அர்ச். தோமையார் வரலாறு - இயேசுவின் ஊழியர் சிறையிடப்பட்டனர்

மகு தானியை மனந்திருப்புவதற்காகச் சென்ற மனைவி திருப்பதி வெற்றியுடன் திரும்பி வருவாளென்று ஆவலுடன் அரசன் அன்று முழுவதும் காத்தவண்ணம் இருந்தான். அவள் இல்லாததால் உணவும் அருந்தவில்லை. திருப் பதியோ கடைசியாக மாலைப்போதில் அரண்மனை வந்து சேர்ந்தாள். காதலியைக் கண்டதும், "கண்ணே! நீ போய் எவ்வளவு நேரமாயிற்று. காலையிலிருந்து மாலை வரையில் மகு தானியோடு என்ன செய்துகொண்டிருந்தாய்?'' என்று வினவினான். 

அவள் அரசன் கிஞ்சித்தேனும் எதிர்பாராத மறுமொழி அளித்தாள் : "அரசே, மகு தானி புத்தி தடுமாறியிருந்தாள் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையை பார்க்கும்போது அப்படியில்லை. அவளே மெய் ஞானம் உடையவளாய் இருக்கிறாள். எனக்கும் நித்திய வாழ்வின் மார்க்கத்தைக் காட்டியுள்ளாள். மீட்பின் பாதையைக் காண்பிக்கும் அப்போஸ்தலரைக் காணும் பாக்கியம் பெற்றேன். என் அன்பரே! உமது வாழ்வும் அரசும் நிலையற்றவை. அவரிடம் செல்லுங்கள்; என்றும் நிலையான இன்பவாழ்வு பெறும் வழியைக் காட்டுவார்” என்றாள் அரசி. 

மஹாதேவன் இதைக்கேட்டு தன்னை மீறிய கோபங்கொண்டு அரசியை உடனே ஓர் இருட்டறையில் தள்ளிச் சிறைப்படுத்தினான். உடல் துடிக்க வெறி கொண்டவன் போல் சீறிச் சினந்து கிருஷ்ணனை அழைப்பித்தான். "உன் மனைவியின் மனத்தை மாற்ற எண்ணினேன். ஆனால் என் மனைவியை இழந்தேன்” என்றான் அரசன்.

கிருஷ் : என்ன நேர்ந்தது அண்ணலே?

அர : அந்த மாயக்காரப் பாதகன் அரசியையும் தனது மந்திரத்தால் மயக்கி விட்டான். திருப்பதியும் மகு தானியைப்போலவே பேதையாகி விட்டாள். அம் மாந்திரீகனையே நம்பி அவன் போதிப்பதையே விசுவசிக்கின்றாள், 

கிருஷ்: அரசே! அவனைச் சும்மா விடலாகாது. உடனே தொலைப்பதே சரி.

அப்போஸ்தலரையும் தன் மைந்தன் விஜயனையும் சிறையிலிடக் கட்டளையிட்டான் அரசன். கிருஷ்ணனோ தனது கோபத்தை அடக்க இயலாதவனாய், மகு தானி, அவளது வயோதிகத் தாதி நாரி ஆகிய இருவரையும் அரண்மனைக்குக் கொண்டுபோய் அரசியோடு சிறையில் வைத்தான். இளைஞனாகிய விஜயன் தேவ ஏவுதலுக்கு ஈடுபட்டவனாய் அப்போஸ்தலரை விடுதலை செய்ய யோசனை செய்து கொண்டிருந்தான்.

அதற்குள் அப்போஸ்தலர் கைவிலங்கோடு அரசன் முன் கொண்டுவரப்படவே, அவரோடு விஜயனும் வந்துற்றான். தோமையாரை நோக்கி, "எங்கள் மனைவிமார்களை இழக்கச் செய்கிற கடவுள் எத்தகையவர்? மகு தானியைப் போய்ப் பார்த்து நயமொழிகளால் அவளைப் பழையவழிக்குக் கொண்டு வரும்படி திருப்பதியை அனுப்பினேன். அந்தோ! அவளும் அந்தப் படுகுழியில் வீழ்ந்துவிட்டாள். இதெல்லாம் என்ன விந்தை? உடனே பதில் சொல். இல்லாவிடில் உன் உயிரை மாய்த்து விடுவேன்" என்றான் அரசன். 

அதற்குத் தோமையார், "கடவுள் நித்தியர். அவரது கற்பனையை மீறுகிறவர்கள் நித்திய தண்டனை அடைவார்கள். ஓ! அரசே! நீர் என் உடலைக் கொலை செய்யக்கூடும். ஆனால் என் ஆத்துமத்தை அசைக்க உம்மால் ஆகுமா? கடவுள் ஒருவரே உடலையும் ஆன்மாவையும் நித்திய நெருப்புக்கு இரையாக்க வல்லவர்'' என்று பதிலுரைத்தார்.