அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - திவ்விய நற்கருணையின் எதிரி

கோவிலில் வழிபாட்டுக்கென மணி ஒலித்த போது, நீங்கள் எல்லோரும் உள்ளே வந்தீர்கள். நான் உங்களைப் பின்தொடர்ந்தேன். அந்த யானை முக்கிய நுழைவாயிலின் பின்பக்கத்தில் நின்றுகொண்டிருப்பதை நான் கண்டேன். 

சுவாமி அலாஸோனாட்டியும், சுவாமி சாவியோவும் எனக்கு உதவி செய்ய, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் வழங்குவதற்காக நான் பீடத்திற்குச் சென்றேன். திவ்விய நற்கருணையை ஆராதிக்கும்படி நீங்கள் அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்கிய போது - இன்னும் நடுக்கிராதியின் முடிவில் நின்று கொண்டிருந்த - யானையும் முழந்தாளிட்டது, ஆனால் பீடத்திற்குத் தன் முதுகைக் காட்டியபடி!

திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் முடிந்தபின், விளையாட்டு மைதானத்திற்கு ஓடிப்போய் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க நான் விரும்பினேன். சற்று நேரத்திற்குப் பிறகு, நான் முகப்பு மண்டபங்களை நோக்கித் திறக்கும் பக்கவாட்டுக் கதவு வழியாக வெளியே சென்றபோது, நீங்கள் உங்கள் வழக்கமான விளையாட்டுக் களில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். 

அந்த யானையும் கோவிலை விட்டு வெளியே வந்து மந்த நடை நடந்து, புதிய கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த இரண்டாவது விளையாட்டு மைதானத் திற்குப் போய்ச் சேர்ந்திருந்தது. இதை நன்கு குறித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இப்போது நான் விளக்கப் போகிற அந்த அச்சமும், அருவருப்பும் ஊட்டும் காட்சி மிகச்சரியாக அங்குதான் நிகழ்ந்தது.

அந்நேரத்தில், மைதானத்தின் மறு எல்லையில், ஒரு விருதுக் கொடியை சிறுவர்கள் ஒரு பவனியாகப் பின்பற்றி வருவதை நான் பார்த்தேன். அதில் மிப் பெரிய எழுத்துக்களில், “ஸாங்த்தா மரியா, சுக்குர்ரே மிஸேரிஸ் - பரிசுத்த மரியாயே, கைவிடப்பட்ட உம் பரிதாபத்திற்குரிய குழந்தைகளுக்கு உதவியருளும்!'' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. 

எல்லோரும் ஆச்சரியப் படும் வகையில், முன்பு நன்கு பழக்கப்பட்டதாகத் தோன்றிய அந்தப் பிரமாண்டமான மிருகம் திடீரென வெறி கொண்டதாக மாறியது. கடுங்கோபத்தோடு பிளிறியபடி, அது திடீரென முன்னோக்கி ஓடித் தொடங்கி, மிக அருகில் இருந்த சிறுவர்களைத் தன் தும்பிக்கையால் பற்றிப் பிடித்து, அவர்களை ஆகாயத்தில் தூக்கி வீசியது, அல்லது தரையில் வீசி, அவர்களை ஏறி மிதித்தது. 

இதனால் மிக பயங்கரமான உடல் சேதத்திற்கு ஆளானாலும், அதன் கோபத்திற்கு ஆளானவர்கள் இன்னும் உயிரோடு இருந்தார்கள். எல்லோரும் தங்கள் இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும்படி ஓடினார்கள். காயப்பட்டவர்களிடமிருந்து அலறல்களும், கூச்சல்களும், உதவிக் கான வேண்டுகோள்களும் எழுந்தன. 

இதை விட மோசமாக - இதை நீங்கள் நம்புவீர்களா? - யானையால் தாக்கப்படாதிருந்த சில சிறுவர்கள், காயப்பட்ட தங்கள் தோழர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, யானையால் தாக்கப்படக் கூடிய புதிய சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் அந்த இராட்சத மிருகத்தோடு இணைந்து கொண்டனர்!