இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - அப்போஸ்தலரின் திருப்பொருள்கள்

அப்போஸ்தலரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட பல ஆண்டுகளுக்குப்பின் அக்கல்லறையில் அகப்பட்ட பரிசுத்த எலும்புகள் 'எதெஸா' வுக்குக் கொண்டு போகப்பட்டன என்பது வரலாறு. ஆனால் அந்த நிகழ்ச்சி எந்த ஆண்டு நிகழ்ந்தது என்று சரியாக வகுத்தறிவதற்குப் போதுமான சான்றுகள் அகப்படவில்லை.

சீரியக், லத்தீன் நூல்களை ஆராய்ந்ததில் அப்போஸ்தலரைக் கொன்று விட உத்தரவிட்ட அரசன் காலத்திலேயே அத்திருப் பொருள்கள் கொண்டு போகப்பட்டன வென்று தெரிகின்றது. இதைவிட உறுதியான சாட்சி 'தூர்ஸ்' நகர் புனித கிரகோரியார் "வேதசாட்சி முடி பெற்றுப் பல ஆண்டுகளான பின் எலும்புகள் எதெஸாவுக்கு எடுத்து வரப்பட்டன" என்று சொல்லுவதாகும். 

எப்படியாயினும் கி.பி. 373ஆம் ஆண்டு இத் திருப்பொருள் எதெஸாவிலிருந்தது என்பது புனித எபிரெமினுடைய வார்த்தைகளால் விளங்குகின்றது அங்கு வந்தது எப்படியெனின் கிபி 222 - 225 ஆண்டுகளில் 9 ஆம் ஆப்கர் என்பவன் எதெஸாவின் அரசனாய் இருந்தான் அவன் கிறிஸ்தவனான பின், கத்தோலிக்கு வேதமே அரசின் வேதமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அக்காலத்தில் மயிலாப்பூர் எதெஸா மேற்றிராசனத்தைச் சேர்ந்திருந்தது. அதோடு, அவ்வூர் சந்நியாசிகள் சிலர். மயிலாப்பூரில் மடம் நிறுவி வேதஅலுவல் செய்து வந்தனர். அப்போஸ்தலர் கல்லறையைப் பாதுகாத்து வந்தவர்களும் அவர்களே. புனித தோமையாரின் நடவடிக்கைகளையும், அவர் வேத சாட்சியானதையும் கேட்ட அரசன், அவருடைய எலும்புகளை மிகவும் பக்தியுடன் கொண்டாடும் பொருட்டுத் தனது நாட்டிற்கு எடுத்துப்போக விரும்பி, அதற்காக 'காபின்' எனும் ஒரு வர்த்தகனை மயிலாப்பூருக்கு அனுப்பினான். 

அரசனால் அனுப்பப்பட்ட தூதனானதால் சந்நியாசிகள் புனிதரின் எலும்புகளை அவன் மூலமாக எதெஸாவுக்கு அனுப்பினார்கள். ஆனால் மயிலாப்பூரிலிருந்த சந்நியாசிகளுடையவும் கிறிஸ்தவர்களுடையவும் வேண்டுகோளின் பேரில், அப்போஸ்தலரைக் குத்தின ஈட்டியின் சிறு பாகமும், அதன் நுனியில் ஒட்டியிருந்த சிறு எலும்புத் துண்டும் அக்கல்லறையிலேயே விட்டு வைக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்குப் பின் போர்த்துக்கீசியர் மயிலாப்பூர் வந்தபோது இத் திருப்பொருளின் மூலமாகவே அப்போஸ்தலரின் கல்லறையைக் கண்டுகொண்டனர்.

எதெஸா பட்டணத்தில் ஒன்பது நூற்றாண்டுகள் வரை அப்புனித எலும்புகள் இருந்தன பிறகு துருக்கியர் அடைந்து வந்த வெற்றியால் அப்பட்டணம் பாழாய்ப் போகுமெனக் கருதி, அத் திருப்பொருட்களுக்குச் சேதமும் அவமரியாதையும் நேரிடா வண்ணம், அங்கிருந்து இரண்டாம் முறை சிறிய ஆசியாவின் கடற்கரை ஓரத்திற்கு அப்பாலிருக்கிற 'கியோஸ்' என்னும் தீவுக்கு அவை கொண்டு போகப்பட்டன. 

பின்னர், மூன்றாம் முறையாக 1258 ஆம் ஆண்டு 'லியோ அக்காஸ் யோலி' என்பவர் அவற்றை இத்தாலியாவின் எடிரியாட்டிக் கடற்கரை ஓரமாயிருக்கும் 'ஓரட்டோனா' என்னும் பட்டணத்திற்குக் கொண்டு போனார். அவ்விடத்தின் தலைமைக் கோயிலில்லுள்ள புனித தோமையார் பீடத்தின் அடியில் வைக்கப்பட்டு, அங்கேயே அவை இன்று வரையிலும் மிகவும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுப் பெரிதும் பக்தியுடன் போற்றப்படுகிறது.