கன்னி மரியாயின் பிறப்பு.

26 ஆகஸ்ட் 1944.

அன்னம்மாள் தோட்டத்திலிருந்து வருகிறாள்.  அவளைப் போலவே காணப்படுகிற ஓர் உறவினளின் கரத்தில் சாய்ந்து கொண்டு வருகிறாள்.  பல மாதக் கர்ப்பிணியாக, களைத்திருக்கிறாள்.   இருக்கிற புழுக்கமும், உஷ்ணமும் அவளுடைய களைப்பை ஆற்றவில்லை.  எனக்கே அது சோர்வைத் தருகிறது.

தோட்டம் நிழலுள்ளதுதானென்றாலும்,வெப்பம்               அதிகமாக, இறுக்கமாக உள்ளது.  மென்மையாகப் பிசைந்த               மாவு வெட்டப்படக் கூடியது போல்  ஆகாயம் பாரமாக இருக்கிறது.  மேகமற்ற நீல வானத்திலிருந்து சூரியன்            இரக்கமற்றுக் காய்கிறது.  கொஞ்சம் தூசியும் படர்ந்து          ஆகாயத்தை மங்க வைக்கிறது.  கால நிலை நீண்ட நாட்களாக வறட்சியுற்று இருந்திருக்க வேண்டும்.  ஏனென்றால் சாகுபடி செய்யப்படாத நிலம் எப்படியும் மெல்லிய வெள்ளைத்            தூசியாகி விடும்.  திறந்த வெளியில் இந்த நிறம் சற்று இளஞ்சிவப்பாயும், கொஞ்சம் ஈரப் பசையுள்ள மண் காணப்படுகிற மரங்களுக்கடியில் அது செம்மண் போன்றும் உள்ளது.  மலர்ப் பாத்திகளின் ஓரங்களில் நிலம் ஈரமாயிருக்கிறது.  அங்கே          சால்களில் மரக்கறிகள் வளர்கின்றன.  ரோஜாச் செடிகள், முல்லை, மற்றும் மலர்ச் செடிகள், குறிப்பாக அழகான மலர்ச் செடிப் பந்தல்களின் பக்கத்திலும் நில ஈரம் உள்ளது.  கொடிப்                      பந்தல் பழ மரத் தோட்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது.  வயல்கள் வரையிலும் அப்படி உள்ளது.  வயல்களில் பயிர்                            இல்லை.  சொத்தின் எல்லையைக் காட்டும் மேட்டு நிலத்தில்             புல் வறண்டும்,  மெலிந்தும் உள்ளது.  ஓரங்களில் மட்டும் அது கூடுதல் பச்சையாகவும், தடிப்பாகவும் காணப்படுகிறது.  அங்கே              வேலியாக உள்ள முட்செடிகளில்தான் சிவப்பு நிறத்தில்              பழங்கள் அடர்ந்துள்ளன.  அந்தப் பக்கம் சில ஆடுகள்           நிற்கின்றன.  ஓர் இளம் இடையன் தன் ஆடுகளுக்கு                        நிழலும் மேய்ச்சலும் தேடுகிறான்.

சுவக்கீன் திராட்சை வரிசைகளையும் ஒலிவ          மரங்களையும் சுற்றி வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.  அவருக்கு இரண்டு பேர் உதவி செய்கிறார்கள்.  வயதானவர் என்றாலும், துரிதமாக, ஆர்வத்தோடு வேலை செய்கிறார்.  ஒரு வயலின் ஓரத்தில், வறண்ட செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச சிறு வாய்க்கால்களை அவர்கள் அமைக்கிறார்கள்.  காய்ந்த நிலத்தின் புற்களூடே தண்ணீர் களகளக்கிறது.  அதிக பாரமாக திராட்சைக் குலைகளை ஏந்தியுள்ள செடிகளையும், ஒலிவ மரங்களையும் சுற்றிப் பாய்கிற தண்ணீர் வட்டமாக ஒரு கணம் பெருகி நின்று மஞ்சள் படிவம் போல் காணப்பட்டு, உடனே நனைந்த மண்தரை தெரிகிறது.

கொடிப் பந்தலின் கீழ் தேனீக்கள் இரைகின்றன - பொன்மய திராட்சைக் கனிகளின்  தித்திப்பிற்காக.  பந்தலுக்கடியில் அன்னம்மாள் மெல்ல சுவக்கீனை நோக்கி வருகிறாள்.  அவளைக் கண்டதும் அவர் விரைந்து வருகிறார்.

“இவ்வளவு தூரம் வந்தாயாக்கும்?” என்கிறார்.

“வீடு அடுப்பாகத் தகிக்கிறது.” 

“உனக்குக் கஷ்டமாயிருக்கிறதா?” 

“இக்கடைசி நேரத்தின் கஷ்டம் ஒரு கர்ப்பிணியின் கஷ்டம்தான்.  எல்லோருக்கும் இயற்கையிலேயே உள்ளதுதான் - மனிதனுக்கும் மிருகங்களுக்கும். நீங்கள் அதிக வெப்பமடையாதீர்கள்.” 

“தண்ணீர் இதோ வந்து விட்டது என்று நம்பி மூன்று                நாள் காத்திருந்தும், அது இன்னும் வரவில்லை.  நிலமோ                 காய்ந்து விட்டது.  நமக்கு இவ்வளவு பக்கத்தில் இவ்வளவு செழிப்பாக தண்ணீர் உள்ள சுனை இருப்பதால் நாம் அதிர்ஷ்டசாலிகள்தான்.  வாய்க்கால்கள் வெட்டியிருக்கிறேன்.  வாடின இலைகளும் தூசியுமாயிருக்கிற செடிகளுக்கு அது ஓரளவு தாவிளை. அவை பிழைத்துக் கொள்வதற்குப் போதும்.  மழை மட்டும் பெய்யுமானால்!...” சுவக்கீன் எல்லா விவசாயிகளும் கொள்ளும் ஆர்வத்தோடு வானத்தைப் பார்க்கிறார்.  களைப்புற்ற அன்னம்மாள் ஒரு விசிறியால் தனக்குக் குளிர்ச்சி                    ஏற்படுத்திக் கொள்கிறாள்.  அந்த விசிறி பனை வகை மர                  இலையால் செய்யப்பட்டு, பல நிற நூல்களால் இறுக்கமாய்ப் பின்னப்பட்டிருக்கிறது.

அப்போது அன்னம்மாளுக்குத் துணையாக வந்தவள்: “அதோ அங்கே பெரிய யஹர்மோனுக்கு அப்பால் மேகங்கள் எழும்புகின்றன.  வாடையும் வீசுகிறது.  அது உற்சாகமூட்டும்.  மழையையும் கொண்டு வரக் கூடும்” என்கிறாள்.

சுவக்கீன் சோர்வுடன் கூறுகிறார்:  “மூன்று நாளாக இந்த வாடை வீசுகிறது.  நிலா உதித்தவுடன் அமர்ந்து விடுகிறது.  இனியும் அப்படித்தான் செய்யும்.” 

“நாம் வீடு திரும்புவோம்.  இங்கும்தான் மூச்சுவிட முடியவில்லை.  எப்படியும் வீட்டுக்குப் போவதே நல்லது...” என்கிறாள் அன்னம்மாள்.  வழக்கத்திற்கு மாறாக, ஒலிவ நிறமாக அவள் காணப்படுகிறாள்.  அவள் முகம் வெளிறிப் போயிருக்கிறது.

“வேதனைப்படுகிறாயா?” 

“இல்லை.  தேவாலயத்தில் எனக்கு வரப்பிரசாதம் அருளப்பட்டபோது ஏற்பட்ட அமைதியை உணருகிறேன்.  அதே அமைதி என் தாய்மையை நான் உணர்ந்த போதும் ஏற்பட்டது.  அது ஒரு பரவசம் போன்றது.  உடல் அமைதியான உறக்கத்தில் ஈடுபட, ஆன்மா சமாதானத்தில் அமைதி கொண்டிருக்கும். அதற்கு சரீரப் பிரகாரம் ஒப்புமை இல்லை.  சுவக்கீன், உங்கள் இல்லத்திற்கு நான் வந்த போது, “ஒரு நீதிமானின் மனைவி நான்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.  முன்போல் இப்போதும் உங்களை நேசிக்கிறேன். அப்போது என்னிடம் சமாதானம் குடிகொண்டிருந்தது.  உங்கள் அன்பு என்னைப் பேணிய போதெல்லாம் அதை நான் உணர்ந்தேன். ஆனால் இந்த சமாதானம் வேறானது.  நம் தந்தை யாக்கோபு, அவர் சம்மனசுக்களைப் பற்றிக் கனவு கண்டபின் இப்படிப்பட்ட சமாதானம் அவரை மேற்கொண்டிருந்ததென நினைக்கிறேன். இது எண்ணெய் படர்ந்து விரிந்து சாந்தப்படுத்தி ஆற்றுவது போலிருக்கிறது. இதை விட, ரபேல் சம்மனசு தோபிகளுக்குத் தோன்றியபின் அவர்கள் பெற்ற ஆனந்த சமாதானம் என்பது அதிகப் பொருத்தமாயிருக்கும். நான் இந்த உணர்தலுக்குள் என்னையே உட்படுத்தினால் அது மேலும் மேலும் வலுவடைந்து எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.  அப்போது நான் நீல வான வெளிக்குள் உயரச் செல்வது போலிருக்கிறது.  காரணம் எதுவும் எனக்குத் தெரியாது.  ஆனால் இந்த அமைதியான மகிழ்ச்சி    எனக்கிருப்பதால் என் இருதயத்தில் ஒரு பாடல் வருகிறது.  முந்தைய தோபியாஸின் பாடல். அது இந்நேரத்திற் கென்றே எழுதப்பட்டதென நினைக்கிறேன்.  இந்த மகிழ்ச்சிக்கென... அதைப் பெற்றுக் கொள்கிற இஸ்ராயேலின் நாட்டிற்காக... பாவியான ஜெருசலேம் இப்பொழுது மன்னிக்கப்பட்டதற்காக... ஒரு தாயின் மதிமயக்கத்தைக் கேலி செய்யாதீர்கள்.  நான் அதைச் சொல்கிறேன்:  “உன் நன்மைகளிலெல்லாம் ஆண்டவரை வாழ்த்துவாயாக.  சதா காலங்களுக்கும் தேவனாயிருக்கிற அவரைப் புகழ்வாயாக!  அவர் தம் கூடாரத்தை உன்னிடத்தில் மீண்டும் கட்டும்படியாக...” (தோபியாஸ் 13:12)  ஜெருசலேமில் மெய்யங் கடவுளின் கூடாரத்தை மீண்டும் கட்டுவது இதோ பிறக்கப் போகிற பிள்ளையாய்த்தானிருக்கும் என்று நான் நினைக்கிறேன்... மேலும் என்னுடைய பிள்ளையின் வருங்காலமே தீர்க்கதரிசனமாய்க் கூறப்பட்டதேயயாழிய அது பட்டணத்தைப் பற்றியல்ல என்றும் நினைக்கிறேன்.  அதை அந்தப் பாடல் இப்படிச் சொல்கிறது:  “நீ காந்தியாய்        ஒளிவிடுவாய்.  பூமியிலுள்ள சனங்கள் அனைத்தும் உன்னை வணங்குவர்.  தூரத்திலிருந்து அவர்கள் உன்னிடம் வருவார்கள்.  தானங்களைக் கொண்டு வந்து உன்னில் தேவனைத் தொழுவார்கள்.  உன் பூமியைப் புனித பூமியென்பார்கள்.  உன்னில் மகா நாமத்தைப் பிரார்த்திப்பார்கள்... நீ உன் மக்களில் மகிழ்ச்சியடைவாய்.  ஏனெனில் அவர்கள் எல்லாரும் ஆசீர்வதிக்கப்பட்டு, தேவனில் ஒன்றுபடுவார்கள்.  உன்னை நேசிக்கிறவர்களும் உன் சமாதானத்தினிமித்தம் சந்தோஷிக்கிற யாவரும் பாக்கியவான்களாம்...” (தோ.13:13-18) 

இவ்வார்த்தைகளைச் சொல்லும்போது அன்னம்மாளின்  முக நிறம் மாறுகிறது.  நிலவொளியிலிருந்து ஏதோ கொண்டு வரப்பட்டது போல் அவள் பிரகாசமடைகிறாள்.  அந்தப் பிரகாசம் நெருப்பின் சுவாலையிலிருந்து வருவது             போலிருக்கிறது.  பின் அது மறுபடியும் நிலவின் வெண்யணாளி போலாகிறது.   இப்படி மாறி மாறி நிகழ்கிறது.  அவளை அறியாமலே அவள் கன்னங்களில் இனிய கண்ணீர் வழிந்தோடுகிறது. அவள் ஆனந்தமடைந்து புன்னகை புரிகிறாள்.   அப்படியே சுவக்கீனுக்கும் தன் உறவினளுக்கும் நடுவில்                 வீட்டை நோக்கி வருகிறாள்.  அவர்கள் இதையெல்லாம் கேட்டு உணர்ச்சி வசமடைந்து மவுனமாகிறார்கள்.

அவர்கள் வேகமாய் வருகிறார்கள்.    ஏனென்றால் ஒரு  பலத்த காற்றினால் மேகங்கள் வானத்தில் ஒன்று திரட்டப்படுகின்றன.  மேட்டு நிலம் இருளடைகிறது.  புயலின் எச்சரிப்பால் அது நடுங்குகிறது.  வீட்டின் புகுவாயிலுக்கு            வரவும் ஒரு மின்னல் வீச்சும் முதல் இடி முழக்கமும்                     பெரும் முரசுகளைப் போல் உறுமுகின்றன.  அது, அடுத்தடுத்து கேட்கிற முதல் நீர்த்துளிகள் இலைகள் மேல் விழும்          சத்தத்துடன் கலக்கிறது.
எல்லாரும் வீட்டினுட் செல்கிறார்கள்.  அன்னம்மாள்              தன் இடம் செல்கிறாள்.  சுவக்கீன் வாசலில் ஊழியருடன் நின்று பேசுகிறார்.  வறண்ட பூமிக்கு ஆசீர்வாதமாக வந்துள்ள மிக விரும்பப்பட்ட தண்ணீரைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி அச்சமாக மாறுகிறது.  ஏனென்றால் வேகமான ஒரு புயல் மின்னல் முழக்கத்தோடு நெருங்கி வருகிறது. ஆலங்கட்டி மழை வரக்கூடியதாகத் தெரிகிறது.   “மேகம் வெடித்தால் திராட்சைக் கனிகளையும், ஒலிவ மரங்களையும் இயந்திரக் கல் போல் நசுக்கி விடுமே! என்ன செய்வேன்?” என்கிறார் சுவக்கீன்.

சுவக்கீன் அன்னம்மாளைப் பற்றியும் கவலை கொள்கிறார்.  அவளுடைய பேறுகாலம் வந்துள்ளது.  அவருடைய உறவினள், அன்னம்மாள் வேதனைப்படவில்லை என்று கூறுகிறாள்.                     ஆயினும் அவர் பதட்டமடைகிறார்.  அந்த உறவினளோ,                      அல்லது வேறு எந்த ஸ்திரீயோ - அல்பேயுஸின் தாய் உட்பட - அன்னம்மாளின் அறையை விட்டு வரவோ, அல்லது                        அகன்ற பாத்திரங்களில் வெந்நீரோ அல்லது பெரிய சமையல்கட்டின் நெருப்பில் சூடுகாட்டப்பட்ட லினன் துணிகளையோ கொண்டு உள்ளே போகவோ செய்யும்போது,          அவர் போய் அவர்களிடம் விசாரிக்கிறார்.  அவர்கள் அவருக்கு உறுதி கூறினாலும், அவர் அமைதியடையவில்லை.  அன்னம்மாளின் வேதனைக் குரல் கேட்காததினாலும் அவர் கவலையடைகிறார்.  “நான் ஒரு ஆண்பிள்ளை.  குழந்தைப் பேற்றைக் கண்டதில்லை.  ஆனால் வேதனையில்லாதிருப்பது உயிராபத்து என்று கேட்டிருக்கிறேன்” என்கிறார்.

நேரம் இருட்டிக் கொண்டிருக்கிறது.  ஒரு பெரும் புயற்காற்று வீசுகிறது.  தாரை தாரையாய் ஊற்றும் மழையையும் காற்றையும் மின்னலையும் கொண்டு வருகிறது - ஆலங்கட்டி மழையைத் தவிர.  அது வேறிடத்தில் விழுந்துள்ளது.

புயலின் மூர்க்கத்தைப் பார்த்த ஓர் ஊழியன் சொல்கிறான்: “சாத்தான் நரகத்திலிருந்து தன் பசாசுக்களுடன் வெளியேறி வந்திருக்கிறது போல் தோன்றுகிறது.  அந்தக் கரிய மேகங்களைப் பாருங்கள்!  ஆகாயத்தில் கந்தக வாடையை முகர முடிகிறது.  ஊளியறையும் சத்தங்களும், பாம்பின் சீறலும், அழுது               சபிக்கும் குரல்களும் கேட்கின்றன.  இது சாத்தானாக இருக்குமென்றால், நிச்சயம் அவன் மகா கோபத்தில்தான் இருக்கிறான்.” 

அடுத்த ஊழியன் பரிகாசமாய்ச் சிரித்தபடி:  “ஒரு பெரிய வேட்டைப் பொருள் இன்று சாத்தானிடமிருந்து தப்பியிருக்க வேண்டும்.  அல்லது கடவுளிடமிருந்து ஒரு புது இடியால்              மிக்கேல் சம்மனசானவர் அவனைத் தாக்கியிருக்க வேண்டும்.  அவனுடைய கொம்பும் வாலும் வெட்டப்பட்டு, எரிக்கப் பட்டிருக்க வேண்டும்” என்கிறான்.

அந்தப் பக்கம் கடந்து செல்கிற ஒரு பெண்: “சுவக்கீன், எல்லாமே நலமே துரிதமாய் நடைபெற்று வருகின்றன” என்று கூறியபடி கையில் ஒரு சிறு கைப்பிடியுள்ள பாத்திரத்தில் தண்ணீருடன் சென்று மறைகிறாள்.

ஓர் இறுதி மின்னல் இடியோடு புயல் நிற்கிறது.  அது எவ்வளவு வேகமாயிருந்ததென்றால் அங்கு நின்ற                        அம்மூன்று மனிதர்களையும் ஒரு சுவருடன் கொண்டு            மோதுகிறது.  அந்த இடி விழுந்த அடையாளமாக வீட்டின் முன்புறத்தில், தோட்டத்தில், கரிய புகை நிரம்பிய குழி                    ஒன்று ஏற்பட்டு உள்ளது.  அச்சமயம் ஒரு காட்டுப் புறாவின்         குஞ்சு கூப்பிடுகிற சத்தம், அது முதன்முறையாகக் கூவுகிற           குரலைப் போல ஓர் அழுகுரற் சத்தம், அன்னம்மாளின் அறையிலிருந்து கேட்கிறது.  அதே சமயத்தில் வானத்தில் ஒரு மிகப் பெரிய வானவில் அரை வட்டமாக விரிகிறது.  அது யஹர்மோன் மலையிலிருந்து எழுந்து, மேலே செல்வது போல தோன்றுகிறது.  அந்த மலை சூரிய ஒளி பட்டு மிக நுண்ணிய    இளஞ் சிவப்பான சந்திரகாந்தக் கல் போல் காட்சியளிக்கிறது.  அவ்வானவில் எல்லா மாசுகளும் கழுவப்பட்ட  ஆகாயத்தினூடே தெளிந்த செப்டம்பர் வானவெளியில் எழுந்து, கலிலேயக் குன்றுகளையும், அதற்குத் தெற்கிலுள்ள சமவெளியையும்             தாண்டி, வேறு ஒரு மலையையும் கடந்து, வானத்தின்                   அடுத்த கோடி வரையிலும் சென்று, அதற்கப்பாலிருக்கிற ஒரு மலைத்தொடரின் பின்னால் போய் கண்ணுக்குப் புலப்படாதபடி ஊன்றுகிறது.

“இதைப் போல் நாம் எதையுமே கண்டதில்லையே!” 

“பாருங்கள்!  பாருங்கள்!!” 

“இது இஸ்ராயேல் நாடு முழுவதையும் தன் வட்டத்திற்குள் அடக்கிய மாதிரி காணப்படுகிறதே! இன்னும் அதோ பாருங்கள்!  சூரியன் மறையுமுன்னே ஒரு வெள்ளி உதித்துள்ளது!  எப்படிப்பட்ட நட்சத்திரம்!  பெரிய வைரக் கல் போல் மின்னுகிறது!...” 

“பெளர்ணமிக்கு இன்னும் மூன்று நாள் இருக்கவே சந்திரன் முழு நிலவாகக் காட்சியளிக்கிறதே! எப்படி பிரகாசமா யிருக்கிறதென்று பாருங்கள்.” 

அப்போது குண்டான ஒரு சின்னச் சிசுவை சாதாரண  லினன் துணியில் பொதிந்து எடுத்துக் கொண்டு அங்கே வருகிறார்கள் பெண்கள்.

அதுவே மரியா!  மாதா! ஒரு சிறுமியின் கரங்களில்        உறங்கக் கூடிய மிகச் சின்ன மரியா!  ஒரு குறுங்கை நீளம் அதிகம் போனால்; வெளிறிய ரோஜாத் தந்த நிறத்தில் சின்ன சிரசு;  தாம்பூலப் பூச்சு நிறத்தில் சிவந்த உதடுகள்.  அவை அழவில்லை, இயல்பான உறிஞ்சும் பாவனையில் மூடியுள்ளன... இரு உருண்ட கன்னங்கள்.  அவற்றின் நடுவே ஒரு சின்ன அழகிய           நாசி.  குழந்தைக்கு விளையாட்டுக் காட்டி கண்களைத் திறக்க வைத்தால், அங்கே வானத்தின் இரு சிறு கூறுகள் தெரிகின்றன; இரண்டு மாசற்ற நீலப் புள்ளிகள்.  அவை மெல்லிய வெண்மை இமைகளுக்கு ஊடே விழித்துப் பார்க்கின்றன. ஆனால் அவை காண்பதில்லை.  உருண்டை வடிவமான தலையில் ரோஜா கலந்த இளம் பொன் நிற முடி.  வெண்மையே போன்றிருக்கும் தேனின் நிறம் அது.  சிப்பி வடிவப் படிகம் போன்ற சிறந்த இரு செவிகள்.  சின்னஞ்சிறிய கரங்கள் - காற்றைத் துழாவி வாயில் போய் நிற்கின்ற அவை எவை!  மூடியிருக்கும் அவை, பச்சைப் புறவிதழ்களைத் திறந்து உள்ளிருக்கும் பட்டை வெளியே காட்டும் ரோஜா மொட்டுக்கள்.  இதோ இப்பொழுது அவை திறந்திருக்கையில் அவை இளஞ் சிவப்புத் தந்தத்தாலும், சலவைக் கல்லாலும் செய்யப்பட்டு ஐந்து  செம்மணிக் கற்களை நகங்களாகவுடைய நகையைப் போலிருக்கின்றன.  ஓ!  இவ்விரு சின்னக் கைகளும் அத்தனை கண்ணீர்களை எப்படித் துடைக்கும்? 

இக்குழந்தையின் பாதங்கள்!  அவை எங்கிருக்கின்றன?  இப்போதைக்கு அவை லினன் துகிலுக்குள் மறைக்கப்பட்டபடி, உதைக்க மட்டும் செய்கின்றன.  ஆனால் இதோ அந்த உறவினள் உட்கார்ந்து துணிகளை அவிழ்க்கிறாள்.   ஓ! அந்தச் சின்னப் பாதங்கள்!  சுமார் நான்கு சென்டிமீட்டர் நீளம்; ஒவ்வொரு குதிங்காலும் ஒரு பவளச் சங்கு போலிருக்கின்றது;  நீல  நரம்போடிய பனி போன்ற தலைப்புடையதாயிருக்கிறது.  கால் விரல்களோ மிகச் சிற்றுருவான முதன்மைச் சிற்பங்கள்.             அவற்றின் மகுடமாக சிறிய இளஞ் சிவப்பு மணிக்கல் போன்ற தோடுகள் உள்ளன. இந்த பாவைப் பாதங்கள் தங்கள் முதல் அடியை எடுத்து வைக்கும் போது இத்தனை சின்னப் பாதங்களுக்கேற்ற சிறிய பாதரட்சைகளை எங்கே கண்டுபிடிப்பார்கள்?  அவை எப்படி இத்தனை நீண்ட தூரம் பயணஞ் செய்து இவ்வளவு வேதனையை சிலுவையடியில் எப்படித் தாங்கப் போகின்றன?

ஆனால் அது தற்போதைக்கு அறியப்படாமலிருக்கிறது.  குழந்தையைப் பார்க்கிறவர்கள் புன்முறுவல் செய்து அப்பாதங்கள் உதைப்பதைக் கண்டு சிரிக்கிறார்கள்.  அதன் வடிவமைந்த கால்களையும், குழிகளும், வரிகளும் காணும் சிறு திரள் தொடைகளையும், கவிழ்ந்த கிண்ணம் போன்ற வயிற்றையும்,            சிறிய சிறந்த நெஞ்சையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள்.  மெல்லிய பட்டுப் போன்ற நெஞ்சின் உள்ளே அந்தச் சிசுவின்  சுவாச அசைவு தெரிகிறது.  குழந்தையின் மகிழ்வுறும்                       தந்தை இப்பொழுது செய்வது போல் அதில் முத்தமிட்டால் அதனுள் துடிக்கிற சின்ன இருதயத்தின் துடிப்பைக்               கேட்கலாம்... உலகம் அறியக் கூடிய மகா அழகிய சிறிய              இருதயம் இதுவே - உலகின் ஒரே மாசற்ற மானிட இருதயம் இது ஒன்றே!

அந்தச் சிசுவின் முதுகுப்புறம்?  அவர்கள் குழந்தையைப் புரட்டுகிறார்கள்.  இடுப்பின் வளைவையும், தோள் பட்டைகளையும், பின் கழுத்தையும் பார்க்க முடிகிறது.  பின் கழுத்து திடமாயிருப்பதால் தலையை முதுகெலும்பின்  சின்னக் கண்ணி மீது ஊன்றி உயர்த்துகிறது சிசு.  தான்  காணும் உலகை அளவிடும் பறவையின் சிறு தலை போல் அது காணப்படுகிறது.  ஆனால் இப்படி, தான் பலர் கண்களும் பார்க்க காண்பிக்கப்படுவதைப் பற்றி, தூய்மையும் கற்பும்  உடைய குழந்தை எதிர்ப்புத் தெரிவித்து அழுகிறது.  எந்த மனிதனும் இனிமேல் இந்த முழுமையான கன்னியை, புனித அமலோற்பவியை திறந்தபடி காணவே மாட்டான்.

இந்த லீலி மலரின் மொட்டினை கண்டிப்பாக மூடிப் பொதியுங்கள். அது ஒருபோதும் உலகில் திறக்கப்பட             மாட்டாது.  அது மொட்டாயிருந்து கொண்டே தன் மலரை        மலரச் செய்யும்.  அம்மலர் இம்மொட்டை விட அதிக அழகாயிருக்கும்.  மோட்சத்திலேதான்  திரியேக கடவுளின் இந்த லீலி மலர் தன் எல்லா இதழ்களையும்  திறக்கும்.   ஏனென்றால் இதன் மாசின்மையை அகஸ்மாத்தாகக் கூட கறைப்படுத்தக் கூடிய எந்த மாசின் துகளும் அங்கேயில்லை.   ஏனென்றால்  மோட்சவாசிகள் அனைவருடையவும்  முன்னிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகிற திரித்துவ தேவன், இன்னும்  சில ஆண்டுகளில், ஒரு மாசற்ற இருதயத்தில் மறைந்தவராய் இவளிடம் இவளின் தந்தையாகவும், குமாரனாகவும், பதியாகவும் இருப்பார்.

இங்கே மரியா தன் லினன் கட்டுக் துகில்களில் தன் பூவுலகத் தந்தையின் கரத்தில் இருக்கிறார்கள்.  அவருடைய சாயலைப் பெற்றிருக்கிறார்கள்.  அதாவது சிசுவாக இருக்கிற  இப்பொழுதல்ல, அவர்கள் ஒரு ஸ்திரீயாக முதிரும்போது அப்படியிருப்பார்கள்.  தாயின் சாயலை அவர்கள் கொண்டிருக்கவில்லை.  இக்குழந்தையின் நிறம், கண்கள், முடி எல்லாம் தந்தையைப் போலிருக்கின்றன.  அவருடைய முடி இப்போது வெண்மையாயிருக்கிறது.  ஆனால் அது                          அவருடைய கண்புருவத்தில் காணப்படுவது போல் நிச்சயம் இளம்பொன் நிறமாயிருந்திருக்க வேண்டும்.  தந்தையின் அங்க அமைப்பும் குழந்தையிடம் உள்ளது.  ஆயினும் ஒரு மாதினுடைய தாகையால் - அதிலும் இச்சிறந்த மாதினுடையதாகையால் - அவை சிறந்தும் சாந்தமாயும் காணப்படுகின்றன - புன்னகை, பார்வை, அசைவு, உயரம்  எல்லாம்.  நான் காண்கிற சேசுவை நினைத்தால், அன்னம்மாள் தன் உயரத்தையும், நிறத்தையும் தன் பேரனுக்குக் கொடுத்திருக்கிறாள் என்று தெரிகிறது.  மரியா, உயர்ந்த   குழைவான தால மரம் போன்ற தன் தாயின் எடுப்பான உயரத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தன் தந்தையின் காருண்யத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

புயற் காற்றைப் பற்றியும், நிலாவினுடைய அபூர்வமான நிலை பற்றியும், நட்சத்திரம் தோன்றியதைப் பற்றியும், வான வில்லைப் பற்றியும் பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்.  சுவக்கீனும், அவர்களும், மகிழும் அன்னம்மாளின் அறைக்கு வந்து        குழந்தையை அவளிடம் கொடுக்கிறார்கள்.

அன்னம்மாள் தன் ஒரு எண்ணத்தைப் பற்றி சிரித்தபடி: “இவளே நட்சத்திரம்!  இப்பிள்ளையின் அடையாளம்  மோட்சத்தில் உள்ளது.  மரியா சமாதான வளைவு! மரியா என் நட்சத்திரம்!  மரியா தூய நிலா! மரியா நம் முத்து!” என்கிறாள்.

“பிள்ளையை மரியா என்று அழைக்கப் போகிறாயா?” 

“ஆம்.  மரியா நட்சத்திரம், முத்து, ஒளி, சமாதானம்...”

“ஆனால் அது கசப்பு என்றும் பொருள்படுமே!... பிள்ளைக்கு துர்ப்பாக்கியம் கொண்டு வரக் கூடுமென்று நீ    பயப்படவில்லையா?” 

“கடவுள் அவளுடன் இருக்கிறார்.   அவள் உற்பவிக்கு முன்பே அவருக்குச் சொந்தமாயிருக்கிறாள்.  அவர் தம் பாதை வழியே அவளை நடத்திச் செல்வார்.  எல்லாக் கசப்பும் மோட்ச தேனாக மாறி விடும்.  இப்போது நீ உன் அம்மாவுக்குச் சொந்தமாயிரு... இன்னும் கொஞ்ச நாள் - முழுவதும் கடவுளுடையவளாகும் நாள் வரையிலும்...” தாயான அன்னம்மாளும், மரியா குழந்தையும் முதல் உறக்கம் கொள்கிறார்கள்.  காட்சி முடிகிறது.