அதிகம் அழுகிய திராட்சைகள்!

நான் அவர்களோடு உரையாடிக் கொண்டு நின்ற போது, கிறீஸ்தவர்களின் சகாய மாதா கோவிலும், நம்முடைய தற்போதைய எல்லாக் கட்டடங்களும் திடீரென மறைந்து போயின, நாங்கள் பழைய பினார்டி கூடத்திற்கு முன் இருக்கக் கண்டோம். முந்தின கனவில் நடந்தது போல, ஒரு திராட்சைச் செடி அதே வேர்களி லிருந்து எழுவது போல, மிகச் சரியாக அதே இடத்தில் முளைத்து,, அதே உயரத்திற்கு வளர்ந்து, அதன்பின் கிடைமட்டமாக மிக விஸ்தாரமாகப் பரந்து விரிந்தது. கிளைகள் தங்கள் பங்கிற்கு இலைகளை முளைப்பித்தன; அதன்பின் திராட்சைக் குலைகள் தோன்றின, அவை என் கண்களுக்கு முன்பாகவே பழுத்தன. ஆனால் சிறுவர்கள் யாரையும் காண முடியவில்லை. திராட்சைக் குலைகள் உண்மையாகவே வாக்களிக்கப்பட்ட நாட்டின் திராட்சைக் குலை களைப் போல மிகப் பெரியவையாக இருந்தன. அவற்றில் ஒன்றைச் சுமப்பதற்கு ஒரு மனிதன் தன் பலத்தையெல்லாம் செலவழிக்க வேண்டியிருக்கும்! முழுமையாகப் பழுத்த, பொன்னிறமான திராட்சைகள் ஒரு பழமே வாய் நிறைய இருக்கும் அளவுக்கு, வழக்கத் துக்கு மாறாக அளவில் பெரியவையாகவும், ஒன்றுக்கொன்று அளவில் வேறுபட்டவையாகவும் இருந்தன. சுருங்கச் சொன்னால் ஒருவனுக்கு வாய் ஊறச் செய்யும் அளவுக்கு அவை மிகவும் நல்லவை யாகத் தோன்றின. “என்னைச் சாப்பிடு” என்று அவை சொல்வது போலத் தோன்றியது.

சுவாமி காலியேரோவும், மற்ற குருக்களும் அதிசயித்தார்கள், நானே தொடர்ந்து, “இவை எவ்வளவு வசீகரமாக இருக்கின்றன!” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

எதிர்பாராத விதமாக சுவாமி காலியேரோ ஒரு சில திராட்சைப் பழங்களைப் பறித்து, அவற்றில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டார். அதைக் கடித்ததுதான் தாமதம், எவ்வளவு வேகமாக அவர் அதைத் துப்பினார் என்றால், அவர் வாந்தியெடுக் கிறார் என்று நாங்கள் நினைத்தோம். அந்தத் திராட்சை அழுகிய முட்டையின் சுவையைக் கொண்டிருந்தது. ரொம்ப நேரமாகத் துப்பிக் கொண்டே இருந்த பிறகு, “நல்ல ஆண்டவரே! என்ன ஒரு மோசமான பொருள் இது! ஒரு மனிதனைக் கொல்வதற்கு இது போதும்” என்றார் அவர்.

நாங்கள் வாயடைத்து நின்றோம். இச்சமயத்தில் கடுமையான வரைப் போலத் தோன்றிய ஒரு மனிதர் பழைய சிற்றாலயத்தின் சாக்றிஸ்தியிலிருந்து வெளியே வந்து, தீர்மானமாக என்னை நோக்கி நடந்து வந்தார்.

“இவ்வளவு அழகிய பழங்கள் எப்படி இவ்வளவு அழுகிப் போய் இருக்க முடியும்?” என்று நான் அவரைக் கேட்டேன். எனக்குப் பதில் சொல்பவரைப் போல, அவர் ஆழ்ந்த தோற்றத்துடன் ஒரு கட்டுக் குச்சிகளை எடுத்து வந்து, நல்ல முடிச்சுகளுள்ள ஒரு குச்சியை எடுத்து, அதை சுவாமி சாவியோவிடம் கொடுத்து, 'இதை எடுத்து, இந்தக் கிளைகளை முறித்து விடுங்கள்' என்றார். சுவாமி சாவியோ அதைச் செய்ய மறுத்து, பின்வாங்கினார். அதன்பின் அந்த மனிதர் சுவாமி பிரான்செஸியாவை அணுக, அவரும் மறுத்து விட்டார். அப்போது அந்த அந்நியர் அவருடைய கையைப் பிடித்து, அவருடைய கையில் குச்சியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றார். “இதை எடுத்து அடியுங்கள். அவற்றை அடித்து வீழ்த்துங்கள்” என்றார் அவர். இப்படிச் சொன்னபடியே அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக் காட்டினார். திடுக்கிட்டவராக சுவாமி காலியேரோ பின்வாங்கினார். “என்ன, விளையாடுகிறீர்களா?” என்று ஒரு கையால் மற்றொரு உள்ளங்கையில் குத்தியபடி அவர் கூறினார். ஆனால் அந்த அந்நியர் வற்புறுத்தினார். “இதை எடுத்து அடியுங்கள்” என்றார் அவர். “மாட்டேன்” என்று சொல்லி சுவாமி காலியேரோ வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தார். அச்சத்தோடு அவர் என் பின்னால் ஒளிந்து கொண்டார்.

தம் முயற்சி தோற்றாலும் கலக்கமடையாத அந்த அந்நியர் சுவாமி ருவாவிடம் திரும்ப, அவரோ சுவாமி காலியேரோவைப் போல என் பின்னால் தஞ்சம் புகுந்தார். அதன்பின் அந்த மனிதர் என்னிடம் வந்தார். “இந்தக் கம்பை எடுத்து அந்தக் கிளைகளை அடியும்'' என்று அவர் கட்டளையிட்டார். நான் கனவு காண்கிறேனா அல்லது விழித்திருக்கிறேனா என்று தெரிந்து கொள்ள நான் கடுமையாக முயன்றேன். ஆனால் இதெல்லாமே மிகவும் நிஜமானதாக எனக்குத் தோன்றியது.

“நீர் யார்? நான் ஏன் இந்தக் கிளைகளை அடித்துத் தரையில் வீழ்த்த வேண்டும்? நான் கனவு காண்கிறேனா? அல்லது இதெல்லாம் என் கற்பனையா? நீர் கடவுளின் திருப்பெயரால் என்னிடம் பேசு கிறீரா?” என்று நான் கேட்டேன்.

“திராட்சை செடியை நெருங்கி வந்து, அந்த இலைகளின் மீது என்ன எழுதியுள்ளது என்று பாருங்கள்” என்று அவர் பதிலளித்தார். நானும் அதற்கு இணங்கி, நெருங்கிச் சென்று வாசித்தேன்: “உத் குயித் தெர்ராம் ஓக்குப்பாத் - இது ஏன் இன்னும் நிலத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது?” (லூக்.13:7).

“இது சுவிசேஷ வாக்கியம்” என்றார் என் வழிகாட்டி.

“ஆம், ஆனால் திராட்சைக் கிளை கழிப்பவன் சுற்றிலும் கொத்தி விட்டு, அதற்கு உரமிட நம் ஆண்டவர் அனுமதித்தார். இவ்வாறு, அது நற்கனி கொடுக்க அதற்கு உதவும் எல்லா முயற்சிகளையும் செய்யும் வரை, அதன் அழிவைத் தள்ளிப் போட்டார் என்று நாம் சுவிசேஷத்தில் வாசிக்கிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளும்.”

''சரி, சரி. தண்டனையை நாம் ஒத்தி வைப்போம். இதனிடையே, இதைக் கூர்ந்து பாரும்” என்று சொல்லியபடி அவர் திராட்சைச் செடியைச் சுட்டிக் காட்டினார். நானும் பார்த்தேன். ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரிய வில்லை .

“இங்கே வந்து, திராட்சைகளின் மீது என்ன எழுதியிருக்கிறது என்று வாசியுங்கள்” என்றார் அவர்.

அப்போதுதான் அவற்றில் ஒவ்வொரு மாணவனின் பெயரும், அவனுடைய முக்கியப் பாவமும் எழுதப்பட்டிருந்ததை நான் கவனித்தேன். நான் கண்ட அந்தக் காட்சி என்னை அச்சத்தாலும், வியப்பாலும் நிறைத்தது. அத்தகைய வார்த்தைகளைக் கண்டு குறிப்பாக நான் அச்சவசப்பட்டேன். அவை: அகங்காரி, தன் வாக்குறுதிகளுக்குப் பிரமாணிக்கமற்றவன், கற்பற்றவன், இரட்டை முகம் கொண்டவன், தன் கடமைகளை அலட்சியம் செய்பவன், அவதூறு கூறுபவன், பழிக்குப் பழி வாங்குபவன், ஈவிரக்கமற்றவன், தேவத் துரோகி, அதிகாரத்தை இழிவாக மதிப்பவன், இடறுகல், பொய்க் கொள்கைகளைப் பின்பற்றுபவன் ஆகியவை ஆகும். “குவோரும் தேயுஸ் வெந்த்தெர் எஸ்த் - வயிறே தங்கள் கடவுளாகக் கொண்டவர்கள்”, “ஷியெந்த்ஸியா இன்ஃப்ளாத் - அறிவால் வீக்க மடைந்தவர்கள்,” “குவேருந்த் குவே சுவா சுந்த், நோன் குவே யேசுஸ் க்றீஸ்தி - நம் ஆண்டவருடையதை அல்ல, தங்கள் சொந்த ஆவல்களையே தேடுகிறவர்கள்,” தங்கள் மேலதிகாரிகளுக்கும் விதிகளுக்கும் எதிராகத் திட்டமிடுபவர்கள் ஆகியோரின் பெயர்களை நான் கண்டேன். அந்தப் பெயர்கள் நம் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால மாணவர்களைக் குறித்துக் காட்டின. எதிர்கால மாணவர்கள் - இவர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் இருந் தார்கள் - நான் அறியாதவர்களாக இருந்தார்கள்.

“இந்தத் திராட்சைத் தோட்டத்திலிருந்து நாம் பெறும் கனி இதுதான்” என்று அந்த மனிதர் கடுமையான முறையில் கூறினார். “அவை கசப்பானவை, தீயவை, நித்திய மீட்பிற்குத் தீங்கு வருவிப்பவை.”

நான் உடனே என் குறிப்புப் புத்தகத்தில் சில பெயர்களைக் குறித்துக்கொள்ள முயன்றேன். ஆனால் மீண்டும் என் வழிகாட்டி என்னைத் தடுத்தார். “என்ன செய்ய முயற்சி செய்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

“தயவு செய்து, எனக்குத் தெரிந்த சிறுவர்களைத் தனிப்பட்ட முறையில் எச்சரித்து, அவர்களைத் திருத்தும்படியாக, அவர்களது பெயர்களைக் குறித்துக் கொள்ள என்னை அனுமதியும்” என்று நான் கெஞ்சினேன்.

பயனில்லை. அவர் சம்மதிப்பதாகத் தெரியவில்லை .

“என் சிறுவர்கள் இருக்கிற பரிதாப நிலையை அவர்களுக்கு நான் சொன்னால், அவர்கள் தங்கள் வாழ்வைத் திருத்துவார்கள்” என்று நான் அவரை வற்புறுத்தினேன்.

“அவர்கள் பரிசுத்த நற்செய்தியை நம்பவில்லை என்றால், உங்களையும் நம்ப மாட்டார்கள்” என்று அவர் பதிலளித்தார்.

எதிர்காலத்திற்கென சில குறிப்புகள் எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன் என்று நான் தொடர்ந்து அவரை வற்புறுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் என்னை அலட்சியம் செய்து விட்டு, அவர் சுவாமி ருவாவை நோக்கி, அந்தக் குச்சிக் கட்டுகளுடன் நடந்தார்.

“ஒரு குச்சியை எடுத்து, இந்தத் திராட்சைச் செடியை அடியும்” என்று அவர் அவரிடம் சொன்னார். சுவாமி ருவா தம் கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, தலை வணங்கி, என்னைப் பார்த்தபடி, “பொறுமை'' என்று முணுமுணுத்தார். நான் சம்மதத்தின் அடையாளமாக தலையசைத்தேன்.

சுவாமி ருவா அதன்பின் ஒரு குச்சியை எடுத்து, அந்தத் திராட்சைச் செடியை நெருங்கிச் சென்று, சுட்டிக்காட்டப்பட்ட இடத்தை அடிக்கத் தொடங்கினார். அவர் ஒரு அடி கூட சரியாக அடித்திருக்க மாட்டார், அதற்குள் வழிகாட்டி, அடிப்பதை நிறுத்து மாறு அவருக்கு சைகை காட்டி விட்டு, எல்லோரும் பின்னுக்குத் தள்ளி நிற்கும்படி எங்களை நோக்கிக் கத்தினார்.