இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளை நேசிப்பவர்களின் மகிழ்ச்சியான வாழ்வு

"நீதியும் சமாதானமும் முத்தமிட்டுக் கொண்டன'' (சங்.84:11). நீதி தங்கி வசிக்கும் ஒவ்வொரு ஆன்மாவிலும் சமாதானம் குடிகொண்டிருக்கிறது. ஆகவேதான் தாவீதரசர்: ""ஆண்டவரிடத்தில் ஆனந்தம் கொள். அப்போது உன் இருதயம் விரும்புவதை அவர் உனக்குத் தருவார்'' என்கிறார் (சங்.36:4). இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு, உலகத்தன்மையான மனிதர்கள் இவவுலக பொய்த் தெய்வங்களைக் கொண்டு தங்கள் இருதயங்களின் ஆசைகளைத் திருப்திப்படுத்திக்கொள்ளத் தேடுகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்; ஆனால் அவை அவர்களை மகிழ்ச்சியானவர்களாக ஆக்க முடியாது என்பதால், அவர்களது இருதயங்கள் தொடர்ந்து புதிய காரியங்களைத் தேடுகின்றன. இந்த உலகப் பொருட்களை அவர்கள் எவ்வளவு அதிகமாக சம்பாதித்தாலும், அவற்றில் அவர்கள் திருப்தி கொள்வது இல்லை. இதன் காரணமாகவே தீர்க்கதரிசியானவர்: ""ஆண்டவரில் ஆனந்தம் கொள், அப்போது உன் இருதயம் விரும்பியதை அவர் உனக்குத் தருவார்'' என்கிறார். சிருஷ்டிகளை விட்டுவிடு, உன் மகிழ்ச்சியைக் கடவுளில் தேடு, அவர் உன் இருதயத்தின் ஏக்கங்கள் அனைத்தையும் திருப்திப்படுத்துவார்.

அர்ச். அகுஸ்தினாருக்கு நிகழ்ந்ததும் இதுதான். அவர் சிருஷ்டிகளில் இன்பத்தைத் தேடிக் கொண்டிருந்த வரைக்கும், ஒருபோதும் சமாதானத்தை அனுபவிக்கவில்லை. ஆனால் அவற்றை விட்டு விலகி, தமது இருதயத்தின் நாட்டங்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த மாத்திரத்தில், அவர் அதிசயித்தபடி, ""எல்லாமே கடினமானவை, ஆண்டவரே, நீர் மட்டுமே இளைப்பாற்றியாக இருக்கிறீர்'' என்றார். இதன் பொருள் என்னவெனில்: ஆ ஆண்டவரே! என் மூடத்தனத்தை நான் இப்போது அறிந்திருக்கிறேன். உலக இன்பங்களில் மகிழ்ச்சியைக் கண்டடையலாம் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவை அனைத்தும் வீண்தான் என்றும் அவை ஆத்துமத்தைக் கஸ்திக்கு உள்ளாக்குபவை என்றும், நீர் மட்டுமே எங்கள் இருதயங்களின் சமாதானமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர் என்றும் இப்போது நான் அறிந்திருக்கிறேன் என்பதாகும்.

தம்மை நேசிப்பவர்களுக்குக் கடவுள் தரும் சமாதானம், ஒரு மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கக் கூடிய எல்லாப் புலனின்பங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது என்று அப்போஸ்தலர் கூறுகிறார்: ""எல்லா அறிவையும் கடந்த சர்வேசுரனுடைய சமாதானம்...'' (பிலிப். 4:7). அர்ச். பிரான்சிஸ் அசிசியார், ""என் தேவனே, என் சர்வமுமே!'' என்று சொல்வதில் இவ்வுலகத்திலேயே பரலோகத்தின் ஒரு முன்சுவையை அனுபவித்தார். அர்ச். பிரான்சிஸ் சவேரியார் சேசுநாதரின் மகிமைக்காக இந்தியாவில் தாம் மேற்கொண்ட கடும் உழைப்புகளுக்கு மத்தியில், தேவ ஆறுதல்களால் எந்த அளவுக்கு நிரப்பப்பட்டார் என்றால், அவர் அடிக்கடி அதிசயித்தபடி, ""போதும், ஆண்டவரே, போதும்!'' என்பார். இவ்வுலக செல்வங்களால் நிறைவுற்று, ""போதும், உலகமே, போதும்! இதற்கு மேல் செல்வங்கள் வேண்டாம்! பட்டம் பதவிகள் வேண்டாம், இன்பங்கள் வேண்டாம்'' என்று திருப்தியோடு சொல்லக் கூடியவன் எங்காவது இருக்கிறானா என்று நான் கேட்கிறேன். ஆ, இல்லை! உலகத்தை நேசிப்பவர்கள் இடைவிடாமல் உயர் பதவிகளையும், அதிக செல்வங்களையும், புதிய இன்பங்களையும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்; ஆனால் எவ்வளவு அதிகமாக இவற்றை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களுடைய மனச் சமாதானமின்மையும் அதிகரிக்கிறது.

கடவுள் மட்டுமே ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடியவர் என்ற இந்த உண்மையைப் பற்றி நம்மையே நாம் வலுவந்தம் செய்வது அவசியம். உலகத் தன்மையான மனிதர்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில், தங்களைக் கடவுளுக்குத் தருவதாயிருந்தால், கசப்பும், அதிருப்தியும் நிறைந்த ஒரு வாழ்வையே தாங்கள் நடத்த வேண்டியிருக்கும் என்று அவர்கள் தவறாகக் கருதுகிறார்கள். ஆனால் அரச தீர்க்கதரிசியோடு சேர்ந்து நான் அவர்களுக்குச் சொல்கிறேன்: ""ஆண்டவர் எம்மாத்திரம் மதுரமாயிருக்கிறார் என்று சுவைத்துப் பாருங்கள்'' (சங்.33:9). ஓ பாவிகளே, இன்னும் நீங்கள் சுவை பார்க்காத ஒரு வாழ்வை எப்படி நிந்தித்துத் தள்ளி, அது நிர்ப்பாக்கியமானது என்று எப்படி மதிக்கிறீர்கள? ஓ, சுவைத்துப் பாருங்கள். அதை சோதித்துப் பார்க்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் பூசை காணுங்கள்; மன ஜெபத்தை அனுசரியுங்கள், தினமும் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் ஆண்டவரை சந்தியுங்கள்; வாரம் ஒரு முறையாவது திவ்ய நன்மை உட்கொள்ளுங்கள்; தீய உரையாடல்களிலிருந்து விலகி ஓடிப் போங்கள்; எப்போதும் கடவுளோடு நடங்கள்; அப்போது, உலகம் தன் இன்பங்கள் அனைத்தையும் கொண்டு இது வரை உங்களுக்குத் தந்திராத இனிமையையும், சமாதானத்தையும் இத்தகைய வாழ்வின் மூலம் நீங்கள் அனுபவிப்பதைக் காண்பீர்கள்.