இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - விஜயன் வீட்டுச் செய்தி

தோமையார் : விஜயா! திருப்பலி பூசைக்கு வேண்டியவை என்னவென்று உனக்குத் தெரியும் அல்லவா? உடனே வீடு சென்று அவையாவும் ஆயத்தம் செய்வாயாக. 

விஜயன் : சுவாமி! இப்போது நடு இரவு. மேலும் கதவுகள் பூட்டப்பட்டுள்ளன. காவற்காரர் உறங்குகின்றனர். இங்கிருந்து வெளியே செல்வது எப்படி? 

தோமை: நீ புறப்படு. கதவுகள் திறக்கப்படும். ஒன்றுக்கும் அஞ்சாதே.

அப்போஸ்தலர் சொல்லியபடி செய்தான். எல்லாம் வசதியாயிருந்தது. வெளிவந்து வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அந் நடுநிசியில் ஓர் இளம் பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். பார்த்துப் பயந்தான். சற்று நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு உற்று நோக்கினான். அவனுக்கு ஒரே திகைப்பு! அங்குத் தோன்றினவள் அவன் மனைவி மீனாட்சியே. ''அன்பரே, எங்குச் செல்கின்றீர் இந் நேரத்தில்?” என்றாள்.

விஜ: "கண்ணே! மீனாட்சி! இதென்ன காட்சி! இது கனவோ நினைவோ? படுக்கையை விட்டு எழச் சக்தியற்றிருந்த நீ இங்கு நிற்பது எப்படி? எங்குச் செல்கின்றாய்? உனக்கு இம் மாற்றம் நேரிட்டது எவ்வாறு?

மீனா :அன்பரே! (யாரையோ சுட்டிக்காட்டி) இந்த இளைஞரைக் கடவுள் அனுப்பினார். அவர் என் நெற்றியைத் தொடவே முழுவதும் குணம் அடைந்தேன். 'இவர் அப்போஸ்தலரைக் காணும்படி எனக்குக் கூறினார் ஆகவே அவரிடம் செல்லப் புறப்பட்டேன்.

விஜ: உனக்கு உதவி செய்த உத்தமர் எங்கே? அவரை அணுகி அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

மீனா: என்ன? இதோ என் கையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாரே உமக்குத் தெரியவில்லையா? எனக்கு இன்னும் சற்று பலவீனமாயிருப்பதால் அவர் எனக்குத் துணையாக என்னைத் தாங்கி அழைத்துக்கொண்டு வருகிறார்.

இவர்கள் இவ்வாறு உரையாடிக்கொண்டு நிற்கையில் தோமையார் அங்குத் தோன்றினார். அவர் பின்னால் பாவுல் சீத்தாராமன், அவன் மனைவி, மகள், அரசி திருப்பதி, மகு தானி, நாரி ஆகிய ஐவரும் வந்தனர். மீனாட்சி அப்போஸ்தலரைக் கண்டதும் தெண்டனிட்டு விழுந்து "சுவாமி! என் பலவீனத்தை முன்னிட்டு எனக்குத் தொந்தரவு ஏற்படக் கூடாதென்று என்னைத் தேடி வருகிறீர் போலும். எவ்வளவு தயவு சுவாமி!'' என்று மனம் உவந்து நன்றி கூறினாள். 

பின்னர் நான்கு திக்குகளிலும் பார்த்துவிட்டு, "ஐயோ ! தேவனின் தூதர் போய்விட்டாரே! நான் எப்படி நடப்பேன்” என்று திகைப்புடன் கூறினாள். "பயப்படாதே மகளே! இயேசுகிறிஸ்து உனக்குப் பக்கத் துணையும் பாதுகாவலுமாய் இருப்பார்'' என்றார் அப்போஸ்தலர். அவர் அவ்வாறு சொல்லி முடியுமுன் மீனாட்சி மான் குட்டியெனத் துள்ளி ஓடினாள். வீட்டுக்குச் சென்று அப்போஸ்தலரை வரவேற்க வாசற்படியண்டை தயாராய் நின்றாள். தோமையார் தன் வீட்டிற்கு வந்ததும் அளவற்ற மகிழ்வுடன் வரவேற்றாள்.

வீட்டினுள் சென்றதும் எல்லாரையும் பக்கத்தில் அழைத்துக் கண்களை மேலே உயர்த்தி, "ஆண்டவரே! நீரே பலவீனருக்கு ஊன்றுகோல்; திக்கற்றவர்களுக்குத் துணை; துயர் உற்றோருக்குத் தேறுதல். தேவரீரை வணங்கித் துதிக்கின்றோம் உம் அடியார்களாக விரும்பும் விஜயன், மீனாட்சி, திருப்பதி ஆகிய இவர்களைக் காப்பாற்றும். உமது மந்தையில் சேர்ந்தபின் இவர்கள் உம்மையே நேசிப்பவர்களாய் இருக்கட்டும். இவர்கள் தவறிப்போகா வண்ணம் பார்த்துக் கொள்ளும். இவர்கள் ஒருபோதும் முன் வைத்த காலைப் பின் வையாது இருக்கக்கடவார்கள். எப்போதும் விசுவாசத்தில் நிலைத்திருக்க இவர்களுக்கு உமது அருளைப் பொழியும்" என்று செபித்தார்

பின்னர் விஜயனுக்கும், மீனாட்சிக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார் விஜயனுக்கு அருளப்பன் என்று பெயர் சூட்டினார். திருப்பலி பூசை ஆரம்பமானது. புதுக் கிறிஸ்தவர்களுக்குப் புது நன்மை அளித்தார். 

பூசை முடிந்ததும் எல்லாரையும் தமது அருகே அழைத்து, "மக்களே! என் கடைசி வார்த்தைகளைக் கேளுங்கள். நான் சீக்கிரம் உங்களை விட்டுப் பிரிந்து போவேன். என் வாழ்வு முடிவிற்கு வருகின்றது. நான் வணங்கி வந்த இயேசு தேவன் என்னை அழைக்கின்றார். இறைவன் தம் அடிமையாகிய என் மூலமாகச் செய்த அற்புதங்களைக் கண்கூடாகக் கண்டீர்கள். அதனால் விசுவாசம் உங்களிடம் ஊன்றி வளர்ந்தது. சமயம் வரும்; அப்போது மனிதர் கையில் அகப்பட்டு ஒன்றும் செய்ய இயலாதவன் போலிருப்பேன். என்னை வாதிப்பார்கள், கொலை செய்வார்கள். அதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுடைய விசுவாசம் தத்தளியாது இருக்கட்டும். நான் பாடுபடுவதே தேவ திருவுளம். அதன்படி நடப்பதே என் விருப்பம். அவர் விருப்பப்படி நடப்பதே நான் பெற்ற பேறு' என்று உருக்கத்துடன் உரைத்தபின் அவர்களுக்குத் தனது மனம் நிறைந்த ஆசியை அளித்துச் சிறைக்கூடம் திரும்பினார். 

பெண்கள் அரசனது அரண்மனையில் உள்ள தங்கள் இடத்துக்குச் சென்றனர். மஹாதேவன் அப்போஸ்தலரைச் சாவுக்கு உள்ளாக்கப்போகும் செய்தி அவர்கள் மனத்தை வாட்டி வதைக்கலாயிற்று.