இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்ய நற்கருணையிலிருக்கும் சேசுநாதர் நம் அனைவரையும் சந்திக்கிறார்!

பீடத்தின் பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் இருக்கும் சேசுநாதர் நம் அனைவரையுமே சந்திக்கிறார். இவ்வுலகில் உள்ள அனைவரும் தங்கள் அரசனோடு பேச முடியாது என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள்; ஏழைகள் அப்படிச் செய்ய முடியும் என்று நம்பவும் இயலாது, ஒரு மூன்றாம் மனிதன் வழியாகத் தங்கள் தேவைகளை அரசனுக்கு அறிவிக்க முடியும் என்றுகூட அவர்கள் நம்ப இயலாது? ஆனால் பரலோகப் பேரரசரோடு பேசுவதற்கோ அவர்களுக்கு மூன்றாவது ஆள் யாரும் தேவையில்லை. உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களுமான அனைவருமே அவரோடு பேசலாம், ஏனெனில் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் அவர் நமக்கு நேர் எதிரிலேயே தங்கி வசிக்கிறார். இந்தக் காரணத்தாலேயே சேசுநாதர் ""வயல்வெளி மலர், பள்ளத் தாக்குகளின் லீலி'' என்று அழைக்கப்படுகிறார் (உந்.சங்.2:1). தோட்டத்து மலர்கள் வேலியிட்டு மூடி கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் வயல்வெளி மலர்களோ அனைவருக்குத் திறப்பாக இருக்கின்றன. கர்தினால் ஹ்யூகோ என்பவர் இந்த வார்த்தைகளைப் பற்றி, ""ஏனெனில் அனைவராலும் காணப்படும்படியாக நான் என்னையே காட்டுகிறேன்'' என்று சொல்லி விளக்குகிறார்.

ஆகவே, எந்த மனிதனும், ஒரு நாளின் எந்த நேரத்திலும் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் இருக்கும் சேசுவோடு பேசலாம். அர்ச். பீற்றர் கிறிஸோலோகுஸ், பெத்லகேமின் மாட்டுத் தொழுவத்தில் மீட்பரின் பிறப்பைப் பற்றி விளக்கும்போது, அரசர்கள் எப்போதும் மக்களைச் சந்திப்பதில்லை, அரசனோடு பேச விரும்பிச் செல்லும் ஒருவன், அது அனுமதிக்கான நேரம் அல்ல என்றும், சரியான நேரத்தில் வருமாறும் சொல்லி காவலர்களால் திருப்பி அனுப்பப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. ஆனால் நமதாண்டவர் எல்லாரையும், எந்த நேரத்திலும் தாம் வரவேற்கும் படியாக, கதவும், காவலர்களும் இல்லாத ஒரு திறப்பான குகையில் பிறக்கத் திருவுளங்கொண்டார். ""இது சந்திப்பிற்கான நேரம் அல்ல'' என்று சொல்லித் தடுக்க, அங்கே ஊழியன் யாருமில்லை. பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்திலும் சேசுநாதர் இவ்வாறே இருக்கிறார். தேவாலயங்கள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஒவ்வொருவனும் தான் விரும்பும் நேரத்தில் பரலோக அரசரிடம் சென்று அவரோடு பேச முடியும்; முழுமையான நம்பிக்கையோடு நாம் அங்கே அவரிடம் பேச வேண்டுமென்று சேசு விரும்புகிறார். இதற்காகவே அப்பத்தின் சாயலுள் அவர் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார். தாம் பொதுத் தீர்வையின்போது தோன்றும் போது அவர் எப்படியிருப்பாரோ, அப்படியே ஒளியாலான ஒரு சிங்காசனத்தின் மீது வீற்றிருப்பவராக நம் பலிபீடங்களின் மீது அவர் தோன்றுவார் என்றால், நம்மில் யார்தான் அவரை அணுகிச் செல்லத் துணிவு கொள்வான்? ஆனால் தம்மோடு நாம் பேச வேண்டும் என்றும், நம்பிக்கையோடும், அச்சமின்றியும் அவரிடமிருந்து நாம் வரப்பிரசாதங்களைத் தேட வேண்டும் என்றும் நம் ஆண்டவர் விரும்புகிறார் என்பதால், அவர் அப்பத்தின் குணங்களுக்குள் தம் தெய்வீக மகத்துவத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள்; தாமஸ் அ கெம்பிஸ் எடுத்துரைப்பது போல, ""ஒருவன் தன் நண்பனை நடத்துவது போல,'' நாமும் அவரை நடத்த வேண்டுமென அவர் விரும்புகிறார்.

ஓ மகிமையின் அரசரே, உம்மோடு உரையாடுவதற்கு, மூன்றாம் மனிதன் யாரும் எங்களுக்குத் தேவையில்லை; நீர் பீடத்தின் தேவத் திரவிய அனுமானத்தில் அனைவரையும் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறீர். உம்மை ஆசிப்பவன் யாராயினும், அவன் அங்கே எப்போதும் உம்மைக் கண்டு, உம்மோடு முகமுகமாக உரையாடுகிறான். ஆகவே, என் சேசுவே, உம்மைச் சந்திக்கத் தேடி வரும் பரிதாபத்திற்குரிய சிருஷ்டிகளின் மன்றாட்டுக்களை ஏற்றுக் கொள்ளும்படி இந்தத் தேவ நற்கருணைப் பேழைக்குள் நீர் அடக்கப் பட்டிருக்கிறீர் என்பதால், பூமியின் மீது அனைவரிலும் அதிக நன்றியற்ற பாவியாகிய அடியேனால் உமக்கு விடுக்கப்படும் விண்ணப்பத்திற்கு இன்று செவிசாய்த்தருள்வீராக. என் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டவனாக, இதோ நான் உம் திருப்பாதங்களை அண்டி வருகிறேன். இது வரை ஒரு பெரும் கலகக் காரனாக இருந்த என்னை உமது மாபெரும் நேசர்களுள் ஒருவனாக மாற்றியருளும். இதைச் செய்ய உம்மால் முடியும். என் சேசுவே, எல்லாவற்றிற்கும் மேலான உம்மை நான் நேசிக்கிறேன். என் தேவனே, என் நேசமே, என் சர்வமுமே, என் உயிரினும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன்!

ஆத்துமம் பீடத்தின் அடியில் தங்கியிருக்கும்போது, ""என் அன்பே, என் அழகுள்ளவளே, விரைவாய் எழுந்து வா'' (உந்.சங்.2:10) என்ற உந்நத சங்கீத வார்த்தைகளை அதனிடம் சேசுநாதர் கூறுவதாகத் தோன்றுகிறது. ""எழுந்து வா: பயப்படாதே ; என்னை நெருங்கி வா, என் தோழியே, என் அருகில் வா. நீ இப்போது என் எதிரி அல்ல, ஏனெனில் நீ என்னை நேசிக்கிறாய். என்னை நோகச் செய்ததற்காக நீ மனஸ்தாபப்படுகிறாய். என் அழகுள்ளவளே: நீ இப்போது என் கண்களுக்கு அருவருப்பானவளாக இல்லை. என் வரப்பிரசாதம் உன்னை அழகுள்ளவளாக ஆக்கியுள்ளது. வா: இங்கே வா, நீ விரும்புவது அனைத்தையும் என்னிடம்; சொல்; இதற்காகவே நான் பீடத்தின் மீது இருக்கிறேன்.'' ஓர் அரசன் தன் சமூகத்தில் வரும்படி உன்னை அழைக்கிறான், ""உனக்கு என்ன வேண்டும், நீ என்னவெல்லாம் விரும்புகிறாய் என்று என்னிடம் கூறு. நான் உன்னை நேசிக்கிறேன், உனக்கு நன்மை செய்ய விரும்புகிறேன்'' என்று கூறுகிறான் என்றால், அது உனக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியாக இருக்கும்! இதோ, பரலோக அரசராகிய சேசுநாதர், தம்மைச் சந்திக்க வரும் அனைவரிடமும் இதைச் சொல்கிறார்: ""வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாற்றி தருவேன்'' (மத்.11:28). ஏழைகளும், நோயாளிகளும, துன்பப்படுபவர்களுமாகிய நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள். என்னால் உங்களை வளப்படுத்தவும், உங்களைக் குணமாக்கவும், உங்களைத் தேற்றவும் முடியும். அப்படியே நான் செய்வேன். இந்த நோக்கத்திற்காகவே நான் உங்கள் பீடங்களின் மீது இருக்கிறேன்: ""பேசுகிறவர் நாமே, இதோ நாம் இங்கே இருக்கிறோம்'' (இசை.52:6 ).

என் அன்புள்ள சேசுவே, உம்மிடம் தஞ்சமடையும் ஈன சிருஷ்டிகளின் விண்ணப்பங்களைக் கேட்பதற்காக எங்கள் பீடங்களின் மீது தேவரீர் தங்கியிருக்கிறீர் என்பதால், இப்போது பரிதாபத்திற்குரிய பாவியாகிய அடியேன் உம்மை நோக்கி எழுப்பும் ஜெபத்தைக் கேளும். ஓ சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையே, பலியாக்கப்பட்டு, சிலுவையின் மீது மரணத்திற்கு உள்ளாக்கப் பட்டவரே, உமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சிக்கப்பட்ட ஓர் ஆன்மாவை நீர் என்னில் காண்கிறீர்; நான் உமக்குத் தந்துள்ள அவமானங்களை எனக்கு மன்னியும், இனி ஒருபோதும் உம்மை இழந்து போகாதிருக்க, உமது வரப்பிரசாதத்தால் எனக்கு உதவியருளும். பிரியத்திற்குரிய சேசுவே, என் பாவங்களுக்காக, ஜெத்சமெனித் தோட்டத்தில் நீர் உணர்ந்த துயரத்தில் எனக்கு ஒரு பங்கு தாரும்! ஓ, என் தேவனே, உம்மை நான் ஒருபோதும் மனநோகச் செய்யாதிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! என் அன்புள்ள ஆண்டவரே, அடியேன் பாவத்தில் மரிப்பேன் என்றால், இனி உம்மை நேசிக்க என்னால் இயலாமல் போகும். ஆனால் நான் உம்மை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே தேவரீர் எனக்காக இது வரை காத்திருந்திருக்கிறீர். தேவரீர் எனக்குத் தந்தருளிய காலத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போது உம்மை நேசிக்க என்னால் இயலும் என்பதால், நான் அப்படியே செய்வேன். உம்மை நேசிக்கும் மாபெரும் வரப்பிரசாதத்தை, உம் மீதுள்ள அன்பினால், நான் எல்லாவற்றையும் மறந்து போகும் வரத்தை, உமது உன்னத நேசமுள்ள இருதயத்தைப் பிரியப்படுத்துவதைப் பற்றி மட்டுமே நான் சிந்திக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும். என் சேசுவே, தேவரீர் எனக்காக உம் வாழ்வு முழுவதையும் செலவிட்டீர். என் எஞ்சிய வாழ்நாளிலாவது அடியேன் உமக்காக வாழும் வரத்தை எனக்குத் தந்தருளும். உமது திருப்பாடுகளின் பேறுபலன்களின் வழியாக எல்லா வரங்களையும் பெற்றுக்கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன். மரியாயே, உங்கள் பரிந்துரையிலும் நான் நம்பிக்கை வைக்கிறேன்! நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களே, என் தாயாரே! என் மீது தயவாயிருங்கள்.