கர்ச்சிக்கும் எருதும், தாழ்ச்சியும்!

நம் கனவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று நமக்கு அடிக்கடி சொல்லப்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் பெரும்பாலான கனவுகளைப் பற்றிய என் கருத்தும் அதேதான். என்றாலும் சில சமயங்ளில் இந்தக் கனவுகள் நமக்கு எதிர்காலத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவை பல சிக்கலான முடிச்சுகள் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நமக்கு நிச்சய மாக உதவுகின்றன, நம் பலதரப்பட்ட அலுவல்களில் உண்மையான விவேகத்தோடு செயல்பட நமக்குக் கற்றுத் தருகின்றன. இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில், இந்தக் கனவுகளில் எதையெல்லாம் ஒருவன் நல்லது, பயனுள்ளது என்று காண்கிறானோ, அதையெல்லாம் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்.

இந்த தியானம் முழுவதிலும், குறிப்பாக நேற்றிரவிலும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற ஒரு கனவை இப்போது நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் அதை எப்படிக் கண்டேனோ, அப்படியே துல்லியமாக உங்களுக்கு விவரித்துச் சொல்லப் போகிறேன். என் உரை அளவுக்கு மீறி மிக நீண்டதாகி விடாதபடி ஆங்காங்கே சில பகுதிகளை மட்டும் சுருக்கிச் சொல் வேன். ஏனெனில் இந்தக் கனவில் நலம் பயக்கும் போதனைகள் ஏராளமாக இருக்கின்றன என்று நான் அறிந்திருக்கிறேன்.

நாம் எல்லோரும் சேர்ந்து லான்ஸோவிலிருந்து ட்யூரினுக்குப் போய்க் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. நாம் ஏதோ ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அது ஒரு இரயிலா, அல்லது குதிரை வண்டியா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நாம் நடந்து செல்லவில்லை என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். சற்று நேரத்திற்குப் பிறகு, சரியாக சாலையின் எந்த இடத்தில் நம் வண்டி நிறுத்தத்திற்கு வந்தது என்பது எனக்கு நினைவில்லை. இந்த எதிர்பாராத நிறுத்தத்திற்குக் காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலோடு, நான் வண்டியிலிருந்து கீழே இறங்கினேன். ஆனால் ஒரு பிரசித்தி பெற்ற மனிதரின் பார்வையை நேருக்கு நேர் சந்திப்பது மட்டும்தான் நிகழ்ந்தது. அவரைப் பற்றிப் போதுமான அளவுக்கு விளக்கிக் கூற என்னால் முடியாது என்று அஞ்சுகிறேன். அவர் ஒரே நேரத்தில் உயரமாகவும், குள்ளமாகவும் தோன்றினார்; ஒரே சமயத்தில் பருமனாகவும், ஒல்லியானவராகவும் தோன்றினார்; வெள்ளை நிறத்தவர் என்றாலும், சிவப்பு நிறமாகவும் இருந்தார்; தரையில்தான் நடந்தார் என்றாலும், அந்தரத்திலும் நடந்தார். நான் தனியே நின்று அதிசயித்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்வை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, துணிச்சலாக அவரிடம், “நீர் யார்?” என்று கேட்டேன்.

என் கேள்வியைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அவர் என்னிடம் “வாரும்” என்றார்.

முதலில் அவர் யார் என்றும், என்ன விரும்புகிறார் என்றும் தெரிந்து கொள்வதில் நான் முனைப்பாயிருந்தேன். ஆனால் அவரோ தொடர்ந்து, “விரைவாக வாரும்; நாம் இந்த வண்டியை இந்த வயலுக்குள் திருப்புவோம்” என்றார். அவரிடம் காணப்பட்ட இன்னொரு வினோதமான காரியம் அவர் ஒரே நேரத்தில் உரத்த குரலிலும், மென்மையாகவும், பல்வேறு குரல்களிலும் பேசினார் என்பதாகும். இதைப் பற்றி நான் வெகு நீண்ட நேரம் அதிசயித்துக் கொண்டிருந்தேன்.

அந்த வயல் மிக விசாலமாக இருந்தது. சாதாரணப் பார்வைக்கு அது முற்றிலும் தட்டையானதாகத் தெரிந்தது. அதில் குழிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக ஒரு களத்து மேட்டைப் போல எல்லாமே அடித்து நல்ல சமதளமாக்கப்பட்டிருந்தன. என்ன சொல்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. அந்த மனிதர் தமது கட்டளைகளில் மிகத் தீர்மானமாக இருப்பதைக் கண்டு, நாங்கள் வண்டியை அந்தப் பரந்த வயலுக்குள் இறக்கி, எல்லோரையும் கீழே இறங்க உத்தரவிட்டோம். கண்ணிமைக்கும் நேரத்தில், அந்தக் கூட்டம் முழுவதும் கீழே இறங்கி விட்டது. நாங்கள் ஆச்சரியப்படும் வகையில், அந்த வண்டி எங்கள் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. “இப்போது நாங்கள் எல்லோருமே இறங்கி விட்டதால், நீர் எங்களுக்குச் சொல்வீர்... மகிமை பொருந்தியவரே, எனக்கு இதைத் தெரிவிக்கத் தயைகூர்வீராக. . . வந்திக்கத்தக்கவரே, இந்த வினோத மான இடத்தில் ஏன் எங்களை நிறுத்தினீர் என்று எனக்கு அறிவிக்கத் திருவுளமிரங்குவீராக” என்று நான் முணுமுணுப்பாகக் கூறினேன். இந்த கம்பீர மகத்துவமுள்ள மனிதரின் முன்னிலையில் எப்படி நடந்து கொள்வதென்று தெரியாமல் இப்படிப் பேசினேன். இதற்குப் பதில் கூறும் விதமாக அவர்: “ஒரு மிக முக்கியமான காரணத்திற்காக; ஒரு பெரும் ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற நான் விரும்பு கிறேன் என்பதற்காக” என்றார்.

“என்ன ஆபத்து?” என்று நான் வினவினேன்.

“தான் எதிர்கொள்ளும் எந்த ஆளையும் கொல்லுகிற ஒரு வெறிபிடித்த எருதுதான் அந்த ஆபத்து. தாவ்ருஸ் ரூஜியென்ஸ் குவாரென்ஸ் க்வெம் தெவோரெத்” என்றார் அந்த மனிதர். “ஒரு கர்ச் சிக்கும் எருது, தான் யாரை விழுங்கலாம் என்று தேடித் திரிகிறது.”

“ஆனால், என் அன்புக்குரிய மனிதரே, புனித இராயப்பர் பரிசுத்த வேதாகமத்தில் எழுதிய வேதவாக்கியத்தில் சிங்கத்திற்குப் பதிலாக எருது என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர். அது லெயோ ரூஜியென்ஸ் என்று இருக்க வேண்டும்” என்று நான் அவரைத் திருத்த முயன்றேன்.

"அது முக்கியமேயில்லை. அங்கே அது லெயோ ரூஜியென்ஸ் என்று இருந்தது. ஆனால் இங்கே அது தாவ்ருஸ் ரூஜியென்ஸ் என்று இருக்கிறது. எது முக்கியம் என்றால், விழிப்பாகவும் எச்சரிக்கை யாகவும் இருப்பதுதான். உம்மைப் பின்தொடர்பவர்களை உம் அருகில் வரும்படி கூப்பிடும். அவர்களைக் கவனமாக எச்சரியும், எருதின் காதைச் செவிடாக்கும் கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் முகம் குப்புற தரையில் படுத்து, அது கடந்து போகும் வரை அந்த நிலையிலேயே இருக்கும்படி அவர்களிடம் சொல்லும். உம் குரலுக்கு செவிசாய்க்காதவனுக்கு ஐயோ கேடு. முகம் நிலத்தில் பதிய குப்புற படுத்துக் கிடக்காதவன் இழக்கப்படுவான். ஏனெனில், பரிசுத்த வேதாகமத்தில், “தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான், தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான் - குயி ஸே ஹூமிலியாத் எக்ஸால்தாபித்தூர், எத் குயி ஸே எக்ஸால்தாத் ஹூமிலியாபித்தூர்.”

இப்படிச் சொன்னபின் அவர் தொடர்ந்து, “சீக்கிரம், சீக்கிரம், எருது வந்து விடப் போகிறது; உம் உச்சபட்ச குரலில் கத்தி, அவர்கள் எல்லோரும் தங்களைத் தாழ்த்திக் கொள்ளும்படி உத்தர விடும்” என்றார். நானும் கத்தினேன். அவர் என்னிடம் தொடர்ந்து, “விடாமல் கத்திக் கொண்டேயிரும், தைரியம் கொண்டு, இன்னும் சத்தமாகக் கத்தும், கத்தும், கத்திக் கொண்டேயிரும்!” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

நான் என்னால் முடிந்த வரை கத்தினேன். என் கத்தலால் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த சுவாமி லமாய்னை எழுப்பியும் விட்டேன்; அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை .

ஒரு கண நேரத்திற்குப் பிறகு, தொலைவில் அந்த எருதின் ஓர் ஆழ்ந்த கர்ஜனையை நான்ங்கள் கேட்டோம். உடனே அந்த மனிதர், “எச்சரிக்கை! எச்சரிக்கை! அவர்களை ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ள இரண்டு வரிசைகளாக நிறுத்தும், எருது கடந்து போவதற்கு இரண்டு வரிசைகளுக்கும் நடுவில் இடம் இருக்கட்டும்” என்றார்.

நான் எனக்குத் தரப்பட்ட கட்டளைகளை உரத்த சத்தமாய்க் கத்திச் சொன்னேன். அரை வினாடி நேரத்தில் அவர்கள் எல்லோரும் முகம் தரையில் பட கீழே படுத்து விட்டார்கள்; தெளிவற்ற, மங்கலான அடிவானத்தில், அந்தக் காட்டுத்தனமான எருது மிக வேகமாக முன்னேறி வருவதை நாங்கள் கவனித்தோம். எங்களில் பெரும்பாலானவர்கள் முகங்குப்புற விழுந்து கிடந்தோம் என்றாலும், ஒரு சிலர், வினோதப் பிரியத்தால் உந்தப்பட்டவர் களாக, அந்த எருது எந்த வகையைச் சேர்ந்தது என்று பார்க்க விரும்பினார்கள். ஆகவே எங்கள் முன்மாதிரிகையைப் பின்பற்ற அவர்கள் மறுத்து விட்டனர்.

அந்தப் பிரசித்தமான மனிதர் அதன்பின் என்னிடம் திரும்பி, “இந்தத் தனிமனிதர்களுக்கு என்ன நேரிடப் போகிறது என்பதை நீர் பார்ப்பீர். உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததற்காக, தங்களைத் தாழ்த்திக் கொள்ளாததற்காக அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதை நீர்பார்ப்பீர்” என்றார்.

எப்படியாவது அவர்களை மீண்டும் எச்சரிக்கவும், அவர்களை நோக்கிக் கத்தவும், அவர்களுடைய உதவிக்கு விரைந் தோடிச் செல்லவும் நான் விரும்பினேன். ஆனால் அந்த மனிதர் என்னைத் தடுத்து விட்டார். மீண்டும் அவர்களை நான் நெருங்கிச் செல்ல வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அதன்பேரில் அவர் என்னை நோக்கிக் கட்டளையிடும் தொனியில், “நீரும் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறீர்; கீழே விழும், உடனே முகங்குப்புறப் படும்” என்றார்.

நான் அந்த வயலில் படுத்தும் படுக்காதிருக்கும்போதே காதைச் செவிடாக்குவதும், கடும் அச்சம் தருவதுமான ஒரு பயங்கர கர்ஜனை கேட்டது. அந்த எருது அருகில் வந்து விட்டது. நாங்கள் எல்லோரும் நடுங்கினோம். சிலர் கவலையோடு, “அடுத்து என்ன நடக்கப்போகிறது? நாம் தொலைந்தோம்!" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். “பயப்படாதீர்கள்; தரையில் படுங்கள்” என்று நான் திருப்பிக் கத்தினேன். இதனிடையே அந்தப் பிரசித்தமான மனிதர் திரும்பத் திரும்ப, “குயி ஸே ஹூமிலியாத் எக்ஸால்த்தாபித்தூர், எத் குயி ஸே எக்ஸால்த்தாத் ஹூமிலியாபித்தூர்... குயி ஸே ஹூமிலியாத் ... குயி ஸே ஹூமிலியாத். ..” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். மிகவும் விசித்திரமான ஒரு காரியம் என்னை வெகுவாக அதிசயிக்கும்படி செய்தது. அது இதுதான்: நான் என் கண்களைத் தரையின் புழுதியில் வைத்தபடி குப்புற விழுந்து கிடந்தாலும், என்னைச் சுற்றிலும் நடந்து கொண் டிருந்த எல்லவற்றையும் என்னால் மிக நன்றாகக் காண முடிந்தது. அந்த எருதுக்கு ஏழு கொம்புகள் கிட்டத்தட்ட ஒரு வட்ட வடிவத் தில் இருந்தன. அதன் நாசித் துவாரங்களுக்குக் கீழே இரண்டு கொம்புகள் இருந்தன. அதன் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு கொம்புகள் இருந்தன, இரண்டு கொம்புகள் வழக்கமான இடத்திலும், ஒன்று இவற்றிக்கு மேலும் இருந்தன. ஆனால் அதிசயத் தைப் பாருங்கள்! இந்தக் கொம்புகள் மிகப் பலமானவையாகவும், வலமோ, இடமோ, முன்னோ பின்னோ அந்த மிருகத்தின் விருப்பத் திற்கேற்ப நகரக் கூடியவையாகவும் இரந்தன. இதனால் ஒரு மனிதனை முட்டித் தள்ள அது செய்ய வேண்டியிருந்ததெல்லாம், அவனைத் தாக்கத் தன் தலையைத் திருப்ப வேண்டியிராமலே நேராக ஓடி வருவது மட்டும்தான். அந்த மிருகத்தின் நாசித்துவாரங் களுக்குக் கீழே இருந்த கொம்புகள்தான் எல்லாவற்றையும் விட அதிக நீளமாக இருந்தன. அவைதான் பெருமளவு படுகொலையை நடத்தி முடித்தன.

இப்போது அந்த மிருகம் எங்களுக்கு மிக அருகில் இருந்தது. என் வழிகாட்டி இச்சமயத்தில், “இப்போது தாழ்ச்சியின் பலன் என்னவென்பதை நாம் காண்போம்” என்று கத்தினார்.

ஒரே கணத்தில், நாங்கள் எல்லோரும் வெகுவாக ஆச்சரியப் படும் வண்ணம், ஒரு கணிசமான உயரத்திற்கு அந்தரத்தில் உயர்த்தப் பட்டோம். கடுங்கோபத்தோடு சீறி வரும் அந்த எருது எவ்வளவு முயன்றாலும், எங்களைத் தொட அதனால் நிச்சயமாக முடியாது. தங்களைத் தரையோடு தாழ்த்திக் கொள்ளாதவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கவில்லை. அந்த எருது நேரடியாக அவர்களை நோக்கி வந்து, அவர்களைத் துண்டு துண்டாகக் கிழித்தது. அவர் களில் ஒருவன் கூட தப்பிக்கவில்லை. ஆனால் அந்தரத்தில் உயர்த்தப் பட்ட நாங்களோ, மிக அதிகமாக பயம் கொண்டு, “இப்போது கீழே விழுந்தோம் என்றால், நாம் அவ்வளவுதான்! நம் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்! நமக்கு என்ன நடக்கப் போகிறதென்று யாருக்குத் தெரியும்?” என்று புலம்பினோம்.

கோப வெறி கொண்ட அந்த எருது, தன் முதல் பலியாட் களைக் கொன்று குவித்த பிறகு, எங்களைத் தாக்க முயன்றது; அது எங்களைத் தாக்கும்படி காற்றில் துள்ளிக் குதித்தது. ஆனால் அந்த முயற்சிகளால் எந்தப் பயனும் இருக்கவில்லை. தன் தோல்வியைப் பற்றி எரிச்சலடைந்த அது, மற்ற எருதுகளைத் தேடி அங்கிருந்து செல்லத் தீர்மானித்தது. “பிறகு நாங்கள் ஒன்றுசேர்ந்து அளவில் பெரி தாக வளர்வோம்” என்று அது சொல்வது போல இருந்தது. இப்படிச் சொல்லிவிட்டு அது, “ஆபென்ஸ் ஈராம் மாஞ்ஞாம் - கடுங்கோபத் தால் நிரப்பப்பட்டதாக” அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

அதன்பின் நாங்கள் தரைக்குத் திரும்பி வந்தோம். அந்த மர்மமான மனிதர் தம் குரலை உயர்த்தி, “நாம் தெற்கு நோக்கித் திரும்புவோம்” என்று கூக்குரலிட்டார்.