இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். சின்னப்பர் பிலமோனுக்கு எழுதிய நிருபம்

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் 
பிலமோனுக்கு எழுதிய நிருபம்


பிலமோனுக்கு எழுதிய நிருபம் - பாயிரம்


விரிஜியா நாட்டின் பட்டணமாகிய பொலோசா என்னும் நகரத்தி லிருந்த பிலமோன் என்பவர் நல்ல கிறீஸ்தவனும் ஓர் பிரபுவுமாயிருந்தார். அவரிடத்தில் அடிமையும் அஞ்ஞானியுமாயிருந்த ஒநேசிமூ என்பவன் சில பொருட்களைத் திருடிக்கொண்டு உரோமாபுரிக்கு ஓடிப்போயிருக் கையில், அங்கே முதல் விசை சிறையில் அடைபட்டிருந்த அர்ச். சின்னப்பர் அவனுக்குப் புத்தியும் ஞானோபதேசமுஞ் சொல்லி ஞானஸ்நானங் கொடுத்து கர்த்தர் அவதாரம் 62-ம் வருஷத்தில் அவனை இந்த நிருபத்தோடே தன் எஜமானிடத்தில் அனுப்பினார். அந்த எஜமான் அவனை ஏற்றுக்கொள்ளும் படியாக அவனுக்கு வெகு திறமையோடு நியாயங்களைச் சொல்லிக் கேட்டுக்கொள்ளுகிறார். இதில் ஞானோபதேசத் துக்குரிய பொருள் ஒன்றுமில்லாத போதிலும், பிறர் சிநேகத்துக்குரிய உத்தம மாதிரிகை அடங்கியிருக்கிறது. இந்த ஓநேசிமூ அதுமுதற் கொண்டு நல்ல கிறீஸ்தவனாய் நடந்ததுந் தவிர எபேசு நகரத்தில் தீமோத்தேயு வுக்குப் பிறகு மேற்றிராணியாராகி, உரோமாபுரியில் திராஜா என்கிற இராயன் நாளிலே வேதசாட்சியானார்.


பிலமோனுக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 01


பிலமோனுடைய விசுவாசத்தையும் பிறர்சிநேகத்தையும் புகழ்ந்து அவரிடமிருந்து ஓடிப்போன அடிமையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறார்.

1. சேசுக்கிறீஸ்துநாதரைப்பற்றி விலங் கில் கிடக்கிறவனாகிய சின்னப்பனும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், எங்கள் சிநேகிதனும் உடன் வேலையாளுமாகிய பிலமோனுக்கும்,

2. எங்களுக்கு மிகவும் பிரிய சகோ தரியாகிய அப்பியாளுக்கும், எங்கள் உடன் சேவகனாகிய அர்க்கிப்புக்கும், உம்முடைய வீட்டிலிருக்கிற சபையாருக்கும் எழுதுவதாவது:

* 2. அப்பியாள் பிலமோனுடைய மனைவி. இவள் கிறீஸ்துவளாயிருந்ததால் நமது சகோதரி என்று அவளை அப்போஸ்தலர் இங்கே அழைக்கிறார். அர்க்கிப்பு பிலமோனுடைய மகன்.

3. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனாலும், ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவினாலும் உங்களெல்லாருக்கும் இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் உண்டாவதாக.

4. என் ஜெபங்களில் உம்மை எப்போதும் நினைவுகூர்ந்து, என் தேவனுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தி வருகிறேன்.

5. கர்த்தராகிய சேசுவின்மேலும், அர்ச்சிக்கப்பட்டவர்களாகிய எல்லார் மேலும் உமக்குள்ள விசுவாசத்தையும் பரம அன்பையுங் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

6. சேசுக்கிறீஸ்துவின் நிமித்தம் உங்களுக்குள் நடந்துவருகிற எவ்வித நற்கிரியையையும் சகலரும் ஒத்துக்கொள்ளுவதினால், உம்முடைய விசுவாசத்தின் தாராள தர்மகுணம் பிரசித்தமாயிருக்கின்றது.

* 6. விசுவாசத்தால் ஏவப்பட்டு நீர் செய்கிற நற்கிரியைகள் மறைந்திராமல், சேசுநாதரைக் குறித்து நீர் செய்கிற இவ்வளவு காரியங்களையும் எல்லோரும் கண்டு, ஆண்டவரைத் தோத்தரிப்பதற்கு ஏதுவாயிருக்கிறதென்பது கருத்து.

7. சகோதரனே, அர்ச்சிக்கப்பட்டவர்களுடைய நெஞ்சம் உம்மால் குளிர்ந்ததினால், உம்முடைய பிறர் சிநேகத்தைக்குறித்து நான் மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்தேன்.

8. ஆகையால் நீர் செய்யவேண்டியதைச் செய்யும்படி உமக்குக் கட்டளையிடுவதற்குக் கிறீஸ்து சேசுவுக்குள் எனக் குத் தைரியம் உண்டாயிருந்தாலும்,

9. (கட்டளையிடாமல்) விருத்தாப்பியனும், இப்போது சேசுக்கிறீஸ்துவைப்பற்றி விலங்கிடப் பட்டிருக்கிறவனுமாகிய சின்னப்பனாகிய என்னைப் போல நீரும் விருத்தாப்பியனாய் இருக்கிறதினாலே, பரம அன்பை முன்னிட்டு உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

10. நான் விலங்கில் பெற்ற என் மகனாகிய ஒநேசிமூவுக்காக உம்மை மன்றாடுகிறேன்.

* 10. பிலமோனிடத்தில் அடிமையாயிருந்த ஒநேசிமூ சில பொருட்களைத் திருடிக்கொண்டு, உரோமாபுரிக்கு ஓடிப்போயிருக்கையிலே, அங்கே முதல்விசை சிறையில் அடைபட்டிருந்த அர்ச். சின்னப்பர் அவனைக்கண்டு அவனுக்குப் புத்திசொல்லி உபதேசித்து, ஞானஸ்நானங் கொடுத்தார். பின்னும் கர்த்தர் அவதாரம் 62-ம் வருஷத்தில் இந்த நிருபத்தோடு தன் எஜமானிடத்தில் அவனை அனுப்பினார்.

11. அவன் முன்னே உமக்கு உபயோக மற்றவனாயிருந்தாலும், இப்போது உமக் கும் எனக்கும் உபயோகமுள்ளவன்.

12. அவனை உம்மிடத்தில் திரும்ப அனுப்புகிறேன். அவனை நீர் என் உள்ளம்போல் ஏற்றுக்கொள்ளும்.

13. சுவிசேஷத்தின் நிமித்தம் விலங் கில் கிடக்கிற எனக்கு ஊழியஞ் செய்யும் படி உமக்குப் பதிலாக அவனை நிறுத்தி வைக்க மனதாயிருந்தேன்.

14. ஆகிலும் நீர் செய்யும் நன்மை கட்டாயமில்லாமல், மனப்பூரணமாய்ச் செய்யப்பட்டதாகத் தோன்றும்படி உம்முடைய சம்மதமில்லாமல் எனக்கு ஒன்றுஞ் செய்ய மனதில்லை.

15. அவனை எந்நாளும் உம்முடனே வைத்துக்கொள்ளும்படி அவன் கொஞ்சக் காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனா னாக்கும்.

16. இப்போது அவனை அடிமையாக அல்ல, அடிமைக்குப் பதில் அருமை யான சகோதரனாகவும், விசேஷமாய் எனக்கு மிகவும் பிரியமுள்ளவனா கவும் நீர் ஏற்றுக்கொள்ளவேண்டியது. எனக்கு அவன் அவ்வளவு பிரியமுள்ள வனாயிருக்க, உமக்குச் சரீர முறையிலும், ஆண்டவருக்குள்ளும் எவ்வளவோ பிரியமுள்ளவனாய் இருக்கவேண்டியது!

* 16. உமக்குச் சரீரமுறையில்: - அதாவது உமக்கு அவன் அடிமையாயிருக்கிறதினிமித்தமும், ஆண்டவருக்குள்: அதாவது, உம்மைப்போல் அவன் கிறீஸ்தவனாயிருப்பதினிமித்தமும், அவன் உமக்கு எவ்வளவோ பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும் என்பது இதற்கு அர்த்தமாம்.

17. ஆதலால் நீர் என்னை உம்முடைய கூட்டாளி என்று எண்ணினால், என்னைப்போல் அவனை ஏற்றுக்கொள்ளும்.

18. அவன் உமக்கு யாதொரு பொல்லாங்கு செய்திருந்தால் அல்லது உமக்குக் கடனாளியாயிருந்தால், அதை என்பேரில் சாட்டிவிடும்.

19. சின்னப்பனாகிய நான் இதை என் கைப்பட எழுதினேன்; நானே அதை உத்தரிப்பேன். ஆனாலும் நீரே எனக்குக் கடனாளியாயிருக்கிறதைப் பற்றி நான் பேசமாட்டேன்.

20. ஆம், சகோதரனே, ஆண்டவரிடத்தில் இந்தச் சந்தோஷம் எனக்கு உண்டாகச் செய்யும்; ஆண்டவரிடத்தில் என் உள்ளங் குளிரப்பண்ணுவீராக.

21. நான் சொல்லுகிறதிலும் நீர் அதிகமாய்ச் செய்வீர் என்று அறிந்து, உம்முடைய கீழ்ப்படிதலின்பேரில் நம்பிக்கை வைத்து, இதை உமக்கு எழுதினேன்.

22. மேலும் நான் இருக்கும்படிக்கு எனக்காக ஓர் விடுதியை ஆயத்தம் பண்ணும். உங்கள் வேண்டுதலினாலே நான் உங்களுக்குக் கொடுக்கப்படுவேன் என்று நம்பியிருக்கிறேன்.

23. சேசுக்கிறீஸ்துவின் நிமித்தம் என்னோடுகூட காவலிலிருக்கிற எப்பாப்பிரா உமக்கு மங்களஞ் சொல்லுகிறான்.

24. என் உதவியாட்களாகிய மாற்கும், அரிஸ்தார்க்கும், தேமாவும், லூக்காவும் அப்படியே மங்களஞ் சொல்லுகிறார்கள்.

25. நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடே கூடஇருப்பதாக. ஆமென். பிலமோன் நிருபம் முற்றிற்று.