இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சம்மனசுக்களுடைய இராக்கினியே!

“மாதா,” “கன்னிகை,” “பாத்திரம்” முதலிய பல்வேறு புகழுரைகளால் இதுவரை திருச்சபை மாமரியைப் போற்றியது. இம்மகிமைப் பட்டங்கள் யாவும் நம் மாதா தனது வாழ்நாளில் இவ்வுலகில் அடைந்த உன்னத மகிமை பெருமைகளை விசேஷித்து நமக்கு எடுத்துக் காட்டுகின்றன எனக் கூறலாம். இப்பொழுது, “இராக்கினி” என்னும் மகிமைப் பட்டத்தால் அவர்களைத் துதிக்கின்றது. மோட்சத்தில் தேவமாதா அடைந்துள்ள உன்னத ஸ்தானத்தை இப்பட்டம் நமக்குத் தெளிவுறுத்துகிறது.

தேவதாய் இராக்கினி என்னும்போது அது அர்த்தமற்ற சொல்லல்ல; அவர்கள் மெய்யாகவே ஒரு இராணி; இவ்வுலக இராணிகள் யாவரையும் விட மிக உயர்ந்தவர்கள். தன்னை எவனொருவன் தாழ்த்துகிறானோ அவன் உயர்த்தப்படுவான் என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்து மொழிந்தார். தமது போதனையை அவர் சாதனையிலும் காட்டினார். 

அர்ச். சின்னப்பர் சொல்லுவது போல, அவர் “தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டும், அதுவும் சிலுவை மரணமட்டும் கீழ்ப்படிதலுள்ளவரானார். அதினிமித்தம் சர்வேசுரனும் அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்து, சேசுவின் நாமத்துக்குப் பரலோகத்தாரும், பூலோகத்தாரும், பாதாளத்தாருமாகிய சகலரும் முழந்தாட்படியிடவும், ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமையில் வீற்றிருக்கிறார் என்று எல்லா நாவும் அறிக்கையிடவும் பண்ணினார்” (பிலிப்பியர் 2:8-11). 

நமது ஆண்டவருக்கு அடுத்தபடியாக தாழ்ச்சியில் சிறந்தவர்கள் நம் மாதாவே. இதனாலன்றோ வானதூதர் அவர்களிடம் மங்கள வார்த்தை கூறியபோது, “இதோ ஆண்டவருடைய அடிமை” என உரைத்தார்கள். தான் ஒன்றுமில்லாதவர்கள் எனவும், தனக்குள்ளன யாவும், தனக்குக் கிடைத்த மகிமை யாவும் கடவுளின் வரப்பிரசாதம் எனவும் உணர்ந்து, அதற்கேற்ற வாழ்க்கை நடத்தினார்கள். அவர்கள் தன்னைத்தானே இவ்வுலகில் தாழ்த்தியதற்களவாக அவர்களது மரணத்தின்பின் தேவன் அவர்களை உயர்த்தி, விண்ணுலக மண்ணுலக இராக்கினியாக ஏற்படுத்தினார்! 

மகன் இராஜாதி இராஜனாக இருக்கையில், அவரைப் பெற்ற தாயாரை இராக்கினி எனக் கூறுவதில் வியப்பென்ன? ஜெபமாலையின் மகிமைத் தேவ இரகசியங்களின் ஐந்தாவது இரகசியத்தைத் தியானிக்கும்போது நாம் நினைவுகூரும் உண்மை இதுவன்றோ? “மெய்யாகவே அவர்கள் கடவுள் நீங்கலாக மற்ற சகல வஸ்துக்கள் யாவற் றிலும் உயர்ந்தவர்கள்” (St. Epiphanius--De laud. Virg.); “நமது சிருஷ்டிகரின் தாய் என்னும் மகிமை அவர்களைச் சகல சிருஷ்டிகளுடையவும் இராக்கினியாக்குகிறது” (Lib. 4 Fid. orthod., C.15) (அர்ச். தமாசீன் அருளப்பர்.)

தேவதாய் மோட்ச இராக்கினி என்னும்போது, அவர்கள் மோட்சவாசிகள் அனைவருடையவும் அரசி என்பது பொருள். மோட்ச வாசிகளில் சம்மனசுக்கள், பிதாப்பிதாக்கள், தீர்க்கதரிசிகள், வேதசாட்சிகள், ஸ்துதி யர் எனப் பல வகுப்புகளுண்டு. ஒவ்வொரு வகுப்பினரை யும் தனித்தனியே எடுத்து தேவதாய் அவர்களுடைய இராக்கினி என்று திருச்சபை அவர்களைத் தனித்தனியே புகழுகிறது. மோட்ச வாசிகள் யாவரிலும் உயர்ந்தவர்கள் சம்மனசுக்கள். எனவே முந்தமுந்த தேவ தாய் சம்மனசுக் களுடைய இராக்கினி.

படைக்கப்பட்ட யாவற்றிலும் ஆதிகாரணர் கடவுள். அவர் உண்டாக்கிய வஸ்துக்களின் மிக உன்னத மானவை சரீரமில்லாத சம்மனசுக்களும், ஆத்துமமும் சரீரமுமுள்ள மனிதர்களுமாவர். நாம் இவ்வுலகில் காணும் பொருட்கள் யாவற்றிலும் உயர்ந்த சிருஷ்டி அழியாததும் சர்வேசுரனுடைய சாயலாக உண்டாக்கப்பட்டதுமான ஆத்துமத்தையுடைய மனிதனேயாவான். மனிதனையும் விட உயர்ந்த சிருஷ்டி சரீரமற்ற சம்மனசுக்களாவர். எபிரேய மொழியில் சம்மனசு (Malach) என்னும் வார்த் தைக்கு “தூது செல்லும் ஆள்” (Messenger) என்று பொருள். எனவே சம்மனசுக்கள் தேவனுடைய தூதர்கள். கடவு ளுடைய விருப்பங்களையும், கட்டளைகளையும் மனித ருக்கு அறிவிப்பவர்கள். இதற்குச் சான்றுகள் வேதாகமங் களில் பல உண்டு.

முதன்முதலாக கடவுள் உண்டாக்கிய சிருஷ்டிகள் சம்மனசுக்கள். மோட்ச பாக்கியத்திற்காக உண்டாக்கப் பட்ட அவர்களில் பலர் எவ்விதம் ஆங்காரத்தினால் கெட்டு, பசாசுக்களாய் மாறினர் என்பது நாமறிந்ததே. சம்மனசுக்களுக்குச் சரீரம் இல்லை; சுத்த அரூபிகள் அவர்கள். ஆதலால் மனிதர்களுக்கு இருப்பதுபோல் அவர்களுக்குப் பசி தாகம், வியாதி வருத்தம், மரணம் என்ற குறைபாடுகள் இல்லை. மனிதர் அறிவுக்கு பன்மடங்கு மேலான அறிவும், மனிதர் சித்தத்திற்குப் (will) பன்மடங்கு மேலான சித்தமும் அவர்களுக்குண்டு. மனிதரைப் போல், ஒரு காரியத்தை அறிய, புத்தியின் வழி நின்று காரணங் களைச் சீர்தூக்கிப் பார்த்து (by reasoning) அறிய வேண் டிய அவசியம் அவர்களுக்கில்லை. தன்னிலேதானே, நேரடியாக அதை (by intuition) அதை அறிந்து கொள்ள வல்லவர்கள். அன்றியும் மனிதரைவிட சம்மனசுக்கள் அதிக பலம் வாய்ந்தவர்கள்; மிக அழகு வாய்ந்தவர்கள்; மிகப் பிரகாசம் உடையவர்கள்; ஒரே ஒரு சம்மனசு தனது முழுப் பிரகாசத்துடன் வானமுகட்டில் தோன்றுவாராயின் சூரிய ஒளி மங்கி மறைந்து விடும்.

இந்நாள்வரை உலகில் வாழ்ந்தவர்களும், இனி உலகம் முடியும்வரை வாழப்போகிறவர்களுமான எல்லா மனிதர்களுடையவும் தொகைக்கு மேலானது சம்மனசுக்களின் தொகை என்பது வேதசாஸ்திர வல்லுனர்தம் அபிப்பிராயம்.

சம்மனசுக்களுக்குள்ளே வித்தியாசம் உண்டு. சர்வேசுரன் அவர்களுக்கு அளித்திருக்கும் வரங்களுக்கும் உத்தியோகங்களுக்கும் தக்காற்போல அவர்களுக்குள்ளே வித்தியாசம் உண்டு. அர்ச். அக்குவீனாஸ் தோமையார் சொல்லுவது போல சம்மனசுக்களில் பத்திச் சுவாலகர், (Seraphim) ஞானாதிக்கர், (Cherubim) பத்திராசனர், (Thrones), நாதகிருத்தியர், (Dominations) சத்துவகர், (Virtues) பலவத்தர், (Powers) பிராதமிகர், (Principalities) அதிதூதர், (Archangels) தூதர் (Angels) என ஒன்பது வகுப்புகள் உண்டு. இந்த ஒன்பது வகுப்புச் சம்மனசுக்களிலும் மிக்கேல், கபிரியேல், இரபேல் என்னும் மூவரின் பெயர்கள் மட்டுமே நாமறிவோம். நம்மில் ஒவ்வொரு வருக்கும் ஒரு காவலரைக் கடவுள் கொடுத்துள்ளார். அவரைத்தான் காவலான சம்மனசு என அழைக்கின்றோம்.

தேவதாய் இப்படிப்பட்ட மேலான தூய அரூபிகளின் இராக்கினி. கடவுளையே தன் மகன் என அழைக் கும் உரிமை பெற்றவர்கள், சம்மனசுக்களின் கூட்டங்கள் யாவற்றிற்கும் மேலாக இல்லாமலிருப்பது எவ்விதம்? “கன்னிகையின் உதரத்தின் கனியாகிய சேசுவை வணங்கும் தூய அரூபிகளே, உங்கள் அரசரின் தாய்க்கு மரியாதை செலுத்துங்கள்” (Hom.i. Super Missus est.) என அர்ச். பெர்நார்து வசனிக்கிறார். “திவ்விய சேசு அவர்களுடைய சிரசில் மகிமை பொருந்திய கிரீடம் ஒன்றைச் சூட்டியுள் ளார்; அதன் காரணமாக, சகல சம்மனசுக்களும் இந்த இராக்கினிக்குக் கீழ்ப்பட்டுள்ளனர்” (Serm. de Assumpt.) என அர்ச். அந்தோனினஸ் (St. Antoni nus) உரைக்கின்றார்.

நம் மாதா அடைந்துள்ள இம்மேலான மகிமையைக் குறித்து அவர்களை வாயார வாழ்த்துவோம். அவர்களை இவ்வுன்னத பதவிக்கு உயர்த்திய அவர்களுடைய ஆழ்ந்த தாழ்ச்சியை நாமும் கண்டுபாவிக்கும் வரம் பெற்றுத் தர அவர்களை மன்றாடுவோம்.

“சம்மனசுக்களுடைய இராக்கினியே வாழ்க! அளவற்ற மகிமை பொருந்திய தேவன் உமது திரு உதரத்தில் எழுந்தருளி வந்தார். கடவுளுக்கு அடுத்தபடியாக உம்மை விட உயர்ந்த சிருஷ்டி யார்? தேவன் உமது உதரத்தில் எழுந்தருளி வந்ததால் அவருடைய தாழ்ச்சி அதிகரித்தது, உமது மகிமை உயர்ந்தது. சம்மனசுக்களுக்கு மேலாக நீர் வீற்றிருக்கும் உமது மகிமைச் சிம்மாசனத்தினின்று எங்க ளைத் தயவுடன் நோக்கியருளும். உம்மை இவ்விதம் உயர்த்திய தாழ்ச்சியை நாங்களும் சிறிதளவேனும் கண்டு பாவிக்க வரம் பெற்றுத் தாரும்.” 


சம்மனசுக்களுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!