இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - கடமை, செபம், தருமம், செயல்

கிறிஸ்துவை மக்கள் விசுவசிக்கச் செய்யும் அலுவலில் கடவுள், குருக்கள், மற்றக் கிறிஸ்தவர்கள் ஆகிய மூவர் சேர்ந்துள்ளனர். வேண்டிய அருளைக் கடவுள் அருள்கின்றார். சாதாரண கிறிஸ்தவன் வழி காட்டுகிறான். குருவானவர் மகத்தான வேலையை முடிவுக்குக் கொண்டு வருகிறார். புனித ஸ்நாபக அருளப்பர் இயேசு நாதருக்கு முன்னோடியாய் இருந்தது போல், சாதாரண கிறிஸ்தவர்கள் துறவறத்தோருக்கு முன்னோடிகளாக இருக்கலாம். வழியை செம்மை செய்து, பள்ளத்தை நேராக்கி விட அவர்களால் கூடும். பல விதத்தில் இவ்வாறு உதவிபுரிய முன்வரலாம். ஆண்டவரின் திராட்சைத் தோட்டம் அகன்று விரிந்து விசாலமாயுள்ளது. அங்கு பலவித வேலிகள் அவசியம். ஒவ்வொருவரும் தத்தம் சக்திக்கு ஏற்றவாறு அவற்றைத் தெரிந்து கொள்ளலாம். ஆயினும், மூன்று வித அலுவல்கள் முதன்மையாகத் தோன்றுகின்றன, அவையாவன: செபம், தருமம், செயல்.

செபம்

கத்தோலிக்கரில் எத்திறத்தாரும் இக்கடமையை நிறைவேற்றலாம். ஆண் பெண், சிறியோர் பெரியோர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், செல்வர் வறியோர், பண்டிதர் பாமரர் எல்லாருமே செபிக்கலாம். எல்லாருமே நம் நாட்டினருக்காக வேண்டிக்கொள்ளலாம். இதுவே எளிதும் நம்மால் இயன்றதுமான வேலை. இதுவே மிகப் பயனுள்ள பக்திச் செயல். விசுவாசத்தோடு செபிக்கும் செபம் மலையையும் பெயர்க்கும். உயிருள்ள விசுவாசத்தோடு செபிக்கும் செபத்தையே இறைவன் விரும்புகின்றார். அவற்றை அவர் ஒரு போதும் புறக்கணியார். "கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்" என்று இயேசு விளம்பவில்லையா? தனது நாட்டின் நலத்தை விரும்பும் நாட்டுப்பற்று உடையவன் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரின் நன்மையைத் தேடுவான். கத்தோலிக்கராகிய நாம் நம் நாட்டினராகிய இதர சகோதரருக்குத் தேடும் நன்மைகளில் அதிமுக்கியமானது அவர்களது ஆன்ம இரட்சணியமன்றோ? ஆகவே, செபிப்போம்; உருக்கமாக செபிப்போம்; எப்போதும் செபிப்போமாக!

தருமம்

கிறிஸ்துவைப் பிறர் விசுவாசிக்கச் செய்யும் அலுவல் தேவ அலுவலாயினும், இவ்வுலகின் கண் நடைபெறுவதால் அதற்கும் பொருளுதவி அவசியம். ஏழைகளை ஆதரிக்கவும் நெருக்கப்பட்டோரைத் துன்பத்தினின்று மீட்கவும் கோவில்கள் கட்டவும், பள்ளிக் கூடங்கள் நிறுவவும் பணம் தேவை. இந்தியா எளிய நாடு என்றும், வேதபோதக நாடு என்றும் பாராட்டப்பட்டமையால், முன்னர் மேல் நாட்டிலிருந்து பண உதவி மிகுதியும் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது அத்தருமங்கள் குறைந்து போயின. இனி மேல் நாம் அங்கிருந்து பொருளுதவியை எதிர்பார்ப்பதில் பயனில்லை. நமக்கு அது கண்ணியமும் ஆகாது. ஆகையால், நம்மவரை நல் வழியிலும், ஞான வாழ்விலும் வாழ வைப்பதற்கு அவசியமான பொருள் உதவியை, நாமே தேடிக்கொள்ள வேண்டும். அதிகம் கொடுக்கச் சக்தியுள்ளவர்கள் அதிகம் கொடுக்கட்டும். கொஞ்சமே கொடுக்க முடிந்தோர் கொஞ்சமாகிலும் கொடுக்கட்டும். "உனக்கு மிகுதியான செல்வம் இருக்கும் போது ஏராளமாய்க் கொடு" (தொ பி 4/9). ஆனால் எல்லாரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு கொடுக்கக் கடமைப் பட்டுள்ளார்கள் .

இப்படி ஈவதால் நாம் மிக மேலான இரட்சணிய அலுவலில் ஒத்துழைப்போர் ஆகிறோம். அதனால் விளையும் பலனில் பங்கடையாமற் போகமாட்டோம். மேலும் நம்முடைய சொந்த ஆன்ம இரட்சணியத்திற்கும் அது உதவியாயிருக்கும். "நீ ஈந்த தருமம் உனக்குத் தேவையான நேரத்தில் பேருதவியாய் இருக்கும். ஏனெனில், ஒருவனது அறச்செயல் அவனை எல்லாப் பாவங்களினின்றும் சாவினின்றும் மீட்கிறது. மேலும் ஆன்மாவை இருளினின்று விடுவிக்கிறது!" (தொ பி :4/10-11)

செயல்

இந்த அலுவல் சிறப்பாகக் குருக்களுக்குரியதே யாயினும் அதைக் கிறிஸ்தவர் எல்லாரும் செய்யத் தகுதி உள்ளவர்கள். படித்தோர் தமது ஞான ஒளியால் தம்மைச் சுற்றிலுமுள்ள வர்களுக்குத் தொண்டு செய்ய இயலும். ஞான உரைகள், விளக்கங்கள் சொல்லியும், வாக்கு வன்மையாகப் பேசியும், வாதித்தும், தகுந்த புத்தகங்களைக் கொடுத்தும், ஐயங்களை அகற்றியும் பிறருக்கு உதவி செய்யலாம். நல்ல புத்தகங்கள், பத்திரிகைகள், வேத உண்மைகளை விளக்கும் சிறுசிறு வெளியீடுகள் முதலியவைகளை வெளியிடலாம்; பரப்பலாம். குருக்களுக்கு உதவியாக நின்று மறைக்கல்வி, நல்லொழுக்கம் முதலியன கற்றுக் கொடுக்கலாம்,

ஆனால், எல்லாராலும் போதிக்கவும், உபதேசிக்கவும், வேத உண்மைகளை விளக்கிக் கூறி எண்பிக்கவும் இயலாத காரியம். ஆயினும், போதனையைவிடச் சாதனை மேல். நாம் எல்லாரும் நமது சீரிய நடத்தையால் நாம் விசுவசிக்கும் உண்மையைப் பிறருக்குத் தெளிவாகக் காட்டலாம். இச்சாதனையே அதிக பயன் தரக் கூடியது. போதனையைக் கேட்டு மறந்து விடக்கூடும். ஆனால் சாதனையோ பசுமரத் தாணிபோல் பதிந்து விடும். அது ஒரு வித்தேபோல் வேலை செய்யும். உடனேயோ அல்லது நாளாவட்டத்திலோ முளைக்கக் கூடும். ஆகையால், எல்லாருந் தத்தம் நிலைமையில் மெய்ம்மறைக் கோட்பாடுகளைப் பின்பற்றி நன்னெறியில் நடந்து, நமது திருமறை சிறந்தது எனக் காட்ட வேண்டியது நமது கடமையாம். "கிறிஸ்தவர்களைப்பார். எப்படி நடக்கிறார்கள்! என்ன நேர்மை! என்ன ஒழுக்கம்!" என்று நம்மைப் பார்த்து ஏனையோர் நல்லெண்ணங் கொள்ளும்படி நாம் நடத்தல் வேண்டும். காந்தமானது ஊசியை இழுப்பதுபோல், நமது நல்லொழுக்கமானது பிறரை நம் நல்ல ஆயன் மந்தையிற் கொண்டு வந்து சேர்க்கும்.

புனித தோமையார் விதைத்த ஆலவிதையானது முளைத்துக் கிளைத்துத் தழைத்து நிற்கிறது. அம்மரத்தின் நிழலில் நாமிருக்கின்றோம். அனைவரும் இந் நிழலுக்கு வந்து சேரும்படி நமது செப தவத்தாலும், தான தருமத்தாலும், நல்லொழுக்க நன்மாதிரியாலும் முயலுவோமாக!


முற்றிற்று.