இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - கடவுள் இருக்கிறார்!

கடவுள் உள்ளார் என்று நிரூபிப்பதற்காக பல நூற்றாண்டுகளாக அர்ச். தோமாஸ் அக்வினாஸுடைய ஐந்து காரணங்களையும் மக்கள் கூறி வந்துள்ளார்கள். கிறீஸ்தவ வெளிப்படுத்தல்களை மெய்ப்பிக்க ஒவ்வொரு காலத்திலும் நிகழ்ந்த ஏராளமான புதுமைகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இப்புதுமைகள் நம்முடைய காலத்திலும் நிறைய நடைபெற்றே வருகின்றன. வானங்கள் கடவுளின் மகிமையை எடுத் துரைக்கின்றன. விண்வெளியும் அவரது கைவேலைகளை எடுத்துக் கூறுகின்றது.

இவ்வளவு இருந்தும், கடைசியில் நாம் கேள்விப்படும் முட்டாள் தனமான கூற்று, “கடவுள் இல்லை” என்பது. சுய விருப்பு வெறுப்பின்றிப் பேசுவதாயிருந்தால், உலகத்திலேயே ஏதாவது ஒரு காரியம் தெள்ளத் தெளிவாக இருக்குமானால், அது: கடவுள், சிருஷ்டிகர் ஒருவர் உண்டு என்ற உண்மைதான். இப்படி இருந்தும், சில அறிவுடையவர்கள், படித்தவர்கள் என்று கருதப்படுகிறவர்கள் கூட கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்!

இவர்கள் இப்படிக் கூறுவதே கடவுள் இருக்கிறார் என்பதற்கு இன்னுமொரு சான்றாக இருக்கிறது. பொதுவாகவே தெய்வ விசுவாசம் உடையவர்கள் ஜெபம் செய்கிறவர்களாகவும், தெய்வ விசுவாசமற்றவர்கள் ஜெபம் செய்யாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆதலால் ஜெபிக்காத, அகங்காரம் கொண்ட, திசைமாறித் திரிகிறவர்களைக் கடவுள் தண்டித்து தம்முடைய பிரசன்னத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். நீதியே உருவான தேவனால் அவர்கள் இருளில் விடப்பட்டுப் போகிறார்கள். ஒரு சிறு குழந்தை கண்டுணரக் கூடிய கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை இவர்கள் காண முழயாமல் போய்விடுகிறார்கள்.

ஆனால் ஜெபிக்கும் மனிதனுக்குக் கடவுளைப் பற்றிய சந்தேகமே வருவதில்லை. ஏனென்றால் கடவுள் இப்படிப்பட்டவர் களுக்குத் தம்மையே வெளிப்படுத்துகிறார். அவர்களைத் தம் வரப் பிரசாதங்களால் தேற்றுகிறார். வாழ்வின் இரகசியங்களை அவர்கள் காணச் செய்கிறார். இவ்வுலக வாழ்வின் சோதனைகளையும், துன்பங்களையும் அவர்கள் மிகவும் சிறந்த முறையில் கல்வாரியின் துன்பங்களின் வெளிச்சத்தில் காண்கிறார்கள்.

சேசுகிறீஸ்துவின் வழியாக சர்வேசுரனிடம் மன்றாடும் ஒருவ னுடைய மனதில் மிக ஆச்சரியமான சிருஷ்டிப்பின் திட்டமும், இரட் சிப்பின் திட்டமும் தெளிவாகக் காட்டப்படுகின்றன.

ஆனால் மன்றாட மறுக்கும் ஒரு நாஸ்தீகனின் இருள் சூழ்ந்த மனதை எந்த ஒளியும் ஊடுருவிச் செல்ல முடிவதில்லை. அவன் தன் அறிவு கூறும் மிகத் தெளிவான உண்மைகளை மறுப்பான். மிகவும் ஆச்சரியம் விளைக்கும் அற்புதங்களைக் கண்டும் அவைகள் பறை சாற்றும் கடவுளைப் பற்றி ஒரு உணர்வும் கொள்ள மாட்டான்.

பிரபஞ்சத்தில் மிக நுட்பமான அமைப்பு, தாவர உலகம், விலங்கின உலகம் அவற்றின் ஆச்சரியமான அமைப்பு இவையெல்லாம் தங்களைத் திட்டம் பண்ணி அமைத்த ஒருவர் உண்டு, உண்டு எனப் பறைசாற்றுகின்றன.

வான மண்டலத்தில் உலவும் கோளங்களையும், நீரின் பொங்கு தல்களையும், இறங்குதல்களையும், காலங்களையும் ஊடுருவி நின்று நடத்தும் இயற்கைச் சட்டங்கள், அச்சட்டங்களை வகுத்த ஒருவர் உண்டு, உண்டு எனக் கூவிச் சொல்கின்றன.

நம்மைச் சுற்றியே நடைபெறும் எண்ணற்ற காரியங்களுக்கெல் லாம் காரணங்கள் உள்ளனவே! உயிரினங்களின் தன்மையைப் பார்த் தால் அவைகள் தோன்றுவதற்கு ஒரு முதல் காரணம் உண்டெனக் காண்கிறோம். இப்பூகோளத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உயிரினம் தோன்றியதாக அறிகிறோம்.

அந்த உயிரினைப் படைத்தவர் யார்?

பிரபஞ்சத்தின் அசைவு வேகமாக நடைபெறுகிறது. பூமியே மணிக்கு 66,600 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அது மட்டும் இவ்வேகத்தை ஒரு சிறிது குறைக்குமானால், 3 கோடியே 60 இலட்சம் டிகிரி சென்டிகிரேட் உஷ்ணமுள்ள சூரியனுக்குள் விழுந்து உயிரினம் யாவும் ஒரு விநாடியில் அழிந்து போகும்.

ஆனால் பூமி உருண்டையை இந்தக் குறிப்பிட்ட வேகத்தில் சுழல வைத்துக் கொண்டிருப்பவர் யார்?

சடப்பொருள் அசைவற்றதாயிற்றே! அது தன்னைத் தானே அசைக்கக் கூடாத பொருளாயிற்றே!

இக்காலத்திய ஆங்காரக் குருட்டுத்தன்மை வருமுன் எல்லா மனித இனத்தவரும், சகலத்தையும் இயக்கும் ஒரு முதல்வனை, ஒரு சர்வ வல்லபக் கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

படிப்பாளிகளுள் பல விசுவாசிகள் காணப்படுவதுபோல் அவர் களுக்குள்ளும் சில நாஸ்தீகர்களும் உள்ளார்கள்.

இதுவும் இவ்வாறேதான் இருக்கும். காரணம், மனிதர்கள் நல்லவர்கள், தீயவர்கள் என்றுதான் பிரிக்கப்படுவார்களே தவிர கற்றவர், கல்லாதவர் என்றல்ல.

படிப்பாளிகள் தங்கள் கல்வித் திறமையினால் மோட்ச இராச்சியத்துக்குள் நுழைந்து கொள்ளவும், படியாதவர்கள் தங்கள் திறமைக் குறைவினால் நரகத்துக்குப் போவதாகவும் இருந்தால், அது கடவுளிடம் நீதியே இல்லை என்பதையல்லவா காட்டிவிடும்!

நமதாண்டவர்கூட இவ்வுலகத்தின் மக்கள் தங்கள் சந்ததியில்தான் ஒளியின் மக்களைவிட அதிக விவேகமுள்ளவர்களா யிருப்பதாகக் கூறினார்.

வியாபாரிகளாகவும் நிருவாகிகளாகவும் செயலாற்றுபவர் களாயும் நாஸ்தீகர்கள் கிறிஸ்தவர்களைவிட அதிக திறமைசாலி களாயிருக்கக் கூடும்.

உலகக் காரியங்களில் வல்லவர்கள், பரலோகக் காரியங்களில் பலமற்றவர்கள்!

இவர்களுடைய இந்த வியாபாரத் திறமை, உலக வெற்றி முதலியவை உண்மையிலேயே ஒரு சாபமாகக் கூட இருக்கலாம்.

ஏனென்றால் இவர்கள் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண் டாலும், தங்கள் ஆன்மாவை இழந்து போனால் இவர்களுக்கு என்ன பயன்?

இவர்கள் எவ்வளவு தந்திரசாலிகளாய், விவேகமுள்ளவர்களா யிருந்தாலும், தங்களுடைய அலுவல்களில் எவ்வளவு நுட்பப் புத்தி யுடையவர்களாயிருந்தாலும், இதைக் கொண்டு அவர்கள் கடவுள் சந்நிதானத்துக்குள் நுழைய முடியாதே! இத்தகைய நாஸ்தீகர்களை “முட்டாள்கள்” என்று வேதாகமம் உரைக்கின்றது.

சர்வேசுரனுடைய தரிசனம்-பரலோக ஆனந்தம், அறிவுடைய வர்களுக்கல்ல, நல்லவர்களுக்கே உரியது.


அன்பே அடையாளச் சீட்டு

தேவ இஷ்டப்பிரசாதமாகிய பரம அன்புதான் பரலோகத்திற்குக் கொண்டு செல்லும் அடையாளச் சீட்டு. இந்தப் பரம அன்பு இல்லாதவன் எவ்வளவு கூரிய அறிவு படைத்தவனாயிருந்தாலும், நித்திய இன்பத்தை அடையான். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அணுவும் அதற்காகவே ஏங்கி நிற்கும்.

அறிவில்லாதவர்களும், பின்தங்கியவர்களும் தங்களின் இக்குறைபாடுகளினால் பரலோக இராச்சியத்தை இழந்துவிட மாட்டார்கள்.

தீமையென்று தெரிந்தும் அதைச் செய்தாலன்றி, தேவ நீதி அவர்களைத் தண்டிக்காது. வேண்டுமென்று, கடவுளுக்கு நன்றி செலுத்தி மன்றாடாமலும், அவரை ஆராதியாமலும், அவருக்கு உரிய வணக்கம் செய்யாமலும் இருப்பவனே ஆக்கினைத் தீர்ப்பிடப் படுவான்.

மதிநுட்பமுள்ள அலுவலன், பிரசித்தி பெற்ற நிருவாகி இத்தகையோர் கடவுளைப் புறக்கணித்து விட்டு நித்திய நரகில் விழுந்தால், அவர்கள் கதி என்ன? அவனுடைய மதிநுட்பம் எப்படிப் பட்டது? அவனுடைய நிருவாகத் திறமை என்ன ஆயிற்று? 

நரகத்தில் விழுந்த பின், அவன் தன் கூறிய அறிவினால் இம்மண் ணுலகிலுள்ளவற்றைச் சம்பாதித்து, நித்திய இன்பத்தை இழந்து போனதால் அவன் மனசாட்சி அவனை விவரிப்புக்கு அடங்காத அளவு அரித்துத் தின்னுமே!

அவன் சபிக்கப்பட்டு, அழிந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டானே! அழிந்து போகும் உலக செல்வத்தை இழந்து விட்டதால் அல்ல, அளவில்லாத விலையுள்ள செல்வமாகிய கடவுளின் அன்பை யல்லவா அவன் இழந்து விட்டான்! நித்திய காலம் அவனுக்குரியதாக இருக்கும்படி கல்வாரியில் வாங்கப்பட்ட ஆனந்தப் பரவசத்தை யல்லவா தவற விட்டு விட்டான்!

 இந்த மதிநுட்பம் வாய்ந்த வியாபாரி, கடவுளை மன்றாட மறுத்த அரிய புத்தி படைத்த அலுவலன் விழுந்து விட்டான். நித்தியத்துக்கும் விழுந்து அழிகிறான். எந்த நாவும் எழுதுகோலும் இவனுடைய அழிவை எடுத்து இயம்ப இயலாது!

ஒருவனுடைய ஆன்மா நரகத்தில் விழாதபடி காப்பாற்றுவதை விட அதிகப் பெரிய பிறர்நலச் சேவையை யாரும் செய்ய முடியாது. மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரமாகச் செய்யப்படும் ஜெபங்கள், ஆன்மாக்கள் நரகத்தில் விழாதபடி பாதுகாக்கும் வலிமை மிகுந்தவைகளாயிருக்கின்றன.

கிறீஸ்தவர்களின் மன்றாட்டுக்களும், தவ முயற்சிகளும், நாஸ்தீகர்களையும், எதையும் நம்ப மறுப்பவர்களையும் கடவுளின் அன்பிற்கு அழைத்து வருவதற்கு உதவ முடியும். கடவுளை விசுவசி யாதவர்களையும், ஆராதியாதவர்களையும், அவரை நேசியாதவர் களையும் அவருடைய அன்பின் அரவணைப்புக்குள் கொண்டுவர உதவி செய்யும்.