அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - டொன் போஸ்கோவின் அன்பிற்குரிய மாணவன் புனித டோமினிக் சாவியோ

டோமினிக் 1942-ல் ரிவா டி ஷியேரியில் பிறந்தார். ஏழு வயதுக் குழந்தையாயிருந்த போதே அவர் இயேசுவைத் தம் இருதயத்தில் முதன்முறையாகப் பெற்றுக் கொண்டார். தமது தேவ தூதர்களுக்குரிய மேலான அன்பின் பக்தியார்வத்தில் அவர் அச்சமயத்தில் பின்வரும் தீர்மானங்களை எடுத்துக் கொண்டார்: 

1. இப்போதிருந்து இயேசுவும், மாமரியுமே என் நண்பர்களாக இருப்பார்கள். 

2. பாவம் செய்வதை விட மரணம்.

பள்ளியில் அவர் புண்ணியம் மற்றும் செயல்பாட்டின் ஓர் அற்புத முன்மாதிரிகையாக மிளிர்ந்தார். மேல்நிலை ஆரம்பக் கல்விக்குப் பின் அவர் உந்நதத்தினின்று வந்த தேவ அழைத்தலைப் பின்செல்லும்படி, தம் தந்தையின் வீட்டை விட்டுப் புறப்பட்டார். 

டொன் போஸ்கோவுடன் டோமினிக்கின் முதல் சந்திப்பு

அந்த சந்திப்பின் காட்சி உண்மையில் நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. டொன் போஸ்கோவே தாம் எழுதிய இந்த சம்மனசுப் போன்ற சிறுவனின் வரலாற்றில் இதைப் பற்றி நமக்குக் கூறியிருக் கிறார். டோமினிக்கின் ஆன்மா முற்றிலுமாகக் கடவுளுக்குக் கையளிக்கப்பட்டிருந்ததை அவர் உடனடியாகக் கண்டுபிடித்து விட்டார். ஆகவே அவர் ஆச்சரியத்தோடு, “இங்கே ஒரு புனிதரை உருவாக்குவதற்குரிய தாதுப் பொருள் இருக்கிறது” என்றார்.

அந்நாள் முதல் இந்தச் சிறுவன் தன் நம்பிக்கை முழுவதையும் டொன் போஸ்கோவின் மீது வைத்தார். டொன் போஸ்கோ தம் பங்கிற்கு அவரை ஒரு புதிய புனித ஞானப்பிரகாசியாராக உருவாக்கினார். டோமினிக் தாம் ஒரு புனிதராக ஆக வேண்டுமென்று பிரதிக்கினை செய்து கொண்டார். 

டொன் போஸ்கோவிடம் அவர் இடைவிடாமல் செய்து வந்த ஜெபம்: “தந்தாய், ஒரு புனிதனாவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்” என்பதுதான். பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு நன்மை செய்வதில் மற்றவர்களுக்கு உதவ தன் ஆன்மா கொண்டிருந்த ஏக்கத்தை அவர் அடிக்கடி வெளிப் படுத்தினார்: “ஓ, என் அனைத்து நண்பர்களையும் தோழர்களையும் கடவுளுக்காக ஆதாயப்படுத்திக் கொள்ள என்னால் முடிந்தால்! அப்போது நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன்!” 

வெறும் வார்த்தைகளோடு அவர் திருப்தியடைந்து விடவில்லை, ஏனெனில் அவருடைய ஜெபங்களும், அவருடைய உரையாடலும், அவருடைய படிப்பும், அவருடைய விளையாட்டுக்களும் கூட ஒளி வீசும் முன்மாதிரிகையாக, தெய்வீக அப்போஸ்தலத்துவத்தின் ஓர் உயிருள்ள பள்ளிக்கூடமாக இருந்தன. 

அவருடைய ஆலோசனைகளும், எச்சரிப்புடன் கூடிய அறிவுரைகளும், ஜெபங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய துன்பங்களும் தீமை யிலிருந்து தம் நண்பர்களைக் காப்பாற்றுவது, முன்பை விட இன்னும் அதிகமாக அவர்களைக் கடவுளுக்கு அருகில் கொண்டு வருவது என்னும் ஒரேயொரு நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தன.

திவ்விய நன்மை உட்கொள்ளும்போது அவர் அடிக்கடி பரவச நிலையால் பொதியப்பட்டார். தமது இருதயத்தை அவர் அமல உற்பவ மாமரிக்கு அர்ப்பணம் செய்திருந்தார். 

டோமினிக்கின் மகிழ்ச்சியான மரணம்

இவ்வளவு பிரகாசமான ஒரு மலர், இவ்வளவு சுவையான தேவ அருளின் கனி, இந்த பூமியில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அது விரைவில் பரலோகத்திற்கென கனிந்து விட்டது. இவ்வாறு அவரில் மையம் கொண்டிருந்த அற்புதமான நம்பிக்கைகள் வெறும் ஏமாற்றத்திற்கே வழிவகுத்தன. ஏனெனில் அவருடைய இந்த அந்நிய தேச வாழ்வின் முடிவு அண்மையில் இருந்தது. நித்திய ஒளியின் விடியல் வேகமாக அவரை அணுகி வந்து கொண்டிருந்தது.

தமது நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. புன்னகை பூத்த முகத்துடன் அவர் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1857, மார்ச் 9 அன்று மோன்டோனியோ தாஸ்தியில், தேவ பராமரிப்பின் கடிகாரத்தில் அவருடைய நேரத்தின் மணியோசை ஒலித்தபோது, “ஓ, என்ன ஓர் அழகான காட்சி!” என்று மகிழ்ச்சியோடு வியந்து கூறியபடி அவர் நித்திய வாழ்வுக்குக் கடந்து சென்றார். அப்போது அவருக்கு வயது 15.

அவருடைய உடல் ட்யூரினிலுள்ள கிறீஸ்தவர்களின் சகாய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

டோமினிக்கின் மரணத்திற்குப் பிறகு, டொன்போஸ்கோ அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்தச் சிறுவனின் பரிந்துரையின் வழியாக வழங்கப்பட்ட புதுமைகள் மற்றும் விசேஷ நன்மைகளின் வழியாக அவரை மகிமைப்படுத்தக் கடவுள் திருவுளங் கொண்டார்.

1954-ஆம் ஆண்டு அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப் பட்டது.