இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவிகள் மீது சேசுவின் கனிவுள்ள தயவிரக்கம்!

ஏழை மக்களின் சரீர ரீதியான தேவைகளில் தாம் கொண்ட தயவிரக்கத்தின் காரணமாக, அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, நம் ஆண்டவர் அப்பங்களும், மீன்களும் பலுகச் செய்யும் புதுமையைச் செய்தார். ஆனால் தேவ வரப்பிரசாதம் விலக்கப்பட்டுள்ள பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆத்துமங்களின் தேவைகளில் அவரது தயவிரக்கம் எவ்வளவோ அதிகக் கனிவுள்ளதாக இருக்கிறது. ""ஓ, பாவிகளின் மீது நம் தேவன் கொண்டுள்ள அளவற்ற இரக்கமே! ஓர் அடிமையை மீட்பதற்கு, பிதாவும் தம் திருச்சுதனைக் கையளிக்கத் தயங்கவில்லை, திருச்சுதனும் தம்மையே அர்ப்பணிக்கத் தயங்கவில்லை!'' என்று அதிசயித்தபடி கூறுகிறார் அர்ச். பெர்னார்ட்.

பாவம் மற்றும் சாத்தானின் அடிமைத்தனத்தின் கீழ் கிடந்து முனகிக் கொண்டிருந்த மனிதர்களின் மீது தமது இரக்கத்தின் உள்ளாழங்களின் வழியாக, நம் மிக அன்புக்குரிய மீட்பர், தமது மரணத்தால் நித்திய வாதைகளிலிருந்து அவர்களை மீட்டு இரட்சிக்கப் பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்தார். ஏற்கெனவே நித்திய வார்த்தையானவரின் தாயாராக ஆகியிருந்த திவ்விய கன்னிகை ஸ்நாபக அருளப்பரின் தந்தையாகிய அர்ச். சக்கரியாஸின் இல்லத்தில் இருந்தபோது, அவர் கூறிய வார்த்தைகளும் இத்தகையவையே: ""நமது கடவுளின் இரக்க உருக்கத்தால் உன்னதத்திலிருந்து உதயமானவர் நம்மைச் சந்தித்திருக்கிறார்'' (லூக்.1:77-79).

தமது ஆடுகளாகிய நமக்கு இரட்சணியத்தைப் பெற்றுத் தருவதற்காக உலகிற்கு வந்த நல்ல மேய்ப்பராக சேசுகிறீஸ்துநாதர், ""நானோ ஆடுகள் ஜீவனடையவும் அதை மென்மேலும் ஏராளமாய் அடையவும் வந்தேன்'' என்று சொல்லியிருக்கிறார் (அரு.10:10). ""மென்மேலும் ஏராளமாய்'' என்ற வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். மனுமகன் நாம் இழந்து போன வரப்பிரசாத உயிரை நம்மில் மீண்டும் ஸ்தாபிப்பதற்காக மட்டுமின்றி, பாவத்தால் நாம் இழந்து போன வாழ்வை விடச் சிறந்த வாழ்வை நமக்குத் தருவதற்காகவும் உலகிறகு வந்தார். ஆம், ஏனெனில் அர்ச். சிங்கராயர் கூறுவது போல, சேசுவின் திருமரணத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்டுள்ள நன்னமைகள், பாவத்தால் பசாசு நமக்குச் செயளள்துள்ள காயத்தை விட மிகவும் மேலானவையாக இருக்கின்றன. இதே கொள்கை, ""குற்றம் பெருகின இடத்தில் வரப்பிரசாதம் அதிமிகப் பெருகிற்று'' (உரோ.5:20) என்று சொல்லும் அப்போஸ்தலராலும் கற்பிக்கப்படுகிறது.

ஆனால், என் ஆண்டவரே, மனித சரீரத்தை எடுத்துக் கொள்ள நீர் தீர்மானித்தீர் என்பதால், எல்லா மனிதர்களையும் மீட்க உமது ஒரே ஒரு ஜெபம் போதுமானதாக இருந்திருக்குமே! அப்படியிருக்க, வறுமையும், அவமானமும், நிந்தையும் நிறைந்த 33 ஆண்டு கால வாழ்வு நடத்தவும், அவமானக் கழுமரத்தின் மீது ஒரு கொடூரமான, அவமான மரணத்தை அடையும், வாதைகளின் காரணமாக, உமது இறுதித் துளி இரத்தத்தையும் சிந்தவும் உமக்கு என்ன தேவை இருந்தது? சேசுநாதர் இதற்கு இவ்வாறு பதில் சொல்கிறார்: ""என் ஒரே ஒரு துளி இரத்தம், அல்லது ஓர் எளிய ஜெபம் உலக இரட்சணியத்திற்குப் போதுமானதாக இருந்திருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்; ஆனால் மனிதர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த அவை போதாதவையாக இருந்திருக்கும்; ஆகவே, தங்கள் மீதுள்ள அன்பிற்காக சிலுவையின் மீது மரித்தவராக என்னை அவர்கள் காணும்போது, அவர்களால் நான் நேசிக்கப்படும் படியாக, மிகப் பல வாதைகளுக்கும், ஒரு மிக வேதனையான மரணத்திற்கும் என்னைக் கையளிக்க நான் தீர்மானித்தேன். நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறான் . . . நான் என் ஆடுகளுக்காக என் உயிரைக் கையளிக்கிறேன்'' (அரு.10:11-13).

மனிதர்களே! மனிதர்களே! தமது உயிரைத் தமது ஆடுகளாகிய நமக்காகக் கையளிப்பதை விட அதிகமாக தம் அன்பிற்கு வேறு என்ன சாட்சியத்தை தேவசுதன் நமக்குத் தந்து விட முடியும்? ""சர்வேசுரன் நமக்காகத் தம் உயிரைக் கையளித்ததால், அவருடைய அன்பு இன்னதென்று நாம் அறிந்திருக்கிறோம்'' (1அரு.3:16). தன் நண்பர்களுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதை விட மேலான முறையில் அவர்களுக்குத் தன் அன்பைக் காட்ட எவனாலும் முடியாது என்கிறார் இரட்சகர். ""தன் சிநேகிதர்களுக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை'' (அரு.15:13). ஆனால் ஆண்டவரே, நீரே நண்பர்களுக்காக அல்ல, மாறாக, பாவத்தால் உமக்கு எதிரிகளாக இருந்த எங்களுக்காக இறந்தீர். ""நாம் சர்வேசுரனுக்குச் சத்துருக்களாய் இருக்கையிலே, தேவ சுதனுடைய மரணத்தினால் அவரோடு சமாதானமாக்கப்பட்டிருக்கிறோம்'' (உரோ.5:10). ""ஓ, பாவிகளின் மீது நம் தேவன் கொண்டுள்ள அளவற்ற இரக்கமே! ஓர் அடிமையை மீட்பதற்கு, பிதாவும் தம் திருச்சுதனைக் கையளிக்கத் தயங்கவில்லை, திருச்சுதனும் தம்மையே அர்ப்பணிக்கத் தயங்கவில்லை!'' என்று அதிசயித்தபடி கூறுகிறார் அர்ச். பெர்னார்ட். கலகக்கார ஊழியர்களாகிய நம்மை மன்னிப்பதற்கு, பிதா தம் திருச்சுதனை மன்னிக்கவில்லை, சுதனும் தம்மைத் தாமே மன்னிக்கவில்லை, மாறாக, தமது மரணத்தின் மூலம் நாம் கட்டிக்கொண்ட பாவங்கள் மீதான தேவநீதியை அவர் சாந்தப்படுத்தியிருக்கிறார்.

சேசுக்கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளுக்கு மிக அருகில் இருந்த போது, ஒரு நாள் சமாரியாவுக்குச் சென்றார்; சமாரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். தங்கள் குருவுக்கு சமாரியர்கள் செய்த அவமானத்தைக் கண்டு கோபமுற்ற அர்ச். யாகப்பரும், அர்ச். அருளப்பரும் சேசுவிடம் திரும்பி: ""ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்படி சொல்லுகிறோம்'' என்றார்கள் (லூக்.9:54). ஆனால் தம்மை அவமானப்படுத்தியவர்களுக்கும் கூட முழு இனிமையாக இருக்கும் சேசுநாதர்: ""உங்களுக்கு யாருடைய புத்தி உண்டென்று உங்களுக்குத் தெரியவில்லை. மனுமகன் ஆத்துமங்களைச் சேதமாக்குவதற்கல்ல, அவைகளை இரட்சிக்கவே வந்தார்'' என்று அவர்களுக்குப் பதிலளித்தார். அவர் தம் சீடர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார். ""என்ன புத்தியை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? அது என் புத்தி அல்ல; என்னுடையது பொறுமை மற்றும் தயவிரக்கத்தின் புத்தி; ஏனெனில் நான் மனிதர்களின் ஆத்துமங்களை அழிப்பதற்கு அல்ல, அவற்றை இரட்சிக்கவே வந்தேன்; நீங்கள் நெருப்பையும், தண்டனையையும், பழிவாங்குதலையும் பற்றிப் பேசுகிறீர்கள்.'' இதனாலேயே மற்றொரு இடத்தில் அவர் தம் சீடர்களிடம்: ""நான் சாந்தமும் மனத் தாழ்ச்சியுமுள்ளவன் என்று என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்'' என்றார் (மத்.11:29). என்னிடமிருந்து தண்டிப்பதை அல்ல, மாறாக சாந்தமாயிருப்பதையும், பிறர் உங்களுக்குத் தரும் காயங்களைத் தாங்கிக் கொள்வதையும் நீங்கள் கற்றுக்கொள்ள ¼ண்டுமென நான் ஆசிக்கிறேன்.