அர்ச். தோமையார் வரலாறு - விண்ணகத்தில் மாளிகை!

அவர்களிருவரும் சிறையிலிருக்கையில் அரசனின் இளைய சகோதரன் காத் என்பவன் இறந்தான். அரசன் தன் சகோதரனை அதிகமாக நேசித்து வந்தமையால் சொல்லொண்ணாக் கவலைக்கு உள்ளாகினான் தனது அன்பைக் கடைசி முறையாக வெளிப்படையாய்க் காட்டும் பொருட்டு அவன் சடலத்தை அதிக ஆடம்பரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வந்து அடக்கம் செய்யும்படிக் கட்டளையிட்டான.

மரித்த நான்காம் நாள் முதல் நாழிகையில், உற்றார், உறவினர், நண்பர் புடைசூழ்ந்திருக்க, பூசாரிகள் மந்திரங்கள் ஓதி இறுதிச் சடங்குகள் நடத்தினர். கவலையினிமித்தம் அரசன் அங்கு வரவில்லை. அடக்கச் சடங்கு ஆரம்பித்ததும் ஓர் ஆச்சரிய சம்பவம் நேரிட்டது. சவமாய் மரித்துப் போயிருந்த காத் கட்டிலை விட்டெழுந்து அக்கம் பக்கமெல்லாம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தான் தேடுகிறவர் அருகில் இல்லையென்று அறிந்ததும், சுற்றி நின்றோரை நோக்கி "என் சகோதரரை அழைத்து வாருங்கள்'' என்று கூவினான் உடனே அரசனிடம் தூதன் விரைந்தோடி, ''மன்னா! உமது சகோதரர் உயிர்த்து விட்டார்'' என்று இயம்பினான். 

இதைக்கேட்டதும் வியப்புற்று; தம்பியிடம் விரைந்து சென்றான் அரசன். அநேகர் அவரைப் பின் சென்றார்கள். செத்துச் சவமாயிருந்த தன் சகோதரன் பக்கம் வந்ததும், அரசன் முகம் வெளுத்து, இருதயம் துடிக்க, அச்சம் மேலிட்டவனாய் வாய்பேச இயலாது மலைத்துப் போய் விட்டான். அப்போது காத், பயம் வேண்டாம் எனும் வண்ணம் சயிக்கினை காட்டித் தமையனைப் பார்த்து, "அண்ணா! என் உயிரைக் காக்க யாரேனும் உமது அரசில் பாதி கேட்பினும் மறுப்பீரோ? மறுக்க மாட்டீர் என்பது எனக்கும் தெரியும். நீர் இவ்வளவு காலம் பெரும் செல்வத்தைச் செலவிட்டுச் சம்பாதித்த கருவூலத்தை எனக்குத் தயவு செய்து விட்டு விடுவீராக. அதுவே நீர் எனக்குச் செய்யக்கூடிய பேருபகாரம்" என்று 'மன்றாடினான்.

"தம்பி நான் உனக்குக் கொடுக்கக் கூடிய பொருள் யாது? எனக் கேட்டான் அரசன். "எனக்கு விற்று விடுவேன் என்று முதலில் பிரமாணம் செய்து கொடும் " என்றான் காத். தனக்குச் சொந்தமானவற்றில் எதைக் கேட்பினும் மறுக்காது அளிப்பதாக சத்தியம் செய்தான் கொந்தபோரஸ் அரசன். இவ்வாறு உறுதி மொழி பெற்றுக்கொண்ட பின் தமையனை நோக்கி, "அண்ணா! விண்ணகத்தில் நீர் வாங்கி யிருக்கும் மாளிகையை எனக்கு விற்றுப் போடும்" என்று அதிக ஆவலோடு கேட்டான். "சகோதரா! யார் எனக்கு அத்தகைய மாளிகையை அளித்தது?" என்றான் அரசன். 

அதற்கு, "அண்ணலே! நெருப்பிலிட்டுக் கொன்று போடும் படி ஒருவரை மறியலில் வைத்திருக்கின்றீர். அவர் ஓர் அருளுடையார். கடவுளுக்கு உகந்த புண்ணியசீலர். நான் இறந்தவுடன் தேவதூதர் என்னை இகலோக மிருந்து பரலோகங் கொண்டுபோயினர். ஆங்கு ஒரு பிரமாண்ட மாளிகையைக் கண்ணுற்றேன். அதன் அழகு அலங்காரம் எடுத்துக் கூறும் தரமன்று. பளபளவெனப் பளிங்குபோல் பிரகாசிக்கும் சுவர்களெழுப்பி, நவமணிகளால் இழைக்கப் பட்டு, சொல்லற்கரிய அலங்காரத்துடன் விளங்கியது அம் மாளிகை. 'இது தோமையார் உன் சகோதரனுக்காகக் கட்டியுள்ள அரண்மனை. ஆனால் அவன் இதற்குத் தகுதி யற்றவனாகிவிட்டான். ஆகையால், தோமையார் உனக்காக மன்றாடினார். உனக்கு உயிர்ப்பிச்சைக் கிடைக்கும். அதன் பின், உன் தமையன் ஏழைகளுக்கு ஈயாத பணத்தை நீ அவனுக்கு ஈடு செலுத்திவிட்டு, இம்மாளிகையைக் கைப் பற்றிக்கொள்' என்று வானவர் கூறினர்" என அழுத்தமாகச் சொன்னான் காத். இதைக்கேட்ட அரசன் திகில் கொண்டு, "தோமாவின் கடவுளே! என் அறியாமையை மன்னித்து என் பால் இரங்கும்" என்று மனக்கவலையுடன் இரந்து வேண்டினான் கடவுளை,

காத் உடனே படுக்கையைவிட்டெழுந்து திரண்ட மக்களினிடையே ஒடிச் சிறைச்சாலைக்குச் சென்று, தோமையார் பாதத்தில் விழுந்து வணங்கி, "ஆண்டவரின் அப்போஸ்தலரே! என் தமையன் செய்த தப்பிதத்தைப் பொறுத்தருள்வீராக" என மன்றாடினான். தோமையார் அவனை முக மலர்ச்சியோடு உற்று நோக்கித் தம் கரங்களால் அவனது நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து "என் மகனே ! ஆண்டவருடைய சமாதானம் உன்னோடு இருப்ப தாக” என்று ஆசீர்வதித்தார்.

தோமையார், காத் ஆகிய இருவரும் சிறையை விட்டு வெளியேறி வந்தனர். அரசன் எதிர்கொண்டு சென்று அவர்களைச் சந்தித்தான். அப்போஸ்தலரைக் கண்டதும் அவர் முன் தெண்டனிட்டு விழுந்து கலங்கிய மனத்தோடும் கவலை கொண்ட முகத்தோடும் தன் பிழையை மன்னிக்கும்படி அவரை வேண்டினான். "கடவுளுக்கு உகந்த புனிதரே! தேவரீர் எனக்காக விண்ணகத்தில் கட்டிய மாளிகையை அடியேன் உரிமையாக்கி கொள்ளத் தகுதியுள்ளவனாகும்படி உம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை எனக்காக மன்றாடும். நீர் போதிக்கும் இறைவனின் மெய்யான தொண்ட னாக நான் ஒழுகும்படி எனக்கு உதவி செய்தருளும்" என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டான். இரு சகோதரர்களும் கடவுளைத் துதித்துத் தோமையாரோடு தங்கிவிட்டனர். ஏழு தினங்கள் அவர்கள் அறியவேண்டிய வேத சத்தியங்களை அவர்களுக்குக் கற்பித்தபின், இருவருக்கும் ஞானஸ்நானங் கொடுத்தார் தோமையார். மூத்தவனுக்கு இராயப்பன் என்றும், இளையவனுக்குச் சின்னப்பன் என்றும் பெயரிட்டார்.