பிரான்சிஸ்கு சபையினரின் மறைப்பணி

இந்தியாவில் போர்த்துக்கீசிய ஆதிக்கத்தில் இருந்த மேற்குக் கரைப் பகுதியில், குறிப்பாக, கோவா மா நிலத்தில் கிறிஸ்தவத் திருத்தொண்டர்களின் மறைப்பணி வேரூன்றி வளரத் தொடங்கியது. 

1501-ஆம் ஆண்டு அருள் திரு அல்வாரிஸ் கப்ராலும், எட்டு பிரான்சிஸ்கு சபைக் குருக்களும், கண்ணனூர், கள்ளிக்கோட்டை, கொச்சி ஆகிய குறு நிலப் பகுதிகளின் மன்னர்களையும், விஜய நகர அரச குலத்தவரையும் திருமறையில் சேர்ப்பித்துள்ள தாகப் போர்த்துக்கீசிய நூல் (Mytras Lusitanas do oriente vol. III. Pg. 183] கூறுகிறது.

1523 - ஆம் ஆண்டிலிருந்து சாந்தோமிலுள்ள அப்போஸ்தலரான புனித தோமையாரின் கல்லறை, பிரான்சிஸ் சபையினரின் பராமரிப்பில் இருந்தது. 1534- ஆம் ஆண்டு இச்சபையினர் நாகப்பட்டினத்தில் மறைப்பணியைத் தொடங்கினர் அதற்கு முன் பல ஆண்டுகளாக, தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் திருத் தொண்டாற்றி வந்துள்ளனர். 

கருமணல் கரை [Coromandal Coast] என்று அழைக்கப்பட்ட கீழ்க்கரை ஓரங்களில் இம்மறைப்பணியாளர்கள் அயராது உழைத்து, மக்கள் பலரைத் திருமறையில் சேர்த்தனர். 1606-ஆம் ஆண்டு பரிசுத்த தந்தை 5-ஆம் சின்னப்பர் இப்பகுதியை கொச்சி மறை மாவட்டத்திலிருந்து பிரித்து, மைலாப்பூர் மறைமாவட்டத்துடன் இணைத்தார். 

அகுஸ்தீன் சபையின் பேரருள் திரு தொம் செபஸ்தியான் தெ சான் பெத்ரோ என்பவர் இம்மறை மாவட்டத்தின் ஆயரானார். அன்று முதல் வேளாங்கண்ணி திருத்தலம் மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் கண்காணிப்பில் இருந்து வந்தது.