சேசு கூறுகிறார்

2 பெப்ருவரி 1944.

நீ கொடுத்துள்ள விவரிப்பின்படி, எல்லாருக்கும் பொருந்தக் கூடிய இரண்டு போதனைகள் உள்ளன.  ஒன்று: சடங்காசாரங்களில் மூழ்கி, உள்ளத்தால் அவற்றில் ஈடுபடாத குருவுக்கு உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.  மாறாக அது ஒரு எளிய விசுவாசிக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

எப்போதும் தெய்வீகத்துடன் தொடர்புடைய குருவானவர், கடவுளுக்கடுத்த காரியங்களிலும் மாம்சத்துக்கு மேலான அனைத்திலும் ஈடுபாடுள்ள அவர், அன்று காலையில் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட குழந்தை யார் என உடனேயே கண்டுணர்ந்திருக்க வேண்டும்.  அதைக் கண்டுணர்வதற்கு அவரிடம் உயிருள்ள உள்ளம் இருந்திருக்க வேண்டும்.    அரை உறக்கத்தில் இருக்கிற அல்லது செத்துப் போன உள்ளத்தை மூடியிருக்கிற குருவின் ஆடை மட்டும் அதற்குப் பற்றாது.

தேவ ஆவியானவர் விரும்பினால் மிக மந்தமான உள்ளத்தையும் இடிபோல் முழங்கி விழிப்படைய வைக்க முடியும்; பூமியதிர்ச்சியைப் போல் குலுக்கிவிட முடியும்.  அவரால் அது கூடும்.  ஆனால் அவர் கிரமமுள்ள கடவுளின் ஆவியாயிருக்கிறார்.  ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவன் செயலாற்றும் முறையிலும் அப்படியிருக்கிறார்.  அவர் ஏவுகிறார், பேசுகிறார்.  அந்தப் பொழிதலைப் பெறுவதற்கு போதிய தகுதியுள்ள இடத்திலல்ல.  அப்படியிருந்தால் தேவ ஆவியின் பொழிதல் மிகமிக அரிதாகிவிடும்.  அதன் ஒளியை நீயும்கூட அறிய முடியாது.  ஆனால் அவருடைய பொழிதலைப் பெற எங்கே “நல்ல மனம்” உள்ளதாகக் காண்கிறாரோ, அங்கே அவர் பொழிதலைச் செய்கிறார்.

நல்ல மனம் எப்படிச் செயல்படும்?  முடிந்த அளவு முழுவதும் கடவுளுக்கெனவே அது வாழும்:  விசுவாசத்திலும் கீழ்ப்படிதலிலும் பரிசுத்ததனத்திலும் சிநேகத்திலும் தாராளத்திலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருக்கும்.  செயல்பாடுகளிலல்ல: ஜெபத்தில்:  செயல்பாட்டுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தூரம் இரவுக்கும் பகலுக்கும் உள்ளதைவிட அதிகமானது.  ஜெபம் என்பது உள்ளம் கடவுளுடன் உறவாடுவது.  ஜெபத்திலிருந்து வரும்போது புதுப் பலமும், மேலும் மேலும் கடவுளுக்குச் சொந்தமாயிருக்க வேண்டுமென்ற தீர்மானமும் இருக்கும்.  செயல்பாடுகள் என்பவை பல காரியங்களுக்காக ஊக்கப்படுத்தப்படுகிற பொதுவான பழக்கங்களாகும்.  அவை எப்போதும் சுயநலத்துடன் உள்ளன.  நீ எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை விட்டுவிடுகின்றன.  அது மட்டுமல்ல, உன் பளுவை, உண்மையற்றதனம், அசமந்தம் ஆகிய குற்றங்களால் அதிகரிக்கின்றன.

சிமியோனிடம் நல்ல மனம் இருந்தது.  அவருடைய வாழ்வில் கஷ்டங்களும் துன்ப சோதனைகளும் அவருக்கு இருந்தன.  ஆயினும் அவர் தம் நல்ல மனதை இழந்துவிடவில்லை. அவருடைய மூப்பும் துன்ப துரிதங்களும் ஆண்டவர் மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் அவருக்கிருந்த விசுவாசத்தைப் பாதிக்கவில்லை, அசைத்து விடவுமில்லை.  மேலும் மேலும் கடவுளுக்கு அதிக தகுதியாக இருக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் சோர்ந்து போகவுமில்லை, தடுமாறவுமில்லை. பிரமாணிக்கமுள்ள அவ்வூழியனுடைய கண்கள் இந்த உலகத்தின் சூரிய ஒளிக்கு மூடுமுன் உலகிற்கு வந்துள்ள ஒளியை அவர் காணும்படியாக, அவரை தேவாலயத்திற்கு வழிநடத்தும்படி கடவுள் தேவ ஆவியின் கதிரை அவருக்கு அனுப்பினார்.  என்னுடைய வேதசாட்சியத்திற்குப் பின் நான் மேலே சென்றபோது நான் திறந்த மோட்சத்தில் பிரகாசிக்கும் தேவ சூரியனுக்கு அவருடைய கண்கள் திறக்கப் படும்படி அவை காத்திருந்தன.

“இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு” என்று சுவிசேஷம் சொல்லுகிறது.  ஓ!  இஸ்பிரீத்துசாந்துவானவர் எப்பேர்ப்பட்ட உத்தம சிநேகிதராயிருக்கிறாரென்பதை மனிதர்கள் மட்டும் அறிவார்களானால்!  அவர் எப்படிப்பட்ட வழிகாட்டி!  எப்படிப் பட்ட உபாத்தியாயர்!  பரிசுத்த தமதிரித்துவத்தின் சிநேகமா யிருக்கிற அவரை, இந்த ஒளியின் ஒளியை, இந்த நெருப்பின் நெருப்பை, இந்த அறிவை, இந்த ஞானத்தை மனிதர்கள் மட்டும் நேசித்து அவரிடம் மன்றாடுவார்களானால்!  அறிவதற்கு அவசியமாயிருக்கிறதை எவ்வளவோ அதிகமாய் அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

பார் மேரி!  கவனியுங்கள் என் பிள்ளைகளே!  சிமியோன் ஒளியைக் காண்பதற்கு முன்னால், கடவுளின் வாக்குத்தத்தம் நிறைவேறியது என அறியுமுன்னால், தமது நீண்டு ஆயுட்காலமெல்லாம் காத்திருந்தார்.  ஆனால் அவர் ஒருபோதும் சந்தேகப்படவில்லை.    “நம்பி மன்றாடிப் பயனில்லை” என்று தமக்குத்தானே அவர் ஒருபோதும் சொல்லிக் கொள்ளவில்லை.  அவர் அதில் நீடித்து நிலைத்திருந்தார்.  அதனால் அவர், குருவும் யூத ஆலோசனைச் சங்கத்தின் ஆங்கார, மந்தப் புத்தி படைத்த அங்கத்தினர்களும் காணாததை:  தேவ குமாரனை, மெசையாவை, தம்மை அனற்படுத்தி தம்மை நோக்கிப் புன்முறுவல் செய்த இரட்சகரை, ஒரு குழந்தையின் உருவத்தில் காண்பதற்குத் தகுதி பெற்றார்.  அவர் ஒரு குழந்தையின் அதரங்களில் கடவுளின் புன்னகையைப் பெற்றார்.  அவருடைய நேர்மையுள்ள பக்தியான வாழ்விற்கு முதல் பரிசு அது.

மற்றொன்று:  அன்னாளின் வார்த்தைகள். அவள் ஒரு தீர்க்கதரிசினி.  அவளும் புதிதாய்ப் பிறந்த குழந்தையாகிய என்னில் மெசையாவைக் கண்டாள்.  அவளுக்குத் தீர்க்கதரிசன வரம் கிடைத்திருந்ததினால் இது இயல்பானதே.  ஆனால் அவள் விசுவாசத்தினாலும் சிநேகத்தினாலும் தூண்டப்பட்டு என் மாதாவிடம் கூறியதைக் கவனியுங்கள்.  அவளுடைய அவ்வார்த்தைகளை, இந்த ஒளியின் விழாவில், இருளான இந்நாட்களில் தடுமாறும் உங்கள் ஆன்மாக்களுக்கு வெளிச்சமாகப் பயன்படுத்துங்கள்.  “ஒரு மீட்பரைக் கொடுத்த தேவன் உம்முடய கண்ணீர்களை ஆறுதல்படுத்த தம் தூதனை அனுப்ப வல்லமையற்றுப் போக மாட்டார்.” 

உங்கள் ஆன்மாக்களில் சாத்தானின் வேலையை அழிப்பதற்கு கடவுள் தம்மையே தந்தார் என்பதைச் சிந்தியுங்கள்.  அப்படி யானால், இப்பொழுதும் உங்களை வதைக்கிற சாத்தான்களைத் தோற்கடிக்க அவரால் முடியாதா?  இந்த சாத்தான்களை விரட்டிவிட்டு உங்களை மீண்டும் தமது கிறீஸ்துவின் சமாதானத்துக்குள் அழைத்துச் சென்று உங்கள் கண்ணீரைத் துடைக்க அவரால் கூடாதா?  அவரிடம் நீங்கள் விசுவாசத்துடன் ஏன் மன்றாடக் கூடாது?  உண்மையிலேயே உங்கள் விசுவாசம், ஓங்கி மேற்கொள்ளும் விசுவாசமாயிருக்கட்டும்.  அந்த விசுவாசத்தின் முன்பாக, உங்கள் அநேக பாவங்களினால் ஏற்பட்ட கடவுளின் கடுமை, ஒரு புன்னகையாக மாறக்கடவது.  ஆறுதலாக இருக்கிற அவருடைய மன்னிப்பை அவர் உங்களுக்கு அருள்வாராக!   நீங்களே விரும்பிய இரத்த பிரளயத்தில் மூழ்கியிருக்கிற இவ்வுலகத்தில் ஒரு வானவில்லாக இருக்கிற அவருடைய ஆசீர்வாதத்தை அவர் உங்களுக்கு அருள்வாராக!

இதை நினைத்துக் கொள்ளுங்கள்:  பரம பிதா ஜலப் பிரளயத்தால் மனிதர்களைத் தண்டித்த பின் தம்மிடமும் நமது பிதாப்பிதாவிடமும் என்ன சொன்னார்?  “நாம் இனி மனிதன் நிமித்தமாக பூமியை பரிச்சேதம் சபிப்பதில்லை.  ஏனென்றால் மனிதனுடைய இந்திரியங்களும் இருதய சிந்தைகளும் இளைமை முதல் தீமையின் பேரில் சார்பாயிருக்கின்றன.  ஆதலால் இப்பொழுது செய்ததுபோல் இனி நாம் சீவாத்துமாக்கள் யாவற்றையும் மறுபடி சங்கரிக்க மாட்டோம்”  (ஆதியாகமம் 8:21). இந்த வார்த்தைக்கு அவர் பிரமாணிக்கமாயிருந்திருக்கிறார், ஜலப் பிரளயத்தை அவர் மறுபடி அனுப்பவில்லை.  ஆனால் நீங்கள் உங்களிடமும் கடவுளிடமும் எத்தனை தடவை இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்:  “இந்த ஒரு தடவையும் எங்களை விட்டுவிட்டால், நீர் எங்களைக் காப்பாற்றினால், இனிமேல்    நாங்கள் போரில் இறங்க மாட்டோம், இறங்கவே மாட்டோம்.” ஆனால் அதன்பிறகு எப்போதும் முன்னைவிட அதிக கொடிய போராட்டங்களைச் செய்திருக்கிறீர்களே!  ஓ!  பொய்யரான மனிதர்களே!  எத்தனை தடவை!  நீங்கள் கடவுளுக்கோ உங்கள் வார்த்தைகளுக்கோ மதிப்பளித்ததில்லை.  அப்படியிருந்தாலும், விசுவாசத்துடனும், ஆர்வமுள்ள அன்புடனும் பெருங்கூட்டமாக விசுவாசிகள் அவரை மன்றாடுவார்களானால் அவர் மீண்டும் உங்களுக்கு உதவி செய்வார்.

கடவுளின் பாதங்களில் உங்கள் கவலைகளையெல்லாம் வையுங்கள்.   கடவுளின் நீதியின் கடுமையை அணையாமல் வைத்துக் கொண்டிருக்கிற அநேகருக்கு ஈடுகொடுக்க இயலாத அளவு மிகச் சொற்பமாயிருக்கிற நீங்கள், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகிற பயங்கர காலங்களையும் மீறி கடவுளுக்குப் பற்றுடையவர்களாயிருந்துள்ள நீங்கள், உங்கள் கவலைகளை அவருடைய பாதத்தில் வையுங்கள்.  அவர் இரட்சகரை உலகத்திற்கு அனுப்பியது போல் உங்களுக்குத் தம் தூதனை அனுப்புவார்.  பயப்படாதீர்கள். சிலுவையோடு இணைந்திருங்கள்.  அது எப்போதும் பசாசின் தந்திரங்களைத் தோற்கடித்துள்ளது.  பசாசு, மனிதர்களுடைய குரூரத்தைக் கொண்டும் வாழ்க்கையின் துயரத்தைக் கொண்டும் மற்ற வழிகளில் அவன் வெற்றி கொள்ள இயலாத உள்ளங்களை விரக்திக்கு அதாவது கடவுளிடமிருந்து அகலும் நிலைக்குத் தள்ளிவிட முயற்சிக்கிறது.