இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புனித பிலோமினா - பதிப்புரை

“சின்னக் கன்னி பிலோமினா வேதசாட்சி ஆனாள்''

ஏன்?

அர்ச். பிலோமினம்மாள் சேசுவை மட்டும் நேசித்தாள். சேசுவை மட்டும் நேசிப்பதே ஓர் ஆன்மாவின் கன்னிமை. அதற்காக 12 வயதுச் சிறுமியான அவள் சேசுவைப் போலவே வதைக்கப்பட்டாள்.

தியோக்ளேஷியன் மன்னன் அவள் தன்னை நிராகரித்து சேசுவைத் தெரிந்துகொண்டதால் சேசு பட்ட பாடுகளை அவளும் படட்டும் என்றே அவளைக் கசைகளால் அடிப்பித்தான். உரோமைத் தெருக்களில் இழுத்துச் சென்று அம்புகளால் எய்வித்தான். கழுத்தில் பெரும் ஈட்டியால் குத்திச் சாகடித்தான். அவளோ சேசுவின் பாடுகளைத் தானும் படுவதே தன் மகிமை எனக் கருதித் தன் இரத்தத்தைச் சிந்தினாள். அந்த இரத்தத்தை 1500 ஆண்டு களுக்குப் பின் ஆண்டவர் இன்று மகிமைப்படுத்துகிறார். சேசு தம் பாடுகளில் அவளுக்குப் பங்களித்தது போல, தம் இரட்சிப்பு அலுவலிலும் பங்களித்தார். அவள் வழியே நடைபெறாத புதுமை இல்லை. கடவுள் தம் இறுதிக்கால அன்பின் திட்டங்களை நிறைவேற்ற அவளைத் தெரிந்துகொண்டிருக்கிறார்.

அர்ச். பிலோமினம்மாளின் வரலாற்றைப் படிக்கும் நாம் அனைவரும் நிச்சயம் அவளை நேசிக்க வருவோம். அதோடு அவள் நேசித்த சேசுவையும் மாதாவையும், அவள் நேசித்தது போல நாமும் நேசிக்க வேண்டும்.

“வாழும் ஜெபமாலை இயக்கமானது முத். பவுலின் ஜாரிக்கோ என்ற பெண்மணியால் 1826-ல் தொடங்கப்பட்டு, திருச்சபையால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. திருச்சபையால் அநேக பலன்களும் அதற்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த பக்தி முயற்சி முதன்மையாக கிறீஸ்துவுக்காக ஜெபமாலை மாதாவை மகிமைப்படுத்துவதற்கும், கத்தோலிக்க விசுவாசத்தை ஆழப் படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இவ்வியக்கத்தின் பாதுகாவலியாக பாப்பரசரால் தரப்பட்டுள்ள அர்ச். பிலோமினம்மாளின் வணக்கத்தையும் இது முன்வைக்கிறது. “உலகளாவிய வாழும் ஜெபமாலையின்'' முக்கியமான நோக்கங்கள் இரண்டு. அவை: மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியும், நம் அன்புக்குரிய பாதுகாவலி அர்ச். பிலோமினம்மாளின் வணக்கமும்.

அர்ச். பிலோமினம்மாள் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் நம் ஜெபமாலை இராக்கினியின் பாதங்களிலே சேர்த்து விடுகிறாள்.