சேசு கூறுகிறார்

2 செப்டம்பர்  1944.

சேசு கூறுகிறார்: 

 மரியா கடவுளை ஞாபகப்பட்டார்கள்.  கடவுளையே கனவு கண்டார்கள.  தான் கனவு காண்பதாகக்  கருதிக் கொண்டார்கள்.  பூமியில் உற்பவமான தன் சரீரத்துடன் ஐக்கியமாவதற்கு அவர்கள் படைக்கப்பட்ட வேளையில், கடவுளுடைய பரலோகத்தின் மாட்சிமையிலே தான் கண்டதைத்தான் மறுபடியும் கண்டார்கள்.  கடவுளின் ஒரு இலட்சணத்தில், தன் நிலைக்குத் தகுந்தபடி சற்றுக் குறைந்த அளவில், அவர்கள் பங்கு கொண்டார்கள்.  அதுதான் ஞாபகப்படல், காணுதல், முன்கூட்டி காணுதல்.  பாவத்தினால் பழுது படாத வல்லமையுள்ள உத்தமமான  அறிவின் ஒரு பண்பு அது.

மனிதன் தேவ சாயலாகவும், பாவனையாகவும் படைக்கப்பட்டான்.  தேவனுடைய சாயல்களுள் ஒன்று, ஆன்மாவில் ஞாபகப்படவும், காணவும், முன்கூட்டி காணவும் கூடுமான சக்தியாகும்.  வருங்காலத்தை அறியும் ஆற்றலின் விளக்கம் இதுவே.  இந்த ஆற்றல் சில சமயம் கடவுளின் சித்தப்படி நேரடியாகக் கிடைக்கிறது.  சில சமயம் அது, ஒருமுகப்பட்ட சிந்தனையின் சக்தியாக, காலையில் எழும் சூரியனைப் போல, கடவுளின் காட்சியில் ஏற்கெனவே அறியப்பட்ட காலங்களின் விஸ்தாரத்தில் ஒரு பகுதியை ஒளிர்விப்பதாக இருக்கிறது.

இப்படிப்பட்ட மறைபொருள்கள் நீ முழுவதும் கண்டுபிடிப்பதற்கும் அதிகமான ஆழமுடையவை.  ஆனால் நீ எண்ணிப் பார். 

உந்நத உயர்ந்த அறிவு, அனைத்தையும் அறிகிற மனம், சகலத்தையும் காண்கிற பார்வை, உங்களைத் தன் சித்தத்தினாலும், தன் அளவில்லா அன்பின் சுவாசத்தாலும் படைத்து, உங்களைத் தோற்றுவித்தலினாலும் உங்களுடைய இறுதிக் கதியாயிருப்பதாலும், உங்களைத் தன் பிள்ளைகளாக்கியுள்ளதே, அப்படிப்பட்ட வல்லமை, தன்னிலிருந்து வேறுபாடான ஒன்றை உங்களுக்குத் தர முடியுமா?  சிருஷ்டி சிருஷ்டிகரைக் கொள்ள முடியாததால், கடவுள் அதைத் தம்முடைய மிக மிகச் சிறிதான கூறுகளில் ஒன்றாக உங்களுக்குத் தருகிறார்.  அது மிக மிகச் சிறிய சிறு கூறாயிருந்தாலும், அந்தப் பாகம் முழுமையாகவும், பூரணமாகவும் இருக்கிறது.

எப்படிப்பட்ட அறிவின் பொக்கிஷத்தை மனிதனாகிய ஆதாமுக்குக் கடவுள் கொடுத்திருந்தார்! அவனுடைய வீழ்ச்சி அதைப் பழுதாக்கியது.  ஆனால் என்னுடைய பலி அதை மீண்டும் கொண்டு தருகிறது.  அறிவின் பிரகாசத்தை, அதன் செல்வத்தை, அதன் கல்வியை உங்களுக்குத் திறக்கிறது.  வரப்பிரசாதத்தால் கடவுளுடன் ஐக்கியமாகி, புத்தி என்னும் புலனை அவருடன் பகிர்ந்து கொள்ளும் மனித மனம் எவ்வளவு உந்நதம் வாய்ந்தது!... கடவுளுடன் வரப்பிரசாதத்தால் இணைந்த மனித மனம்!!

அறிவதற்கு வேறு எந்த வழியுமில்லை.  இதை மனிதனுக்கு மேற்பட்ட இரகசியங்களைத் துருவித் தேடுகிறவர்கள் நினைக்க வேண்டும்.  தேவ வரப்பிரசாத அந்தஸ்திலிருக்கிற ஆன்மா விலிருந்து வராத எந்த அறிவும் சாத்தானிடமிருந்தே வருகிறது.  கடவுளுடைய கற்பனைகளில் மிகத் தெளிவாகக் காணப்படும் சட்டத்திற்கெதிராக நிற்கும் ஆன்மா அவருடைய வரப்பிரசாதத்தில் இராது.  மானிட விஷயங்களைப் பொறுத்தமட்டில் அப்படிப்பட்ட அறிவு மிக அபூர்வமாகவே உண்மையோடு பொருந்தும்.  மானிட விஷயங்களுக்கு மேற்பட்டவை மட்டில் அது ஒருபோதும் உண்மையோடு பொருந்தாது.  பசாசானவன் பொய்க்கு அப்பனாயிருக்கிறான்.  பொய்யின் பாதைக்கு வழி காட்டவே அவனால் முடியும்.  கடவுளிடமிருந்து வருகிற முறையைத் தவிர உண்மையை அறிவதற்கு வேறு முறை இல்லை.  அவர், ஒரு தகப்பன் தன் வீட்டைப்பற்றி மகனுக்கு நினைவூட்டுவது போல் நினைவூட்டுகிறார், பேசுகிறார், அல்லது ஞாபகப்படுத்துகிறார்.  “நீ என்னோடு சேர்ந்து இதைச் செய்து வந்தாயே, நினைவிருக்கிறதா?  நீ அதைக் கண்டாயல்லவா?  நீ வேறு ஒன்றைக் கேள்வியுற்றாயல்லவா?  நான் உனக்கு பிரியாவிடை முத்தமளித்தது ஞாபகமில்லையா?  என்னை நீ முதல் தடவையாகக் கண்டது நினைவிருக்கிறதா?  அப்போது என்னுடைய முகத்தில் வீசிய பிரகாசமுள்ள ஒளி உன் பரிசுத்த ஆத்துமத்தில் வீசியது உனக்கு ஞாபகமில்லையா?  அது அப்போதுதான் என்னால் படைக்கப்பட்டு தூய்மையாகவும், சுதந்திரமாகவும் இருந்தது.  பிந்தி உன்னைப் பழுதடையச் செய்த தீமை எதுவும் அதில் இல்லை.  நீ ஒரு அன்பின் துடிப்பால் தூண்டப்பட்டு, அன்பென்றால் என்னவென்று முதன்முறையாகக் கண்டுணர்ந்தது நினைவிருக்கிறதா?  நாங்கள் இருப்பதும், புறப்படுவதுமாகிய திருநிகழ்ச்சி அதுவே.” வரப்பிரசாத நிலையிலிருக்கிற அளவுள்ள மனிதனின் சக்தி எட்ட முடியாததை ஞானத்தின் இஸ்பிரீத்துவானவர் அவனுக்குத் தெளிவாக்குகிறார், படிப்பிக்கிறார்.

ஆனால் இஸ்பிரீத்துவைக் கொண்டிருப்பதற்கு வரப்பிரசாதம் தேவை. சத்தியத்தையும், ஞானத்தையும் கொண்டிருக்க வரப்பிரசாதம் தேவை.   பிதாவைக் கொண்டிருக்கவும் வரப்பிரசாதம் அவசியம்.  மூன்று தேவ ஆட்களும் வாசம் செய்யும் கூடாரம் வரப்பிரசாதமே.  நித்திய பிதா தங்கியிருந்து உரையாடும் கிருபாசனம் அது.  அதிலே மேகத்தின் உள்ளிருந்தல்ல, தமது திருவதனத்தை தன் பிரமாணிக்கமுள்ள பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தி உரையாடுகிறார்.  அர்ச்சிஷ்டவர்களும், நீதியுடையவர்களும் கடவுளை ஞாபகப்படுகிறார்கள்.  சிருஷ்டிக்கிற மனதில் அவர்கள் கேட்ட வார்த்தைகளை அவர்கள் ஞாபகங் கொள்கிறார்கள்.  அவ்வார்த்தைகளை உந்நத நன்மைச் சுரூபி அவர்களுடைய இருதயத்தில் புதுப்பித்து, அவ்விருதயங்களை சத்தியத்தின் நேர்முக தியானத்திற்கும், காலம் என்பதின் அறிவுக்கும் கழுகுகளைப் போல் மேலே உயர்த்துகிறார்.

மரியா வரப்பிரசாதத்தால் நிறைந்திருந்தார்கள்.  ஏகமும், திரித்துவமுமான முழுமை வரப்பிரசாதம் அவர்களிடம் இருந்தது.  திருமணத்திற்கு மணவாளியைப் போல், வாரிசுக்கான மணவறை போல், அவர்களுடைய தாய்மைக்கும், அவர்கள் ஆற்ற வேண்டிய அலுவலுக்குமான ஒரு தேவ ஆளைப்போல் அவர்களை ஆயத்தம் செய்தது.  பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசினிகளின் வரிசையை மாமரி முற்றுப்பெற வைத்தார்கள்.  புதிய ஏற்பாட்டின் “கடவுள் வாக்கியர்களின்” காலத்தைத் தொடங்கி வைத்தார்கள். 

தேவனுடைய வார்த்தையின் உண்மையான பேழையான மாமரி, தன் மாசற்ற இருதயத்துள் உற்றுப் பார்த்து, அங்கே கடவுளின் விரல் எழுதியிருந்த நித்திய ஞானத்தின் வார்த்தைகளைக் கண்டுபிடித்து, எல்லா அர்ச்சிஷ்டவர்களும் செய்வது போல், தன் முடிவறியா ஆன்மா, ஜீவனுள்ள யாவற்றின் சிருஷ்டிகராகிய பிதாவினால் படைக்கப்பட்ட போது, அதிலே எழுதப்பட்ட வார்த்தைகளை தான் ஏற்கெனவே கேட்டிருந்ததாக ஞாபகப்பட்டார்கள்... அவர்கள் தன் எதிர்கால அலுவலைப் பற்றிய எல்லாவற்றையும் ஞாபகப்படவில்லையெனில், அதன் காரணம், கடவுள் தம் தெய்வீக விவேகத்தின் நியதிப்படியும், நன்மைத்தனத்தின்படியும், சிருஷ்டிகளுக்கு ஒரு சன்மானமாகவும், மனித முழுமையில் சில இடைவெளிகளை விடுவதினாலேயே.

இரண்டாம் ஏவாளாகிய மாமரி, பிரமாணிக்கமுள்ள நல்ல மனதுடன், கிறீஸ்துவின் தாயாயிருப்பதின் பேறுபலனில் தன் பாகத்தைத் தானே சம்பாதிக்க வேண்டியிருந்தது.  கடவுள் தம்முடைய கிறீஸ்துவிடமிருந்தும், அவரை மீட்பராக்குவதற்கு இதைக் கேட்டார்.

மரியாயின் உள்ளம் மோட்சத்தில் இருந்தது. அவர்களின் ஒழுக்க நுட்பமும் அவர்களின் சரீரமும் உலகத்தில் இருந்தன.  அவை அவ்வுள்ளத்தைச் சென்றடைவதற்கும்,  அதன்பின் இஸ்பிரீத்துவுடன் வளமுள்ள அரவணைப்பில் ஐக்கியமாவதற்கும், மண்ணையும், மாம்சத்தையும் மிதித்துச் செல்ல வேண்டியிருந்தது.

இது நான் எழுதும் குறிப்பு:  ஏனோ தெரியவில்லை.  நேற்று முழுவதும் மாதாவின் பெற்றோரைப் பற்றிய செய்தி சக்கரியாஸால் அவர்களுக்கு அறிவிக்கப்படுவதைக் காணப் போவதாக எண்ணிக் கொண்டிருந்தேன்.  மேலும் என் போக்கில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  “அர்ச்சிஷ்டவர்கள் கடவுளை ஞாபகப்படுவதை” சேசு விளக்கிக் கூறுவார் என்று.  இன்று காலை  காட்சி தொடங்கிய போதும், இதோ அவர்கள் மாதாவிடம் “நீ ஓர் அநாதையாகி விட்டாய்” என்று கூறுவார்கள் என்று எண்ணினேன்.  அதனால் என் இருதயம் நடுங்கியது.  ஏனென்றால் கடந்த நாட்களின் துயரத்தை இப்போது நானும் அனுபவிக்கப் போவதாக நினைத்துத்தான்.  ஆனால் நான் காணவும், கேட்கவும் எண்ணிய எதுவுமே அதில் இடம் பெறவில்லை.  தப்பித் தவறி ஒரு வார்த்தை முதலாய் அப்படி வரவில்லை.  இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  காரணம், இவ்வலுவலில் என்னுடைய பாகமாக எதுவுமில்லை.  ஒரு சந்தர்ப்பத்தைப் பற்றி ஒரு சின்ன அபிப்பிராயத்தைக் கூட நான் கூறுவதற்கு இடமில்லை என்பது இதனால் உறுதியாக்கப்படுகிறது.  எல்லாமே இன்னொரு மூலத்திலிருந்து எனக்குக் கொடுக்கப்படுகிறது.  எப்போதும் நான் பயந்து கொண்டிருந்த பயம் அடுத்த சந்தர்ப்பம் வரைக்கும் எனக்குத் தீர்ந்து விட்டது... ஏனென்றால் நான் ஏமாற்றப் படுவதாகவும், நானும் ஏமாற்றுவதாகவும் எப்போதும் எனக்குள் ஓர் ஐயம் உள்ளது.