இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் நம்மைப் பலப்படுத்துகிறது!

ஃபோர்த்திஸ் எஸ்த் உத் மோர்ஸ் தெலெக்ஸியோ. நேசம் மரணத்தைப் போல வலிமையானது.

மரணத்தை எதிர்த்து நிற்கக் கூடிய படைக்கப்பட்ட வல்லமை எதுவுமில்லாதது போலவே, கடவுளை நேசிக்கிற ஆத்துமத்திற்கு, நேசத்தைத் தடை செய்யும் கஷ்டம் அல்லது துன்பம் எதுவுமில்லை. நேசிக்கிற ஆத்துமம் தன் நேசரில் அகமகிழும்போது, நேசம் எல்லா இழப்புகளையும், இழிவையும், துயரங்களையும் மேற்கொள்கிறது. ""அன்பின் நெருப்பால் வெல்லப்படும் அளவுக்கு மிகக் கடினமானது எதுவுமில்லை.'' ஓர் ஆத்துமம் உண்மையாகவே கடவுளை நேசிக்கிறதா, காரியங்கள் சாதகமாக இருக்கும் சமயத்தைப் போலவே, காரியங்கள் எதிராக இருக்கும்போதும் அது அவருக்குப் பிரமாணிக்கமாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு இதுவே மிக உறுதியான அடையாளமாகும். அர்ச். பிரான்சிஸ் சலேசியார், ""கடவுள் நம்மைத் தண்டிக்கும்போதும், நமக்கு ஆறுதல் அளிக்கும் போதும் ஒரே விதமாக நேசமிக்கவராக இருக்கிறார், ஏனெனில் அவர் இந்த இரண்டையுமே அன்பினால் செய்கிறார்'' என்கிறார்.

ஓ என் ஆத்துமத்தின் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன் என்ற சொல்கிறேன், ஆயினும் உமது அன்பிற்காக நான் என்ன செய்கிறேன்? ஒன்றுமில்லை, ஆகவே, ஒன்றில் நான் உம்மை நேசிக்கவில்லை, அல்லது மிகக் குறைவாகவே நேசிக்கிறேன் என்பதற்கு இது அடையாளமாக இருக்கிறது. ஆகவே, சேசுவே, உமது பரிசுத்த ஆவியானவரை என்மீது அனுப்பும், அவர் வந்து, மரணம் என்னை மேற்கொள்ளுமுன் உமது அன்பிற்காக நான் ஏதாவது துன்பத்தை அனுபவிக்கும்படி, அல்லது எதையாவது செய்யும்படி என்னைப் பலப்படுத்துவாராக. ஆண்டவரே, இவ்வாழ்வில் நான் இது வரை இருந்து வந்தது போல, இனி குளிர்ச்சியுள்ளவனாகவும், நன்றியற்றவனாகவும் இருக்க அனுமதியாதிரும். என்னை நரகத்திற்குத் தகுதியுள்ளவனாக ஆக்கியிரந்த எண்ணற்ற பாவங்களைப் பற்றி, துன்பங்களை நேசிக்க எனக்கு பலம் தாரும். ஓ, பூரண நன்மைத்தனமும், பூரண நேசமுமாக இருக்கிற என் தேவனே, எங்கிருந்து உம்மை அடிக்கடி நான் துரத்தினேனோ, அந்த என் ஆத்துமத்தில் தங்கி வசிக்க நீர் ஆசிக்கிறீர். வந்து அதை உமது சொந்தமாக்கிக் கொள்ளும். அதனுள் தங்கியிருந்து, அதை முழுவதும் உம்முடையதாக்கிக் கொள்ளும்.

கடவுள் இவ்வுலகில் நம்மை மிக அதிகமாகத் துன்பத்திற்கு உள்ளாக்கும்போதுதான் அவர் நம்மை மிக அதிகமாக நேசிக்கிறார். அர்ச். சின்னப்பர் தமது பரவச நிலையில் மூன்றாம் வானம் வரை உயர்த்தப்பட்டபோது இருந்ததை விட, சிறையில் சங்கிலிகளால் கட்டுண்டிருந்தபோதுதான் அதிக மகிழ்ச்சியாக இருந்தார் என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கருதினார். இதனாலேயே பரிசுத்த வேதசாட்சிகள் தங்கள் வாதைகளுக்கு மத்தியிலும் அக்களிப்புக் கொண்டார்கள், கடவுள் தமது நேசத்திற்காகத் துன்புற அவர்களை அனுமதித்த மாபெரும் உபகாரத்திற்காக அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தினார்கள். மற்ற புனிதர்கள், தங்களைத் துன்புறுத்தக் கொடுங்கோலர்கள் யாரும் இல்லாதிருந்தபோது, கடவுளை மகிழ்விக்கும்படி தங்கள் மீது தாங்களே சுமத்திக் கொண்ட தவமுயற்சிகளால் தங்களைத் தாங்களே வாதிப்பவர்கள் ஆனார்கள். ""நேசிக்கிறவன் உழைப்பின் கடுமையை உணர்வதில்லை, அல்லது அந்த உழைப்பே அவனால் நேசிக்கப்படுகிறது'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

ஓ என் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன் என்றால், அர்ச். அருளப்பர் உறுதி கூறுவது போல, நீர் என்னோடு இருக்கிறீர்: ""சிநேகத்தில் நிலைத்திருக்கிறவன் சர்வேசுரனிடம் நிலைத்திருக்கிறான்; சர்வேசுரனும் அவனிடம் நிலைத்திருக்கிறார்'' (1 அரு. 4:16). ஆகவே, நீர் என்னோடு இருப்பதால், உம்மைத் தவிர நான் வேறு யாரையும் ஆசிக்காமலும், தேடாமலும், நேசிக்காமலும், இவ்வாறு, உமது அன்பால் கட்டுண்டவனாக, இனி ஒருபோதும் உம்மிடமிருந்து என்னைப் பிரித்துக் கொள்ளாமலும் இருக்கும்படியாக, உமது அன்பின் தீச்சுவாலைகளை, உமது அன்பின் சங்கிலிகளை அதிகரித்தருளும். சேசுவே, நான் உம்முடையவனாக, முழுவதும் உம்முடையவனாக இருக்க ஆசிக்கிறேன். மரியாயே, என் இராக்கினியே, எனக்காகப் பரிந்து பேசுபவர்களே, எனக்கு அன்பையும் பரிசுத்த நிலைமை வரத்தையும் பெற்றுத் தாருங்கள்.