இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவமாதாவின் பிரார்த்தனை விளக்கம் - முன்னுரை

‘பிரார்த்தனை’ என்னும் வடசொல், தூய தமிழில் ‘வேண்டுதல், இரத்தல், மன்றாட்டு’ என்று பொருள்படும். ஆங்கிலத்தில் இதற்கு நேரடியான சொல் ‘லிற்றனி’ (Litany) என்பது. இச்சொல் ‘லித்தானேயுவோ’ (Litaneuo =நான் வேண்டுகிறேன்) என்னும் கிரேக்கச் சொல்லடியாகப் பிறந்ததாகும்.

தேவமாதாவின் பேரில் எழுந்த பிரார்த்தனைகள் பல உண்டு. ஆனால் அவற்றுள் நடுநாயகமாய் விளங்குவதும், பொது வழிபாட்டிற்கென திருச்சபையின் அங்கீகாரம் பெற்றதுமான பிரார்த்தனை ஒன்றுதான் உண்டு. அதுவே சாதாரணமாக “தேவமாதா பிரார்த்தனை” என்று அழைக்கப்படும் “லொரெற்றோ பிரார்த்தனை.” இதையே ஆங்கிலத்தில் “லிற்றனி ஆஃப் லொரேற்றோ” (The Litany of Loretto) என்பர்.

இப்பிரார்த்தனை யாரால், எங்கே, எப்பொழுது இயற்றப்பட்டது என்ற விபரங்கள் நமக்கு இன்னும் புதை பொருட்களாகவே இருக்கின்றன. “லொரேற்றோ பிரார்த்தனை” என்று வழங்குவதால், இத்தாலியிலுள்ள லொரேற்றோ என்னும் திருப்பதியில் உதித்தது என்று சொல்வதற்கில்லை; ஏனெனில் இக்கூற்று தக்க ஆதாரத்தின் வழி வந்ததல்ல.

பின் ஏன் இப்பிரார்த்தனை “லொரேற்றோ பிரார்த்தனை” என வழங்குகிறது? கர்ணபரம்பரைக் கூற்றுப்படி இப்பிரார்த்தனை முதன்முதலாக “லொரேற்றோ” திருப்பதியில்தான் உபயோகிக்கப்பட்டது; அங்கிருந்துதான் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பரவியது. இப்பிரார்த்தனையின் ஆரம்பத்தைப் பற்றிய விபரங்கள் நமக்குத் தெரியாவிடினும் கிறீஸ்தவ மக்களிடையே இப்பிரார்த்தனைக்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு நாம் யாவரும் அறிந்ததே. நம் பரலோக அன்னையின் பலதிறப்பட்ட மகிமைப் பட்டங்களைச் சேர்த்துக் கோர்த்த ஒரு சுகந்த பூச்செண்டு இப்பிரார்த்தனை. ஒவ்வொரு மன்றாட்டிலும் அன்னையின் புகழ் மணம் வீசுகிறது. சுருங்கக் கூறின் அன்னையின் மகிமையைப் புகழ்ந்து நாம் கூறக் கூடியனவெல்லாம் இவ்வழகிய பிரார்த்தனையில் அடங்கியிருக்கின்றன.

நமதன்னை எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது பாடிய கீதம் நம் காதுகளில் ஒலிக்கின்றது: “இதோ இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” (லூக். 1:48). நம்மைப் பிரமிக்க வைக்கும் வார்த்தைகள்! துணிவு நிறைந்த வார்த்தைகள்!! ஓர் பெண்மணியின் வாயினின்று வருகின்றன இவ்வார்த்தைகள். ஆனால் ஓர் சாதாரணப் பெண்ணின் வார்த்தைகளல்ல அவை; மனுவுருவெடுத்த சர்வேசுரன் அன்னை “தேவ அருளினால் சம்பூரணமானவர்கள்,” “பரிசுத்த ஆவியின் பிரிய பத்தினி,” இவ்வார்த்தைகளை உரைக்கின்றார்கள்; எதிர்காலத்தை ஊடுருவி நோக்கி, இத்தீர்க்க தரிசனத்தை மொழிகின்றார்கள்.

ஓ! எத்துணை அர்த்த புஷ்டியான வார்த்தைகள்! அன்னையின் தீர்க்கதரிசனம் அணுவளவும் பிசகாது அட்சர சுத்தமாய் நிறைவேறியிருப்பது காண்பீர்! திருச்சபை தொடங்கிய நாள்தொட்டு இந்நாள் வரை அவர்களைப் புகழாத தலைமுறைகள் உண்டா? அவர்களது புகழ் வானோக்கி எழாத காலம் உண்டா? அவர்கள் புகழ்மணம் கமழாத நாடு உண்டா? நகரம் உண்டா?

திருச்சபையின் தொடக்க காலத்திற்கு வருவோம். அன்னையின் புகழ் ஓவியக்கலையில் (Painting) ஓங்கி நிற்கின்றது; 2-வது நூற்றாண்டில் அல்லது 3-வது நூற்றாண்டில் வரையப்பட்ட அன்னையின் உருவம் ஒன்று இன்றும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நிற்கின்றது. கிறீஸ்தவப் பக்தியின் இப்பூர்வீக ஞாபகச் சின்னத்தை இன்றும் ரோமையின் சுரங்க அறைகளில் (Catacombs) காணலாம். 4-வது நூற்றாண்டில் கிறீஸ்தவ கல்லறைகளில் அன்னையும் அவர்களுடைய திருமகவும் சேர்ந்த உருவம் காணப்படுகிறது. 5-வது நூற்றாண்டிலோ, அதாவது கிரேக்க மன்னன் அனஸ்தாசியுஸ் ஆண்ட காலத்தில், அன்னையின் திருவுருவந் தாங்கிய நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. அனஸ்தாசியுஸுக்குப் பின்வந்தோரும் இச்சுகிர்த வழக்கத்தைக் கைநெகிழ்ந்தாரில்லை. 5-வது நூற்றாண்டிலிருந்து நமது காலம் வரை மாதா பக்திக்கு அருஞ் சான்றுகளாக விளங்கும் ஓவியங்களை எண்ணினால் ஏட்டிலடங்கா.

இன்னும், முதலாவது கலிஸ்டஸ் பாப்பானவர் காலந் தொடங்கியே அநேக ஆலயங்கள் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. இப்புனித பாப்பரசர் கி.பி. 224-ம் வருடம், ரோமையில் தைபர் நதிக்குச் சற்று தூரத்தில் அன்னையின் பேரால் ஓர் அழகிய ஆலயத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். ஏன்-கலிஸ்டஸ் பாப்பரசர் காலத்திற்கு முன்பே, ஸ்பெயின் தேசத்திலுள்ள சரகோசா (Saragosa) என்னுமிடத்தில் நமதன்னையின் பேரால் ஓர் ஆலயம் (Our Lady of the Pillar) இருந்ததாக அறிகிறோம்; சிரியாவிலும் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்கள் பல இருந்ததாக சரித்திரம் கூறுகிறது. இவ்வாறாக, திருச்சபையின் ஆதிகாலந் தொட்டு இந்நாள் வரை அன்னையின் புகழ் விடாது திருச்சபையில் பாடப்பட்டு வருகிறது; பாடப்பட்டு வரும்.

நுண்கலைகளை விட (Fine arts) அன்னையின் புகழை ஆணித்தரமாக உலகுக்கு எடுத்தோதுவன அன்னையின் தாசர்களாகிய புனிதவாளரின் அரிய பிரபந்தங்களும், பிரசுரங்களுமே. முதல் இரு நூற்றாண்டுகளில் எழுதப்பெற்ற நூற்கள் வெகு சொற்பமே தற்போது காணப்படுகின்றன. இரனேயுஸ், அத்தனேசியுஸ், பாசில், எப்ரேம், நசியான்சன், கிரகோரியார், எப்பிபானியுஸ், ஜான் தமசீன், பெர்நர்து முதலிய அர்ச்சியசிஷ்டவர்கள், ஒரே வார்த்தையில், மேனாட்டு கீழ் நாட்டு வேதசாஸ்திர வல்லுநர் அனைவரும் அன்னையின் மகிமைப் பிரதாபத் தையும், அவர்களது வல்லமை வாய்ந்த சலுகையையும் பற்றி பக்தி ரசம் பொங்க கத்தோலிக்க உலகுக்கு எடுத்துக் கூறுகிறார்கள்.

இன்னோரின் புகழ்மாலைகளையெல்லாம் ஒன் றாய்ச் சேர்த்துக் கோர்த்த ஓர் புது மலர் மாலையே “லொரேற்றோ பிரார்த்தனை.” ஆகவே நம் அன்பின் அடையாளமாக அன்னையின் பொன்னடிகளில் சமர்ப்பிப்பதற்கேற்ற பக்திக் கிருத்தியங்களுள் மாதா பிரார்த்தனையும் ஒன்று. எனவே 8-ம் கிளமெண்டு என்னும் பாப்பரசர் 1601-ம் ஆண்டு அன்னைக்குத் தோத்திரமாக நடைபெறும் பொது வழிபாட்டில் இப்பிரார்த்தனையைத் தவிர வேறு பிரார்த்தனைகளைச் சொல்லலாகாதென்று தடையுத்தரவு பிறப்பித்தார். 1606-ம் ஆண்டு அர்ச். பவுலுஸ் என்னும் பாப்பரசர், சாமிநாதர் சபையைச் சேர்ந்த கோவில்களில் சனிக்கிழமை தோறும் பாடப்பெறும் இப்பிரார்த்தனையில் பங்கெடுப்போருக்கு 60 நாட்பலனைக் கட்டளையிட் டார்; 4-வது சிக்ஸ்டஸும் 13-ம் ஆசீர்வாதப்பரும் இப்பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லும் விசுவாசிகள் யாவருக்கும் 100 நாட்பலனை அளித்தனர். 7-வது பத்திநாதர் இந்நூறு நாட்பலனை 300 நாட் பலனாக்கினார்.

மேற்கூறியவற்றால், இப்பிரார்த்தனை திருச்சபையில் எத்துணை செல்வாக்குப் பெற்று விளங்குகிறதென்பது மிக மிகத் தெளிவாகும். இன்று இப்பிரார்த்தனை இசைப்படுத்தப்பட்டு, எத்தனையோ இராகங்களுடன் பாடப்பட்டு வருகிறது; மக்களின் மனதை இப்பிரார்த்தனை எத்துணை தூரம் கவர்ந்து விட்டது என்பதற்கு இது மற்றோர் சான்று.

“ஓ மரியாயே! உமது புகழைக் கூற ஆயிரம் நாவிருந்தாலும் பற்றாதே! ஏழையாம் எவ்விதம் உமது புகழை எடுத்துக் கூற வல்லோம்? எத்தனையோ புண்ணிய சீலர்கள் உமது புகழைப் பக்திரசம் பொங்கப் பாடிச் சென்றனர். அவர்களது புகழுரைகளே, உமது புகழைச் சரிவரக் கூறவில்லையென்றால், ஏழையர் யாம் உமது புகழைச் சரிவரப் பாடுதல் எங்ஙனம்? இயலாது அம்மா, எங்களால் இயலாது; முக்காலும் இயலாது. ஆயினும் எம் நேசத் தாயே! ஆசை மேற்கொள்ளுகிறது. பேசாதிருக்க மனம் வரவில்லை; உள்ளத்தில் பொங்கும் அன்பு பேச உந்துகிறது. விடையளியுங்கள் அம்மா! பேதையர் எம் நாவால் உமது புகழைப் பாட வரம் அருளுங்கள். உமது அருளை நம்பித் தொடங்கும் இச் சிறு நூலை உமது பாதாரங்களில் சமர்ப்பித்து உமது கருணை விழிநோக்குக்கு ஏங்கி நிற்கின்றோம். ஏற்றருள் புரிவீர் அன்னையே!”