இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறந்து விட்டவராக சிலுவையில் தொங்கும் சேசுநாதர்

என் ஆத்துமமே, உன் கணகளை உயர்த்தி, சிலுவையில் அறையுண்டிருக்கும் அந்த மனிதரைப் பார். அந்த வேதனையின் பலிபீடத்தின் மீது இப்போது பலியாக்கப்பட்டிருக்கிற அந்த தேவ செம்மறிப்புருவையைப் பார். அவர் நித்திய பிதாவின் நேச மகன் என்பதை தியானி; உன் மீது தாம் கொண்ட அன்பிற்காக அவர் இறந்திருக்கிறார் என்பதை தியானி. உன்னை அரவணைத்துக் கொள்ள அவர் தமது திருக்கரங்களை விரித்திருக்கிறார்; உனக்கு சமாதான முத்தம் தரும்படி அவரது திருச்சிரசு கீழ்நோக்கி சாய்ந்திருக்கிறது; உன்னைத் தமது திரு இருதயத்திற்குள் ஏற்றுக் கொள்ளும்படி அவரது திருவிலா திறந்திருக்கிறது. நீ என்ன சொல்கிறாய்? இவ்வளவு நேசமுள்ள ஒரு கடவுள் நேசிக்கப்படத் தகுதியற்றவராக இருக்கிறாரா? அந்தச் சிலுவையிலிருந்து அவர் உன்னை நோக்கிக் கூறும் வார்த்தைகளைக் கேள்: ""பார், என் மகனே, என்னை விட அதிகமாக உன்னை நேசித்திருக்கிறவன் யாராவது உலகில் உண்டா என்று பார்.'' இல்லை, என் தேவனே, உம்மை விட அதிகமாக என்னை நேசித்துள்ளவன் எவனுமில்லை. ஆனால் எனக்காக மரித்த ஒரு சர்வேசுரனுக்கு நான் என்ன பிரதிபலன் செலுத்த முடியும்? தன் மீதுள்ள அன்பிற்காக இறந்த தன் சிருஷ்டிகரின் அன்புக்கு ஒரு சிருஷ்டி என்ன பதிலன்பு காட்ட முடியும்?

ஓ சர்வேசுரா, சேசுநாதர் எனக்காக அனுபவித்த துன்பங்களை மனுக்குலத்திலேயே மிகவும் கீழ்த்தரமான ஒரு மனிதன் எனக்காக அனுபவித்திருப்பான் என்றால், அவனை நேசிக்காமல் இருக்க என்னால் முடியுமா? என் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக எந்த மனிதனாவது கசைகளால் துண்டு துண்டாகக் கிழிக்கப்படுவதையும், ஒரு சிலுவையோடு பிணைக்கப்படுவதையும் நான் கண்டால், அதை நினைக்கும்போதெல்லாம் அவன் மீதுள்ள நேசத்தால் நான் உள்ளம் உருகாமல் இருக்க முடியுமா? அவன் சிலுவையில் மரித்தவனாகத் தொங்குவதைச் சித்தரிக்கும் ஒரு சித்திரம் என்னிடம் கொண்டு வரப்பட்டால், ""என் மீதுள்ள அன்பிற்காக இந்த மனிதன் இப்படி வதைக்கப்பட்டு இறந்திருக்கிறான். என்னை அவன் நேசித்திருக்க வில்லை என்றால், இந்த முறையில் இறக்க அவன் விரும்பியிருக்க மாட்டான்'' என்று நான் சிந்திக்கும்போது, அந்தச் சித்திரத்தை அசட்டைத்தனமுள்ள கண்களோடு பார்க்க என்னால் முடியுமா? ஆ என் மீட்பரே, என் ஆத்துமத்தின் அன்பரே! இனி எப்படி நான் உம்மை மறக்க முடியும்? என் பாவங்களே இந்த நிலைக்கு உம்மைத் தாழ்த்தி விட்டன என்று நினைத்து, உமது நன்மைத்தனத்திற்குநான் செய்திருக்கிற தீமைகளுக்காக எப்போதும் புலம்பியழாமல் இருக்க என்னால் எப்படி முடியும்? என் மீதுள்ள அன்பிற்காக இந்தச் சிலுவையின் மீது வேதனையோடு நீர் மரித்திருப்பதைக் கண்ட பின்னும், என் முழு வல்லமையோடும் உம்மை நேசிக்காதிருக்க என்னால் எப்படி முடியும்?

ஓ என் பிரியமுள்ள மீட்பரே, இந்த உமது காயங்களிலும், புண்படுத்தப்பட்டுள்ள உமது திருச்சரீரத்திலும், என் மீது நீர் கொண்டுள்ள கனிவுள்ள பாசத்தை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பதற்காக, நீர் உம்மையே மன்னியாதிருந்தீர் என்பதால், ஓ, நீர் எனக்காக மரித்துக் கொண்டிருந்தபோது, சிலுவையிலிருந்து அன்றொரு நாள் நீர் எத்தகைய அன்போடு என்னைப் பார்த்தீரோ, அதே அன்போடு இப்போதும் என்னைக் கண்ணோக்கியருளும். என்னைக் கண்ணோக்கி, எனக்கு ஞான ஒளி தந்து, இன்று முதல், உம்மைத் தவிர வேறு யாரையும் நான் நேசிக்காமல் இருக்கும்படி, என் முழு இருதயத்தையும் உம்மிடம் இழுத்தருளும். உமது திருமரணத்தை நான் ஒருபோதும் மறவாதிருப்பேனாக. தேவரீர் சிலுவையின் மீது உயர்த்தப்படும்போது, எங்கள் எல்லா இருதயங்களையும் உம்மிடம் ஈர்த்துக் கொள்வதாக வாக்களித்தீர். இதோ, உமது மரணத்தால் மென்மையாக்கப்பட்டதும், உம் மீது அன்பினால் தூண்டப் பட்டதுமாக இருக்கிற என் இருதயம், உம் அழைப்புகளை இனியும் எதிர்த்து நிற்காதிருக்க ஆசிப்பதைப் பாரும். ஓ, அதை உம்மிடம் இழுத்துக் கொண்டு, உமக்கு முழுவதும் சொந்தமாக்கியருளும்.

நீர் எனக்காக இறந்திருக்கிறீர், நானும் உமக்காக இறக்க ஆசிக்கிறேன்; நான் தொடர்ந்து வாழ்வேன் என்றால், ஓ சேசுவே, உம்மை மட்டுமே நான் நேசிப்பேன். ஓ சேசுவின் அவமானங்களே, ஓ சேசுவின் மரணமே, ஓ சேசுவின் அன்பே, என் இருதயத்தினுள் உங்களையே நீங்கள் பதித்துவிடுங்கள். உங்களைப் பற்றிய நினைவு தொடர்ந்து என்னைப் பாதித்து, அன்பினால் நான் பற்றியெரியும்படி செய்யுமாறு, என் இருதயத்தில் எப்போதும் தங்கியிருப்பதாக. ஓ அளவற்ற நன்மைத்தனமே, உம்மை நான் நேசிக்கிறேன்; ஓ அளவற்ற நேசமே, உம்மை நான் நேசிக்கிறேன். நீரே என்றென்றும் என் ஒரே நேசமாக இருக்கிறீர், இனியும் இருப்பீர். ஓ மரியாயே, நேசத்தின் தாயாரே, எனக்கு அன்பைப் பெற்றுத் தாருங்கள்.