இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - செந்தோம் - புனித தோமையார் பேராலயம்

புனித தோமையார் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையானது அக்காலத்திலேயே மிகுந்த பக்தியுடன் போற்றப்பட்டதுமன்றி, அதன் மீது நாளாவட்டத்தில் ஒரு கோயிலும், அதன் பக்கத்தில் ஒரு சந்நியாசி மடமும் ஏற்பட்டன. வாணிபத்தின் பொருட்டு வரத்துப் போக்காயிருந்த அரபு நாட்டு வியாபாரிகள் அப்பாகத்தை, 'தோமையார் வீடு' அல்லது தங்கள் மொழியில் அவ்விதப் பொருள் தரும் 'பெத்தோமா' என்று அழைத்து வந்தார்கள் என்பது வழி வழியாக வரும் செய்தி. 

இதனால்தான் புனித தோமையாரால் சத்திய வேதத்துக்குத் திருப்பப்பட்ட பூர்வீகக் கிறிஸ்தவர்களைப் பின் சென்றவர்களும், இடைவிடாது நடந்த வேத கலகங்களினால் மலையாள நாட்டில் தஞ்சம் புகுந்த கிறிஸ்துவ மக்களும் இந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து இவ்விடத்திலுள்ள புனித தோமையாருடைய கல்லறையையும், அவர் வேதசாட்சியாக மரணமடைந்த தலத்தையும் பக்தியுடன் வணங்குதற்கு இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள்,

போர்த்துக்கீசியர் இந்தியாவுக்கு 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்தனர். புனித தோமையார் இந் நாட்டில் வந்து வேதம் போதித்தது, அற்புதங்கள் பல செய்தது, பெருந் தொகையினரை மனந்திருப்பினது, கடைசியாக வேதசாட்சியாகக் கொல்லப்பட்டு அடக்கஞ் செய்யப்பட்டது முதலிய விவரமான செய்திகள் அவர்களுக்குத் தெரியவந்ததும், மயிலாப்பூரிலுள்ள தோமை அப்போஸ்தலர் கல்லறையின் மீது காணப்பட்ட கோவிலை விரிவு படுத்திச் சிறப்பித்தனர். அதைப் பக்தியுடன் வழிபட்டனர். தோமையார் பக்தியை வளர்த்துப் பெரியதோர் கோவிலையும் அதன் பக்கத்தில் கட்டினர்.

போர்த்துக்கீசியர் கொண்டிருந்த தெய்வ பக்தியினாலும், வாணிபத் தொழிலினாலும் அவர்களில் பலர் புனித தோமையார் கல்லறைக் கோவிலின் அருகே குடியிருப்பை ஏற்படுத்தினர். ஆகவே கொஞ்ச காலத்திற்குள் அவ்விடத்தில் ஒரு சிறிய ஐரோப்பியப் பட்டணம் உண்டாயிற்று. இவ்வாறு உண்டாகிய இந்தப் புதுப் பட்டணமும், கிறிஸ்தவர்கள் மிகுந்திருந்த பழைய மயிலாப்பூர் முதலிய ஊர்களும், பாப்பானவரால் 1552 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கொச்சி மறை மாவட்டத்தின் ஞான ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. 

ஆனால் அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் போர்த்துக்கல் தேசத்தை ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் பிலிப்பு என்னும் அரசர் எழுதிக் கேட்டுக் கொண்டதின் பேரில் ஐந்தாம் பாவுல் என்னும் பாப்பானவர் 1606 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் புனித தோமையாரின் திருமயிலை மறைமாவட்டத்தை ஏற்படுத்தினார்; அவ்விடத்திலுள்ள கோயிலை மறை ஆயரின் தலைமைக் கோவிலாக உயர்த்தினார். அது முதற்கொண்டு அது தனி மறைமாவட்டமாய் விளங்குகிறது.

மயிலாப்பூரில் தற்காலம் இருக்கும் புனித தோமையார் கோவிலானது, இந்திய நாட்டில் இறைவனது தோத்திரத்திற்காகக் கட்டப்பட்டிருக்கும் எழில் மிக்கப் பெருங் கட்டடங்களில் ஒன்று. இக் கோவிலானது 1896ஆம் ஆண்டு வணக்கத்துக்குரிய ஜோஸ் ரீட் டி சல்வா மறை ஆயரால், புனித தோமையார் கல்லறை அதன் நடுவில் அமையும்படி ஏற்பாடு செய்து கட்டப்பட்டது. 

1906 ஆம் ஆண்டு மயிலை மேற்றிராசனம் ஏற்பட்ட மூன்றாம் நூற்றாண்டுப் பெரு விழாக் கொண்டாட்டத்தின் போது, அக்காலத்தில் இருந்த மறை ஆயராகிய வணக்கத்துக்குரிய தோம் தெயதோனியுஸ் எம்மானுவேல் வியேரா டிகாஸ்ற்ரோ என்பவர் புனித தோமையார் கல்லறையை இன்னும் அதிகமாக மேன்மைப்படுத்த ஆவல் கொண்டு, கோவில் பூமிமட்டத்திற்கு ஏழடி ஆழமாகக் கல்லறையிருக்கும் இடத்தைச் சுற்றிலும் விசாலப் படுத்தினதோடு அக்கல்லறையின் மீதே திருப்பலிபூசை செய்வதற்கு ஏற்ற வகையில் பல வண்ணச் சலவைக் கல்லினால் செய்த ஒரு பலிபீடத்தையும், மேற்சொல்லிய கல்லறையின் தளவரிசையையும், அதன் சுற்றுச் சுவர்களையும் அலங்கரிக்கப் பளிங்கு போன்ற சுத்த வெண்மையான இத்தாலிய தேசத்துச் சலவைக் கற்களைக் கொண்டுவந்து அழகுபட அமைத்துள்ளார்.