இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - வேதாகமத்தில் காணப்படும் அடிப்படை!

ஜெரேமியாஸ் தீர்க்கத்தரிசியின் புலம்பல்களையும் அழுகைக் குரலையும், எல்லா வரலாறுகளும் எதிரொலித்து வந்துள்ளன. “ஜெரேமியாஸ்” என்றாலே புலம்பல் என்னும் அளவிற்கு இந்நிலை உள்ளது. தன் யூத குலத்தவர் பபிலோனியாவுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்து ஜெரேமியாஸ் புலம்பியழுதார்.

கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பெரும் கேடு நேர்ந்தது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? அந்த மக்களுக்கும் நமக்கும் பெரிய ஒப்புமைகள் உள்ளன. மாபெரும் தீர்க்கதரிசிகள் இஸ்ராயேல் மக்களை எச்சரிப்புச் செய்ய வந்தார்கள். இப்பொழுதோ தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் அரசியான மாமரியே பாத்திமா நகரில் தோன்றி கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாகிய நமக்கு எச்சரிப்புச் செய்ய வந்தார்கள்.

ஜெரேமியாஸ் வந்தது, கேடுகள் நேரிடுவதற்கு சற்று முன்னால். அவர் கூறியதுதான் கடைசி எச்சரிக்கை. ஆனால் அவருக்கு முன்பு வந்து பேசிய தீர்க்கதரிசிகளை அவர்கள் புறக்கணித்தது போலவே, அவருக்கும் மக்கள் செவிகொடுக்கவில்லை. கடவுள் தாமே அந்தக் கடைசி எச்சரிப்பை ஜெரேமியாஸ் வாய் மூலம் பிரகடனப்படுத்தினார். “நீ புத்தகச் சுருள் ஒன்றை எடுத்து நாம் உன்னோடு உரையாடத் தொடங்கிய நாளான யோசியாசின் நாள் முதல் இந்நாள் வரை இஸ்ராயேலுக்கும், யூதாவுக்கும் மற்ற மக்களினத்தார் அனைவருக்கும் விரோதமாக நாம் உனக்கு அறிவித்த எல்லா வார்த்தைகளையும் அதில் எழுது. ஒருவேளை நாம் அவர்களுக்குச் செய்ய நினைத்திருக்கும் தீமைகள் அனைத்தையும் யூதாவின் வீட்டார் கேள்விப்படும்போது, அவர்களில் ஒவ்வொருவனும் தன் தீய நெறியை விட்டுவிடக் கூடும். அப்போது நாம் அவர்களுடைய அக்கிரமத்தையும், பாவத்தையும் மன்னிப்போம்” (ஜெரே. 36:2-3).

கர்த்தர் கூறும் எச்சரிப்புகளை--அவர் தம் தூதுவர்கள் வழியாகச் சொல்லி அற்புதங்களால் நிச்சயிக்கப்பட்ட அந்த எச்சரிப்புக்களை-- அலட்சியம் செய்வது மகா பயங்கரமானது! “அவர்களை வாளால் வதைப்போம். பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் துன்புறுத்தி, துயரத்திற்கு அவர்களைக் கையளிப்போம்... ஏனென்றால் அவர்கள் என் ஊழியர்களான தீர்க்கதரிசிகள் வழியாக நாம் அவர்களுக்குக் கூறிய வார்த்தைகளுக்குக் காது கொடுக்கவில்லை.” 

இந்த வசனங்கள் கடவுளால் வார்த்தைக்கு வார்த்தை ஜெரேமியாஸுக்கு உரைக்கப்பட்டு, அவருடைய காரியஸ்தனான பாரூக் என்பவரால் எழுதப்பட்டு, ஜனங்களின் மூப்பர்களுக்குக் கொடுக்கப் பட்டது. இந்த வசனங்கள் என்னவாயின?

வேதாகமம் கூறுவது: மூப்பர்கள் இந்த ஜெரேமியாஸின் எச்சரிப்பை ஆச்சரியத்தோடு கேட்டார்கள் (ஜெரே. 36:16)--கேட்டு இவைகளை நாம் அரசனுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள். அது குளிர்காலமாயிருந்தது. அரசன் நிலக்கரி எரியும் அனல் அடுப்பின் அருகில் அமர்ந்திருந்தான். தீர்க்கதரிசனத்தின் முதல் மூன்று நான்கு பக்கங்களைப் படிக்கக் கேட்டான். அத்துடன் அதைத் திடீரென்று பிடுங்கி, ஒரு கத்தியால் துண்டு துண்டாக வெட்டி நெருப்பில் போட்டு எரித்தான்.

அவனைச் சுற்றி நின்ற மூப்பர்களும் ஊழியரும் அரசனுடைய இச்செயலைக் கண்டு துயரத்தால் தங்கள் மேலாடைகளைக் கிழித்துக் கொள்ளவுமில்லை; மனதில் அச்சம் கொள்ளவுமில்லை. இதனால் அந்த அரசன் செய்தது சரி என்று அவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொண்டு நின்றார்கள்.

இந்தக் கடைசி எச்சரிப்புக்குப் பின் கடவுளின் மக்களுடைய கதி மாற்ற முடியாதபடி முத்திரையிடப்பட்டு விட்டது. ஜெரேமியாஸ் அரசனிடம் சென்று, “பபிலோனிய மன்னன் வெகு துரிதமாக வந்து உன்னையும், உன் மக்களையும் அழிப்பான்” என்று கூறினார்.

மூர்க்கக் குணமுள்ள நபுக்கதொனோசோர் என்ற தளபதி ஜெருசலேமை வந்து தாக்கினான். நகரின் கோட்டைச் சுவர்களுக்குள் பதுங்கி ஒளிந்து கொண்டே இஸ்ராயேலர் 18 மாதங்களாக அந்தப் பட்டணத்தைக் காப்பாற்றினர். ஆனால் அங்கு பரவிய கொள்ளை நோய் பயங்கர நாசத்தை விளைவித்தது.

இறுதியில் பபிலோனியப் படை பட்டணத்துள் புகுந்து விட்டது; கொள்ளையடித்தது; எரித்தது; நாசம் விளைவித்தது. ஜெருசலேம் அரசனுடைய கண்களை நபுக்கதொனோசோர் தளபதி தானே பிடுங்கி எறிந்தான். அவர்களுடைய வீரர்கள் சாலமோன் எழுப்பிய அதிசயத்துக்குரிய தேவ ஆலயத்தை எரித்து, உடன்படிக்கைப் பெட்டகத்தையும் உடைத்தெறிந்தார்கள். கல்வியறிவுள்ளவர்களும், உயர்தரப்பினருமான எல்லா எபிரேயர்களையும் பணயமாக பபிலோனியாவுக்குக் கொண்டுபோனான் தளபதி நபுக்கதொனோசோர்.

இந்தக் கொடிய சம்பவத்தின் விரிபாடுகளை நாம் மிகக் கொஞ்சம்தான் அறிய முடியும். இது கி.மு. 586-ம் ஆண்டில் நடந்தது. இதற்கு ஒரு உபமானம் கூற முடியுமானால், அது இன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்கள் அர்ச். இராயப்பர் தேவாலயத்தையும், வத்திக்கானையும் நெருப்புக்கு இரையாக்கி, எல்லாக் கர்தினால்மார், பாப்பரசரையும் சைபீரியாவுக்குக் கடத்திச் சென்று விட்டால் எப்படி இருக்குமோ, அப்படி வைத்துக் கொள்ளலாம்.

தேவாலயமும், உடன்படிக்கைப் பேழையும் அழிக்கப்பட்ட தானது, யூதர்களுக்கு இறுதி முடிவாகவும், கடவுள் அவர்களை முழுவதும் கைவிட்டு விட்டதாகவும் தோன்றிற்று.

ஆனால் அது அப்படியல்ல.

யூத குலம் மிகக் கடுமையான தீமைகளை அனுபவிக்கும்போது, சீரியா நாட்டின் வெப்பத்தில் மிருகங்களைப் போல் அவர்கள் விரட்டிச் செல்லப்பட்ட போது, நபுக்கதொனோசோரின் சேவகர்களால் அவர்கள் முரட்டுத்தனமாய்ச் சாட்டைகளால் அடிக்கப்பட்ட அதே சமயத்தில் அவர்களுடைய ஆன்மீக வாழ்வு மறுபிறப்பை அடைந்தது. அவர்களுடைய மூப்பர்கள் மிகவும் கொடூரமாய் நடத்தப்பட்டார்கள். மாட்டுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது போல அவர்களுடைய உதடுகளில் வளையங்களை மாட்டி, கயிறுகளால் பாபிலோனியக் குதிரைகளின் சேணங்களில் கட்டப்பட்டு, இழுத்துச் செல்லப் பட்டார்கள்.

அப்போதுதான் அவர்கள் கடவுளை விட்டுப் புறம்பே திரும்பி உலகக் காரியங்களிலே மூழ்கிக் கிடந்த தங்கள் பாவங்களை உணர்ந் தார்கள். தங்களை எச்சரிக்க அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளின் வாக்கை அலட்சியப்படுத்திய குற்றத்தைக் கண்டார்கள்.

மனஸ்தாபம் நிறைகிறது; பாவத்துக்காக துக்கம் அவர்களிடம் எழுகிறது; அவைகளை மிக உந்நதமான வார்த்தைகளால் வெளியிடு கிறார்கள்.

டானியல் ராப்ஸ் என்பவர், “உடைந்த உள்ளத்தின் துயரப் பாடலையும், நம்பிக்கையை ஊட்டும் பாடலையும் இஸ்ராயேலர் தங்கள் அடிமைத்தனத்திற்குச் செல்கையில் பாடியதை, இந்நாளில் நாம் பாடுகிறோம்” என்கிறார்.

“பாதாளத்திலிருந்து ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூப்பிட் டேன். ஆண்டவரே, என் குரலைக் கேட்டருளும்.” 

கடவுள் தமக்குக் கொடுத்திருந்த பெரிய வாக்குறுதிகளை இஸ்ராயேலர் நினைத்துக் கொண்டு, நம்பிக்கையுடன் இந்த இருண்ட வேளையில் உண்மைக் கடவுளிடம் திரும்புகிறார்கள்.

“என் ஆன்மா அவருடைய வாக்கில் நம்பிக்கை கொள்கிறது. ஆண்டவரை என் ஆன்மா நம்பியிருக்கிறது. ஏனெனில் ஆண்டவ ரிடத்தில் இரக்கம் உள்ளது. அவரிடம் நிறைந்த இரட்சிப்பு உள்ளது.” 

கர்த்தராகிய ஆண்டவரும் உண்மையான தகப்பனாயிருப்பதால் தவறிப்போன தம் மக்களின் அழுகைக் குரலைக் கேட்டருளுகிறார்.

எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசியைக் கடவுள் தம் தெரிந் தெடுக்கப்பட்ட மக்களிடம் அனுப்புகிறார். அவர்கள் தங்கள் பாவங் களுக்காகத் துக்கப்பட்டுத் திருந்துவார்களானால், அவர்களை மன்னிப் பதாகக் கூறுகிறார். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடாகிய பாலஸ்தீனத்திற்குத் திரும்புவார்கள் என்றும், முந்திய மகிமையில் நிலை நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கிறார்.

அந்நிய நாட்டில் பட்ட அவதியிலும், துன்பத்திலும் இம்மக்கள் கடவுளின் குரலைக் கீழ்ப்படிதலுடன் கேட்டார்கள். 70 ஆண்டுகளாக அடிமைகளாயிருந்த பிறகே அவர்கள் சுயாதீனராய் வாக்குத்தத்த நாட்டிற்குத் திரும்பி வர கடவுள் அனுமதித்தார்.

இந்த யூத மக்களுக்கு என்ன நடந்ததோ, அதே பான்மையில் தான் நாம் இன்றும் உண்மைகளைக் காண வேண்டும். உலகாதாயம், கடவுள் வெறுப்பு, ஒழுக்கக் கேடு, ஆங்காரம், மன்னியாத குரூர குணம், இவைகள் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்படும் பாவங்கள் மட்டுமல்ல, இவைகள் நம்மைக் கம்யூனிஸ்ட் அடிமைத் தனம் என்ற பாதாளத்திற்குள் இழுத்துச் செல்லும் ஆபத்துக்களாகவும் உள்ளன.

கடவுள் தமது மிகச் சிறந்த மதிப்பிற்குரிய தூதுவரை, தீர்க்க தரிசிகளின் இராக்கினியையே நம்மிடம் அனுப்பி, வரவிருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறுகிறார். இந்த எச்சரிப்பு மொழி அலட்சியப் படுத்தப்பட அவர் சம்மதிக்க மாட்டார்.

நாம் தெரிந்தெடுத்தவர்களை உதாசீனப்படுத்துவதைப் போல் கடவுளுக்கு எதிர்ப்பானது இல்லை. அவர் தம் சிறந்த வரங்களை யார் மீது பொழிந்துள்ளாரோ, அவர்களைப் புறக்கணிப்பது அவருக்கு மிகவும் துரோகமாகும்.

ஜெரேமியாஸ் புலம்பலில்: “அவர் தமது பீடத்தை விட்டு விட்டார். தமது பீட முற்றத்தைச் சபித்து விட்டார்” எனக் கூறப் படுகிறது (புலம்பல். 2:7).

இது கிறீஸ்தவ மக்களுக்கு ஒரு மாபெரும் எச்சரிப்பாக உள்ளது. கடவுளுடைய அசாதாரணமான வரப்பிரசாதங்களை அலட்சியப் படுத்தி நிந்திக்க அவர்களால்தான் கூடும்.

ஜெரேமியாஸின் இச்சரித்திரம், கடவுள் வழக்கமாகத் தாம் தெரிந்தெடுத்த மக்களுடன் நடந்து கொள்ளும் முறையைக் கூறுகிறது. தீர்க்கதரிசிகளின் வாயிலாக அவர் தம் மக்களைக் கடிந்துகொள்வார். தாம் தெரிந்தெடுத்து அனுப்புகிறவர்கள் வழியாக, மக்களின் பாவங்களை உணர்த்துவார். அவர்களை எச்சரிப்பார்; பாவத்தை அவர்கள் விட்டுவிடாவிட்டால், எல்லா விதமான தீமைகளும் அவர்களை வந்தடையும் என்று அறிவிப்பார்.

பழைய ஏற்பாட்டைப் பார்க்கையில், நோவே, ஆபிரகாம், மோயீசன், தானியேல், யோனாஸ் இன்னும் பல தீர்க்கதரிசிகள், பிதாப் பிதாக்களின் எச்சரிப்புகளை வாசிக்கையில், பாத்திமாவில் நடைபெறுவது, கடவுள் தன் மக்களுடன் வழக்கமாக நடந்து கொள்ளும் முறைக்கு மிகவும் ஒத்திருக்கக் காண்கிறோம்.

சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ராயேல் மக்களுக்குக் கூறிய வார்த்தைகள், இக்காலத்தில் தேவதாய் மூலமாக தேவன் பாத்திமாவில் பேசியருளியவற்றின் விளக்க உரைபோல அமைந்துள்ளன.

பிலிஸ்தியர்கள் இஸ்ராயேலரைப் போரில் நசுக்கி வெற்றி கண்டிருந்த அச்சமயம் சாமுவேல் தீர்க்கதரிசி கடவுளின் மக்களைக் கூட்டி, இவ்வாறு பேசினார்: “நீங்கள் அந்நிய தேவர்களை உங்கள் நடுவிலிருந்து அகற்றிவிட்டு, உங்கள் முழு இருதயத்தோடு ஆண்டவர் பக்கம் திரும்புவீர்களானால், உங்கள் இருதயங்களை ஆண்டவருக் கெனத் தயாரிப்பீர்களானால், அவருக்கு மட்டுமே ஊழியம் புரிவீர் களானால், அவர் உங்களை பிலிஸ்தியர் கைகளினின்று விடுவிப்பார்” (1 அர. 7:3).

மிகப் பழைய காலத்திலிருந்தே இஸ்ராயேல் மக்களுக்கு இதே விஷயம்தான் கூறப்பட்டு வந்தது! பாவங்களை விட்டுவிட வேண்டும்; தாழ்ச்சியும், மனஸ்தாபமுமுள்ள இருதயத்துடன் கடவுளிடம் திரும்பி வர வேண்டும். அப்படியானால் யாவும் நலமாய் இருக்கும். விக்கிரக ஆராதனையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், ஆசாபாசங்களுக்கு உட்பட்டிருந்தால், வணங்காக் கழுத்துள்ளவர்களாய் தவறுகளைச் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் அவர்களுக்கு அனுப்பும் ஆக்கினைகள் மிகப் பெரிதாய் இருக்கும். “பாவம் செய்யும் சந்ததிகளுக்கு ஐயோ கேடு! அவர்கள் இஸ்ராயேலின் பரிசுத்தரைத் தூஷணித்தார்கள். நீங்கள் மனங்கொண்டு நான் கூறுவதற்குச் செவி கொடுப்பீர்களாகில், நீங்கள் நிலத்தின் நற்கனிகளை உண்பீர்கள். நீங்கள் அப்படிச் செய்யாவிடில்... உங்களை வாள் விழுங்கும். ஏனென்றால் ஆண்டவருடைய திருவாயே இதனை உரைத்தது” என்றார் இசையாஸ் தீர்க்கதரிசி (இசை. 1: 4, 19, 20).

இன்றைய நிலையில் கடவுள் கம்யூனிஸத்தைக் கொண்டு துன்பங்களினாலே தமது திருச்சபையைப் பரிசுத்தப்படுத்தவில்லையா? ஆண்டவர் இப்போது ஒரு தீர்க்கதரிசியை அல்ல, தீர்க்கதரிசிகளின் அரசியையே அதே பழைய நல்லுபதேசத்தைக் கூறும்படி அனுப்பி யுள்ளார். கடவுள் பக்கம் திரும்பி வந்து இரட்சிப்படையுங்கள்; அல்லது கடவுளை மறுத்து அவருக்குரிய வணக்கத்தையும் மறுத்து விட்டு, அதனால் தடுக்க முடியாதபடி வரும் தீமைகளையும் அனுபவித்துக்கொள்ளுங்கள். 

இவைகளிலிருந்து புலனாவது எது? பாத்திமா செய்தி என்பது, பரிசுத்த வேதாகமத்தில் கண்டுள்ளபடி, உண்மையாகவே கடவுள் கடைப்பிடித்து வரும் ஒரு முறையின் விரிபாடுதான்--கடவுளின் ஒரு வழிமுறைதான் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது. பழைய காலத்தைப் போல சாக்கு உடை அணிந்து சாம்பலைப் பூசும்படி கூறப் படாமல், காலத்துக்கு ஏற்றபடி ஜெபமாலையைக் கைக்கொள்ளும் படியும், தபசை மேற்கொள்ளும்படியும் கேட்கப்படுகிறது.

மேலும் கடவுளின் கைப்படைப்பான மனிதனுக்கு நிச்சயமான நிரூபணம் காட்டுவதற்காகக் கடவுள் அற்புதங்களை நிகழ்த்துவதும் வேதாகமத்தில் நாம் காணும் அவருடைய நடைமுறைகளில் ஒன்றாகும். அதுபோலவே பாத்திமாவிலும் கடவுள் அற்புத அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

யூதர்களுடன் பேசுகையில் சேசு கூறியதை அவர்கள் ஏற்காமல் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்களே, அவர்களுக்கு அவர் தாம் தேவ குமாரன் என்று காட்ட என்ன கூறினார்?

“நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவசிக்கவேண்டாம். அவைகளைச் செய்கிறேனாகில், என்னை விசுவசிக்க உங்களுக்கு மனமில்லாதபோதிலும், பிதா என்னிலும் நான் பிதாவிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து, விசுவசிக்கத்தக்கதாக அந்தக் கிரியைகளை விசுவசியுங்கள்” (அரு. 10:37) என்று கூறினார்.

பாத்திமாவிலும் இரண்டு பேர் சாட்சியம் கொடுத்தார்கள். தேவதாயும், கடவுளும். கடவுள் தம் தெய்வீக வல்லமையால் ஒருக் காலமும் நிகழ்ந்திராத ஒரு அதிசயத்தைச் சூரியனில் செய்து தேவதாயின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினார்.

வேதாகமத்திலும் இவ்வித ஒரு சந்தர்ப்பம் வருகிறது.

அருளப்பர் சுவிசேஷம் 9-ம் அதிகாரத்தில், சேசுவால் கண் பார்வை பெற்ற பிறவிக் குருடன் பரிசேயருடைய அவநம்பிக்கை நிறைந்த கடின விசாரிப்புக்கு உட்பட வேண்டியிருந்தது. இவனுக்குப் பார்வை கிடைத்தது அவ்வளவு முக்கியமில்லை. அதை அப்படியே ஒதுக்கி விட வேண்டும் என்ற முயற்சியில் அந்தப் பரிசேயர், “கடவுள் மோயீசனோடு பேசினார் என்பதை அறிவோம். இவன் எங்கிருந்து வந்தவன் என்று அறியோம்” என்றார்கள்.

ஆனால் இச்சந்தர்ப்பத்தில் கண்பார்வை பெற்ற பிறவிக் குருடன் அவர்களைக் கடிந்து மொழிந்தான். இவன் கடிந்து கூறிய மொழி, இன்று பாத்திமா செய்தியை அசட்டை செய்து புறக்கணிப்பவர்கள் மனதில் எதிரொலிக்கக் கூடும்:

“அவர் என் கண்களைத் திறந்திருக்க, அவர் எவ்விடத்தாரென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள் என்பதிலே சந்தேகமற ஓர் ஆச்சரிய மிருக்கிறது. பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகத்தின் ஆதிமுதற் கொண்டு கேள்விப்பட்டதில்லையே” என்று உரைத்தான் (அரு. 9:30).

என்றுமே நடந்திராத ஒரு அற்புத அதிசயச் செயல் யூதர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யவில்லை. என்றுமே நடந்திராத பாத்திமாவில் நிகழ்ந்த அற்புத அதிசயச் செயல் இக்காலத்தில் பல கத்தோலிக்கர்களை நம்பச் செய்யவில்லை.

பாத்திமாவில் தேவதாய் கூறியுள்ள செய்திகள் நிச்சயமாக உண்மையுள்ளவையும், வேதாகமங்களின் ஒரு விரிபாடுமாயிருக் கின்றன.

ஆண்டவரும் இவ்வாறு புலம்பினார்: “ஜெருசலேமே, ஜெருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடமாய் அனுப்பப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லுகிறாயே; கோழியானது தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளுக்குள்ளே அணைத் துக்கொள்ளுகிறதுபோல, எத்தனையோ முறை நானும் உன் குமாரர் களை அணைத்துக் கொள்ள விரும்பினேன், உனக்கு மனமில்லாமல் போயிற்றே” (மத். 23:37).

சேசுவின் இந்தத் துயரப் புலம்பல் அவருடைய தாயாராலும் பாத்திமாவில் கூறப்பட்டது. அவ்வன்னை மனித இனத்தைக் கம்யூனிஸத்தின் அழிவிலிருந்தும், யுத்தத்திலிருந்தும் காப்பாற்ற விரும்பி னார்கள். ஆனால் நம் அன்னையின் வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது.

உலகத் தலைவர்கள் சுதந்திரம், விடுதலை என்று என்னென்ன திட்டங்கள், கனவுகள் காண்கிறார்கள்! கடவுளிடம் அவர்கள் திரும்பும் வரை, இந்த விடுதலையை அவர்கள் அடையப் போவதில்லை. பரலோகத்திலிருந்து ஆச்சரிய அடையாளங்களோடும், அன்னைக்குரிய பாசத்தோடும் ஏமாற்றக்கூடாத அன்போடும் கிறீஸ்துவின் தாயார் தந்த செய்தியை அவர்கள் கடைப்பிடிக்கும் வரை, அவர்களுக்கு விடுதலை கிட்டப் போவதில்லை.

அவர்கள் இவைகளைச் செய்வார்களானால், விடுதலையும், சமாதானமும் பெறுவார்கள்.

அவர்கள் செய்யாமல் போனால், ஆக்கினைகளும், யுத்தங் களும், அழிவுக்கு மேல் அழிவும் முடிவில்லா கொடுங்கோன்மையும் தான் கிடைக்கும்.

கம்யூனிஸத்தை வென்று உலகில் மிகப் பெரிய, மிக உயர்ந்த சமூக முன்னேற்றத்தை சரித்திரத்திலே காண ஒரே ஒரு சின்ன நிபந்தனை: கடவுள் பக்கம் திரும்புவதே.

“ஆண்டவரோ இஸ்பிரீத்துவாயிருக்கிறார்; ஆண்டவருடைய இஸ்பிரீத்து எங்கே உண்டோ, அங்கே சுயாதீனமுமுண்டு” என்று கூறியுள்ளார் அர்ச். சின்னப்பர் (2 கொரி. 3:17).