அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - பேய்த்தனமுள்ள ஒரு யானை

1863, ஜனவரி 1 தேதிப்படி, சலேசிய சபையில் டொன் போஸ்கோவையும் சேர்த்து முப்பத்தொன்பது உறுப்பினர்கள் இருந் தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் துறவிகள். அவர்களில் இருபத்திரண்டு பேர் மூன்று நிரந்தர வார்த்தைப்பாடு களின் மூலம் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்திருந்தார்கள். சபையில் ஆறு குருக்கள் இருந்தார்கள். அவர்களில் ஐந்து பேர் வார்த்தைப்பாடு கொடுத்தவர்கள். ஒருவர் இன்னும் வார்த்தைப்பாடு கொடுக்காதவர்.

டொன்போஸ்கோ நிதி உதவி கேட்டு பொதுமக்களுக்கு விண்ணப்பம் செய்வதோடு இந்தப் புத்தாண்டைத் தொடங்கினார். லாட்டரி குலுக்கல் முறையில் கணிசமான பணம் கிடைத்தாலும், பியா தெல்லா ஜியார்தினியேரா சாலையோரத்தில் புதிய கட்டடம் கட்டவும், ஆரட்டரியில் தங்கிப் படிக்கும் சிறுவர்களின் செலவுக்கும், சிறிது காலமாக டொன் போஸ்கோ திட்டமிட்டு வந்திருந்த இன்னும் சில பெரிய காரியங்களுக்கும் அது போதுமான தாக இல்லை. 

நிதி கேட்டு விண்ணப்பக் கடிதம் அனுப்ப வேண்டியவர்களின் பட்டியலில் அரசாங்க அமைச்சர்களும், அரச குடும்பத்தினரும், அவர்கள் சார்பாக பிறர்சிநேக உதவிகளைப் பகிர்ந்தளிப்பவரான கோர்ட்டான்ஸோனின் சுவாமி கமில்லோ பெல்லெட்டாவும் முதலிடத்தில் இருந்தனர்.

டொன் போஸ்கோதம் சிறுவர்களுக்கு இன்னும் வருடாந்தர ஸ்ட்ரென்னா கொடுக்கவில்லை. வருட முடிவில் அவர் முன்னறிவித்திருந்த மரணங்கள் பலரை மனந்திருப்பியிருந்தன என்றாலும் எல்லோரையும் அவை மனந்திருப்பியிருக்கவில்லை.

* ஸ்ட்ரென்னா என்பது இத்தாலியில் வழக்கமாயிருந்த புத்தாண்டுப் பரிசு ஆகும். ஆரட்டரியின் தொடக்கத்திலிருந்தே டொன்போஸ்கோ வருடத்தின் கடைசி நாளில் சிறுவர்களுக்கும், உடன் ஊழியர்களுக்கும் ஒரு ஆன்ம ஸ்ட்ரென்னா, அல்லது பரிசு கொடுக்கும் வழக்கத்தைத் தொடங்கியிருந்தார். அது பிறக்கவிருந்த வருடத்தில் அனுசரிக்க வேண்டிய ஒரு விருதுவாக்கு, அல்லது சுலோகத்தின் வடிவில் இருக்கும். இந்த வழக்கம் டொன்போஸ்கோவின் பதிலாளிகளான சலேசிய சபை அதிபர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நிறைய புதிய மாணவர்களும், ஒரு சில பழைய மாணவர்களும் கடவுளுடன் சமாதானம் செய்து கொள்ள இன்னும் மறுத்து, கடவுளின் அதிசயத் திற்குரிய இரக்கத்தையும் மீறி சிந்தனையற்றவர்களாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். “ஆண்டவர் நல்லவரும், நீதியுள்ளவரு மானதால், அவர் பாவிகளுக்கு வழிகாட்டுகிறார், தாழ்ச்சியுள்ளவர் களை நீதிக்கு வழிநடத்துகிறார், தாழ்ச்சியுள்ளவர்களுக்குத் தமது வழியைக் கற்பிக்கிறார்” (சங்.24:8-9) என்று சங்கீத ஆசிரியர் கூறுகிறார். இதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். இனியும் தொடர்ந்து பார்ப்போம்.

வருடத்தின் இறுதி நாளில் வருடாந்தர ஸ்ட்ரென்னாவைத் தம் மாணவர்களுக்குத் தர அவரால் இயலவில்லை என்பதால், டொன் போஸ்கோ அதை மூன்று அரசர்கள் திருநாள் மாலையில் தருவதாக வாக்களித்தார். ஆகவே, 1863 ஜனவரி 6 அன்று, இரவு ஜெபங்களுக்குப் பிறகு, கட்டட வேலையாட்களும், மாணவர்களும் அவருக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்க, டொன் போஸ்கோ மேடையில் ஏறி, அவர்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்:

இன்று நான் உங்களுக்கு ஸ்ட்ரென்னா தர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கிறீஸ்துமஸ் வாக்கில், உங்கள் எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய ஒரு ஸ்ட்ரென்னாவை எனக்குக் கூறும்படி நான் கடவுளிடம் மன்றாடி வருகிறேன். அதிகரித்துள்ள உங்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நான் என் ஜெபங்களை இரட்டிப்பாக்கினேன். 

சென்ற ஆண்டின் கடைசி நாளும் (புதன்கிழமை) வந்து சென்றது. அப்படியே வியாழனும், வெள்ளியும் கடந்து சென்றன. எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஜனவரி 2, வெள்ளி இரவில், மிகவும் களைத்துப் போனவனாக நான் படுக்கச் சென்றேன். ஆனால் என்னால் உறங்க முடியவில்லை. மறுநாள் காலையில் கடும் களைப்பால் தேய்ந்து போனவனாகவும், கிட்டத்தட்ட பாதி செத்துப் போனவனாகவும் நான் எழுந்தேன். ஆனாலும் அதைப் பற்றி நான் நிலைகுலைந்து போனதாக நினைக்கவில்லை. 

அதற்குப் பதிலாக, கடந்த கால அனுபவத்தின்படி, இப்படிப்பட்ட ஒரு மிக மோசமான இரவு வழக்கமாக, நம் ஆண்டவர் எனக்கு எதையோ வெளிப்படுத்த இருக்கிறார் என்பதற்கான முன்னெச்சரிக்கையாகவே இருக்கும் என்பதை நான் அறிந்திருந்ததால், அதுபற்றி மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அன்று பகலில் போர்கோ கொர்னாலீஸில் நான் என் வேலைகளைத் தொடர்ந்தேன். 

மறுநாள் மாலையின் தொடக்கத்தில் நான் இங்கு திரும்ப வந்து சேர்ந்தேன். பாவசங்கீர்த்தனங்கள் கேட்ட பிறகு, நான் படுக்கச் சென்றேன். போர்கோவில் நான் செய்த வேளையாலும், முந்தின இரவில் தூக்கமின்மையாலும் மிகவும் களைத்திருந்த நான், சீக்கிரமாகவே உறங்கிப் போய்விட்டேன். அப்போது உங்கள் ஸ்ட்ரென்னாவை உங்களுக்குத் தரப் போகிற கனவு தொடங்கியது.

என் பிரியமுள்ள சிறுவர்களே, என் கனவில் அது ஒரு திருநாளின் பிற்பகல் நேரம். நீங்கள் எல்லோரும் விளையாட்டில் மும்முரமாயிருக்க, நான் என் அறையில் பேராசிரியர் தாமஸ் வல்லோரியுடன் (இவர் சமகால அகராதித் தொகுப்பாளர், புகழ் பெற்ற இலக்கியவாதி, டொன்போஸ்கோவின் இனிய நண்பர்) இலக்கியத்தையும், பரிசுத்த வேதத்தையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நான் உடனே எழுந்து அதைத் திறந்தேன். ஆறு வருடங் களுக்கு முன் இறந்து போய்விட்ட என் தாய் அங்கே நின்று கொண் டிருந்தார்கள். அவர்கள் மூச்சுக்குத் தவித்தபடி என்னிடம்: “வந்து பார்! வந்து பார்!” என்றார்கள்.

“என்ன நடந்தது?” என்று நான் கேட்டேன்.

“வா! வா!” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

நான் முகப்பு மாடியை நோக்கி விரைந்தோடினேன். கீழே விளையாட்டு மைதானத்தில், ஒரு பிரமாண்டமான யானை நின்று கொண்டிருக்க, சிறுவர்கூட்டமொன்று அதைச் சூழ்ந்து நின்றது.

“இது எப்படி நடந்தது?” என்று நான் வியந்து கூறினேன்.

“நாம் கீழே போவோம்!”

பேராசிரியர் வல்லோரியும் நானும் ஆச்சரியத்தோடும், எச்சரிக்கை உணர்வோடும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டோம். அதன்பின் படிகளில் விரைவாக இறங்கினோம்.

சிறுவர்களுக்கே உரிய இயல்பால், உங்களில் பலர் அந்த யானையை நோக்கி ஓடியிருந்தீர்கள். அது சாதுவாகவும், பழக்கப் பட்டதாகவும் தோன்றியது. விளையாட்டுத்தனமாக அது அங்கு மிங்கும் அசைந்து கொண்டிருந்தது, தன் தும்பிக்கையால் சிறுவர்களை வருடிக் கொடுத்தது, அவர்களுடைய உத்தரவுகளுக்கு புத்திசாலித்தனமாக கீழ்ப்படிந்தது. அது ஏதோ ஆரட்டரியிலேயே பிறந்து வளர்ந்தது போல இருந்தது. 

உங்களில் மிகப் பலர் தொடர்ந்து அதைப் பின்பற்றிக் கொண்டும், அதனோடு செல்லமாக விளையாடிக்கொண்டும் இருந்தீர்கள். ஆனால் எல்லோரும் இல்லை. உண்மையில், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த யானையைக் கண்டு அச்சமுற்று, அதனிடமிருந்து பாதுகாப்புத் தேடி ஓடி விட்டிருந்தீர்கள். இறுதியாக, நீங்கள் கோவிலில் போய் ஒளிந்து கொண்டீர்கள். 

நானும் விளையாட்டு மைதானத்தை நோக்கித் திறந்துள்ள பக்கவாட்டுக் கதவு வழியாக கோவிலின் உள்ளே செல்ல முயன்றேன், ஆனால் நீரருந்தும் ஊற்றின் அருகிலுள்ள நம் தேவ அன்னையின் சுரூபத்தை நான் கடந்து செல்கையில், பாதுகாப்பிற்காக, அவர்களுடைய மேலங்கியின் விளிம்பைத் தொட்டேன். உடனே அவர்கள் தன் வலக்கரத்தை உயர்த்தினார்கள். சுரூபத்தின் மறு பக்கத்தில் வல்லோரியும் அப்படியே செய்தார். உடனே திவ்விய கன்னிகை தன் இடக்கரத்தை உயர்த்தினார்கள். நான் பிரமித்துப் போனேன். இத்தகைய ஓர் அசாதாரணமான காரியத்தைப் பற்றி என்ன நினைப்பதென்று எனக்குத் தெரியவில்லை.