இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - மயிலைக்கு வருதல்

சீத்தாராமனும் தோமையாரும் நெடுநாள் கடும் பயணஞ் செய்து கடைசியாக மயிலாப்பூரை அடைந்தனர். உடனே சீத்தாராமன் அப்போஸ்தலரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். 

அவர் அவனது இல்லத்தை நெருங்கியதும், பேயானது அவனது மனைவியையும் மகளையும் அதிக அல்லல் படுத்த ஆரம்பித்தது. உள்ளே சென்றவுடனே இன்னும் அதிகமாக அவர்களை வாதித்ததுமன்றிப் பெருங் கூச்சலிட்டு, இயேசுவின் அப்போஸ்தலராகிய தோமையாரே! இதற்குமுன் ஒரு மாகாணத்திலிருந்து எங்களைத் துரத்தினீர். அதைவிட்டு இங்கே வந்து தங்கினோம். இப்போது இங்கிருந்துமா எங்களை ஓட்டப் பார்க்கின்றீர்?" என்று கூவின து. 

நாராங்கோட்டையில் ஒரு பெண்ணிடமிருந்து முன்னொருமுறை ஒட்டப்பட்ட பேய் அதுவே என்று அப்போஸ்தலர் அறிந்து கொண்டார். பேயை நோக்கி, அதிகாரத் தொனியுடன் "ஓ, அசுத்த அரூபியே! நீ அறிந்தபடியே நான் இயேசுவின் ஊழியன்; அவரது பேரால் கட்டளையிடுகிறேன். கடவுளின் படைப்பாகிய இந் நங்கையரை விட்டு ஓடிப் போவாயாக. இனிமேல் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் காட்டில் போய்த் திரிவாயாக" என்று கட்டளையிட்டார். 

உடனே அப்பேய் அலறிக் கூச்சலிட்டு அப்பெண்களிடமிருந்து அகன்று போய்விட்டது. அப்போது அவர்கள் ஆட்டம் அடங்கிக் களைத்துப் போய் உணர்ச்சியற்றுக் கீழே விழுந்தார்கள். 

தோமையார் அவர்கள் கைகளைப்பற்றித் தூக்கிக் களைப்புத் தெளிந்து எழுந்திருக்கச் செய்தார். அவர்கள் முன்பாக வைக்கப்பட்டிருந்த உணவையும், தண்ணீரையும் சாப்பிடும்படிக் கூறினார். அவர்களும் அப்படியே செய்தனர். 

இவ்வளவு பெரிய உதவியைப் பெற்ற சீத்தாராமன், தோமையாரைத் தன் இல்லத்திலேயே இருக்கச் செய்தான். இச் செய்தி எங்கும் பரவவே, நோயால் துன்பப்படுவோர் பலர் அவர் உதவியை நாடி வந்தனர். அவரும் நோயாளிகள் பலரைக் குணப்படுத்தினார். மேலும் ஓயாது உபதேசம் செய்தார். அதன் பயனாகப் பெருந்திரளான மக்கள் மனந்திரும்பினர்.