இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - திருக்கல்லறை யாத்திரை

அப்போஸ்தலர் மயிலைக்கு வருமுன் கரங்கனூர் அரசனின் சகோதரன் பீட்டரை மலையாளப் பகுதியில் மறை ஆயராக நியமித்த செய்தி முன் கூறப்பட்டுள்ளது. 

இவர் ஒரு நாள் பலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருக்கையில் தேவதூதன் அவருக்குத் தோன்றி, "இயேசுவின் அப்போஸ்தலராகிய தோமையார் விண்ணகம் போய்விட்டார்' என்று விளம்பினார். 

பூசை முடிந்தபின் சிறுவன் ராபானையும் அழைத்துக்கொண்டு மயிலாப்பூருக்குப் புறப்பட்டார். இவர்களைப் பின் தொடர்ந்து பல கிறிஸ்தவர்களும் யாத்திரையானார்கள். 

உணவு, தண்ணீர் எதையும் பொருள் படுத்தாது பல நாள் பிரயாணம் செய்து திருத்தலத்தை நெருங்கியதும் ஓடிப்போய் அப்போஸ்தலர் கல்லறையைச் சூழ்ந்து பக்தியோடும் துயரத்தோடும் செபித்தார்கள். 

இவ்வாறு பத்து நாளாக, மக்கள் மாறி மாறிக் கும்பல் கும்பலாக வேண்டி வந்தார்கள். பத்தாம் நாள் இரவு ஒருவித ஒளி தோன்றியது. எங்கும் அமைதியாயிருந்தது. 

அப்போது தோமையார் அவர்கள் மத்தியில் தோன்றி, இயேசுவை என்றும் நேசிக்கும்படியாகவும், விசுவாசத்தைத் தளர விடாது இருக்கும்படியாகவும் புத்தி புகட்டினார். பின்னும் அவர்களை நோக்கி, “மக்களே! என் மரணத்தை நினைத்து செபிப்போரும், என் கல்லறைக்கு வந்து வேண்டுவோரும் சிறந்த வரங்கள் அடைவார்கள்" என்று வாக்களித்தார்; 

பின் எல்லாரையும் ஆசீர்வதித்தார். அதன் பின் அந்த அற்புதக் காட்சி மறைந்துபோனது. திருயாத்திரீகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தம் நாடு திரும்பினர்.