கிறீஸ்துநாதர் பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்துகிறார்.

பாவசங்கீர்த்தனம் ஏற்படுத்தப்பட்டதை விளக்கும் பரிசுத்த வேதாகம வார்த்தைகள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றன என்றால், இந்தக் காரியத்தில் மிகச்சிறு சந்தேகம் வருவதற்குக் கூட வாய்ப்பேயில்லை.

இந்த தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்துவதற்கு முன் நம் ஆண்டவர் "மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்டவிழ்க்கப் பட்டிருக்கும்" (மத்.16:19) என்ற தமது வார்த்தைகளின் மூலம் அதை ஏற்கெனவே அர்ச். இராயப்பருக்கு வாக்களித் திருந்தார்.

மற்றொரு முறை, 'மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: பூலோகத்தில் நீங்கள் எவைகளைக் கட்டுவீர் களோ, அவை பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தில் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்" (மத். 18:18) என்ற வார்த்தைகளை இந்த முறை தமது எல்லா அப்போஸ்தலர்களிடமும் சொல்லி, அவர் தம் வாக்குறுதியைப் புதுப்பித்தார்.

இறுதியாக, அவர் முற்றிலும் தெளிவான பின்வரும் வார்த்தைகளைச் சொல்லி, பாவசங்கீர்த்தனம் (பச்சாத் தாபம்) என்னும் இந்த மாபெரும் தேவத்திரவிய அனுமா னத்தை ஏற்படுத்தினார்:

"பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்.... (இவைகளைச் சொல்லி, அவர்கள்மேல் ஊதி :) இஸ்பிரீத்து சாந்துவைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும்: எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னியாதிருக்கப்படும்" (அரு. 20:21-23).

''பிதா என்னை அனுப்பினது போல் நானும் உங்களை அனுப்புகிறேன்" என்ற நமதாண்டவருடைய அதிகாரபூர்வமான வார்த்தைகளைக் கவனியுங்கள். நம் இரட்சகருடைய இந்த ஆணித்தரமான அறிக்கைக்குப் பிறகும், அவர் பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லத் துணிபவன் யார்? பிற்பாடு பரிசுத்த வேதாகமம் தொடர்ந்து, இந்தப் பரிசுத்த தேவ ஊழியம் திருச்சபையில் அனுசரிக்கப்பட்டு வந்ததற்கான சாட்சியங்களை நமக்குத் தருகிறது. ஏனெனில் அப்போஸ்தலர் நடபடியாகமத்தில், "விசுவசித்தவர்களில் அநேகரும் வந்து, தங்கள் கிரியைகளை வெளிப்படுத்தி அறிவித்தார்கள்'' (அப். நட. 19:18) என்று அறிவிக்கிறது.

அர்ச். யாகப்பரும் தம்முடைய நிருபத்தில்: "நீங்கள் இரட்சணியம் அடையும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணி, ஒருவர் ஒருவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார்.

இவ்வாறு பாவசங்கீர்த்தனம் நமதாண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதரால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதற்கு பரிசுத்த வேதாகமம் ஒரு ஆணித்தரமான, மறுக்க முடியாத சாட்சியமாக விளங்குகிறது. இதை மறுக்கிறவன் பரிசுத்த வேதாகமத்தின் உண்மைத்தன்மையையே மறுக்கிறான்.

எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும்: (அரு. 20:21-23)