இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஸ்நாபகரை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கிறார்கள்.

5, 6 ஏப்ரல்  1944.

பெரிய புதன்கிழமைக்கும் பெரிய வியாழக்கிழமைக்கும் நடுப்பட்ட இரவில் நான் இதைக் காண்கிறேன்.

சக்கரியாஸ், எலிசபெத், மரியா, சாமுவேல் ஆகிய நால்வரும் ஒரு வண்டியிலிருந்து இறங்குகிறார்கள்.  மரியாயின் சின்னக் கோவேறு கழுதையும் அதில் கட்டப்பட்டிருக்கிறது.  மாதா சின்ன அருளப்பரைத் தன் கரங்களில் ஏந்தியிருக்கிறார்கள்.  சாமுவேலிடம் ஓர் ஆட்டுக் குட்டியும், ஒரு புறா அடைக்கப்பட்ட கூண்டும் உள்ளன.  அவர்கள் வழக்கமான கொட்டகைக்குள் இறங்குகிறார்கள்.  தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கிற திருயாத்ரீகர்கள் எல்லாரும் தங்கும் இடமாக அது இருக்க வேண்டும்.

அதன் சொந்தக்காரரிடம் மாதா, முந்திய நாளிலாவது அன்று காலையிலாவது நாசரேத்திலிருந்து யாரும் வந்தார்களா என்று விசாரிக்கிறார்கள்.  “ஒருவரும் வரவில்லை ஸ்திரீயே” என்கிறார் அந்த முதியவர்.  மாதா ஆச்சரியமடைந்தாலும் வேறெதுவும் சொல்லவில்லை.

சாமுவேலிடம் தன் வாகனக் கழுதையைக் கட்டச் சொல்லி விட்டு மாதா, சக்கரியாஸிடமும், எலிசபெத்திடமும் போகிறார்கள்.  “சூசையப்பர் வராததற்கு ஏதும் காரணமிருக்கும்.  ஆனால் அவர் நிச்சயம் இன்று வருவார்” என்று சொல்கிறார்கள்.  தான் முன்பு எலிசபெத்தம்மாளிடம் கொடுத்திருந்த குழந்தை ஸ்நாபக அருளப்பரை மறுபடியும் வாங்கிக் கொள்கிறார்கள்.  எல்லாரும் தேவாலயத்திற்குப் போகிறார்கள்.  

சக்கரியாசை ஆலயக் காவலர்கள் கெளரவமாக வரவேற்கிறார்கள்.  மற்றக் குருக்கள் அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூறுகிறார்கள்.  இன்று அவர் தம் குருத்துவ ஆடையிலும் தந்தையென்னும் மகிழ்ச்சியிலும் நல்ல தோற்றமாகக் காணப்படுகிறார்.  ஒரு பிதாப்பிதாவைப் போலிருக்கிறார்.  ஈசாக்கை ஆண்டவருக்குக் காணிக்கையாக்கி மகிழ்ச்சியடைந்த ஆபிரகாம் இவரைப் போல் இருந்திருப்பாரென நினைக்கிறேன்.

புதிய இஸ்ராயேலன் காணிக்கையாக்கப்பட்டதையும் அவருடைய தாயின் சுத்திகரச் சடங்கையும் காண்கிறேன்.  மரியாயின் சுத்திகரச் சடங்கைவிட இது அதிக சிறப்பாயிருந்தது.  ஏனென்றால் ஒரு குருவின் மகனுக்கு மற்ற குருக்கள் இதை அதிக சிறப்பாகச் செய்கிறார்கள்.  எல்லாரும் ஸ்திரீகளின் குழுவையும் குழந்தையையும் சுற்றி மகிழ்ச்சியாரவாரத்தோடு நிற்கிறார்கள்.

சில வினோதப் பிரியர்கள் பக்கத்தில் வருகிறார்கள்.  அவர்களின் விமர்சனம் எனக்குக் கேட்கிறது.   சடங்கு நடைபெறும் இடத்திற்குச் செல்கையில் குழந்தை ஸ்நாபகரை மாதா ஏந்தியிருப்பதால் அவர்களே குழந்தையின் தாய் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஒரு ஸ்திரீ சொல்கிறாள்: “அப்படியிருக்க முடியாது.  அவள் வயிற்றுப் பிள்ளையோடிருப்பது தெரியவில்லையா?  இந்தக் குழந்தை பிறந்து சில நாட்கள்தானே ஆகியிருக்கும்?” என்கிறாள்.

இன்னொரு ஸ்திரீ:  “அவள்தான் தாயாக இருக்க முடியும்.  மற்ற ஸ்திரீ வயதானவள்.  ஓர் உறவினளாக இருக்கக் கூடும்.  இந்த வயதில் நிச்சயம் அவள் ஒரு தாயாக இருக்க முடியாது” என்கிறாள்.

“நாம் பின்தொடருவோம்.  யார் சொல்வது சரி என்று அறிந்து கொள்ளலாம்.” 

எலிசபெத்தம்மாளே சுத்திகரச் சடங்கைச் செய்வதை அவர்கள் கண்டபோது அவர்களுடைய ஆச்சரியம் இன்னும் அதிகமாகின்றது.  ஆட்டுக் குட்டியையும் பாவப் பரிகாரப் புறாவையும் எலிசபெத்தம்மாளே செலுத்துகிறாள்.

“பார்!  இவள்தான் தாய்.  நான் சொல்லவில்லையா?” 

“இல்லை.” 

“அப்படித்தான்.” 

இன்னும் நம்பாமல் அவர்கள் மெல்லப் பேசிக் கொள்கின்றனர்.  அவர்கள் முனகிப் பேசியது எவ்வளவு அதிகரித்து விட்டதென்றால் குருக்களின் கூட்டத்திலிருந்து ‘ஸ் ஸ் ஸ்!!’ என்ற எச்சரிப்பு வருகிறது.  ஸ்திரீகள் சற்று மவுனமடைகிறார்கள்.  ஆனால் எலிசபெத் புனித பெருமையுடன் பிரகாசித்தபடி குழந்தையை ஏந்திக் கொண்டு ஆண்டவருக்கு காணிக்கையாக்க முன்னால் நடந்து சென்றபோது மறுபடியும் பேசுகிறார்கள்.

‘அவளேதான்.’ 

‘தாய்தானே காணிக்கை செய்வாள்!’ 

‘இது என்ன புதுமை!’ 

‘இந்த வயதில் அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழந்தை எப்படிப்பட்டதாயிருக்கும்!’ 

“இது என்ன அடையாளம்?” 

அச்சமயம், மூச்சு வாங்கியபடி அங்கு வந்து சேர்ந்த ஒரு ஸ்திரீ: “உங்களுக்குத் தெரியாதா?  ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குரு சக்கரியாஸின் குழந்தை இது.  திருப்பீடத்தில் தூபம் கொடுக்கும்போது ஊமையாகி விட்டாரே அவர்.” 

“இது ஒரு தேவ இரகசியம், தேவ இரகசியம்!  அவர் மறுபடியும் பேசுகிறார்!  அவருடைய மகனின் பிறப்பு அவருடைய நாவைக் கட்டவிழ்த்து விட்டது!” 

“அவர் சர்வேசுரனுடைய இரகசியங்களைப் பற்றி மவுனமாயிருக்கும்படி அவரைப் பயிற்றுவிக்க அவருடைய நாவை செயலிழக்கச் செய்து அவருடன் பேசிய ஆவி எது?  ஆச்சரியமாயிருக்கிறது!” 

“இது ஒரு தேவ இரகசியமே.  சக்கரியாசுக்குத் தெரிந்துள்ள அந்த இரகசிய உண்மை எதுவோ?” 

“இஸ்ராயேல் எதிர்பார்த்திருக்கிற மெசையா இவருடைய மகனாயிருக்குமோ?” 

“அப்படியிருக்க முடியாது.  இந்தக் குழந்தை பெத்லகேமில் பிறக்கவில்லை.  யூதேயாவில் பிறந்திருக்கிறது.  கன்னிகையிடத்திலிருந்தும் பிறக்கவில்லையே!” 

“அப்படியென்றால் இந்தப் பிள்ளை யார்?” 

இக்கேள்விக்குப் பதில் சர்வேசுரனின் மவுனத்தில் அடங்கியிருக்கிறது.  ஜனங்கள் தங்கள் கேள்விகளிலேயே விடப்படுகிறார்கள்.

காணிக்கைச் சடங்கு முடிந்தது.  தாய்க்கும் குழந்தைக்கும் ஆலயக் குருக்கள் தங்கள் மகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.  கவனிக்கப்படாததும், அவர்களின் நிலை அறியப்பட்டவுடன் அருவருப்புடன் ஒதுக்கப்படுகிறதும் மரியா மட்டுமே.

வாழ்த்துச் சொல்லி முடிந்தபின் ஏறக்குறைய எல்லாரும் வெளியே வீதிக்கு வருகிறார்கள்.  மாதா தொழுவத்திற்குப் போய் சூசையப்பர் வந்துவிட்டாரா என்று பார்க்க விரும்புகிறார்கள்.  அவர் வரவில்லை.  அவர்களுக்கு ஏமாற்றமும் கவலையுமாயிருக்கிறது.

மாதாவைப் பற்றி எலிசபெத்தம்மாள் கவலைப்படுகிறாள்.  “நாம் மத்தியானம் வரைக்கும் பார்ப்போம்.  அதற்குப் பிறகு போய்விட வேணடியதுதான்.  இரவில் வெளியே தங்குவது பச்சைக் குழந்தைக்குச் சரியில்லை” என்கிறாள்.  மரியா அமைதியோடும் துயரத்தோடும்:  “நான் ஆலய மண்டபம் ஒன்றில் இருந்து கொள்கிறேன்.  என் ஆசிரியைகளிடம் போனாலும் போவேன்... அப்படி சமாளித்துக் கொள்வேன்” என்கிறார்கள்.

அப்போது சக்கரியாஸ் ஒரு ஆலோசனை சொல்கிறார்:  “நாம் செபதேயுவின் உறவினர்களிடம் போவோம்.  சூசை உங்களை நிச்சயம் அங்கே தேடி வருவார். அவர் அங்கே வராவிட்டால் உங்களுடன் கலிலேயாவுக்கு வரக்கூடிய யாராவது ஓர் ஆளை அங்கே கண்டுபிடிப்பது சுலபம்.  ஏனென்றால் ஜெனாசரேத் மீனவர்கள் எப்போதும் அந்த வீட்டிலிருந்து போவதும் வருவதுமாயிருக்கிறார்கள்.”  இந்த ஆலோசனை உடனேயே எல்லாருக்கும் பிடித்துவிட்டது.

அவர்கள் கழுதையை அவிழ்த்துக் கொண்டு செபதேயுவின் உறவினர்களிடம் போகிறார்கள்.  நான்கு மாதங்களுக்கு முன் சூசையப்பரும் மாதாவும் தங்கியிருந்த அதே ஆட்கள்தான்!

நேரம் துரிதமாய்க் கடந்து போகிறது.  ஆனால் சூசையப்பர் வரும் அடையாளமே இல்லை.  மரியா குழந்தையைத் தாலாட்டிக் கொண்டே தன் துயரத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.  ஆனால் அவர்கள் கவலைப்படுவது தெரிகிறது.  வெப்பமாயிருக்கிறது.  எல்லாருக்கும் வியர்க்கிறது.  ஆயினும் மரியா தன் மேல்வஸ்திரத்தை அகற்றவில்லை.  அவர்கள் தன் தாய்மை நிலையை முடிந்த மட்டும் மறைக்க முயல்கிறார்கள்.

கடைசியாக கதவில் பலமாக தட்டும் சத்தம் கேட்கிறது.  சூசையப்பர் வந்து விட்டார்.  மாதாவின் முகம் மகிழ்ச்சியடைகிறது.

மாதாதான் முதலில் போய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.  “ஆண்டவரின் ஆசீர் உங்களோடிருப்பதாக!” என்று சூசையப்பர் வாழ்த்துகிறார்.

“உங்களோடும் இருப்பதாக!  நீங்கள் வந்ததற்காக தேவன் வாழ்த்தப்படுவாராக!  சக்கரியாசும் எலிசபெத்தும் இரவுக்குள் வீடு போயச் சேரும்படியாக உடனே புறப்படவிருந்தார்கள்.” 

“நான் கானாவூரில் வேலை செய்துகொண்டிருந்த சமயம் உங்கள் தூதுவன் நாசரேத்திற்குப் போயிருக்கிறான்.  அன்றைக்கு மாலையில்தான் எனக்கு செய்தி சொல்லப்பட்டது.  உடனே        நான் புறப்பட்டேன்.  நிற்காமல் வந்த பிறகும் நான் பிந்தி விட்டேன்.  ஏனென்றால் கழுதையின் ஒரு லாடம் கழன்று  விட்டது.  மன்னித்துக் கொள்ளுங்கள்.” 

“நாசரேத்தை விட்டு இவ்வளவு நாள் இங்கே தங்கி விட்டதற்காக நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும்.  ஆனால் இவர்கள் நான் தங்களுடன் தங்கியதைப் பற்றி எவ்வளவோ மகிழ்ச்சியடைகிறார்கள்!  ஆதலால் இதுநாள் வரையிலும் அவர்களை சந்தோஷப்படுத்த எண்ணினேன்.” 

“நீங்கள் செய்தது நல்லதே.  பிள்ளையை எங்கே?” 

அவர்கள் எலிசபெத் இருந்த அறைக்குட் செல்கிறார்கள்.  அங்கே, பயணம் புறப்படுமுன் குழந்தைக்கு தாய் பசியமர்த்துகிறாள்.  குழந்தையை எலிசபெத் எடுத்து சூசையப்பரிடம் காட்டுகிறாள்.  அவனுடைய கட்டான உடலைப் பார்த்து அதற்காக அவர் பெற்றோரைப் பாராட்டுகிறார்.  பிள்ளையோ சூசையப்பரிடம் காட்டும்படி தாயிடமிருந்து எடுக்கப்பட்டதற்காக அலறி உதைத்து யாரோ அவனை அடித்துவிட்டதைப் போல்  அழுகிறான்.  எல்லாரும் சிரிக்கிறார்கள்.  அங்கு வந்த  செபதேயுவின் உறவினர்கள் புதிய பழங்கள், பால், உரொட்டி, ஒரு பெரிய தட்டில் மீன் ஆகியவற்றை எல்லாருக்குமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  அவர்களும் உரையாடலில் கலந்து கொள்கிறார்கள்.

மரியா மிகக் கொஞ்சமே பேசுகிறார்கள்.  மவுனமாய், மடிமேல் மேலாடையின் கீழ் கைகளை வைத்தபடி தன் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  கொஞ்சம் ரொட்டி பால் திராட்சைக் கனி அருந்துகிறார்கள்.  அமர்ந்தே இருக்கிறார்கள். அவர்கள் சூசையப்பரைப் பார்க்கும் பார்வை வேதனையும் கேள்வியும் கலந்திருக்கிறது.  சூசையப்பரும் மாதாவைப் பார்க்கிறார்.  சற்றுப் பின் குனிந்து:  “உங்களுக்குக் களைப்பாயிருக்கிறதா?  உடம்புக்கு நன்றாயில்லையா?  வெளிறி துயரமாயிருக்கிறீர்களே!” என்கிறார்.

“சின்ன அருளப்பனைவிட்டு போவது சங்கடமாயிருக்கிறது.  அவனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  அவன் பிறந்து      கொஞ்ச நேரத்திலேயே அவனை அரவணைத்து வைத்திருந்தேன்...” என்று மாதா கூற சூசையப்பர் வேறொன்றும் கேட்கவில்லை.

சக்கரியாஸ் புறப்பட நேரமாயிற்று.  வண்டி வாசலில்      வந்து நிற்க எல்லாரும் அதை நோக்கிப் போகிறார்கள்.  எலிசபெத்தும் மரியாயும் கட்டிப்பிடித்து விடைபெற்றுக் கொள்கிறார்கள்.  குழந்தைக்கு முத்தங்கள் அளித்து, வண்டியில் ஏறி அமர்ந்துள்ள எலிசபெத்தின் மடியில் மரியா அவனை வைக்கிறார்கள்.  பின் சக்கரியாசிடம் சென்று அவருடைய ஆசீரைப் பெறும்படி அவர் முன்பாக முழங்காலிடுகிறார்கள்.  அப்போது அவர்கள் மூடிப் போர்த்தியிருந்த மேல் வஸ்திரம் நழுவி விழ அவர்களின் தாய்மையுருவம் பிற்பகலின் பிரகாசமான வெளிச்சத்தில் நன்றாகத் தெரிகிறது.  அச்சமயத்தில் சூசையப்பர் மரியாயைப் பார்த்தாரோ இல்லையோ தெரியவில்லை.  ஏனென்றால் அவர் எலிசபெத்தை வழியனுப்புவதிலேயே கருத்தாயிருந்தார்.  வண்டி புறப்பட்டுச் செல்கிறது.

மரியாயுடன் சூசையப்பர் வீட்டிற்குட் செல்கிறார்.  மாதா வெளிச்சம் குறைந்த அந்த மூலையிலேயே போய் அமருகிறார்கள்.  “நாம் இரவில் பயணம் செய்யலாமென்றால் சூரிய அஸ்தமனத்தில் புறப்படலாம்.  பகல் பொழுது அதிக வெப்பமாயிருக்கிறது.   ஆனால் இராப்பொழுது குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறது.  உங்களுக்காகவே பார்க்கிறேன், வெயில் தாக்குதல் உங்களுக்கு ஏற்படக் கூடாதென்று.  எரியும் வெயிலானாலும் எனக்கு ஒன்றுமில்லை.  உங்களுக்கு...” 

“சூசையே, உங்கள் விருப்பப்படியே போவோம்.  இரவில் பயணம் செய்வது எனக்கும் விருப்பம்தான்.” 

“மரியா, நான் வீட்டை நன்கு துப்புரவு செய்து விட்டேன்.  சிறு பழமரத் தோட்டத்தையும் சுத்தம் செய்தேன்.  மலர்கள் அழகாயிருக்கின்றன.  நீங்களே பார்ப்பீர்கள். அவையெல்லாம் பூத்திருக்கிற சமயத்தில் நீங்கள் வருகிறீர்கள்.  முன்பு இல்லாதபடி ஆப்பிள், அத்தி, திராட்சையெல்லாம் கனி நிரம்பியுள்ளன.  மாதுளைக்கு தாங்குகோல் நட வேண்டிய அளவுக்கு கிளைகளில் கனிகள் விளைந்து நிறைந்து காணப்படுகின்றன.  வருடத்தின் இந்த மாதத்தில் இப்படி ஒருபோதும் இருந்ததில்லை.  ஒலிவமரம்... உங்களுக்கு ஏராளமான எண்ணெய் இருக்கும்.  அது ஒரு புதுமையாகப் பூத்தது.  ஒரு பூ கூட உதிரவில்லை.  எல்லாப் பூக்களும் காய்களாகியுள்ளன.  அவை முதிரும்போது அம்மரம் கறுத்த முத்துக்களால் கவிந்தது போலிருக்கும்.  நாசரேத்திலேயே இப்படி ஒரு கனிமரத் தோட்டம் வேறு இல்லை.  உங்கள் உறவினர்களும் அதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.  அல்பேயுஸ் சொல்கிறார் அது ஒரு அதிசயம் என்று.” 

“உங்கள் கரங்களின் வேலைதான் அது!” 

“இல்லை.  எளியவனான நான் அதை எப்படிச் செய்ய முடியும்?  நான் மரங்களைக் கவனித்து மலர்ச் செடிகளுக்கு தண்ணீர்தான் ஊற்றினேன்... உங்களுக்குத் தெரியுமா, தோட்டத்தின் கோடியில் உங்களுக்கென அக்கெபியின் பக்கத்தில் ஒரு சுனை கட்டியிருக்கிறேன்.  ஒரு பெரிய நீர்த் தாங்கியையும் அமைத்தேன்.  தண்ணீருக்கு நீங்கள் வெளியே போக வேண்டியதில்லை.  மத்தேயுவின் ஒலிவத் தோப்பிற்கு மேலேயிருந்து தண்ணீர் கொண்டு வந்தேன்.  அது சுத்தமான நீர்.  ஏராளமாயிருக்கிறது.  ஒரு சின்ன வாய்க்கால் வெட்டி கொண்டு வந்தேன்.  அதை நல்லபடியாக மூடியிருக்கிறேன்.  இப்பொழுது இசைக் கருவிபோல் தண்ணீர் பாடிக் கொண்டு வருகிறது.  நீங்கள் ஊர்ச் சுனைக்கு தண்ணீர் எடுக்கப் போவது எனக்குச் சங்கடமாயிருந்தது.  அங்கிருந்து ஜாடிகளை நிரப்பி வரவேண்டியிருந்ததல்லவா?” 

“சூசையே நீங்கள் மிக நல்லவர்.  நன்றி.” 

பின் அமைதி நிலவுகிறது.  சூசையப்பர் சற்று கண்ணயரவும் செய்கிறார்.  மாதா ஜெபிக்கிறார்கள்.

மாலையாகிறது.  புறப்படுமுன் ஏதாவது சாப்பிடும்படி வீட்டார் வற்புறுத்துகிறார்கள்.  சூசையப்பர் கொஞ்சம் உரொட்டியும் மீனும் உண்கிறார்.  மாதா கொஞ்சம் பாலும் பழமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதன்பின் புறப்படுகிறார்கள்.  கோவேறு கழுதைகளில்  ஏறிக் கொள்கிறார்கள்.  மாதாவின் பெட்டியை சூசையப்பர் தன் சேணத்தோடு கட்டியிருக்கிறார் - ஜெருசலேமுக்கு வந்தபோது செய்ததுபோல.  மாதா ஏறுமுன் சேணத்தை சூசையப்பர்        சரியாய்க் கட்டியிருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்கிறார்.  மாதா ஏறும்போது சூசையப்பர் பார்க்கிறார்.  எதுவும் பேசவில்லை.  அவர்கள் புறப்படவும், முதல் நட்சத்திரங்கள் தென்படுகின்றன.

பட்டண வாசல் மூடப்படுமுன் அதை அடைந்துவிட அவர்கள் துரிதமாய்ச் செல்கின்றனர்.  ஜெருசலேமைவிட்டு வெளியே வருகின்றனர்.  கலிலேயாவை நோக்கிச் செல்லும் பெரிய சாலையில் பயணம் தொடர்கிறது.  நட்சத்திரங்கள் வானை நிரப்பி விட்டன.  நாட்டுப்புறத்தில் ஒரு மகத்வமான அமைதி நிலவுகிறது.  சில இராப்பாடிப் பறவைகளின் குரல்களும் இரு கழுதைகளின் குளம்புச் சத்தமும் மட்டும் வறண்ட சாலையில் கேட்கின்றன.