இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச்சிஷ்டவர்களாவதற்கு ஓர் பெரும் இரகசியம்! முன்னுரை

இரகசியமும் அதன் நிபந்தனைகளும் 

1. முன்குறிக்கப்பட்ட ஆன்மாவே, மகா உந்நதர் எனக்குக் கற்பித்த ஓர் இரகசியம் உள்ளது. எந்தப் பழைய, புதிய புத்தகத்திலும் அதை என்னால் காண முடிந்ததில்லை . பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் கீழ்வரும் நிபந்தனைகளுடன் அதை உனக்குக் கூறுகிறேன்.

* மரியாயிடம் சேசுவுக்குப் புனித அடிமைத்தனம் சந்தேகமின்றி அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் என்பவரின் காலத்துக்கு முன்பே அறியப் பட்டிருந்தது. ஆயினும் கீழ்வரும் காரணங்களுக்காக அதை ஒரு இரகசியம் என அவர் அழைக்கிறார். முதலாவதாக, சுபாவத்துக்கு மேலான சகல காரியங்களிலும் உள்ளது போல் இதிலும் வரப்பிரசாதத் தால் மட்டுமே நாம் கண்டுபிடித்து உபயோகிக்கக் கூடிய ஒரு மறைந்த பொக்கிஷம் இருக்கின்றது. இரண்டாவதாக, இப்பக்தி முயற்சியின் கருத்தினுட் புகுந்து வெளி முயற்சிகளைக் கடந்து உட்செல்லும் ஆன்மாக்கள் சிலரேயாவர். மேலும் இதற்கு இது வரையிலும் வேறு யாரும் முழுவதுமாக ஞான வாழ்க்கைக்குரிய ஒரு திட்டவட்டமான உருவம் கொடுக்கவில்லை. ஆகவே உண்மையாகவே "பழையதோ புதியதோ எந்தப் புத்தகத்திலும் இந்த இரகசியத்தை நான் காண முடிந்ததில்லை" என்று அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் கூற முடிந்தது.

(1) தங்கள் ஜெபத்தாலும், தானதர்மம், பரித்தியாகங்களாலும் துன்புறுத்தப்படுவதைத் தாங்கிக் கொள்வதாலும், உலகப் பற்றற்று இருப்பதாலும், ஆன்ம இரட்சண்யத்துக்கு அவர்களுக்கிருக்கும் ஆவலாலும் யார்யார் தகுதி பெற்றிருப்பார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த இரகசியத்தை அறிவிக்க வேண்டும்.

(2) உன் சொந்த அர்ச்சிப்புக்காகவும், இரட்சண்யத்திற்காகவும் இந்த இரகசியத்தை நீ பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த இரகசியம் எந்த அளவுக்குப் பயன் படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்குத்தான் ஒரு ஆன்மாவில் செயலாற்றும். ஆகவே எச்சரிக்கை! என் இவ்விரகசியத்தை வைத்துக் கொண்டு சும்மா இராதே. அது உனக்கு நஞ்சாக மாறி உன் தண்டனைத் தீர்ப்பாகி விடும்.

(3) அறிந்து கொள்ள நீ தகுதியில்லாத ஒரு இரகசி யத்தை அறிய உனக்கு உதவியதற்காக உன் வாழ்நாளெல் லாம் நீ கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

உன் வாழ்வின் சாதாரண செயல்களில் நீ இந்த இரகசியத்தைப் பயன்படுத்தி வரவர, அதன் மதிப்பையும் உயர்வையும் நீ கண்டுபிடிப்பாய். ஆரம்பத்தில் அவற்றை நீ முழுதும் கண்டுகொள்ள மாட்டாய். பலவும் கனமானது மான உன் பாவங்களும் உன் மீதுதானே நீ கொண்டிருக்கும் மறைந்த பற்றுதல்களுமே இதற்குக் காரணம்.

இரகசியத்தைப் பெற்றுக் கொள்ளத் தயாரிப்பு 

2. இந்த இரகசியத்தை அறிய மிக மிஞ்சிய சுபாவத் தன்மையான ஆசை உன்னை மேற்கொள்ளாதபடி இதற்கு மேல் இதைத் தொடர்ந்து வாசிக்குமுன், முழந்தாளிட்டு, பக்தியோடு "சமுத்திரத்தின் நட்சத்திரமே” (Ave Maris Stella), "பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும்'' (Veni Creator) ஆகிய இரண்டையும், இத்தெய்வீக மறைபொருளைக் கண்டுபிடிக்கும்படியாகவும், அதிலே மகிழ்ச்சியடையும்படியாகவும் சொல்லி ஜெபிப்பாயாக.

எழுத எனக்கும், வாசிக்க உனக்கும் அதிக நேரமில்லை யென்பதால் எல்லாவற்றையும் ஒரு சில வார்த்தைகளில் கூறுகிறேன்.