ஒரு பயங்கரமான அசுர மிருகம்!

என் பிரியமுள்ள சிறுவர்களே, நேற்றிரவு வெறுப்பிற்குரிய ஒரு காரியத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது என்று கூறினேன். அது நான் கண்ட ஒரு கனவாகும். நான் அதைப் பற்றிப் பேச நினைக்கவில்லை, ஏனெனில் அது வெறும் கனவுதான் என்று நான் எண்ணினேன். மேலும், நான் என் கனவுகளை விவரிக்கும் போதெல்லாம் அதைப் பற்றி விமர்சனங்களும், எதிர்ப்புகளும் சொல்லப்படுகின்றன என்பதும் ஒரு காரணம். ஆனாலும் இப்போது, ஓர் இரண்டாவது கனவு, முதல் கனவை வெளிப்படுத்துமாறு என்னை வற்புறுத்துகிறது. கடந்த ஒரு சில இரவுகளாக, குறிப்பாக கடந்த மூன்று இரவுகளாக, பயங்கரக் கனவுகளால் நான் திரும்பத் திரும்பக் குழப்பப்படுகிறேன் என்பதும் இன்னும் அதிகமாக என்னை வற்புறுத்துகிறது. ஒரு சிறு ஓய்வுக்காக நான் லான்ஸோவுக்குச் சென்றேன் என்று உங்களுக்குத் தெரியும். அங்கே நான் கழித்த கடைசி இரவில், நான் உறங்கிய மாத்திரத்தில், ஒரு மிக அருவருப்புக் குரிய தேரை என் அறைக்குள் நுழைவதையும், என் படுக்கையின் கால்மாட்டில் குந்தியமர்வதையும் கண்டேன். அது ஓர் எருதின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதன் கால்களும், உடலும், தலையும் வீங்கி, மேலும் மேலும் அதிக அருவருப்புக்குரியதாக ஆகிக் கொண்டிருக்க, நான் மூச்சுக்குத் தவித்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பச்சை நிற உடலும், நெருப்பு மயமான கண்களும், சிவப்புக் கோடிட்ட வாயும், தொண்டையும், சிறிய, எலும்பாலான காதுகளும் மிகுந்த அச்சமூட்டும் காட்சியாக இருந்தன. அதை நன்றாக உற்று நோக்கியபடி, நான் எனக்குள், “ஆனால் ஒரு தேரைக்குக் காதுகள் கிடையாதே!" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். மேலும் அதன் மூக்கிலிருந்து இரண்டு கொம்புகள் வெளிப்படுவதையும், அதன் விலாப் பக்கங் களிலிருந்து இரண்டு பச்சை நிற இறக்கைகள் முளைப்பதையும் நான் கவனித்தேன். அதன் கால்கள் ஒரு சிங்கத்தின் கால்களைப் போலத்தோன்றின. அதன் நீண்ட வால், பிளவுபட்ட முனையைக் கொண்ட தாக இருந்தது.

அந்தக் கணத்தில், நான் சற்று அச்சமற்றுப் போனதாக எனக்குத் தோன்றியது. ஆனால் அந்த அரக்க ஜந்து தன் பிரமாண்ட மான, பற்கள் நிரம்பிய வாயைத் திறந்தபடி, என்னை சிறிது சிறிதாக நெருங்கி வந்தபோது, நான் நிஜமாகவே மிகவும் அரண்டு பயந்து போனேன். அது நரகத்திலிருந்து வந்த ஒரு பசாசு என்று நான் நினைத் தேன். ஏனெனில் அது அப்படித்தான் தோன்றியது. நான் சிலுவை அடையாளம் வரைந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை . மணியை அடித்தேன். ஆனால் யாரும் வரவில்லை. நான் கத்தினேன். பலனில்லை. அந்த அசுர மிருகம் பின்வாங்குவதாக இல்லை. “அசுத்தப் பேயே, உனக்கு என்னிடமிருந்து என்னதான் வேண்டும்?” என்று நான் கேட்டேன். பதிலுக்கு, அது வெறுமனே தன் காதுகளை முழுவதுமாக விறைத்துக் கொண்டும், அவற்றை மேல் நோக்கி உயர்த்தியபடியும் என்னை நோக்கி ஊர்ந்து வந்தது. அதன்பின் தன் முன்பாதங்களை என் படுக்கையின் சட்டத்தின் மேல் வைத்து, தன் பின்னங்கால்களில் தன் உடலை உயர்த்திய அது, ஒரு கணம் தாமதித்தபடி என்னைப் பார்த்தது. அதன்பின் அதன் மூக்குப் பகுதி என் முகத்திற்கு மிக அருகில் வரும் வரை அது என் படுக்கையின் முன்னோக்கி ஊர்ந்து வந்தது. நான் எத்தகைய அருவருப்பை உணர்ந்தேன் என்றால், படுக்கையை விட்டுக் குதித்து இறங்கி விட நான் முயன்றேன். ஆனால் சரியாக அந்நேரத்தில்தான் அந்த அசுர ஜந்து தன் வாயை அகலத் திறந்தது. நான் என்னைத் தற்காத்துக் கொள்ளவும், அந்த அசுர மிருகத்தைப் பின்னோக்கித் தள்ளவும் முயன்றேன். ஆனால் அது எவ்வளவு அருவருப்பாயிருந்தது என்றால், என்னுடைய அந்த மிக மோசமான சூழ்நிலையிலும் கூட, அதைத் தொட நான் துணியவில்லை. ஆகவே நான் அலறிநேன், வெறிபிடித் தவனைப் போல என் பின்னால் இருக்கிற சிறு பரிசுத்த தீர்த்தத் தொட்டியை எட்டித் தொட முயன்றேன். ஆனால் என்னால் சுவரை மட்டும்தான் தொட முடிந்தது. இதனிடையே அந்தப் பிரமாண்ட மான தேரை என் தலையைத் தன் வாயால் கவ்வி விட்டது. இதனால் என் உடலில் பாதி அதன் அசுத்த வாயினுள் இருந்தது. “கடவுளின் பெயரால் எனக்குச் சொல்: ஏன் எனக்கு இப்படிச் செய்கிறாய்?” என்று நான் கத்தினேன். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்தத் தேரை பின்வாங்கி, என் தலையை விடுவித்தது. மீண்டும் நான் சிலுவை அடையாளம் வரைந்தேன், இப்போது பரிசுத்த தீர்த்தத் தொட்டியில் என் கையை விட என்னால் முடிந்ததால், அந்த அசுர மிருகத்தின் மீது ஒரு சில துளிகளைத் தெளித்தேன். கடும் அச்சமூட்டும் அலறலோடு அது பின்னோக்கி விழுந்து, மறைந்து போனது. அதே வேளையில் ஒரு இரகசியக் குரல் மேலிருந்து மிகத் தெளிவாக, “நீ ஏன் அவர்களுக்குச் சொல்வதில்லை?” என்று கேட்டது. |

என் நீண்ட நேர அலறல்களால் உறக்கம் கலைந்து விட்ட லான்ஸோவின் இயக்குனர் சுவாமி லேமாய்ன், நான் சுவரின் மீது மோதும் சத்தங்களைக் கேட்டிருக்கிறார். அவர் காலையில் என்னிடம், “டொன் போஸ்கோ, நேற்றிரவு பேய்க் கனவு ஏதும் கண்டீர்களோ?” என்று கேட்டார்.

“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?” “ஏனெனனில் உம் அலறல்களை நான் கேட்டேன்.”

நான் கண்டுள்ளவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கடவுள் சித்தங்கொண்டார் என்று நான் புரிந்து கொண்டேன். இந்தக் காரணத்திற்காகவும், இந்த பயங்கரக் கனவுகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளவும், உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவது என்று நான் தீர்மானித்திருக்கிறேன். ஆண்டவரின் இரக்கத்திற்காக அவருக்கு நன்றி கூறுவோம். இதனிடையே, அவருடைய எச்சரிப்புள்ள அறிவுரைகளை நிறைவேற்ற நாம் பாடு படுவோம், அவற்றை நமக்கு அறிவிக்க அவர் என்ன வழியைத் தெரிந்து கொண்டாலும், அதுபற்றி நமக்குக் கவலையில்லை. நம் ஆன்மாக்களைக் காத்துக் கொள்ள நமக்கு உதவும்படி அவர் அனுப்புகிற வழிகளை நாம் பயன்படுத்துவோம். இந்தக் கனவுகளின் வழியாக உங்கள் ஒவ்வொருவருடைய மனச்சான்றும் என்ன நிலையில் இருக்கிறது என்பதை நான் அறிய வந்திருக்கிறேன்.

என்றாலும், நான் உங்களுக்கு வெளிப்படுத்தப் போகும் காரியங்களை இந்த நான்கு சுவர்களுக்குள் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதைப் பற்றி எழுதவோ, இந்த இல்லத்திற்கு வெளியே அதைப் பற்றிப் பேசவோ வேண்டாம் என்று நான் உங்களை இரந்து கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இத்தகைய காரியங்கள் சில மனிதர்கள் செய்யக் கூடியது போல, ஏளனம் செய்யப்படக் கூடாதவையாக இருக்கின்றன. இந்தக் காரியங்களை ஒரு தந்தை தன் அன்புள்ள மகன்களிடம் சொல்வது போலவே நான் உங்களுக்கு இரகசியமாகக் கூறுகிறேன். நீங்களும் உங்கள் சொந்தத் தந்தை இவற்றை உங்களிடம் சொல்வது போலவே அவற்றைக் கேட்க வேண்டும். நல்லது, நான் மறக்க விரும்புகிற, ஆயினும் வெளிப்படுத்த வேண்டியுள்ள கனவுகள் இதோ:

நான் பரிசுத்த வாரத்தின் தொடக்கத்திலேயே, ஏப்ரல் 5, ஞாயிறு அன்று இந்தக் கனவுகளைக் கண்டேன். இது பல, துன்பமிக்க இரவுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. இந்தக் கனவுகள் என்னை எந்த அளவுக்கு சோர்ந்து போகச் செய்கின்றன என்றால், இரவு முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தவனைப் போல நான் காலையில் முற்றிலும் பலமற்றுப் போகிறேன். அவை எனக்கு எச்சரிக்கைகள் தந்ததோடு, மிக அதிகமாக என்னை நிலை குலையவும் செய்து விட்டன. முதல் நாளிரவு நான் இறந்து விட்ட தாகக் கனவு கண்டேன்; இரண்டாம் நாளிரவில், நான் என் கணக்கை ஒப்புவிக்கும்படி கடவுளின் நீதியாசனத்தின் முன் நின்று கொண் டிருந்தேன். ஒவ்வொரு கனவுக்குப் பிறகும் நான் கண் விழித்து, நான் உயிரோடுதான் இருக்கிறேன், ஒரு பரிசுத்தமான மரணத்திற்கு என்னை ஆயத்தம் செய்ய எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். மூன்றாவது இரவில், நான் மோட்சத்தில் இருந்ததாகக் கனவு கண்டேன். நான் நிச்சயமாக அதை அனுபவித்து மகிழ்ந்தேன். ஆனால் மறுநாள் காலையில் நான் கண்விழித்ததும் எல்லாம் மறைந்து விட்டது. ஆயினும் எனக்கு கடந்து போகிற ஒரு காட்சியாக மட்டும் காட்டப்பட்ட அந்த நித்திய இராச்சியத்தை என்ன விலை கொடுத்தாவது சம்பாதித்துக் கொள்வது என்பதில் நான் உறுதியாயிருந்ததை உணர்ந்தேன். இது வரையிலும் இந்தக் கனவுகள் கொஞ்சமேனும் உங்களைப் பற்றியதாக இல்லை. அவற்றால் உங்களுக்கு எந்தப் பலனும் ஏற்பட்டிருக்கவும் முடியாது. ஒருவன் மனதில் ஏதாவது ஒரு சிந்தனையோடு உறக்கத்தில் விழும்போது, அவனுடைய கற்பனை வேலை செய்யத் தொடங்குகிறது, அவன் அது பற்றிக் கனவு காணத் தொடங்குகிறான்.