தேற்றுகிறவரின் வருகைக்காக மாமரியின் ஆயத்தம்!

 ஜூன் 13, 1943

சேசு கூறுகிறார்:

தன் மன அமைதியை இழக்காமல் தியானத்திலிருந்தும், ஜெபத்திலிருந்தும், கடவுளுடனான இனிய உரையாடல்களில் (இவற்றில் மாமரி எத்தகைய உச்சங்களை எட்டினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்!) இருந்தும் வெளியே வர மாமரியால் முடிந்தது. கடவுளின் மீதான தன் பார்வையை இழக்காமலே, பிறர்சிநேகத்தால் தன்னை நிரப்பிக்கொள்ளவும் அவர்களால் முடிந்தது. இதில் அவர்களுடைய அயலான் எவனும், தான் தொந்தரவு செய்யப்படுவதாக நினைக்க மாமரி அனுமதிக்கவில்லை. என் பரிசுத்த அன்னையான மாமரியே உன் முன்மாதிரிகையாக இருப்பார்களாக.

தங்கள் ஜெபத்திலும் கூட, தங்களுக்கு வேண்டியவற்றைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி எப்படி ஜெபிப்பது என்று அறிந்து கொள்வதற்கு, என் அப்போஸ்தலர்கள் மாமரியைப் பார்ப்பது ஒன்றே போதுமானதாயிருந்தது. தேற்றுகிறவரின் வருகைக்கு ஆயத்தமாகத் தேவையாயிருந்த மற்ற எல்லாப் புண்ணியங்களின் காரியத்திலும் கூட இதுவே உண்மையாக இருந்தது. இப்போதும் கூட, ஓர் ஆன்மா தேற்றுகிறவரைப் பெற்றுக் கொள்ள எவ்வளவு அதிகமாக ஆயத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிக விசையோடு அவர் அதன்மீது இறங்கி வருகிறார்.

பிரியதத்தத்தினால் பூரணமானவர்களாக இருக்கும் மாமரிக்கு எந்த ஆயத்தமும் தேவைப்படவில்லை. ஆயினும் அவர்கள் உங்களுக்கு மாதிரிகை தந்தார்கள். அவர்கள் உங்கள் தாயாக இருக் கிறார்கள், தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு உயிருள்ள முன்மாதிரி களாக இருக்கிறார்கள். மாமரி ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவ ரால் நிரம்பியிருந்தார்கள். அவர்கள் அவருடைய மணவாளியாக இருந்தார்கள், தன் மணவாளரின் இரகசியங்கள் அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் மாமரியில் எதுவும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக வெளியே தோன்றக் கூடாததா யிருந்தது.

கடவுளாகிய நானே பூமியில் இருந்தபோது, இயற்கை விதிகளுக்குப் பணிந்திருந்தேன். நான் பசியாகவும், தாகமாகவும், குளிராகவும், களைப்பாகவும், தூக்க மயக்கமாகவும் இருந்தேன்; ஆனால் கடவுளாகிய நான் உணர்வுகளின் சட்டங்களுக்கும் என்னைக் கீழ்ப்படுத்தியிருந்தேன். நான் மனச்சோர்வு, அச்சம், துக்கம் ஆகியவற்றை உணர்ந்தேன்; நட்பில் அக்களித்தேன், காட்டிக் கொடுக்கப்படுதலில் திகிலடைந்தேன், நான் துன்புற வேண்டியிருந்த காரியத்தைப் பற்றிய நினைவில் இரத்த வியர்வை வியர்க்கும் அளவுக்கு நடுங்கினேன், எல்லாமும் தேவைப்படும் ஒரு தாழ்ந்த மனிதனைப் போல ஜெபித்தேன்.

ஆகவே, மாமரியும் காணக்கூடிய வடிவத்தில் பரிசுத்த ஆவி யானவரைப் பெற்றுக் கொண்டார்கள். மிக மேலான ஆன்மாக்களும் கூட அனைவரும் செல்லும் பாதையிலேயே செல்ல வேண்டும் - நான் வெளியரங்க வெளிப்பாடுகளைக் குறிப்பிடுகிறேன் - வினோதம் ஏதுமின்றியும், வெளிவேடத் தாழ்ச்சியில் மறைந்துள்ள ஆங்காரத்தின் செயல்களாக மட்டுமே இருக்கிற வேறுபட்ட உடல் தோற்றங்கள் ஏதுமின்றியும் அவர்களும் அந்தப் பாதையில் செல்ல வேண்டும். எப்போதும் எளிமையாக இருங்கள், அப்போது பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவதில் இன்பம் காண்பார்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...