இறந்தவர்களும், காயம்பட்டவர்களும்!

இப்போது, முதல் தாக்குதல் முடிந்து விட்டதால், நான் அந்தப் போர்க்களத்தைச் சுற்றி சவாரி செய்த போது பலர் இறந்தும் காயப்பட்டும் இருந்ததைக் கண்டேன். இறந்தவர்களில் சிலருடைய கழுத்துகள் நெறிக்கப்பட்டிருந்ததையும் அவர்களுடைய கழுத்துகள் வீங்கியும், உருச்சிதைந்தும் இருந்ததையும் நான் கண்டேன். மற்றவர்களுடைய முகங்கள் பயங்கரமான முறையில் உருக்குலைந் திருந்தன; இன்னும் சிலர் மிகச் சுவையான உணவு தங்கள் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்க, பசியால் மரணமடைந்திருந் தனர். கழுத்து நெரிக்கப்பட்ட சிறுவர்கள் தங்கள் இள வயதில் சில பாவங்களைக் கட்டிக் கொண்டு, அவற்றை ஒருபோதும் பாவசங்கீர்த் தனத்தில் சொல்லாதவர்கள்; உருக்குலைந்த முகத்தைக் கொண் டிருந்தவர்கள் போசனப்பிரியர்கள்; பசியால் இறந்தவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்தாலும், தங்கள் பாவசங்கீர்த்தன குருவின் அறிவுரையையோ, எச்சரிப்பையோ ஒருபோதும் கடைப்பிடிக் காதவர்கள். 

முட்கள்

புழு அரித்த கைப்பிடியுள்ள களைவாரியை வைத்திருந்த ஒவ்வொரு சிறுவனுக்கும் அடுத்து, ஒரு வார்த்தை காணப்பட்டது. சிலருக்கு அது ஆங்காரம் என்றிருந்தது. மற்றவர்களுக்கு சோம்பல்; வேறு சிலருக்கு அடக்கமின்மை... இவ்வாறு பல வார்த்தைகள் காணப் பட்டன. தங்கள் அணிவகுப்பின்போது சிறுவர்கள் ஒரு ரோஜாப் பாத்திக்கு மேலாக நடந்து செல்ல வேண்டியிருந்தது என்பதையும் நான் இங்கு கூற வேண்டும். அவர்கள் அதை விரும்பினார்கள். ஆனால் ஒரு சில அடிகள் எடுத்து வைத்த பிறகு, அடியில் மறைந்திருந்த முட்களின் காரணமாக, அவர்கள் கத்திக் கொண்டு தரையில் இறந்து, அல்லது காயம்பட்டு விழுந்தார்கள். மற்றவர்களோ இந்த ரோஜாக் களை வீரத்தோடு மிதித்தபடியும், ஒருவரையொருவர் உற்சாகப்படுத் தியபடியும், வெற்றியை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். 

புதிய போரும், வெற்றியும்

அதன்பின் வானம் மீண்டும் இருண்டது. கண நேரத்தில் முன்பை விடப் பெரிய அதே மிருகங்கள் அல்லது இராட்சத ஜந்துக் களின் கூட்டங்கள் தோன்றின. இதெல்லாம் மூன்று அல்லது நான்கு வினாடிகளுக்குள் நிகழ்ந்தது. என் குதிரை சூழ்ந்து கொள்ளப்பட்டது. அந்த அரக்க உயிர்கள் எண்ணிலடங்காத அளவுக்கு அதிகரித்தன. நானும் பயப்படத் தொடங்கினேன். அவை என்னைப் பற்றிப் பிடிப்பதை என்னால் உணர முடிந்தது! அப்போது யாரோ ஒருவர் என்னிடம் ஒரு களைவாரியைத் தந்தார். உடனே நானும் அவற்றோடு போரிடத் தொடங்கினேன். அந்த இராட்சத மிருகங்கள் பின்வாங்கி ஓடும்படியாயிற்று. தங்கள் முதல் தாக்குதலில் வெல்லப்பட்டு, அவை எல்லாம் மறைந்து போயின.

அதன்பின் நான் மீண்டும் எக்காளத்தை ஊத, “வெற்றி! வெற்றி!” என்ற வார்த்தைகள் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலித்தன.

“வெற்றியா?” என்று நான் வியந்தேன், “இத்தனை அதிக சிறுவர்கள் இறந்தும், காயப்பட்டும் இருக்க, இது எப்படி வெற்றியாகும்?”

நான் மீண்டும் ஒருமுறை எக்காளம் ஊதினேன். அப்போது நாங்கள், “வெல்லப்பட்டவர்களுக்காக தற்காலிக ஒப்பந்தம்!” என்ற வார்த்தைகளைக் கேட்டோம். வானம் வெளிச்சமாயிற்று, ஒரு வானவில் காணப்பட்டது. அது எவ்வளவு அழகாகவும், வசீகர மாகவும் இருந்தது என்றால், என்னால் அதை வருணிக்க முடிய வில்லை . அதன் ஒரு முனை சுப்பெர்கா மீது இருந்தது போலவும் (சுப்பெர்கா : இது ட்யூரினுக்குக் கிழக்கே சுமார் மூன்று மைல் தூரத் திலுள்ள ஒரு குன்று ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் 2205 அடிகள் உயரமுள்ள இதன் சிகரத்திலிருந்து, நல்ல கால நிலையில் கீழே ட்யூரின் நகரத்தையோ, அல்லது முப்பது அல்லது அதற்கு அதிகமான மைல்கள் ஆரமுள்ள ஒரு சுவரைப் போல எழுந்து நிற்கிற பனி மூடிய ஆல்ப்ஸ் மலைகளின் அகன்ற அரைவட்டத்தைக் காணலாம். இந்தக் குன்றின்மீது ஒரு புகழ்பெற்ற பேராலயம் உள்ளது.), அது மோன்செனிஸியோவின் உச்சி வரை விரிந்து பரந்திருந்தது போலவும் மிகப் பிரமாண்டமாக இருந்தது. வெற்றி பெற்றவர்களா யிருந்த எல்லாச் சிறுவர்களும் எவ்வளவு அழகியதும், மிகப் பிரகாசமானதுமாகிய பல்வேறு வகையான கிரீடங்களை அணிந் திருந்தார்கள் என்றால், அது அச்சத்தைத் தூண்டும் ஒரு காட்சியாக இருந்தது. அவர்களுடைய முகங்களும் பிரகாசமான அழகுள்ளவை யாக இருந்தன. பள்ளத்தாக்கின் மறுமுனையில் ஒரு வகையான முகப்பு மாடி இருந்தது. அங்கு மகிழ்ச்சி நிறைந்த மனிதர்கள் இருந்தார்கள். அந்த முகப்பு மாடி என் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதீத அழகுள்ளதாக இருந்தது.

ஒரு மிகுந்த மகத்துவமுள்ள, இராக்கினி அரசிக்குரிய ஆடைகள் தரித்தவர்களாக, அந்த முகப்பு மாடியின் கிராதிக்கு வந்து, உரத்த சத்தமாய், “வாருங்கள், என் குழந்தைகளே, என் மேற்போர்வையின் கீழ் தஞ்சமடையுங்கள்” என்று அழைத்தார்கள். அவர்கள் பேசும்போது, ஒரு மிகப் பரந்த மேற்போர்வை அகன்று விரிந்தது. அதற்குள் புகுந்து கொள்வதற்காக எல்லாச் சிறுவர்களும் ஓடிச் சென்றார்கள். சிலர் உண்மையில் பறந்து சென்றார்கள்! இவர்கள் தங்கள் நெற்றிகளின்மீது மாசற்றதனம் என்ற வார்த்தையைக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் நடந்து சென்றார்கள். சிலர் தவழ்ந்து சென்றார்கள். நானும் ஓடத் தொடங்கினேன். ஆனால் அந்த அரை வினாடி நேரத்தில் - அதற்கு மேல் இருக்க முடியாது - “இது முடிந்து விடுவது நல்லது, அல்லது நாம் இறந்து போவோம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். இதைச் சொல்லிக் கொண்டு நான் இன்னும் ஓடிக் கொண்டிருந்தபோதே, தூக்கம் கலைந்து விழித்து விட்டேன்.