அற்புதங்கள் ஒருபோதும் நின்று போவதில்லை.

“பின்வரும் சம்பவம் என் வாழ்வின் நடந்த மிக அசாதாரணமான காரியங்களில் ஒன்று'' என்று ஒரு பிரபல மான குருவானவர் என்னிடம் கூறினார்.

“ஒரு நாள் ஒரு கத்தோலிக்கப் பெண் என்னைக் காண வந்தாள். அவள் என்னிடம், ப்ரொட்டஸ்டாண்ட் சபையைச் சேர்ந்த ஜார்ஜ் மில்லர் என்ற இளைஞன் ஒரு கத்தோலிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதால், திருச்சபையில் சேர விரும்புகிறான். அவனுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில் உங்களுக்கு ஏதும் பிரச்சினை உள்ளதாக என்று கேட்டு வரச் சொன்னான் என்றாள். ஒரு கத்தோலிக்கனாவதற்கு திருமணம் மட்டுமே போதுமான காரணமாகாது என்று அவளுக்குப் பதில் கூறிய நான் அந்த இளைஞனைக் காண விருப்பம் தெரிவித்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, அவள் அந்த இளைஞனை அழைத்து வந்து, என்னிடம் விட்டு விட்டுச் சென்று விட்டாள். அந்த இளம் நண்பன் சுற்றி வளைக்காமல் நேரடியாக வி­யத்திற்கு வந்தான். “நான் ஜூலியாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆகவே ஒரு கத்தோலிக்கனாக மாற நான் தயாராக இருக்கிறேன்'' என்றான் அவன்.

“என் அன்புள்ள இளைஞனே, கத்தோலிக்க வேதத்தில் சேர, ஜூலியாவைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசை மட்டும் இருந்தால் போதாது'' என்று நான் பதில் கூறினேன்.

“சுவாமி, மன்னிக்க வேண்டும். நான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லவில்லை. நான் கத்தோலிக்க னாக விரும்புவது ஜூலியாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக மட்டும் அல்ல.''

“அப்படியானால் உனக்கு வேறு காரணங்களும் இருக்க வேண்டும். அவை என்ன காரணங்கள்? நீ பிறந்து வளர்ந்ததும், உன் பெற்றோரும், நண்பர்களும் இருப்பது மான மதத்தில் தொடர்ந்து இருப்பது உனக்குப் பிடிக்க வில்லையா? அல்லது எங்கள் திருச்சபையில் உன்னைக் கவர்ந்திழுக்கிற காரியம் ஏதாவது இருக்கிறதா? அது என்ன காரணம்? எது உன்னை எங்களை நோக்கிக் கவர்ந்திழுக்கிறது?'' என்று நான் கேட்டேன்.

இதுபோன்ற நேரடியான கேள்விகளுக்கு ஜார்ஜ் தயாராக இருக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அவன் ஒரு கணம் தயங்கினான். அதன்பின் பதில் கூறினான்: “பாவசங்கீர்த்தனம் செய்வதற்காகத்தான் நான் ஒரு கத்தோலிக்கனாக விரும்புகிறேன்!''

“இது நிச்சயமாக ஓர் அசாதாரணமான வழக்கத் துக்கு மாறான காரணம்தான். ஏனெனில் உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்க வேதத்தில் சேர பயப்படுவதே பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் தான். நீயோ, பாவசங்கீர்த்தனம் செய்வதற்காகத்தான் கத்தோலிக்கனாக விரும்புவதாகச் சொல்கிறாயே?''

உடனே ஜார்ஜ் நேர்மையான விதத்தில் பாவசங்கீர்த் தனத்தைப் பற்றிய தனது கருத்துக்களை என்னிடம் தெரி வித்தான். எவ்வளவு தெளிவான வார்த்தைகளில் அவன் அவற்றை விவரித்தான் என்றால், அவற்றைக் கேட்கிற அநேக பெயரளவு கத்தோலிக்கர்கள் வெட்கி நாண நேரிடும். ஜார்ஜ் இந்த தேவத்திரவிய அனுமானத்தின் முழு முக்கியத்துவத்தையும் நன்றாகப் புரிந்து வைத்திருந்தான். சரியான முறையில் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது அது தருகிற தேவ சமாதானமும், பலமும், ஆறுதலும் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை அவன் நன்கு அறிந் திருந்தான்.

“அன்புத் தந்தாய், எனக்கு நிறைய கத்தோலிக்க நண்பர்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாகப் பேசுவதானால், அவர்கள் என்னை விட ஒன்றும் அதிக நல்லவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் கத்தோலிக்கத் திருச்சபையிடமிருந்து பல உதவிகளையும் நன்மைகளையும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள், எனக்கோ, நான் ஒரு ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினன் என்ற காரணத்திற்காக அவை மறுக்கப்படுகின்றன. அவர்கள் பாவங்களில் விழும்போது, அல்லது சோத னைக்குள் இழுக்கப்படுவதாக உணரும்போது, உடனே போய்ப் பாவசங்கீர்த்தனம் செய்ய அவர்களால் முடியும் என்பது எனக்குப் புரிகிறது. அவர்கள் என்னிடம் சொல்லும் காரியங்களை வைத்துப் பார்த்தால், கத்தோலிக்க குருக்கள் கருணையுள்ளவர்கள், அவர்களுக்கு உதவ ஆர்வமும், அக்கறையும், கவலையும் உள்ளவர்களாக அவர்கள் இருக் கிறார்கள் என்று எனக்கு விளங்குகிறது. உண்மையில், அவர்களுடைய குருவானவர் அச்சமூட்டும் ஆபத்தான மரண விளிம்புகளில் இருந்து அவர்களை வெளியே இழுத்துக் காப்பாற்றியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பசாசு எப்போதோ தங்களை நரகத்திற்கு இழுத்துக் கொண்டு போயிருக்கும் என்று அவர்கள் பிற்பாடு என்னிடம் கூறினார்கள். அது உண்மைதான் என்று நானும் உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே, தயவு செய்யுங்கள், தந்தையே. தங்கள் பரிசுத்த வேதத்தைச் சரிவர அனுசரிக்காத கத்தோ லிக்கர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று நான் வெளிப்படையாகச் சொன்னால், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் திருச்சபையின் அழுகிய பகுதியாக இருக்கிறார்கள். நல்லவன் ஒருவன் கெட்டால், கெட்டவனிலும் அதிக மோசமாவான் என்பதுதான் உண்மை.

ஆக, என் தேவைகளிலும் பிரச்சினைகளிலும் நான் அணுகக் கூடிய ஒரு நல்ல நண்பன் எனக்கு வேண்டும் என்று நான் நினைப்பது தவறா, சுவாமி? என் தாய் தந்தையரை நான் மதிக்கிறேன், அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்றாலும், நான் அவர்களிடம் எளிதில் சொல்லிவிட முடியாத பல காரியங்கள் இருக்கின்றன என்பதை நீங்களே பார்க்கலாம். எனக்கு சில நல்ல நண்பர்களும் இருக் கிறார்கள். ஆனால் ஒரு மனிதனின் இரகசியங்கள் ஒரு பாவசங்கீர்த்தன குருவைத் தவிர வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு, அவை புனிதமானவை, அந்நியோந்நியமானவை, சில சமயங்களில் மிகவும் சிக்கலானவையும் கூட'' என்று கூறி முடித்தான் ஜார்ஜ்.

அவன் நேர்மையுள்ளவன் என்று நான் உறுதியாக நம்பியது மட்டுமல்ல, மாறாக, இந்த இளம் பிரிவினை சபை உறுப்பினன் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றி இவ்வளவு தெளி வாகப் புரிந்து வைத்திருந்ததைப் பற்றி நான் பிரமித்துப் போனேன் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்.''