குக் கீழ்ப்படிந்திருந்தது போலவே, ப்போது பரலோகத்திலும் அவர் கேட்கும் எதையும் தாம் அவருக்கு மறுப்பதில்லை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டுமென நம் ஆண்டவர் விரும்புகிறார். அர்ச். சூசையப்பருக்குத் தங்களை ஒப்புவிக்கும்படி நான் அறிவுரை கூறியுள்ள மற்ற மனிதர்கள் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். சூசையப்பருக்குத் தோத்திரமாக ஏதாவது ஒரு பக்தி முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் அவருக்கு ஊழியம் செய்து, அதனால் எப்போதும் புண்ணியத்தில் வளர்ச்சி பெறாத யாரையும் நான் அறிந்ததில்லை. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதைத் தாங்களே பரிசோதித்துப் பார்க்கும்படி நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சம்மனசுக்களுடைய இராக்கினியையும், சேசுவின் குழந்தைப் பருவத்தில் அவர்கள் செய்யவும் அனுபவிக்கவும் வேண்டியிருந்த உழைப்புகளையும், துன்பங்களையும் தியானித்து விட்டு, இந்தத் திருத்தாயாருக்கும், தேவ திருச்சுதனுக்கும் அச்சமயத்தில் அர்ச். சூசையப்பர் செய்த அனைத்து சேவைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தாதிருப்பது எப்படி சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆகவே, நம் நிர்ப்பாக்கியங்களுக்கு மத்தியில் துன்புற்றவர்களாக நம் ஆண்டவர் நம்மைக் காணும்போது, எகிப்தின் பஞ்ச காலத்தில் பாரவோன் தன் மக்களுக்குக் கூறிய, ""சூசையிடம் போங்கள்'' என்ற வார்த்தைகளை நம் ஆண்டவர் நம்மிடம் கூறுவதாக நாம் கற்பனை செய்து கொள்வோம்: உங்களுக்கு ஆறுதல் தேவையானால், ""சூசையப்பரிடம் போங்கள்.''

அர்ச். சூசையப்பரே, என் பரிசுத்த பாதுகாவலரே, மாமரிக்குப் பிறகு, என் முதன்மையான பரிந்து பேசுபவராகவும், என் பாதுகாவலராகவும் நான் தேர்ந்து கொள்கிறேன். ஏதாவது ஒரு விசேஷ பக்தி முயற்சியாலும், உமது பாதுகாவலின் கீழ் என்னை வைப்பதாலும் ஒவ்வொரு நாளும் உம்மை மகிமைப்படுத்துவேன் என்று நான் வாக்களிக்கிறேன். உமது ஊழியனாக இருக்க நான் தகுதியற்றவன்; ஆனால் சேசு மரியாயின் மீது நீர் கொண்டுள்ள அன்பின் வழியாக, உமது நிரந்தர ஊழியனாக என்னை ஏற்றுக் கொள்ளும். இவ்வுலக வாழ்வில் நீர் அனுபவித்த சேசு மரியாயின் இனிய தோழமையைப் பார்த்து, என் வாழ்வு முழுவதும் கடவுளின் வரப்பிரசாதத்தை இழப்பதன் மூலம் அவரிடமிருந்து நான் ஒருபோதும் பிரிந்து விடாதபடி, தேவரீர் என்னைக் காத்துக் கொள்ள உம்மை மன்றாடுகிறேன்.

அர்ச். சூசையப்பர் ஒரு பரிசுத்த மரணத்தை நமக்குப் பெற்றுத் தரும்படியாக, விசேஷமாக நாம் அவரிடம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அவர், ஏரோதின் மரணக் கண்ணிகளிலிருந்து குழந்தை சேசுவைக் காப்பாற்றியதன் பலனாக, பசாசின் கண்ணிகளிலிருந்து மரிக்கிறவர்களை விடுவிக்கும் விசேஷ வரப்பிரசாத சலுகையைக் கொண்டிருக்கிறார். மேலும், சேசுவுக்கும், மாமரிக்கும் தாம் ஆற்றி வந்த பணிவிடைகளின் காரணமாக, அவர்கள் இருவருக்கும் உணவும் உறைவிடமும் தந்து காப்பாற்றியதன் காரணமாக, தமது பக்தர்களின் மரணத்தின் போது, சேசு மரியாயின் விசேஷ உதவியை அவர்களுக்குப் பெற்றுத் தரும் சலுகையையும் கொண்டிருக்கிறார்.

என் பரிசுத்த பாதுகாவலராகிய அர்ச். சூசையப்பரே, என் பாவங்களின் காரணமாக, ஒரு தீய மரணத்திற்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன். ஆயினும் நீர் என்னைக் காத்துக் கொள்வீர் என்றால், நான் இழக்கப்பட மாட்டேன். நீர் என் திவ்ய நடுவரின் ஒரு மிகச் சிறந்த நண்பராக மட்டுமின்றி, அவரது பாதுகாவலராகவும், அவரது சுவீகாரத் தந்தையுமாக இருந்தீர்; உம்மை மிக அதிகமாக நேசிக்கிற உமது சேசுவிடம் எனக்காகப் பரிந்து பேசும். நான் உமது பாதுகாவலின் கீழ் என்னை வைக்கிறேன். உமது நிரந்தர ஊழியனாக என்னை ஏற்றுக்கொள்ளும். நீர் பூலோகத்தில் அனுபவித்து மகிழ்ந்த சேசு மரியாயின் பரிசுத்த தோமையைப் பார்த்து, அவர்களுடைய அன்பிலிருந்து நான் ஒருபோதும் பிரியாத வரத்தை எனக்குப் பெற்றுத் தாரும். மொத்தத்தில், உமது மரணத்தின்போது நீர் கொண்டிருந்த சேசு மரியாயின் உதவியைப் பார்த்து, என் மரணத்தில் நானும் அவர்களுடைய விசேஷ உதவியைக் கொண்டிருக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாரும். மகா பரிசுத்த கன்னிகையே, உங்கள் பரிசுத்த மணவாளராகிய அர்ச். சூசையப்பர்மீது நீங்கள் கொண்டிருந்த நேசத்தைப் பார்த்து, என் மரண நேரத்தில் எனக்கு உதவி செய்தருளுங்கள்.