இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - கல்லறை தரிசனம்

புனித தோமையார் கல்லறை ஆதிகாலந் தொட்டுப் பக்தியுடன் பாவிக்கப்பட்டு வந்ததுமன்றி, தூர நாடுகளிலிருந்து முதலாய் யாத்திரீகர் பொருத்தனைக்காக வந்துற்றனர் என்பதும் பாரம்பரை. 

கி. பி 1893 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தின் தென் பாகத்துக்கு அரசனாயிருந்த மகா மேன்மைப்பட்டம் பெற்ற பெரிய ஆலபர்ட் என்னும் ஆங்கிலோ சாக்ஸன் அரசர், 'தேன்ஸ்' என்பவர்கள் லண்டன் நகரை முற்றுகையிட்ட போது, புனித தோமையாரைக் குறித்துப் பிரார்த்தனை செய்து கொண்டாரென்றும், வெற்றியடைந்தபின் ரோமாபுரிக்கும் இக் கல்லறையிருக்கும் இடத்திற்கும் தன் ஸ்தானாதிபதி மூலமாய்க் காணிக்கைகளை அனுப்பினார் என்றும், அநேக முறை உரோமாபுரிக்கும், மயிலாப்பூர் கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்தார் என்றும் இங்கிலாந்து நாட்டிலுள்ள பெரிய “மியூஸியம்" என்னும் அரிய பொருட்காட்சி சாலையிலிருக்கும் சாசனங்கள் சான்று பகருகின்றன.

1293 ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டினராகிய, வெனிஸ் பட்டணத்தில் பிறந்த 'மார்க்கப்போலோ' எனும் யாத்திரைக்காரரும், 'கொர் வினோ' எனும் மலை நாட்டைச் சேர்ந்த ஜான் எனும் சந்நியாசியாரும் புனித கல்லறையைக் காணும்படியாகவே மயிலாப்பூருக்கு வந்தார்களென்று வரலாற்றால் தெரிய வருகின்றது. 

அல்லாமலும் 1346 ஆம் ஆண்டு 'ஜூவான் தெ மரிக்நோ லி' என்னும் மறை ஆயரும், 1425 ஆம் ஆண்டு நிக்கலோ தெ காந்தி' என்னும் டமரியஸ் பட்டணத்து வர்த்தகரும், இக்கல்லறையைக் காண இங்கு வந்தார்கள். 

நிற்க, முத்திப் பேறு பெற்ற "ஒடெரிக்" என் பவர் 1324 ஆம் ஆண்டு இக்கல்லறையைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். மத்தேயு குமாரனாகிய அமிர் என்னும் நெஸ்தோரியன் 1340 ஆம் ஆண்டிலும் 1514 ஆம் ஆண்டிலும் நெஸ்தோரியன் பிரிவினைச் சபையைச் சேர்ந்த தலைமைக் குருக்கள் தாங்கள் எழுதிய செய்திகளில் மயிலாப்பூரிலுள்ள தோமையாரின் கல்லறையைப்பற்றிப் பேசுகிறார்கள். 

இவர்களல்லாமல், இந்திய நாட்டு அப்போஸ்தலராகிய புனித சவேரியாரும் தாம் விரும்பியதை எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து அடையப் பற்பல சமயங்களில் மயிலாப்பூரிலுள்ள புனித தோமையாரின் பரிசுத்த கல்லறையை மிகுந்த பக்தியுடன் சந்தித்துப் பிரார்த்திக் கொண்டதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரியவருகிறது.

இத்தகைய தரிசனங்கள் பழைய காலத்தவை மாத்திரமல்ல. இன்றையவரையில் ஓரோர் சமயங்களில் பல நாடுகளினின்று யாத்திரீகர்கள் வந்து அத் திருக் கல்லறையைத் தரிசித்துப் போவது வழக்கமாயிருந்து வருகின்றது. முக்கியமாக மலையாளப் பகுதியினின்று பெரும்பாலர் அடிக்கடி வருகின்றனர். ஐரோப்பிய நாட்டு யாத்திரைக்காரர்களும் வந்து தரிசித்துப் போகிறார்கள். புனித தோமையார் கோயிலிலுள்ள, வருகை தருவோர் புத்தகம் (Visitor's Book) இதற்குச் சரியான சான்று.