அர்ச். தோமையார் வரலாறு - அப்போஸ்தலர் சிறையில் அடைபடுகிறார்

காலைக் கதிரவன் எழுந்தது. கிருஷ்ணன் மனக்கவலையோடு துயில் விட்டெழுந்தான். கேவலமான ஆடை அணிந்து கொண்டு அரசனிடம் சென்றான். மஹாதேவன் அவனைப்பார்த்ததும் 'கிருஷ்ணா! உனக்கு நேர்ந்ததென்ன, ஏன் இத்தகையை உடையுடன் வந்திருக்கிறாய்?” எனக் கேட்டான்.

கிருஷ்: ''அரசே! தயவு செய்து என் மனைவி மகு தானியைப் போய்ப்பார்க்க அரசிக்கு உத்தரவு அளித்தருளும். ஏனெனில், அவள் மந்திரவாதியின் மாயவலையிற் சிக்குண்டு கிடக்கின்றாள். என் சகோதரி அவளது மன மயக்கத்தை மாற்றி நல் வழிக்குக் கொண்டு வரக் கூடு மென நம்புகிறேன் ''

மஹா: 'தாமதம் வேண்டாம் கிருஷ்ணா! உடனே உன் சகோதரியை அழைத்துச் செல். அவளுடைய வார்த்தைகள் உன் மனைவியைச் சரியான வழிக்குத் திருப்பி விடும் என்று நானும் நம்புகிறேன்.''

கிருஷ்ணன் அரச சந்நிதிவிட்டு விலகினதும், சீத்தாராமனை அழைத்து வரக் கட்டளையிட்டான் அரசன். சேவகர் விரைந்து சென்று, அவனது இல்லம் புகுந்தனர். அப்போஸ்தலர் பக்கத்தில் சீத்தாராமனும் மகு தானியும் மெளனமாயிருந்து தெய்வீக உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சேவகரில் ஒருவன் அதிகாரத் தொனியுடன், “சீத்தாராமா! என்ன செய்கிறாய்? அந்த மாயவித்தைக்காரனோடு உனக்கென்ன வேலை? உன் நடத்தையைக் கேட்டு அரசன் கடுங்கோபங் கொண்டுள்ளார் வேண்டுமானால் உன் தலையையும் வெட்ட எத்தனித்துள்ளார். உன்னைக் கையோடு கொண்டு வரக் கட்டளையிட்டிருக்கிறார், உடனே எங்களோடு வருவாயாக'' என்று உரைத்தான். இதைக்கேட்ட சீத்தாராமன் அவர்களிடம் மறு வார்த்தை பேசாது, தோமையாரை நோக்கி, ''சுவாமி! என்னை ஆசீர்வதித்தருளும். எனக்காக இறைவனை மன்றாடும்'' என்று கெஞ்சினான். தோமையாரும் அவனுக்கு ஆறுதலாக ''மகனே! அஞ்சாதே! கடவுள்மீது உன் நம்பிக்கையெல்லாம் வைத்திரு. உனக்குக் குறை ஒன்றும் நேராது.

அவரே நம்மைப் பாதுகாப்பவர். அவர் திருவுளமின்றி ஒருவரும் நமக்குத் தீங்கிழையார் " என்றார்.

சீத்தாராமன் தனக்கு ஆபத்துக் காத்திருக்கிறதென்று ஒருவாறு அஞ்சினபோதிலும், தைரியத்தோடு அரசன் முன் வந்து மரியாதை செய்து நின்றான், அரசனோ அடங்காக் கோபத்தோடு, " சீத்தாராமா! உன் வீட்டில் வந்திருக்கும் மாந்திரிகன் யார்? அவனன்றோ என் அரசில் குழப்பம் உண்டுபண்ணி, என் குடிகளை ஏமாற்றித் திரிகிறான். நீ அத்தகைய மாயக்காரனுக்கு இடங் கொடுப்பது தகுமா?" என்று வினவினான். அதற்குச் சீத்தாராமன் "அரசே! அவர் யார் என்று உமக்குத் தெரியவில்லை என் மனைவியும் மகளும் பேய் பிடித்து இன்னல் பட்டது உமக்குத் தெரிந்ததே, பல வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து பார்த்தேன். பூசாரிகள் பலர் தங்கள் மந்திரத்தால் குணப்படுத்த முயன்றார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. அப்போது இம் மகாத்துமாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஈசன் அவர் கேட்பதை அளிப்பதாக அறிந்தேன். ஆவல் மிகுந்து ஓடினேன் அவரிடம்; என் குறை தீர்க்க வரும் வண்ணம் வேண்டினேன். அவரும் வந்தார். என்னருமைக் கண்மணிகளைப் பசாசின் அலைக்கழிப்பினின்று காப்பாற்றினார். என்னைச் சமாதானத்தில் நிலை நாட்டினார்" என்று பணிவுடன் பகர்ந்தான்.

இவ் வார்த்தைகள் அரசனைச் சாந்தப்படுத்தவில்லை. சேவகர்களை அனுப்பி அப்போஸ்தலரையும் பிடித்து வரும்படிக் கட்டளையிட்டான். அவர்களும் விரைந்து சென்றார்கள் சீத்தாராமன் வீட்டிற்கு. அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் அப்போஸ்தலர் போதித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தைப் பார்த்ததும் பயந்த சேவகர் அப்போஸ்தலரைப் பிடிக்காது அரண்மனைக்கு திரும்பினார்கள். வந்ததும், "அரசே! நாங்கள் அங்கு போனோம். ஆனால் யாதும் செய்யத் துணியவில்லை. ஏனெனில், மக்களோ பெருங்கூட்டமாய் இருக்கின்றனர், திருமதி மகு தானியம்மாளும் அங்கேயே இருக்கிறார்கள்.

எல்லாரும் அவர் பிரசங்கத்தை ஆவலுடனும் அன்புடனும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச்சமயத்தில் யாராவது அவர்மேல் கைவைப்பாரானால் அவரைச் சூழ்ந்திருக்கும் மக்கள் அவர்களைச் சும்மா விடமாட்டார்கள். ஆதலால் கும்பலுக்கு அஞ்சித் திரும்பிவிட்டோம்” என்றனர். இதைக் கேட்டவுடன் கிருஷ்ணன் இருக்கையை விட்டெழுந்து, "அரசே! என் பின்னால் சில சேவகர்களை அனுப்புங்கள். நான் போய் அவனையும் அவனால் புத்தியிழந்து அலையும் மகு தானியையும் இப்பொழுதே இங்குக் கொண்டு வருகிறேன்'' என்று இரைந்தான்.

அவன் விருப்பத்திற்கு அரசன் இணங்கினான்; எனவே கிருஷ்ணன் ஆத்திரத்துடன் சீத்தாராமன் வீட்டுக்குச் சென்றான். அப்போஸ்தலரைக் கண்டான். ஆனால் மகு தானி அச்சமயம் வீடு திரும்பிவிட்டாள். அப்போஸ்தலரை நெருங்கி, "ஒ! மாந்திரிகனே! உனது மாயவித்தை உனக்கென்ன உதவி செய்யப் போகிறதென்று பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டே அவர் கழுத்தில் கயிறிட்டுப் பிணித்து, ''நீ போதிக்கின்ற கிறிஸ்து இப்போது உன்னை என் கையினின்று விடுதலையாக்கட்டும்'' என்று ஏளனஞ்செய்து அரசன் சமுகத்துக்குத் தோமையாரை இழுத்துக்கொண்டு போனான்.

அரசன் அப்போஸ்தலரைப் பார்த்தான், கடுஞ்சினங் கொண்டான். கர்ச்சித்துக்கொண்டு, " நீ எச்சாதியான்? எந் நாட்டான்? எந்தக் கடவுள் பேரால் அற்புதங்கள் செய்கின்றாய்?'' எனக் கேட்டான். அதற்குத் தோமையார், "அரசே! என் இறைவனே உம் இறைவன். அவரே இகத்தையும் பரத்தையும் படைத்தவர். அவர் ஒருவரையே நாம் எல்லோரும் ஆராதிக்க வேண்டும். அவரை அறிய வேண்டும். மறுப்பது முற்றுந் தவறு'' என்று பயமின்றிப் பகர்ந்தார். அரசனோ அதை அணுவளவும் கவனியாமல் அவரை விலங்கிட்டுச் சிறைக்கூடத்திற்கு அனுப்பினான். சேவகர் அவரைச் சிறையிலிட்டுக் கதவை மூடினர். அப்போஸ்தலர் முழந்தாளிட்டு இயேசுவுக்காகப் பாடுபடக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று கடவுளுக்குத் தோத்திரம் புரிந்தார்.

கிருஷ்ணனும் மஹாதேவனும் ஒன்று கூடி அவரை எவ்விதத்தில் தொலைப்பதென்று திட்டமிட்டார்கள். ஒரு பக்கம் அவரைக் கொலை செய்யத் தீர்மானித்தனர். மறு பக்கம் மக்களுக்கு அஞ்சினர். ஏனெனில் அவரால் பலர் மனந்திரும்பியிருந்தனர்; பலர் அவர் மீது பற்றுதலாய் இருந்தனர்; அவரைத் தெய்வீக அருள் பெற்றவர் என்று கொண்டாடினர்.