இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நரக வேதனை!

செத்தவனுடைய தீர்வை ஆன பின்பு அவனவன் செய்த பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி நரகம், மோட்சம் என்கிற இரண்டு வழியில் ஒன்று நேரிடும். பாவியுடைய ஆத்துமம் உடலைவிட்டுப் பிரிந்தவுடனே நரக பாதாளத் திலே விழும். எத்தனை நாழிகை எவ்வளவு நேரம் செல்லும் என்று யோசிக்க நேரமில்லை. கண் சிமிட்டி விழிக்குமுன்னே சம்பவிக்கும். ஒரு மனுஷனை மலைப் பாம்பு வந்து பிடித்துக் கொள்ள, கிட்ட நின்றவர்கள் எல்லாரும் கைவிட்டு ஓடிப் போக, அவனுக்கு ஒரு உதவியும் இல்லாதிருக்க, அந்தப் பாம்பு அவனைத் தன் வளைக்குள்ளே இழுத்துக் கொண்டு போகிற போது எப்படி நடுநடுங்குவான்! என்னமாய்த் துடித்துப் பதைத்து ஏங்கித் தடுமாறுவான்! அதை இவ்வளவென்று சொல்லக் கூடுமோ? அப்படியே பாவியானவன் ஓர் உதவியும் இல்லாமல் ஜென்மப் ப ைக ய ர ளி ய ர ன ப சா சி ன் கை யி லே ஒப்புக்கொடுக்கப்படுகிற போது அவனுக்குள்ள துக்கமும், பயமும், நடுநடுக்கமும் இம்மாத்திரம் என்று யாராலே சொல்லக்கூடும்?

பாவி தான் இருந்த பெரிய மாளிகையை விட்டு இருட்டுக் குழியிலே விழுந்ததைக் கண்டு பிரமித்துப் போய்ப் பெருமூச்சு விட்டழுது, ஐயையோ! எங்கே இருந்து எங்கே வந்தேன்? என்னோடு கூட இருந்த உற்றார், பெற்றார், சேர்ந்தார், சிநேகிதர் எங்கே? ஒருவரையும் காணோமே என்று அலறிப் பதறிப் புலம்புவான். எங்கே பார்த்தாலும் அவலட்சணப் பசாசு மயமாய் நாலு திக்கும் சுற்றி வளைத்துக் கொண்டு, கத்தி, ஈட்டி, குறடு, சங்கிலி, சாட்டை, சம்மட்டி முதலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனைத் தலையான பசாசின் முன்னே கொண்டு போய் விட்டு இவனுக்கு தண்டனை சொல்லும் என்று கேட்க, இவன் உலகத்திலே முடி தரித்துக் கொடூரமாய் இராச்சிய பாரம் செய்ததற்கு அந்த வகையிலே ஆக்கினை இடுங்களென்று தலையான பசாசு சொல்ல, மகா உக்கிரமாய் எரிகிற சிங்காசனத்திலே வைத்து, பழுக்கக் காய்ந்திருக்கிற இரும்பு முடியும், செங்கோலும் அவன் கையிலேயும், சிரசிலேயும் பசாசுகள் தரிக்கச் செய்து, அவன் அலறுகிற சத்தம் கேட்டு, ஏன் கூப்பிடுகிறாய்? இதோ உன் சகதோழர்களாய் நாங்கள் இருக்கிறோம் என்று எண்ணிக்கையில்லாத பசாசுகள் கூடி, அவனைக் கீழே விழத்தாட்டி, மேலே விழுந்தேறி, உதைத்து, மிதித்து, உலகத்திலே பாராட்டின இராஜ மகிமையின் அருமை இப்போது தெரிகிறதா என்று, நானாவிதமாகப் பங்கப்படுத்தும்.

இதெல்லாமல் முன்னே அவனால் அநியாயமாய்க் கொலையுண்ட பிராணிகள் வதை, அவனுடைய உயிரை அறுக்கிறதாகவும், அநியாயமாய் வரி கொடுத்த குடிமக்கள் வதை, அவன் இருதயத்திலே புகுந்து, குடல், ஈரல்களைப் பிடுங்குகிறதாகவும் காணப்படும். பொய்யான மதங்களைப் படிப்பித்து, நாடு தேசமெல்லாம் சுற்றித் திரிந்த போலி குருக்கள், கள்ள ஞானிகள் எல்லாரும் தங்களால் கெட்டுப் போன ஜனங்களாலே சவுக்கடி பட்டு , ஏன் இப்படி எங்களைக் கொடுத்தீர்கள் என்று முறைப்பாடு கேட்பார்கள். மனைவியும், புருஷனும் தங்களுக்குள்ளே ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து ஓநாய்களைப் போலே விழுந்து கடித்துக் கொண்டு தூஷணித்துக் கொள்வார்கள். செல்வம் மிகுந்து தொந்தி பெருத்தவர்கள் அக்கினிக் குற்டுகளால் மாமிசம் பிடுங்கப்படுவார்கள். போதை வெறி கொண்டு திரிந்தவர்களுக்கு பஞ்ச லோகத்தைத் தண்ணீராக உருக்கிக் குடிக்கக் கொடுப்பார்கள்.

சந்தணம், புனுகு, சவ்வாது, கந்தப் பொடி பூசிப் பாவத்திலே பழகினவர்களை துர்நாற்றமுள்ள ஆற்றிலே போட்டு அமிழ்த்துவார்கள். மோக பாவத்திலே பழகினவர்களைக் கொடூரமாய் எரிகிற நெருப்புக் கட்டிலின் மேல் கிடத்தி, சர்வாங்கமும் ஊடுருவிப் பாய்ந்து கடிக்கிற அக்கினி மயமான விஷ சர்ப்பத்தோடும், புழுத்து நாறித் துர்க்கந்தம் வீசுகிற செத்த பிணத்தோடும் சேர்ந்து பிணைத்து விடுவார்கள். கண், காதுக்கு இன்பமாய் ஆடல், பாடல், சரசம், சிரிப்பு, விளையாட்டு, வேடிக்கை, விநோதங்களிலே பழகினவர் களைப் பேய்கள் பயங்கரமான ரூபத்தோடும், கொடுமையோடும் முகக் கோரணி காட்டி, பரிகாசம் செய்து தூஷித்து, நிந்தித்து, பொறுக்க முடியாத வாதைப்படுத்தும். இப்படி அவனவன் எந்தெந்தப் பாவங்களைச் செய்தானோ, என்ன நினைவு நினைத்தானோ, எந்த வார்த்தை பேசி, எந்தக் கிரியையாய் நடந்தானோ, அதற்குத் தக்க ஆக்கினை மூச்சுவிட நேரம் இல்லாமல் அநுபவிப்பான். அங்கே நிற்கிறதும் வாதை, இருக்கிறதும் வாதை, பேசுகிறதும், கேட்கிறதும், நடக்கிறதும் சகலமும் வாதையே அல்லாமல் சுகமானது ஒன்றுமில்லை.

ஆகையால், தர்க்க சாஸ்திரம் படித்திருந்த ஒரு சீஷன் செத்து நரகத்திலே விழுந்த பின்பு, தன் குருவுக்குத் தோன்றிய போது, நரகத்திலேயும் படிக்கிற கல்வி சாஸ்திரங்கள் உண்டா என்று குரு கேட்டதற்கு, இந்தக் கல்வியும், தர்க்கமும் உண்டென்றான். அதாவது : நோவில்லாதது ஏதாவது உண்டா என்று கேட்கிறதும், இல்லை என்று பதில் சொல்லுகிறதும், உன்னுடைய வாதை பெரியதா , என்னுடைய வாதை பெரியதா என்று ஒருவருக்கொருவர் தோர்வைப்படாமல் தர்க்கிக்கிறதும், இதுவே கல்வியும், சாஸ்திரமும் அல்லாமல் வேறொன்றும் இல்லையென்று சீஷன் சொன்னான். இப்படிப்பட்ட வாதையுள்ள ஸ்தலத்திலே பாவி சேர்ந்தவுடனே, உலையிலே வேகிற இரும்பைப் போல வெந்து, அடைகல்லின் மேலே வைத்துச் சம்மட்டியால் அடிக்கிற அடிகளைப் பாவிகள் பொறுக்க மாட்டாமல், ஆகாயம் வரை கேட்க, அபயசத்தமாய் வீறிட்டுப் பெருமூச்சு விட்டு, ஐயையோ! இந்த வாதைகள் அநுபவிக்க ஏன் வந்தேன் ? முன்னே அறிந்தேன் இல்லையே. இப்போதல்லவா மெய் என்று அறிந்தேன். வேத சத்தியங்களை வாசித்தபோதும், குருக்கள் சொல்லுகிற பிரசங்கம் கேட்ட போதும் பயப்படவில்லை. உலகத்திலே கெட்ட சுகங்களை விடாதபடிக்கு வேதமொழி, குரு மொழி தட்டினேன். முன்னே அநுபவித்த சுகபோகங்கள் எல்லாம் இப்போது என்ன வாய்ப் போயிற்று? ஏராளமாய்ச் சம்பாதித்த நிலபுலன், பூமிகள் எல்லாம் எங்கே? நரகமே இருப்பாயிற்று. சந்தோஷமாய்க் குடியிருக்கக் கட்டின மாடமாளிகை, வீடு வாசல் எங்கே? இருட்டுக் குழியாகி விட்டது. மகிமையோடு ஆண்ட பதவிகள் போய் அடிமைத்தனமாகி விட்டது. ஒரு காசும் பிச்சை கொடாமல் தேடி வைத்த திரவியங்கள் எல்லாம் என்னை அதிகமாய் வாதிக்கிற நெருப்பு ஆயுதங்களா யிருக்கின்றன.

ஐயையோ! இப்படி வருமென்று கொஞ்சமாவது நினைக்கவில்லையே. ஒருநாள் பசி பொறுத்து, ஒரு சந்தி உபவாசமாய் இருக்க மாட்டேன் என்று மீறினேன். இப்போது எந்நாளும் ஆறாத பசியால் தவித்துத் துடிக்கிறேன். ஒரு அற்ப நோய் சரீரத்தில் வரப்போகிற தென்று மகா எச்சரிக்கையாயிருந்தேன். இப்போது வாதை மேல் வாதை அநுபவிக்கிறேன். இந்த மூடத்தனம் ஏன் செய்து கொண்டேன்? சகல செல்வ பாக்கியம் நிறைந்த மோட்ச இராச்சியத்தை எனக்குச் சர்வேசுரன் நியமித் திருக்க, பூலோக அற்ப சுகத்தை விடாதபடிக்கு மூர்க்கமாயிருந்து, அந்தச் சுகத்தையும் இழந்து, அளவில்லாத பரலோக பாக்கியத்தையும் இழந்து, இந்த அக்கினிச் சமுத்திரத்தில் விழுந்தேன். இனி என்ன செய்வேன்? மறுபடி உலகத்திலே போய், தபசு செய்து கொள் என்கிற உத்தரவு இருந்தால் எப்படிப்பட்ட கடினமான தபசுகளைச் செய்வேன்! எத்தனை நாள் ஒரு சந்தி, உபவாசமாயிருப்பேன்! என்னுடைய ஆஸ்தி பாஸ்தி எல்லாம் ஒரு காசும் வையாமல் பிச்சை, தான தர்மத்திலே செலவழித்துப் போடுவேன்!

ஆங்காரம் அடங்கி எத்தனை நீசமாயிருக்கிற பேர்களுக்கும் கீழ்ப்படிந்து போவேன்! சுக செல்வங்களை ஒருக்காலும் நினையாமல், குப்பை மேலே இருந்து தபசு செய்வேன். ஆனால் கூடாத காரியத்தை நினைத்து என்ன பிரயோசனம்? காலம் கடந்து விட்டதே. நான் அநுசரித்துக் கொண்ட மதிகேட்டுக்குச் சரியான மதிகேடு உண்டோ ? இத்தனை கஸ்தி வாதைகளெல்லாம் பட்டாலும், இனி மேல் அப்புறம் போக இடம் கிடைக்குமா? ஆயிரம் வருஷம், கோடி வருஷத்துக்குப் பிறகாவது ஏதாவது ஆறுதலும் கிடைக்குமோ? கிடையாது. எண்ணுகிற இலக்கங்கள் எல்லாம் முடிந்தாலும், ஆக்கினைப்படுகிற நாள் முடியாதே. நான் செய்த குற்றங்களுக்காக அழுகிற கண்ணீர் சமுத்திரம் போலே நிறைந்தாலும், நரக அக்கினி குறையுமோ? கொஞ்சமும் குறையாது. அந்த ஆக்கினை அநுபவியாதபடி உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்றாலும் முடியாது. அவலட்சணங்களைக் கண்ணாலே காணாமலும் . பயங்கரமான சத்தங்களைக் காதினாலே கேளாமலும் இருக்க வேண்டுமென்றால், கண்ணும், காதும் அதிகமாய்த் திறந்து வழிவிடுகிறதல்லாமல், மூடி அடைபட்டிருக்க மாட்டாது. சகலமும் ஓய்வில்லாமல், முடிவில்லாமல் பட வேண்டி யிருப்பதினாலே இந்த ஆக்கினை ஒருக்காலும் முடியாதே என்று பெருமூச்சு விட்டு, பல்லை நறநறவெனக் கடித்து, அழுது புலம்புகிறதல்லாமல் வேறு நம்பிக்கை இல்லை.

பாவீ! உன் பாவத்திற்கு இப்படிப்பட்ட கஸ்திகள் வர இருக்கிறதைக் கண்டு இன்னும் பாவத்தை விடாமல் இருக்கிறாயோ? இரு கரையும் புரண்டு பெருவெள்ளம் ஓடிவரச் செய்து, இன்னும் ஆற்றங்கரையிலே நித்திரை கொள்ளுகிறது என்ன? நரகத்தைக் காணாததினாலே நம்பிக்கை இல்லை என்றால், நரகத்திலே இருந்து வந்த மனுஷனுடைய அத்தாட்சியைச் சொல்லிக் காண்பிக்கிறேன் பார்.

ஒரு வாலிபன் இராணுவத்திலே வீரசூரனாய், மோக வெறியனாய் வேதவாக்கியமும், குருவின் வார்த்தையும் சட்டை செய்யாமல் திரிந்து செத்த பின்பு, நரகத்திலே விழுந்து தான் அநுபவித்த செல்வங்களுக்காகப் படுகிற வாதைகளை ஒரு புண்ணியவானுக்குக் காண்பித்ததாவது: அவன் ஆத்துமம் உடலை விட்டுப் பிரிந்து நரகக் குழியிலே விழுகிற போது ஒரு பெரிய தலைவனுக்குச் செய்கிற கொண்டாட்டம் போலே பசாசுகள் கூட்டங் கூடி அவன் நிர்ப்பாக்கியத்தைப் பற்றித் துஷ்ட சந்தோஷக் குறிப்புகளுடன் குதித்து எதிர்கொண்டு வந்து பயங்கரமான இரைச்சலோடு மங்களம் பாடிப் படைத் தலைவன் வருகிறான், ஆசாரம் செய்யுங்கள் என்று பரிகாசமாய்ச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய்த் தலையான பசாசுக்குக் காண்பித்த போது, அந்தப் பசாசு நெருப்பாலான தன் கரங்களால் அவனைக் கட்டி மின்வி மற்றப் பசாசுகளையும் அவ்விதமாய்க் கட்டி மின்வச் சொல்லி அவனுக்கு ஸ்நானம் செய்வித்து, மற்ற வரிசைகளையும் செய்யுங்கள் என்று சொல்ல, அக்கினி நிறைந்த குளத்திலே கொண்டு போய்க் குளிப்பாட்டி, ஒரு நெருப்புக் கட்டிலிலே கொண்டு போய்க் கிடத்தி, அவனோடு படுத்திருக்க ஸ்திரீக்குப் பதிலாய்க் கொடூரமாய்க் கடிக்கிற அக்கினி விஷ சர்ப்பத்தை அக்கினி விஷ சர்ப்பத்தைக் கிடத்தி, பிற்பாடு அவனுக்கு விருந்தாகப் புழுக்களைக் கொண்டு வந்து சாப்பாடிட்டு, உருகி திரவமாயிருக்கிற நெருப்பைப் பானமாகக் குடிக்கக் கொடுத்து, பேய்கள் அவனுடைய வேதனையைப் பார்த்து ஆடிப் பாடிக் கொண்டாடின.

அவன் ஒன்றும் பேசாமல் பெருமூச்சு விட்டு இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்று, பெற்ற தாய் தகப்பனும், உற்றார், உறவின் முறையாரும், சேர்ந்தார், சிநேகிதரும், தன் மனைவியும், தனக்கு உதவியாயிருந்த பரலோக பூலோக வஸ்துக்களும், தர்மாத்துமாக்களும் இனித் தனக்கு உதவ மாட்டார்கள் என்று உக்கிரம் எரிச்ச லோடு அவர்களையும் தான் பிறந்த நாளையும் வெகுவாய் நிந்தித்துச் சபித்துத் தூஷணித்து மறைந்து போனான். அப்படிப்பட்ட வாதைகள் அவனுக்கு வந்த போதே உனக் கும் அப்படி வராதென்று நினைக்கக் கூடுமோ? அடுத்த வீட்டிலே பற்றின் நெருப்பைக் கண்டு பயமில்லாமல் இன்னமும் வீட்டிலே நித்திரை போகிறதென்ன?

பாவ மயக்கத்தை விட்டு விழித்துக் கொள். நரகாக்கினையை நினைத்துப் பார். நல்ல கருத்தோடு புண்ணிய வழியை அநுசரிக்கிறேன் என்று கெட்டியான பிரதிக்கினை செய்து உன் பாவத்துக்காக மனஸ்தாபப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.