இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் பிறர்சிநேகம்

"ஆதலால், சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்ட நீங்கள் பரிசுத்தரும், பிரியமுள்ளவர்களுமாய்த் தயாளமான உள்ளத்தையும், சாந்தத்தையும், தாழ்ச்சியையும், அடக்கவொடுக்கத்தையும், பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்'' (கொலோ.3:12). சேசுநாதரைப் பின்செல்வோர் பிறர்சிநேகத்தை மட்டுமின்றி, பிறர்சிநேகத்தின் உட்பண்புகளையும் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்களுடைய எல்லாச் செயல்களிலும் அவர்கள் பிறர்சிநேகத்தால் உடுத்தப்பட்டிருக்கவும், சூழப்பட்டிருக்கவும் வேண்டும். அவர்கள் மிகுந்த தயவுள்ள அன்போடு ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். ""பிறர்சிநேகம் தீயவர்களைப் பற்றி நினைக்கும்போதும் துக்கப்படுவதில்லை'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார்.

நினைவில் பிறர்சிநேகத்தை அனுசரிப்பதற்கு, முதலில் உன் அவசர முடிவுகள் அனைத்தையும், உன் எல்லா சந்தேகங்களையும் அகற்ற வேண்டும். மற்றொருவனை அவசரப்பட்டு சந்தேகப்படுவது ஒரு குறைபாடு; பிறர்மீது நம்பிக்கையின்மைக்கு இடம் கொடுப்பது அதை விடப் பெரிய குறைபாடு, மற்றொருவன் பாவம் செய்து விட்டான் என்று சரியான காரணமின்றித் தீர்மானிப்பது கடவுளுக்கு முன்பாக இன்னும் பெரிய குற்றமாக இருக்கிறது. தன் அயலானை அவசரப்பட்டுத் தீர்ப்பிடுகிறவன் கடுமையான முறையில் தீர்ப்பிடப் படுவான். ""நீங்கள் தீர்ப்புக்கு உள்ளாகாபடி தீர்ப்பிடாதீர்கள். ஏனெனில் எப்படித் தீர்ப்பிடுவீர்களோ, அப்படியே நீங்கள் தீர்ப்பிடப்படுவீர்கள்'' (மத்.7:1,2). ஆனால் சரியான காரணமின்றி மற்றவர்களைத் தீயவர்கள் என்று தீர்ப்பிடுவது பாவம் என்றாலும், இத்தகைய நம்பிக்கையின்மைக்கு அல்லது தீர்ப்புகளுக்கு சில காரணங்கள் இருக்கும்போது, சந்தேகப்படுவதும், மற்றவர்களைத் தீயவர்கள் என்று தீர்மானிப்பதும் தெய்வீக சட்டத்தை மீறும் காரியமாகாது. ஆயினும், அனைவரையும் பற்றி நல்ல விதமாக நினைப்பதும், இத்தகைய எல்லா சந்தேகங்களையும், தீர்ப்புகளையும் விலக்குவதும் அனைத்திலும் அதிகப் பாதுகாப்பானதும், அதிகப் பிறர்சிநேகமுள்ளதுமான விதியாகும். ""சிநேகம் தீங்கு நினையாது'' (1கொரி.13:5) என்கிறார் அப்போஸ்தலர். உன் அலுவலின்படி மற்றவர்களைத் திருத்தும் பொறுப்பு உனக்குத் தரப்படவில்லை என்றால், மற்றவர்களுக்கு எப்போதும் சாதகமாகவே எதையும் தீர்மானிக்க முயற்சி செய். ""நம் அயலானிடம் நன்மையானதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும்'' என்று அர்ச்.ஜேன் பிரான்செஸ் த ஷாந்தால் கூறுவது வழக்கம். சில சமயங்களில் மற்றவர்களிடம் கண்டிக்கப்பட வேண்டியதைத் தவறுதலாக நீ புகழ்ந்திருப்பாய் என்றால், உன் தவறுக்காக நீ வருத்தப்பட எந்தக் காரணமுமில்லை. ""பிறர்சிநேகம் தீயவர்களைப் பற்றி நல்ல விதமாக நினைக்கும் போதும் கூட, அது அதிகம் வேதனைப்படாது'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். அர்ச். பொலோஞ்ஞா கத்தரீனம்மாள் ஒரு முறை, ""நான் துறவறத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், என் சகோதரிகளில் ஒருவருக்கும் நான் தீங்கு நினைத்ததில்லை. ஏனெனில் குறைபாடுள்ளவனாகத் தோன்றும் ஒரு மனிதன், மிகச் சிறந்த நடத்தையைக் கொண்டுள்ள இன்னொருவனை விட கடவுளுக்கு அதிகப் பிரியமானவனாக இருக்கலாம்'' என்று கூறினாள். ஆகவே, மற்றவர்களின் குறைகளையும், கவலைகளையும் ஊன்றிக் கவனிக்காமல் இருக்கவும், மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டு அலைந்து, இவ்வாறு சந்தேகங்களால் தங்கள் மனங்களையும், கசப்பாலும், வெறுப்பாலும் தங்கள் இருதயங்களையும் நிரப்பிக் கொள்கிற மனிதர்களைக் கண்டுபாவிக்காமல் இருக்கவும் கவனமாயிருங்கள். மற்றவர்கள் உங்கள் குறைகள் பற்றிப் பேசுவதாக உங்களிடம் சொல்பவர்களின் வார்த்தைகளைக் கவனிக்காதீர்கள். உங்களை இழிவாகப் பேசியவர்களின் பெயர்களை அவர்களிடம் கேட்காதீர்கள். இத்தகைய கதைகளில் பொதுவாக நிறைய மிகைப்படுத்தல்கள் இருக்கும். உங்கள் நடத்தை பிறருடைய புகழ்ச்சிக்குத் தகுதியுள்ளதாக இருக்கட்டும். ஆனால், உங்களைப் பற்றிச் சொல்லப்படுவதைக் கவனிக்காதீர்கள். நீங்கள் ஏதாவது ஒரு குற்றம் செய்ததாக யாராவது உங்களைக் குற்றம் சாட்டியதாக உங்களுக்குச் சொல்லப்படும்போது, மற்றவர்கள் உங்களைக் குறைவாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதும், உங்கள் குறைபாடுகளை அவர்கள் அறிந்திருந்தால், இன்னும் அதிகமாக உங்களைக் குற்றஞ்சாட்டி யிருப்பார்கள் என்றும் பதில் சொல்லுங்கள். அல்லது கடவுள் மட்டுமே உங்களைத் தீர்ப்பிட வேண்டியவர் என்று சொல்லலாம்.இத்தகைய கதைகளில் பொதுவாக நிறைய மிகைப்படுத்தல்கள் இருக்கும். உங்கள் நடத்தை பிறருடைய புகழ்ச்சிக்குத் தகுதியுள்ளதாக இருக்கட்டும். ஆனால், உங்களைப் பற்றிச் சொல்லப்படுவதைக் கவனிக்காதீர்கள். நீங்கள் ஏதாவது ஒரு குற்றம் செய்ததாக யாராவது உங்களைக் குற்றம் சாட்டியதாக உங்களுக்குச் சொல்லப்படும்போது, மற்றவர்கள் உங்களைக் குறைவாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதும், உங்கள் குறைபாடுகளை அவர்கள் அறிந்திருந்தால், இன்னும் அதிகமாக உங்களைக் குற்றஞ்சாட்டி யிருப்பார்கள் என்றும் பதில் சொல்லுங்கள். அல்லது கடவுள் மட்டுமே உங்களைத் தீர்ப்பிட வேண்டியவர் என்று சொல்லலாம்.

நம் அயலான் ஏதாவது நோய் அல்லது இழப்பு, அல்லது ஒரு பேரிடரைச் சந்திக்கும்போது, குறைந்தபட்சம் மேலான சித்தத்தோடு அவனது மோசமான நிலைக்காக வருந்துவதைப் பிறர்சிநேகம் நமக்குக் கடமையாக்குகிறது. நான் மேலான சித்தம் என்று சொல்வது ஏனெனில், ஓர் எதிரிக்கு ஒரு மோசமான காரியம் நேரிட்டு விட்டது என்று கேள்ப்படும்போது இச்சை அதில் ஓரளவு இன்பம் காண்பதாகவே எப்போதும் தோன்றுகிறது. ஆனால் அந்த இன்பம் சித்தத்தால் எதிர்க்கப்படும் வரையிலும், அது குற்றமுள்ளதாக இருப்பதில்லை. மனிதனின் கீழ்த்தரமான பசி மற்றவர்களின் நிர்ப்பாக்கியத்தில் அக்களிக்கும்படி சித்தத்தைத் தூண்டும் போதெல்லாம், காரணமின்றிக் குரைக்கும் நாயை அலட்சியம் செய்வது போலவே, அந்தக் கீழ்த்தரமான வேட்கையையும் அலட்சியம் செய்து விடுங்கள். ஆயினும் அவர்களது துன்பத்தைக் கண்டு உங்கள் மேலான சித்தம் வருந்தும்படி அதைத் தூண்ட முயலுங்கள். உண்மையில் சில சமயங்களில் மற்றவர்களின் உலகத்தன்மையான துன்பங்களிலிருந்து விளையும் நல்ல பலன்களைக் கண்டு அக்களிப்பது நியாயமானதாகவே இருக்கிறது. உதாரணமாக, ஒரு பிரபலமான, பிடிவாதமான பாவி நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கண்டு, அவன் மனந்திரும்ப அது ஒரு வாய்ப்பு என்றோ, அல்லது அவனது துர்மாதிரிகையான வாழ்வுக்கு அது ஒரு தடை என்றோ நினைத்து மகிழ்ச்சி கொள்வது நமக்குத் தடை செய்யப்படவில்லை. ஆயினும், ஒருவேளை அவன் நம்மை நோகச் செய்திருக்கிறான் என்றால், அவனது நோயால் நமக்கு வரும் மகிழ்ச்சிக்கு நமது ஆத்தும தாகம் மட்டுமின்றி, நம் ஆசாபாசமும் ஒரு காரணமாக இருக்கலாம். ""ஓர் எதிரியின் வீழ்ச்சியால் மற்றவர்கள் நீதியான முறையில் நன்மையடைவார்கள் என்று நாம் நினைக்கும்போதும், அவன் செழித்து வளரும்போது மற்றவர்கள் அநீதியான முறையில் ஒடுக்கப்படலாம் என்று நாம் அஞ்சும்போதும், பிறர் சிநேகத்தை இழக்காமலே நாம் ஓர் எதிரியின் அழிவைக் கண்டு அக்களிப்பதும், பொறாமையின் குற்றமில்லாமலே அவனது உயர்வைக் கண்டு நாம் துக்கப்படுவதும் அடிக்கடி நிகழலாம்'' என்று அர்ச். கிரகோரியார் கூறுகிறார்.