இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ உபகாரங்களைக் கொண்டு தீர்க்கிற தீர்ப்பு!

சர்வேசுரன் மனிதனைப் பூலோகம் என்கிற அந்நிய நாட்டுக்கு அனுப்பும்போது, அவன் பிழைக்கிறதற்கு அவனுக்கு வேண்டிய செல்வங்களைக் கொடுத்தார். அவன் இந்தப் பூலோகத்தை விட்டுத் திரும்புகிற போது தாம் கொடுத்த உடமைகளுக்கெல்லாம் கணக்குக் கேளாமல் விட மாட்டார். தன் பணிவிடைக்காரன் கையிலே சிறிது பொருளைக் கொடுத்து வியாபாரத்துக்கு அனுப்பின எசமான், தான் நினைத்த பிரகாரம் கொள்முதல், விற்பனை நடந்ததோ , ஆதாயமோ, நஷ்டமோ, வீணாய் அழிந்து போனதோ என்று கணக்குக் கேட்கிறது உண்டல்லவோ? அப்படிச் சர்வேசுரன் மனிதனுக்குக் கொடுத்த நன்மைக்கு நன்றியறிந்து நடந்தானோ, நன்றி கெட்டதனமாய் பாவத்தைச் செய்தானோவென்று கணக்குக் கேட்பார்.

முதலாவது: உன்னை உண்டாக்குமுன்னே நீ ஒரு பொருளும் அல்ல. ஒருவராலும் நினைக்கப்பட்டதும், எண்ணப்பட்டதுமாகிய பொருளல்லாமல் இருந்தாய். அப்படியிருக்க உன்னைச் சிறப்புள்ள பொருளாக்கி மற்றப் பிரபஞ்ச வஸ்துக்களைப் போல் படைக்காமல், ஞானமுள்ள வஸ்து வாய்ப் படைத்தாரே, அந்த ஞானமில்லாத வஸ்துக்களிடத்திலுள்ள நன்மைத்தனம் , உன்னிடத்தில் இல்லாமல் போனதென்ன ? காற்றும் கடலும் அவர் சொன்னாற்போல் கேட்டது. கல்லும் மண்ணும் அவர் பாடுபட்டதற்கு இரங்கி அதிர்ந்தது. உன்னுடைய நெஞ்சு மாத்திரமே எந்தக் காரியத்துக்கும் இளகவில்லை. உயிருள்ள பொருட்களில் மரத்துக்குப் பஞ்சேந்திரியத் தோற்றமும் இல்லாமலும், மிருகங்களுக்கு புத்தியும் ஞானமும் இல்லாமலும் இருக்க, உனக்குப் பஞ்சேந்திரியமும், புத்தியும், ஞானமுமுள்ள ஆத்துமத்தைக் கொடுத்திருக்க, அவைகள் நடந்த அம்மாத்திரம்தான் நடந்தாயோ? அதுவுமில்லையே! மரம் தன்னை வைத்துப் பயிராக்கின வனுக்குக் காய்கனி கொடுக்கின்றது. மிருகம் தன்னை வளர்த்தவனுக்குப் பாடுபட்டு உழைக்கின்றது. நீ உன்னை உண்டாக்கின சர்வேசுரனுக்கு என்ன செய்கிறாய்? ஒரு பலனும் காணோம்.

இரண்டாவது : உன் சரீரத்துக்குச் செய்த உபகாரத்தைப் பார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் - வெளிச்சம் கொடுக்கவும், பலப்பல தானியங்கள் விளைந்து உணவாயிருக்கவும், ஆறு, குளங்கள், ஏரி, ஊற்றுகள் பானமாயிருக்கவும், பொன், வெள்ளி, பட்டு உனக்கு அலங்காரமாயிருக்கவும், இப்படியே சகல பொருளும் உனக்கு உபகாரமாயிருக்கக் கொடுத்திருக்க, நீ அந்த உபகாரங்களைக் ஒழுங்குப்படி அநுபவியாமல், வெளிச்சத்துக்காக உண்டாக்கப்பட்ட நட்சத்திரங்களைக் கொண்டு நியாயமில்லாத சாஸ்திர சகுனம் பார்க்கத் தலைப் பட்டாய். உனக்குக் கொடுத்த திரவியங்களால் பாவத்தைக் கட்டிக் கொண்டு தருமம் செய்யாமல் போனாய். ஆடை ஆபரணங்களைச் சுத்தக் கருத்துடன் அநுபவியாமல், பாவக் கருத்துடன் அலங்கரிக்கத் தலைப்பட்டாய்.

உன் ஆத்துமத்துக்குச் செய்த உபகாரங்களைப் பார். எத்தனையோ பேர், சோனகர், துலுக்கர், பதிதர், அஞ்ஞானிகள் உன்னைப் போலவே உண்மையான வேதத்தையும், சர்வேசுரனையும் அறியாமல் பேய்க்கு அடிமையாயிருக்கிறார்கள். உனக்கு மெய்யான வேதமும், குருவும், உபதேசமும், ஆத்துமத்துக்கு வேண்டிய சகல நன்மைகளும் இருக்க, தலையெடாமல் போகிறதென்ன? பாவீ , நீ இத்தனை உபகாரத்தையும் பாராமல் அஞ்ஞானிகளிலும் கடை கெட்டவனாய் நடக்கிறாய். அஞ்ஞானிகள் பசாசுக்கு எத்தனை பயபக்தியோடே வணங்கி நடக்கிறார்கள். நீயோவென்றால் மெய்யான சர்வேசுரனை அறிந்தும், அவரை அம்மாத்திரம் பயபக்தியோடே ஆசரிக்கவும் இல்லை, அவர் கற்பித்த பிரகாரமாய் நடக்கவும் இல்லையே.

அவனவன் தனித்தனியே பெற்ற உபகாரங்களைப் பார். சிலர் செல்வந்தர்களாய், சிலர் அரசாங்க அதிகாரிகளாய், சிலர் அழகுள்ளவர்களாய், சிலர் திரவியத்திலோ, கல்வி சாஸ்திரத்திலோ மிகுந்தவராய், இப்படிப்பட்ட உபகாரங்களைப் பெற்றதற்கு என்ன செய் கிறார்களென்றால், பணக்காரர்களாயிருக்கிறதினாலே சர்வேசுரனை ஸ்துதிக்க வேண்டியிருக்கையில், தம்மைத் தாமே புகழ்ந்து மற்றவர்களை நிந்திப்பார்கள். அரசாங்க அதிகாரம் வந்ததினாலே நீதியோடு குடிகளைக் காக்க வேண்டியிருக்கையில், அவர்களிடம் அநியாயமாய் வரி வசூலித்து, அவர்கள் குடியைக் கெடுக்கிறார்கள். செல்வமுள்ளவர்கள் பசிதாகம் உள்ளவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்யவும், நிர்வாணமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரம் கொடுத்துக் காப்பாற்றவும் வேண்டியிருக் கையில், தானும், தன் குடும்பமும் பிழைத்தால் போதும் என்று சாப்பிட்டு, மற்றதைப் புதைத்து வைக்கிறார்கள். ஆசாபாசத்தினாலே, வெட்டு குத்துப் பகை உண்டாகின்றதென்றும் பாராமல் சீவனுக்கு ஒட்டி யுத்தம் செய்கிறார்கள். ஆத்துமத்துக்காக வேண்டி ஒரு பிரயாசையும் படாமல் போகிறார்கள். கல்வி சாஸ்திரங்களினாலே ஆங்கார கம்பீரம் மிகுந்து, இனி இல்லை எனப்பட்ட கபட நாடக சூத்திரங்களை எல்லாம் செய்கிறார்கள். மற்றவர்களையும் கெடுத்துத் தாங்களும் கெட்டுப் போக வழி பார்க்கிறது மட்டுமன்றி, நல்ல வழியிலே நடந்து புண்ணியங்களைச் செய்யப் போகிறது ஒன்றும் காணோம். இவைகளுக்கெல்லாம் என்ன கணக்குச் சொல்லுவாய்?

இதுவுமல்லாமல் ஒருவனுக்குத் திரவிய செல்வம், உடமை உற்பத்தி, அழகு முதலான பெருமை, நன்மைகள் கெட்டுப் போனால் அதன் வழியாய் நல்ல தாழ்ச்சி, பொறுமை வர வேண்டுமென்று சர்வேசுரன் தயை செய்வார். சவுல் என்கிறவன் ஆடு மேய்க்கிறவனாய் இருக்கையில், பாவமில்லாமல் சிறு பிள்ளை போல் மாசற்றவனாக நடந்து, இராஜ மகிமை அடைந்தபின் தேவ துரோகியாய்ப் போனான். சாலமோன் என்கிறவன் ஞானமென்கிற வரம் அடையுமுன்னே சுவாமிக்குப் பிரியமுள்ளவனாய் நடந்து, ஞானம் மிகுந்து செல்வ பாக்கியம் மிகுதியாய் வந்த பின்பு, மோகபாவத்தில் அமிழ்ந்து போனான். இப்படி பலர் சுவாமி செய்கிற உபகாரங்களை அறியாமல் நன்றி கெட்டவர்களாய்ப் போகிறார்கள். ஒரு குடியானவன் இராஜாளியைக் கொன்று தின்னப் பிடித்திருந்த பாம்பை அடித்து இராஜாளியைக் காப்பாற்றி விட்டான். அந்த இராஜாளி அவனுடைய நல்ல தண்ணீர்க் குடத்தை உடைத்ததைக் கண்டு, தனக்கு ஏன் இந்தத் துரோகம் செய்ததென்று முறைப்பட்டாலும், அந்தக் குடத்துத் தண்ணீரைக் குடித்தவர்கள் எல்லாரும் செத்துப்போனது கண்டு, தானும் அப்படிக் குடித்துச் செத்துப் போகாமல் அதை உடைத்துப் போட்டது பெரிய நன்மை என்று அறிந்தான். அப்படியே செல்வ பாக்கியங்களினாலே கெட்டுப் போவார்களென்று சர்வேசுரன் அறிந்து அவைகளை நீக்கிவிட்டால் அது நன்மையென்று நினையாமல் கஸ்திப்படுகிறார்கள்.

இன்னும் ஆண்டவர் உனக்குத் தனித்தனியே செய்த நன்மைகள் எத்தனை ! கூன், குருடு, செவிடு , சப்பாணி, முடம் நீக்கி, சகல உறுப்புகளும் பழுதில்லாமல் கொடுத்தது எத்தனை பெரிய நன்மை ! அநேகம் பேர் பிறந்தவுடனே செத்துப் போகிறார்களே, உன்னை இம்மாத்திரம் வயதுடன் வைத்தது எத்தனை பெரிய உபகாரம்! ஒரு பாவத்தையாகிலும் பொறுத்துக் கொள்ளாமல் எத்தனை பேரைத் தண்டிக்கிறார்! உனக்குக் கணக்கில்லாத பாவங்களைப் பொறுத்தாரே. அதென்ன கொஞ்ச உபகாரமோ? ஒவ்வொரு நாளும் அவர் சாவு, நோவு, தீது, துன்ப துரிதம் இவையெல்லாம் வந்து உன்னை அணுகாமல் காப்பாற்றிக் கொண்டு வருகிறது கொஞ்ச காரியமோ? இந்த உபகாரங்களை எல்லாம் யாரால் எண்ண முடியும்? யாராலே சொல்லக் கூடும்? இதெல்லாம் நீ ஒன்றும் விசாரியாமல் திரிகிறபோதே உன்னுடைய நடுத்தீர்வையும் ஆக்கினையும் எம்மாத்திரம் கடினம் என்று நீயே யோசித்துப் பார்.

ஓர் அரசன் வேட்டைக்குச் சென்றவிடத்தில் கள்ளர் ஓர் அழகுள்ள ஸ்திரீயைப் பிடித்து அடித்துக் குத்தி வாதை செய்து, அவள் போட்டிருந்த உடைமையெல்லாம் பறித்துக் கொண்டு, அவளையும் சிறையாய்ப் பிடித்துக் கொண்டு போகிறதைக் கண்டு மனதிரங்கி, அந்தக் கள்ளரோடு தான் போய் எதிர்த்து யுத்தம் செய்து, அவர்கள் கையிலே இருந்து அவளை மீட்டுக் கொண்டு வந்து, அவளுடைய உடம்பு தேறும் வரை வேண்டிய பரிகாரம் செய்து, பின்பு வேண்டிய ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து, இராஜ வரிசை எல்லாம் கொடுத்து, அவளைக் கலியாணமும் செய்து, முடிசூட்டி இராக்கினியாக ஸ்தாபித்தான். ஆனால் அயலூருக்கு அரசன் போயிருக்கிற சமயத்தில் அவள் இந்த நன்றியெல்லாம் மறந்து கெட்டுப் போனாள். அரசன் ஊரிலிருந்து வந்து இந்தச் விஷயத்தை அறிந்து, இவளை என்ன செய்வோம் என்று ஆலோசனை செய்து விலக்கி வைத்தான். அங்கேயும் ஒரு மோக பாவியோடு துன்மார்க்கத்தில் ஈடுபட்டாள். அதையும் அரசன் பொறுத்துக் கொண்டு வேண்டிய புத்திமதி சொல்லி அடக்கிப் போட்டாலும், மறுபடியும் வெட்கம் கெட்டதனமாய் வேசி மார்க்கத்திலே நடந்தால், அவளை என்னென்ன ஆக்கினையிட்டாலும் போதாது என்று சொல்ல வேண்டியிருக்குமே. இந்த உவமைக்குச் சரியாய் உன்னிடத்திலேயே நடந்திருக்கின்றது பார்.

நீ பூலோகத்திலே வந்து பிறக்கிறபோது ஓர் ஆடை ஆபரணமும் இல்லாமல், நிர்வாணத்தோடே வந்து பிறந்தாய். பசாசுக்கள் என்கிற கள்ளர்கள், ஆத்துமத்திலே பாவ வெட்டு குத்துக்களுமாய்க் காயப்படுத்தி, தேவ வரப்பிரசாதம் முதலிய சகலத்தையும் பறித்துக் கொண்டு, உன்னையும் சிறையாக்கிக் கொண்டிருக்கையில், அந்த அரசன் மனமிரங்கி வந்து கள்ளரை எதிர்த்துச் ஜெயித்தது போல, பரலோக அரசராகிய சேசுநாதர் உன்னைக் கண்டு இரங்கி, உன் எதிரிகளை ஜெயித்து, தாம் பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தத்தின் பலனைக் கொண்டு உன்னைப் பசாசுக்கள் கையினின்று மீட்டுக் கொண்டு, ஞானஸ்நானம் என்கிற மருந்தைக் கொண்டு, உன் காயங்களைக் குணமாக்கி, திவ்ய நற்கருணை என்கிற திவ்விய போசனத்தை ஓட்டிப் பலப்படுத்தின பின்பு, நீ அவர் செய்த நன்றியெல்லாம் மறந்து போய்ப் பசாசோடே ஒருமித்து, உன்னை உண்டாக்கி இரட்சித்த கர்த்தருக்குத் துரோகம் செய்தாய். அவர் ஒருவிசை, இரண்டுவிசை பொறுத்ததையும் சட்டை செய்யாமல் மறுபடி எத்தனையோ முறை பாவத்திலே விழுந்தாய். அந்த ஸ்திரீயை விட அதிக வெட்கங் கெட்டவன் ஆனாய். இப்படிப்பட்ட துரோகத்திற்கு என்னென்ன வகை தீர்வையிட்டால்தான் என்ன? போதுமென்று சொல்லுவார் உண்டோ?

ஐயையோ பாவீர் ஏன் இப்படி நன்றியில்லாதவனாய்க் கண்ணில்லாத குருடனைப் போல திரிகிறாய்? இப்படிப்பட்ட பாவ மயக்கத்தை விட்டுச் செய்த பாவத்திற்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.