இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் மன உற்சாகத்தை மீட்டுத் தரும் இளைப்பாற்றியாக இருக்கிறது!

"இன் லாபோரே ரெக்குய்யெஸ்; இன் ஃப்ளேத்தூ ஸோலாத்ஸியும்.''

தேவசிநேகம் உழைப்பில் ஓய்வு என்றும் துக்கத்தில் ஆறுதல் என்றும் அழைக்கப்படுகிறது. அன்பு உடல், மன உற்சாகத்தை மீண்டும் தரும் இளைப்பாற்றியாக இருக்கிறது. ஏனெனில் அன்பின் முதன்மையான விளைவு நேசரின் சித்தத்தை நேசிக்கப்படுபவரின் சித்தத்தோடு ஐக்கியப்படுத்துவது ஆகும். கடவுளை நேசிக்கும் ஓர் ஆன்மாவுக்கு, தான் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அவமதிப்பிலும், தான் அனுபவிக்கும் ஒவ்வொரு துயரத்திலும், தான் சந்திக்கும் ஒவ்வொரு இழப்பிலும், தன் நேசரின் திருச்சித்தத்தாலேயே இது நிகழ அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவு அது அமைந்த மனதோடு இருப்பதற்கு இருப்பதற்குப் போதுமானது. ""என் சர்வேசுரனுடைய திருச்சித்தம் இதுவே'' என்று சொல்லிக் கொண்டு, எல்லாத் துன்பங்களிலும், பகைமைகளிலும் அது சமாதானமும், திருப்தியும் அடைகிறது. இது புலனின்பங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சமாதானமாக இருக்கிறது. ""சகல புத்தியையும் கடந்த தேவ சமாதானம்'' (பிலி.4:7). அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள், ""இது கடவுளின் சித்தம்'' என்று மட்டும் சொல்வதால், உடனடியாக மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டாள்.

ஓ என் தேவனே, எவ்வளவு அடிக்கடி என் சொந்த சித்தத்தைப் பின்பற்றுவதன் பொருட்டு, நான் உம் திருச்சித்தத்தை எதிர்த்துப் புறக்கணித்திருக்கிறேன்! மற்ற எல்லாத் தீமைகளுக்கும் மேலாக இந்தத் தீமைக்காக நான் துக்கப்படுகிறேன். ஆண்டவரே, இந்நாள் முதல் என் முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்க நான் ஆசிக்கிறேன்.

இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தன் சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டும்; ஆனால் சிலுவை அதை இழுத்துச் செல்பவர்களுக்குக் கடினமானது, ஆனால் அதைத் தழுவிக் கொள்பவர்களுக்கு அது எளிதானது என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். எப்படி அடிப்பது என்றும், எப்படி குணமாக்குவது என்றும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். ""அவரே காயப்படுத்துகிறார், அவரே குணமாக்குகிறார், அவரே அடிக்கிறார், அவரது கரங்கள் குணப்படுத்துகின்றன'' என்று பரிசுத்த யோப் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவர், தமது இனிய அபிஷேகத்தால், ஒவ்வொரு அவமானத்தையும், வாதையையும் இனியதாகவும், சுகமானதாகவும் ஆக்குகிறார். ""ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியம் என்பதால், அப்படியே ஆகக்கடவது'' (மத்.11:26). நமக்கு நேரிடும் ஒவ்வொரு துன்பத்திலும் நாமும் இப்படியே சொல்ல வேண்டும்: ""ஆண்டவரே, இதுவே உமக்குப் பிரியம் என்பதால், அப்படியே ஆகக்கடவது.'' ஏதாவது ஓர் உலகத்தன்மையான பேராபத்து பற்றிய அச்சம் ஏற்படும்போது, ""ஆண்டவரே, உமக்குப் பிரியமானதை எனக்குச் செய்யும்; அனைத்தும் உம்மிடமிருந்தே வருவதாக நான் ஏற்றுக கொள்வேன்'' என்று சொல்வோம். அர்ச். தெரேசம்மாள் அறிவுறுத்துவது போல, ஒரு நாள்பொழுதில், இம்முறையில் கடவுளுக்கு நம்மை அடிக்கடி ஒப்புக்கொடுப்பது நல்லது என்று அர்ச். தெரேசம்மாள் அறிவுறுத்துகிறாள்.

"பேசும் ஆண்டவரே, உம் அடியான் கேட்கிறான்.'' நான் என்ன செய்ய வேண்டுமென்று சித்தமாயிருக்கிறீர்? நான் செய்ய வேண்டுமென்று நீர் விரும்பும் அனைத்தையும் நான் செய்வேன். உமது சித்தமே என் ஒரே ஆசையாகவும், என் ஒரே நேசமாகவும் இருக்கும். பரிசுத்த ஆவியானவரே, என் பலவீனத்தைப் பலப்படுத்தும், நீர் நன்மைத்தனமாகவே இருக்கிறீர். உம்மையன்றி வேறு எதையும் யாரையும் நான் எப்படி நேசிக்க முடியும்? ஓ, உமது பரிசுத்த அன்பின் இனிய ஈர்ப்புகளைக் கொண்டு என் இருதய நாட்டங்கள் அனைத்தையும் உம்மிடம் ஈர்த்துக் கொள்ளும். நான் என்னை முழுமையாக உமக்குத் தரும்படியாக, அனைத்தையும் துறந்து விடுகிறேன். என்னை ஏற்றுக் கொண்டு, எனக்கு உதவியாயிரும். மரியாயே, என் தாயாரே, எனக்காக ஜெபியுங்கள்.