இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் இருதயத்தைப் பற்றியெரியச் செய்யும் நெருப்பாக இருக்கிறது

"துயி ஆமோரிஸ் இன் ஏயிஸ் இஞ்ஞெம் ஆக்செந்தே.''

பரிசுத்த ஆவியானவர் பிதாவும், சுதனும் ஒருவரையொருவர் நேசிக்கும் அவர்களுடைய பரஸ்பர நேசத்தின் வழியாக அவர்கள் இருவரிடமிருந்தும் புறப்பட்டு வருகிறார் என்று நம் விசுவாசத்தில் நாம் அறிந்திருக்கிறோம். எனவே நம் ஆத்துமங்களுக்குள் ஆண்டவர் ஊற்றுவதும், எல்லாக் கொடைகளிலும் மேலான கொடையுமாகிய தேவசிநேகக் கொடை குறிப்பாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்தே நமக்கு வருகிறது என்றும் நாம் அறிந்திருக்கிறோம். ""நமக்கு அளிக்கப்பட்ட இஸ்பிரீத்துசாந்துவினாலே தேவசிநேகம் நம் இருதயங்களில் எப்பக்கத்திலும் பொழியப்பட்டிருக்கிறது'' (உரோ.5:15). ஆகவே இந்த நவநாளில் தேவசிநேகத்தை நாம் ஆசித்துத் தேடும்படியாகவும், பக்தி முயற்சிகளாலும், குறிப்பாக பக்திப்பற்றுதலுள்ள ஜெபத்தாலும் அதை அடைந்துகொள்ள உழைக்கும்படியாகவும், தேவசிநேகத்தின் உன்னதத் தன்மையையும், மதிப்பையும் நாம் விசேஷமாக தியானிப்போமாக. ஏனெனில், ""உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக் கொள்கிறவர்களுக்கு ... நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருள்வார்'' (லூக்.11:13) என்று சேசுநாதர் கூறியிருக்கிறார்.

பழைய திருச்சட்டததில், தமது பீடத்தின் மீது நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க வேண்டுமென்று சர்வேசுரன் கட்டளையிட்டார். ""அக்கினியோ எப்போதும் பீடத்தில் எரியும்'' (லேவி.6:12). நம் ஆத்துமங்கள் கடவுளின் பீடங்களாக இருக்கின்றன, அவற்றின் மீது தமது அன்பு எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்று அர்ச். கிரகோரியார் கூறுகிறார். இதன் காரணமாக, நித்தியப் பிதா, தமது திருமகனின் மரணத்தால் நாம் இரட்சிக்கப்படுமாறு, அவரை நமக்குத் தந்ததோடு மட்டும் திருப்தியடையாமல், பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் தங்கியிருந்து, அவற்றைத் தமத அன்பால் தொடர்ந்து பற்றியெரியச் செய்யும்படியாக, அவரையும் நமக்குத் தர சித்தங்கொண்டார். இந்தப் பரிசுத்த நேசத்தால் நம் இருதயங்களைப் பற்றியெரியச் செய்வதற்காகவே தாம் இவ்வுலகிற்கு வந்ததாகவும், அது இப்போதே பற்றியெரிவதைக் காண்பதை விட வேறு எதையும் தாம் விரும்பவில்லை என்றும் சேசுநாதர்தாமே அறிவித்தார்: ""நான் பூமியிலே அக்கினியைப் போட வந்தேன். அது பற்றியெரிய வேண்டும் என்பதல்லாமல், வேறெதை விரும்புகிறேன்?'' (லூக்.12:49). இதனாலேயே இவ்வுலகில் தாம் மனிதர்களிடமிருந்து பெறும் காயங்களையும், நன்றியற்றதனத்தையும் மறந்து, தாம் பரலோகத்திற்கு ஏறிச் சென்றவுடன், அவர் நம் மீது தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். ஓ உத்தம நேசமுள்ள இரட்சகரே, தேவரீர் உமது திருப்பாடுகளிலும், அவமானங்களிலும் மட்டுமின்றி, உமது பரலோக மகிமையிலும் கூட எங்களை நேசிக்கிறீரே சுவாமி!

ஓ என் தேவனே, எனக்காக மாபெரும் காரியங்களைச் செய்திருக்கிற உமக்காக நான் இது வரை எதுவும் செய்ததில்லை! ஐயோ, உம் திருவாயினின்று என்னை நீர் உமிழ்ந்து விடவே என் வெதுவெதுப்பு என்னைத் தகுதியுள்ளவனாக ஆக்கியிருக்கிறது! ஓ பரிசுத்த ஆவியானவரே, குளிராயிருக்கிறதை உஷ்ணப்படுத்தும், என் வெதுவெதுப்பிலிருந்து என்னை விடுவித்து, உம்மை மகிழ்விக்கும் ஒரு பெரும் ஆசையை என்னில் மூட்டியருளும்.

இதனால்தான் பரிசுத்த ஆவியானவர் நெருப்புமயமான நாவுகளின் வடிவத்தில் தோன்றுவதைத் தேர்ந்துகொண்டார். ""அக்கினிமயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி, அவர்களில் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கின'' (அப்.நட.2:3). இதனாலேயே பரிசுத்த திருச்சபை, ""ஆண்டவரே, எங்கள் ஆண்டவராகிய சேசுநாதர் பூமியின் மீது போட வந்ததும், அது பற்றியெரிய வேண்டுமென்று அவர் ஏக்கத்தோடு ஆசித்ததுமான அக்கினியைக் கொண்டு உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களைப் பற்றியெரியச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்'' என்று நாம் ஜெபிக்கும்படி கற்பிக்கிறது. இதுவே புனிதர்கள் தங்கள் பகைவர்களை நேசிப்பது, அவமானத்தை ஆசையோடு தேடுவது, உலக உடைமைகள் அனைத்தையும் துறப்பது, வாதைகளையும், மரணத்தையும் கூட மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது போன்ற பெரிய காரியங்களைச் செய்ய அவர்களைத் தூண்டிய பரிசுத்த நெருப்பாக இருந்தது. நேசத்தால் ஒருபோதும் சோம்பலாக இருக்கவே முடியாது; போதும் என்று அது ஒருபோதும் சொல்லாது. கடவுளை நேசிக்கிற ஆத்துமம், தன் நேசருக்காக எவ்வளவு அதிகமாகச் செய்கிறதோ, அதை விட அதிகமாக, அவரைப் பிரியப்படுத்துவதும், அவரது அன்பை இன்னும் அதிகமாக ஈர்த்துக் கொள்வதுமான செயல்களைச் செய்ய ஆசை கொள்கிறது. இந்தப் பரிசுத்த நேசம் மன ஜெபத்தில் தூண்டப்படுகிறது. ""அதை நினைக்க நினைக்க (என் மனதில்) அக்கினி மூண்டது'' சங்.38:3). ஆகவே, தேவசிநேக நெருப்பால் பற்றியெரிய நாம் ஆசித்தால், ஜெபத்தில் நாம் இன்பம் காண வேண்டும். தெய்வீக நேசப் பற்றுதலின் சுடர் தூண்டப்படுகிற ஆசீர்வதிக்கப்பட்ட தீச்சுளை அதுவே.

ஆண்டவரே, இப்போது சுய திருப்தி, சுய மகிழ்ச்சி முழுவதையும் நான் துறந்து விடுகிறேன். உம்மை மனநோகச் செய்வதை விட உயிர் துறப்பதற்குநான் ஆசையாக இருக்கிறேன். நீர் அக்கினி மயமான நாவுகளின் வடிவத்தில் தோன்றினீர்; என் நாவை உம்மை நோகச் செய்வதற்கு இனி ஒருபோதும் நான் பயன்படுத்தாதபடி அதை உமக்கு அர்பபணிக்கிறேன். உம்மை வாழ்த்திப் போற்றும்படி நீர் எனக்கு நாவைத் தந்தீர். நானோ, உம்மை நோகச் செய்யவும், உமக்கு எதிரான குற்றங்களுக்குள் மற்றவர்களையும் இழுத்து வரவுமே என் நாவைப் பயன்படுத்தியிருக்கிறேன்! இந்தக் காரியங்களுக்காக என் முழு ஆத்துமத்தோடு நான் மனஸ்தாபப்படுகறேன். ஓ, தம் இவ்வுலக வாழ்வில் தமது நாவைக் கொண்டு மிக அதிகமாக உம்மை மகிமைப்படுத்திய சேசுநாதரின் அன்பிற்காக, இன்று முதல், உம்மை எப்போதும் போற்றித் துதிப்பதன் மூலமும், அடிக்கடி உமது உதவியைக் கேட்டு மன்றாடுவதன் மூலமும், உமது நன்மைத் தனத்தையும், உமக்குத் தகுதியுள்ள அளவற்ற நேசத்தைப் பற்றியும் பேசுவதன் மூலமும், நானும் உம்மை மகிமைப்படுத்த எனக்கு வரமருளும். என் இராஜரீக நன்மைத்தனமே, நான் உம்மை நேசிக்கிறேன்; ஓ அன்பின் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன்! மரியாயே, பரிசுத்த ஆவியானவரின் மகா பிரியத்திற்குரிய மணவாட்டியே, இந்தப் பரிசுத்த நெருப்பை எனக்காகப் பெற்றுத் தாருங்கள்.