இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எதற்காக இந்தச் சடங்கு?

(எல்லார் முன்பாகவும் உயர்ந்த பான பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. சேசு முன்னால் அவற்றை விட பெரிய பாத்திரம் உள்ளது. அதுதான் சடங்காசார பாத்திரமாயிருக்க வேண்டும். சேசு முன்பாக மற்றவர்களுடைய பாத்திரம்போல் ஒன்றும் உள்ளது.)

இப்பொழுது சேசு தம் இடத்தில் நின்றபடி தமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற பெரிய பாத்திரத்தில் திராட்சை இரசத்தை ஊற்றுகிறார். அதை உயர்த்தி ஒப்புக் கொடுக்கிறார். பின் மேசை மேல் வைக்கிறார்.

பின் அவர்கள் எல்லாரும் சேர்ந்து சங்கீதம் சொல்லுகிற குரலில்: “எதற்காக இந்தச் சடங்கு?” என்று கேட்கிறார்கள். இது ஒரு ஆசாரக் கேள்வியே. சடங்கினைச் சார்ந்தது.

இக்கேள்விக்கு குடும்பத் தலைவன் என்ற முறையில் சேசு: “எஜிப்திலிருந்து நாம் பெற்ற விடுதலையை இந்த நாள் நினைப் பூட்டுகிறது. திராட்சைத் தோட்டத்தின் கனியைச் சிருஷ்டித்த ஜெகோவா வாழ்த்தப்படுவாராக!” என்று பதிலளிக்கிறார். அவர் தாம் ஒப்புக் கொடுத்த இரசத்தில் ஒரு மிடறு பருகிவிட்டு பாத்திரத்தை மற்றவர்களுக்கு அனுப்புகிறார். அதன்பின் அப்பத்தை ஒப்புக்கொடுத்து அதை வாயுணவாகப் பிட்டு அதையும், சிவந்த குழம்பில் தோய்க்கப்பட்ட கீரைகளையும் அப்படியே பரிமாற அனுப்புகிறார். செங்குழம்பு நான்கு பாத்திரங்களில் வைக்கப் பட்டிருக்கிறது.

இராப் போஜனத்தின் இந்தப் பகுதி முடிந்தது. எல்லாரும் சேர்ந்து சில சங்கீதங்களைப் பாடுகிறார்கள்.

பின் ஒரு பக்கத்துப் பலகையிலிருந்து பொரித்த ஆட்டுக் குட்டி வைக்கப்பட்ட பெரிய தட்டை சேசுவின் முன்பாகக் கொண்டு வைக்கிறார்கள்.

குழு பாடகரில் முதல் பாடகர் என்று நீங்கள் (ஆன்ம குரு) விரும்பினால் நினைத்துக் கொள்ளக் கூடிய இராயப்பர் கேட்கிறார்: “இந்த ஆட்டுக் குட்டி ஏன் இப்படி வைக்கப்பட்டிருக்கிறது?” என்று.

“பலியிடப்பட்ட ஆட்டுக் குட்டியால் இஸ்ராயேல் காப்பாற்றப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுகூரும்படியாக எந்தக் கதவு நிலைகளிலும் மேல் படிகளிலும் அந்த இரத்தம் விளங்கியதோ, அங்கே தலைப்பேறுகள் சாகவில்லை. பின்னால், அரச மாளிகை முதல் குடிசை வீடு வரையிலும் தங்கள் இறந்த முதல் பேறுகளுக்காக எஜிப்து முழுவதும் துக்கங் கொண்டாடியபோது எபிரேய மக்கள் மோயீசனால் வழிநடத்தப்பட்டு விடுதலையான வாக்குத்தத்த நாட்டை நோக்கிப் போனார்கள். இடுப்பை வரிந்து கட்டியவர் களாய், காலில் பாதரட்சை அணிந்தவர்களாய், கைகளில் யாத்திரைக்காரரின் கோல் ஏந்தியவர்களாய் ஆபிரகாமின் மக்கள் உடனே மகிழ்ச்சிக் கீதங்களைப் பாடிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள்” என்று சடங்காசாரப் பதிலை ஆண்டவர் கூறுகிறார்.

பின் எல்லாரும் எழுந்து நின்று: “எஜிப்தினின்று இஸ்ராயேலர் வெளிவந்த அந்நாளிலே, யாக்கோபின் வீட்டார் துஷ்ட சனத்திலிருந்து புறப்படுகையில்...” என்ற சங்கீதத்தைப் பாடுகின் றனர். அது சங்கீதம் 113 - நான் சரியாகக் கண்டுபிடித்தால்.

இப்பொழுது சேசு பொரித்த ஆட்டுக் குட்டியை வெட்டி மறுபடியும் பாத்திரத்தில் இரசம் வார்த்து அதில் பருகியபின் அதை மற்றவர்களுக்கு அனுப்புகிறார். அவர்கள் “பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள். ஆண்டவருடைய நாமத்தைப் புகழுங்கள். ஆண்டவ ருடைய நாமம் இப்பொழுதும் என்றென்றைக்கும் தோத்தரிக்கப் படக்கடவது. சூரியன் உதிக்கிற திசை துவக்கி அஸ்தமிக்கிற திசை மட்டும் ஆண்டவருடைய நாமம் துதிக்குரியதாமே...” என்ற சங்கீதத்தையும் பாடுகிறார்கள். (இது எந்த சங்கீதம் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.) சங்கீதம் 112.

சேசு உணவைப் பரிமாறுகிறார். ஒரு குடும்பத்தின் பிள்ளைகளையெல்லாம் அதிகம் நேசிக்கிற தகப்பனைப் போல் ஒவ்வொருவருக்கும் நல்ல அளவு கிடைக்கும்படி கவலையா யிருக்கிறார். அவர் கம்பீரமாகவும் சற்றுத்துயரமாகவும் இவ்வாறு கூறுகிறார்: “நான் இந்தப் பாஸ்காவை உங்களோடு உண்ண ஆசை மேல் ஆசையாயிருந்தேன். நித்தியம் முதலே, நான் “இரட்சகரா” யிருந்ததிலிருந்தே இது என் ஆசையாக இருந்தது. இந்தத் தருணம் அந்த நேரத்திற்கு முன்பாக வரும் என்பதை அறிந்திருந்தேன். என்னை முழுவதும் கையளிப்பதன் மகிழ்ச்சி என் வேதனைகளுக்கு ஒரு ஆறுதலை முன்கூட்டியே கொண்டு வந்தது... இந்தப் பாஸ்காவை உங்களுடன் நான் புசிக்க மிகவும் ஆவலாயிருந்தேன். ஏனென்றால் சர்வேசுரனுடைய இராச்சியம் வரும் வரையிலும் திராட்சைக் கனியின் இரசத்தை இனியொருபோதும் நான் சுவைபார்க்க மாட்டேன். அதன்பின் நான் மறுபடியும் தெரிந்தெடுக்கப் பட்டவர்களுடன் செம்மறியானவரின் விருந்தில், ஜீவிக் கிறவர்களுடன் ஜீவியர்களின் விவாக விருந்தில் அமர்வேன். ஆனால் என்னைப் போல் தாழ்மையுள்ளவர்களும் இருதயத் தூய்மையுடையவர்களும் மட்டுமே அதற்கு வருவார்கள்.” 

அப்போது பர்தலோமேயு கேட்கிறார்: “ஆண்டவரே! இருக்கையின் மகிமையைப் பெறாதவன் உமக்கு முன்பாக அமரும் மகிமையைப் பெறுகிறான் என்று சற்று முன் சொன்னீரே. அப்படியென்றால் எங்களுக்குள் முதன்மையானது யார் என்று நாங்கள் எப்படி அறிவது?” என்று.

அதற்கு சேசு: “ஒவ்வொருவரும் முதன்மைதான் - ஒருவரும் முதன்மை இல்லைதான். ஒரு தடவை... நாம் திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாம் களைப்பாயிருந்தோம்... பரிசேயர்களின் கடுமையான பகையைப் பற்றி எரிச்சலுடன் இருந்தோம். ஆயினும் உங்களில் யார் பெரியவன் என்று உங்களுக்குள் தர்க்கிக்க தடை செய்யக் கூடிய அளவு நீங்கள் களைப்பு கொண்டிருக்கவில்லை... ஒரு சிறு பையன் என்னிடம் ஓடி வந்தான்... என் சிறிய நண்பன்... அவனுடைய மாசின்மை எத்தனையோ காரியங்களைப் பற்றிய என் அருவெறுப்பைக் குறைத்தது. அவற்றுள் பிடிவாதமுள்ள உங்கள் மனிதத் தன்மை குறைந்ததல்ல. சின்ன பெஞ்சமினே! இப்போது நீ எங்கே இருக்கிறாய்? ஒரு ஞானமான பதிலை நீ வரமாகப் பெற்றுக் கூறினாய். நீ ஒரு சம்மனசாயிருந்ததால் அந்தப் பதில் மோட்சத்திலிருந்து உனக்கு வந்தது. ஆவியானவர் உன்னிடம் பேசினார். அப்போது நான் உங்களிடம் கூறினேன்: “உங்களுக்குள் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் கடைசியானவனாக, எல்லாருடையவும் ஊழியனாக இருக்க வேண்டும்” என்று. அந்த விவேகமுடைய சிறுவனை உங்களுக்கு முன்மாதிரிகையாகக் கொடுத்தேன். இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன்: ஜனங்களின் இராஜாக்கள் அவர்களை ஆதிக்கம் செய்கிறார்கள். நசுக்கப்பட்ட ஜனங்கள் அவர்களைப் பகைத்தாலும், அரசர்களைப் பாராட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். அரசர்களும் “உபகாரிகள்” என்றும் “தேச பிதாக்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தப் போலி ஆசாரத்தினடியில் பகை புகைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோல் உங்களிடம் இருக்க வேண்டாம். மிகப் பெரியவ னாயிருப்பவன் மிகச் சிறியவனாயிருக்கட்டும். தலைமையாயிருப் பவன் ஊழியஞ் செய்கிறவனாயிருக்கட்டும். உண்மையில் பார்த்தால் யார் பெரியவன்? பந்தியில் அமர்ந்திருக்கிறவனா? பந்தி பரிமாறுகிறவனா? பந்தியில் அமர்ந்திருக்கிறவனே. அப்படியிருந்தும் நான் உங்களுக்குப் பரிமாறுகிறேன். வெகு சீக்கிரமே இதை விட அதிகமாக நான் ஊழியம் புரிவேன். என் துன்ப சோதனைகளில் என்னுடன் இருந்தவர்கள் நீங்களே. என் இராச்சியத்தில் உங்களுக்கு ஓர் இடம் தயார் செய்வேன். பிதாவின் சித்தப்படி அங்கே நான் அரசனாயிருப்பது போலவே உங்களுக்கும் அப்படிச் செய்வேன். அங்கே நீங்கள் என் நித்திய பந்தியில் உண்டு பானம் செய்வீர்கள். இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களையும் நீதி விசாரிக்க அரியாசனங்களில் அமர்வீர்கள். என் துன்ப சோதனைகளில் என்னுடன் நீங்கள் இருந்தீர்கள். இந்த ஒன்றும்தான் பிதாவின் பார்வையில் உங்களைப் பெரியவர்களாக்குகிறது.” 

“இனிமேல் வருகிறவர்களைப் பற்றி என்ன? அவர்களுக்கு இராச்சியத்தில் இடம் இல்லையா? எங்களுக்கு மட்டும்தானா?”

“ஓ! என் இல்லத்தில் எத்தனை இளவரசர்கள்! வாழ்க்கையின் துன்ப சோதனைகளில் கிறீஸ்துவுக்குப் பிரமாணிக்கமாயிருந்தவர்கள் என் இராச்சியத்தின் இளவரசர்களாயிருப்பார்கள். ஏனென்றால் கடைசி மட்டும் உலக வாழ்க்கையின் வேத சாட்சியத்தில் நிலைத் திருப்பவர்கள் என்னுடன் என் துன்ப சோதனைகளில் பிரமாணிக்கமா யிருந்த உங்களைப்போல் இருப்பார்கள். என்னை விசுவசிக்கிறவர் களுடன் நான் என்னை ஒரே அடையாளமாக்கிக் கொள்கிறேன். உங்களுக்காகவும், எல்லா மனிதர்களுக்காகவும் நான் ஏற்றுக் கொள்ளும் துயரத்தை, விசேஷமாய்த் தெரிந்தெடுக்கப்படுகிறவர் களுக்கு விருதுச் சின்னமாக வழங்குகிறேன். துயரத்தில் எனக்குப் பிரமாணிக்கமாயிருக்கிறவன் பேரானந்தத்தில் என் ஆன்மாக்களுள் ஒருவனாக, என் பிரியமுள்ளவனாக இருப்பான்.” 

“நாங்கள் முடிவு வரையிலும் நிலைத்துள்ளோமே.” 

“இராயப்பா, அப்படி நீ நினைக்கிறாயா? உனக்குச் சொல்கிறேன். சோதனையின் நேரம் இனிமேல்தான் வரவிருக்கிறது. சீமோனே, யோனாவின் சீமோனே, உங்களனைவரையும் கோதுமையைப் போல் புடைக்க சாத்தான் கேட்டுள்ளான். நான் உங்களுக்காக, உங்கள் விசுவாசம் தத்தளிக்காதபடி வேண்டிக் கொண்டேன். நீ நலமடைந்தபின் உன் சகோதரர்களைத் திடப் படுத்து” (லூக்.22:32).

“நான் பாவி என்று அறிவேன். ஆனால் மரணம் வரையிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருப்பேன். அந்தப் பாவம் என்னிட மில்லை. அது என்னிடம் ஒருபோதும் இராது.” 

“என் இராயப்பா, பெருமைப்படாதே. இந்த நேரம் எண்ணற்ற விஷயங்களை மாற்றும். முன்பு ஒரு வகையில் இருந்த அவை இப்பொழுது வேறாக இருக்கும். எத்தனை விஷயங்கள்!... அவை புதிய தேவைகளைக் கொண்டு வந்து புகுத்திவிடும். உனக்கு இது தெரிந்ததுதான். எப்போதும் உனக்கு இதைச் சொல்லியிருக்கிறேன். வழிப்பறித் திருடர்கள் நிறைந்த ஒதுக்கமான இடங்கள் வழியே போகும் போதும்கூட சொன்னேன்: “பயப்படாதீர்கள். நமக்கு எந்தக் கேடும் நேரிடாது. ஏனென்றால் ஆண்டவருடைய சம்மனசுக்கள் நம்மோடிருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்று.

“நீங்கள் எதை உண்போம் என்பது பற்றியும், உங்கள் உடையைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நமக்கு என்ன தேவை என்பது பிதாவுக்குத் தெரியும் என்று நான் உங்களுக்கு சொல்லி வந்தேனே. நினைவிருக்கிறதா? இதையும் உங்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன். “ஒரு குருவியை விடவும், இன்று புல்லாயிருந்து நாளை வைக்கோலாக இருக்கிற பூவை விடவும் மனிதன் எவ்வளவோ மேலானவன். அப்படியிருந்தும் பிதாவானவர் இரண்டையும், அந்தப் பூவையும் அந்த சின்னப் பறவையையும் பராமரிக்கிறார். அப்படியானால் அவர் உங்களைக் கவனிக்க மாட்டாரென்று நீங்கள் சந்தேகிக்கலாமா? இன்னும் “கேட்கிற எவனுக்கும் கொடு, உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவனுக்குக் காட்டு” என்றும், “பையையோ கோலையோ கொண்டு போக வேண்டாம்” என்றும் உங்களுக்குக் கூறி வந்தேன். ஏனென்றால் உங்களுக்கு அன்பையும் நம்பிக்கையுறுதியையும் போதித்தேன். ஆனால் இப்பொழுது... இப்பொழுது நேரங்கள் மாறிவிட்டன. இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன் :

“இதுவரையிலும் உங்களுக்கு ஏதும் குறைவுபட்டதா? எப்பொழுதாவது உங்களை யாரும் நோகச் செய்தார்களா?” 

“இல்லை ஆண்டவரே, உம்மைத்தான் நோகச் செய்தார்கள்.”

“இதிலிருந்து என் வார்த்தைகள் உண்மையென்று நீங்கள் கண்டுகொள்ளலாம். ஆனால் இப்பொழுது சம்மனசுக்களெல்லாம் தங்கள் ஆண்டவரால் திருப்பியழைக்கப்பட்டுள்ளார்கள். இது பசாசுக்களின் நேரம்... ஆண்டவரின் சம்மனசுக்கள் தங்கள் தங்க இறக்கைகளால் தங்கள் கண்களை மூடி, தங்களையே மூடி மறைத்துக் கொண்டு, துக்கங் கொண்டாடும் வேளை, குரூர, தேவ தூஷணமான துயர நேரமாதலால் தங்கள் இறக்கை துயர நிறமாயில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்...இந்த மாலையில் பூமியில் எந்த சம்மனசும் இல்லை. அவர்கள் சர்வேசுரனுடைய அரியாசனத்தின் அருகே கடவுள் கொலையில் ஈடுபட்டுள்ள உலகத்தின தேவ தூஷணங்களும் மாசற்றவரின் அழுகையும் அங்கே கேட்காமல் அமிழ்த்தும்படியாக அங்கே இருக்கிறார்கள். நாமும் தனியாக இருக்கிறோம். நீங்களும் நானும் - தனியாக, பசாசுக்களே இந்த நேரத்தின் எஜமான் களாயிருக்கிறார்கள். ஆகவே நாம் இப்பொழுது நம்பிக்கையில்லாதவர்களும் நேசியாதவர்களுமான வறிய மனிதரைப் போலாகி அவர்களின் உபாயங்களைச் செய்வோம். பணப்பையை உடையவன் ஜாமான் பையையும் எடுத்துக் கொள்ளட்டும். வாள் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒரு வாளை வாங்கிக் கொள்ளட்டும். ஏனென்றால், “அவர் துஷ்டர்களோடு ஒருவராய் எண்ணப் பட்டார்” என்றும் என்னைப் பற்றி வேதாகமத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அதுவும் நிறைவேற வேண்டும். உண்மையாகவே என்னைப் பற்றிய அனைத்தும் பொருளுடையதாயிருக்கின்றது.” 

அப்போது சீமோன் எழுந்து தம்முடைய விலையுயர்ந்த மேல் வஸ்திரத்தை வைத்துள்ள பெட்டியை நோக்கிச் செல்கிறார் - இன்று மாலையில் அனைவரும் தங்கள் மிகச் சிறந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மிக அருமையான இடைவார்களைக் கட்டியிருக்கிறார்கள். அதிலே தமாஸ்கஸ் எஃகினால் செய்யப்பட்ட குட்டையான வாள்களை வைத் திருக்கிறார்கள். அவை வாள்களை விட, கத்திகளைப் போலிருக்கின்றன - சீமோன் பெட்டிக்குள்ளிருந்து இரண்டு வாள்களை எடுக்கிறார். அவை நீளமாய் சற்று வளைந்திருக்கிற நிஜ வாள்கள். அவற்றை அவர் சேசுவிடம் கொண்டுவந்து: “இன்று மாலை இராயப்பனும், நீரும் ஆயுத பாணிகளாயிருக்கிறோம். இந்த வாள்கள் நமக் கிருக்கின்றன. ஆனால் மற்றவர்களிடம் குட்டை வாள்களே உள்ளன” என்று சொல்கிறார்.

சேசு அந்த வாள்களை வாங்குகிறார். பரிசீலிக்கிறார். ஒன்றை உறையிலிருந்து உருவி அதன் கூர்வாயை தம் நகத்தில் சோதிக்கிறார். இது ஒரு அசாதாரணக் காட்சியாக இருக்கிறது. அதைவிட அந்தக் கொடிய ஆயுதத்தை சேசுவின் கைகளில் காண்பது மனதில் பதியக் கூடிய நூதனக் காட்சியாயிருக்கிறது.

சேசு மவுனமாய் அவற்றைப் பரிசோதிக்கும்போது யூதாஸ் சீமோனைப் பார்த்து: “யார் இவற்றை உங்களுக்குக் கொடுத்தது?” என்று கேட்கிறான். யூதாஸ் ஏதோ கலவரமடைந்தவன் போலிருக்கிறான்...

“யாரா? என் தகப்பனார் ஓர் உயர்ந்த வலிமையுள்ள மனிதர் என்பதை உமக்கு நினைப்பூட்டுகிறேன்.” 

“சரி... ஆனால் இராயப்பர்?...” 

“என் நண்பர்களுக்கு நான் அளிக்கும் பரிசுகளைப் பற்றி பிறருக்கு எப்பொழுதிலிருந்து நான் கணக்குக் கொடுக்க வேண்டுமாம்?”

அப்போது சேசு வாளை உறையில் வைத்துவிட்டு தம் தலையை நிமிர்த்தி வாளை சீமோனிடம் கொடுத்துச் சொல்கிறார்:

“சரி. இவை போதும். இவற்றைக் கொண்டு வந்தது நல்லது. இனி மூன்றாம் பாத்திரம் பருகுமுன் சற்றுப் பொறுங்கள். நான் உங்களுக்குக் கூறினேன்: மிகப் பெரியவனும், மிகச் சிறியவனும் ஒன்றுதான் என்றும், இப்பந்தியில் உங்களுக்கு நான் ஊழியன் போல் நடந்து கொள்கிறேன். இன்னும் கூடுதல் ஊழியம் செய்வேன் என்றும் கூறினேன். இவ்வளவு நேரமும் உங்களுக்கு நான் உணவளித்தேன். அது உங்கள் சரீரத்திற்கு ஒரு ஊழியம். இப்பொழுது உங்கள் உள்ளங்களுக்கு உணவு தர விரும்புகிறேன். இது பழைய சடங்கின் உணவல்ல. இது புதிய வழிபாட்டிற்குரியது. நான் “போதகர்” ஆவதற்கு முன் ஞானஸ்நானம் பெற ஆசித்தேன். அந்த ஞானஸ்நானம் வார்த்தையைப் பரவச் செய்யப் போதுமானதாயிருந்தது. இப்பொழுது போதகருடைய இரத்தம் சிந்தப்படும். நீங்கள் ஸ்நாபகருடைய நாட்களில் அவரால் சுத்திகரிக்கப்பட்டீர்கள். இன்று தேவாலயத்தில் சுத்திகரம் பெற்றீர்கள். ஆயினும் இவை பற்றாது. இன்னுமொரு சுத்திகரிப்பு உங்களுக்குத் தேவைப்படுகிறது. வாருங்கள், உங்களை நான் சுத்திகரிக்கிறேன். உங்கள் உணவை நிறுத்துங்கள். வயிற்றை நிரப்புவதற்காகக் கொடுக்கப்படும் உணவைவிட அதிக மேலானதும் அவசியமுமான ஒன்று உள்ளது. இந்த சரீர உணவு பாஸ்கா திருச்சடங்கின் உணவாதலால் புனித உணவுதான் என்றாலும் கூட, உங்களுக்கு சீவியத்தை தருவதற்காக உங்களிடம் தன் ஆசனத்தை அமைத்துக் கொள்ளும்படி இறங்கி வந்து கொண்டிருக்கிற மோட்சத்தின் கொடையைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிற பரிசுத்தமான ஆவி அது. பரிசுத்தமாயிருக்கிறவர்களுக்கு சீவியத்தைத் தர அது வருகிறது.”