இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புனித அடிமைத்தனத்தைப் பற்றி மூன்று குறிப்புரைகள்

50. (1) முன்குறிக்கப்பட்ட ஆன்மாவே! நீ சேசுவிடமும், கடவுளிடமும் நேரடியாகச் செல்வது அதிக உத்தமம் என்று கருதாதபடி எச்சரிக்கையாயிரு. மாதா இல்லாமல் உன் செயல்கள், உன் கருத்துக்கள் எல்லாம் விலையற்றவையாகும். ஆனால் நீ மாதா வழியாக கடவுளிடம் போவாயானால் உன் செயல்கள் மரியாயின் கிரியைகளாகும். அதனால் அவை உந்நதமாகி கடவுளுக்கு மிகவும் தகுதியுடையவைகளாகும்.  மரியாயின் இரகசியத்தை முழுவதும் ஏற்றுக்கொள்கிற ஆன்மாக்களுக் காக இந்த விதி என்பதை நாம் மறக்கக் கூடாது. அதிலும் அவ்வான்மாக்கள் நேரே சேசுவிடத்திலும் பிதாவிடத்திலும் பேசும்படி மாதாவே அனுகூலம் செய்வதை வெகு விரைவில் தங்கள் அனுபவத்தால் அறிந்து கொள்வார்கள். சேசுவிடம் நேரே தாங்கள் கொள்ளும் தொடர்பை மாதாவே தங்களுக்கு அனுக்கிரகித்து ஏற்பாடு செய்ய வேண்டுமென்றுதான் அவர்கள் இதனால் ஒப்புக்கொள்ளக் கேட்கப்படுகிறார்கள்.

51. (2) மேலும், நீ பேசுவதையும், நீ செய்கிறதையும் உணரவும், அனுபவிக்கவும் முயன்று கஷ்டப்படாமலிருக்கும்படி எச்சரிக்கையாயிரு . ஆனால் மாதா உலகத்தில் கொண்டிருந்த தெளிந்த விசுவாசத்துடன் பேசவும் செய்யவுங் கடவாய். அந்த விசுவாசத்தை தகுந்த காலத்தில் மாதா உனக்குக் கொடுப்பார்கள். பாவம்! சின்ன அடிமையே! கடவுளின் துலக்கமான காட்சியையும், பரவசங்களையும், மகிழ்ச்சிகளையும், திருப்திகளையும், மோட்ச செல்வங்களையும் உன் மகத்வ இராக்கினிக்கு விட்டுவிடு. நீ தெளிந்த விசுவாசத்தைக் கொண்டு திருப்தியாயிரு. இந்த விசுவாசம் உனக்குப் பிடித்தமற்றதாயும் பராக்கு நிறைந்ததாயும், சோர்வும் வறட்சியும் கொண்டதாயும் இருந்தாலும் நீ இவ்வாறு சொல்: "ஆகட்டும், அப்படியே இருக்கட்டும், என் எஜமானி மோட்சத்தில் செய்வதெல்லாம்! இதுவே இப்பொழுது நான் செய்யக் கூடிய நல்ல காரியம்.''

52. (3) இன்னும், உன்னுடைய உள்ளரங்க ஆன்மாவில் பரிசுத்த கன்னித்தாயின் இனிய பிரசன்னத்தை உடனே நீ அனுபவிக்காதிருந்தால் அதற்காக உன்னையே வதைத்துக் கொள்ளாமலிருக்கும்படி அதிக கவனமாயிரு . ஏனென்றால் இது எல்லாருக்கும் அருளப்படாத ஒரு வரப்பிரசாதம். கடவுள் தமது பெரிய இரக்கத்தால் ஒரு ஆன்மாவுக்கு அப்படிச் செய்திருந்தாலும், அந்த ஆன்மா அடிக்கடி அதை நினைவுபடுத்திக் கொள்வதால், மரியாயின் இந்த அந்தரங்கப் பிரசன்னத்திற்கு விழிப்புடன் இல்லாவிட்டால் அதை இழந்து போவது வெகு எளிது.

இந்த துர்ப்பாக்கியம் உனக்கு நேர்ந்தால் அமைதியோடு உன் மேன்மையுள்ள இராக்கினியிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு மரியாதைக்குரிய பரிகாரம் செய்து கொள்.