சேசுவின் திரு இருதயத்திற்கு திவ்விய நற்கருணைப் பாத்திரமாக இருக்கும் தேவதாய் கன்னிமாமரி!

ஜூன் 23, 1943

சேசு கூறுகிறார் :

"இன்று நற்கருணை பற்றிய ஒரு சத்தியத்தை நான் உங்களுக்குக் காட்டுவேன். திவ்விய நற்கருணை சர்வேசுரனுடைய திரு இருதயமாக இருக்கிறது என்றால், மாமரி அந்தத் திரு இருதயத்தின் நற்கருணைப் பாத்திரமாக இருக்கிறார்கள். பரலோக தேவ அப்பம் வந்திறங்கிய உயிருள்ள, நித்திய திவ்விய நற்கருணைப் பாத்திரம் அவர்கள்! என்னைக் கண்டடைய, அதாவது கொடைகளின் முழுமையில் என்னைக் கண்டடைய விரும்புபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் என் மகத்துவத்தையும், என் வல்லமையையும், என் தெய்வீகத்தையும், மாமரியின் இனிமையிலும், பரிசுத்ததனத்திலும், தேவசிநேகத்திலும்தான் தேட வேண்டும். தன் இருதயத்தைத் தன்னுடையவும் உங்களுடையவும் சர்வேசுரனுடைய திரு இருதயத்திற்காக ஒரு திவ்விய நற்கருணைப் பாத்திரமாக ஆக்குபவர்கள் அவர்களே.

ஆண்டவருடைய திருச்சரீரம் மரியாயின் திருவுதரத்தில்தான் ஒரு சரீரமாக ஆனது. தன்னுடைய மகா பரிசுத்த, தாய்க்குரிய இருதயமாகிய தொட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிற தன்னுடைய முழு அன்பிற்குரிய குழந்தையானவரை உங்களுக்குத் தருவது போல, அவருடைய திருச்சரீரத்தை ஒரு புன்னகையுடன் உங்களுக்குத் தருபவர்கள் என் மாசற்ற அன்னையே. மோட்சத்தில் தன் திருக்குமாரனும், தன் ஆண்டவருமாகிய என்னை உங்களுக்குத் தருவதுதான் மரியாயின் மகிழ்ச்சியாக இருக்கிறது. தன் திருக்குமாரனுடன் அவர்கள் தன் பாவக் கறைபடாத மாசற்ற இருதயத்தையும், அளவற்ற விதமாய் நேசித்துள்ளதும், அளவற்ற விதமாய்த் துன்புற்றுள்ளதுமாகிய திரு இருதயத்தையும் உங்களுக்குத் தருகிறார்கள்.''

என் தாய் மனதளவில் மட்டும்தான் துன்பப்பட்டார்கள் என்ற ஒரு கருத்து பரவலாக உள்ளது. இல்லை. அழியக்கூடிய மனிதர்களின் திருமாதா எல்லா வகையான வேதனைகளையும் அனுபவித்தார்கள். அவர்கள் அவற்றிற்குத் தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதால் அல்ல. அவர்கள் மாசற்றவர்களாக இருந்தார்கள். வேதனையைத் தூண்டும் ஆதாமின் வழிவந்த பாவம் அவர்களில் இல்லை. மாறாக, மனுக்குலம் முழுவதினுடையவும் இணை இரட்சகி, அதன் தாய் என்ற முறையில், அவர்கள் அந்த தெய்வீக பலியை அதன் முழு ஆழத்திலும், அதன் எல்லா வடிவங்களிலும் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருந்தார்கள். இதன் காரணமாக, ஒரு பெண்ணாக, ஒரு குழந்தையைக் கருத்தாங்குகிற ஒரு பெண்ணுக்குரிய தவிர்க்க முடியாத சகல துன்பங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள்; என் பாரத்தைத் தன் பரிசுத்த மாம்சத்தில் சுமந்து, களைப்பினால் துன்புற்றார்கள்; எனக்குப் பிறப்பளிப்பதில் அவர்கள் துன்புற்றார்கள் (நம் ஆண்டவளின் தெய்வீகத் தாய்மை அவர்களுக்கு எந்த விதமான சரீர வேதனையையும் தரவில்லை. ஏனெனில் பிரசவ வேதனை என்பது ஜென்மப் பாவத்தின் விளைவாக இருக்கிறது. ஆனால் இந்தப் பாவத்தின் கறையால் ஒரு கணம் முதலாய் தீண்டப்படாத அமலோற்பவத் தாயாக அவர்கள் இருந்தார்கள். ஆனால் மாமரி, இணை இரட்சகி என்ற முறையில், சேசுவின் கன்னிமை உற்பவத் தையும், கன்னிப் பிறப்பையும் பொறுத்த வரையிலும் கூட, சுற்றுச் சூழல்களாலும், மனிதர்களாலும் எல்லா வகையான வேதனை யையும் அனுபவித்தார்கள்.). எகிப்துக்கு அவசரமாக ஓடிப் போக வேண்டியிருந்ததில் அவர்கள் துன்புற்றார்கள்; உணவின்மையால் துன்பப்பட்டார்கள்; உஷ்ணம், குளிர், தாகம், பசி, வறுமை, களைப்பு ஆகிய எல்லாவற்றாலும் துன்பப்பட்டார்கள், தேவ சுதனாகிய நான் மனுக்குலத்திற்குரிய சகல துன்பங்களுக்கும் உள்ளாகியிருக்க, அவர்கள் ஏன் துன்பப்பட்டிருக்கக் கூடாது?

அர்ச்சியசிஷ்டவர்களாக இருப்பது என்றால், பருப்பொரு ளாகிய சரீரத்தின் வேதனை, துன்பங்களில் இருந்து விலக்குப் பெற்றிருப்பது அல்ல. மேலும் இரட்சகர்களாக இருப்பது என்பது விசேஷமான முறையில் வேதனையைத் துய்த்துணர்வதாக இருக்கிற சரீரத்தின் வேதனை துன்பங்களுக்கு உட்பட்டிருப்பதாக இருக்கிறது. பரிசுத்ததனமும், இரட்சணியமும் எல்லா வழியிலும் நிறைவேற்றப் படுகின்றன, எட்டப்படுகின்றன. சரீர துன்ப, வேதனைகளை பாவத்திற்கல்ல, பேறுபலனுக்குரிய ஒரு ஆயுதமாக்கிக் கொள்வது சிருஷ்டிக்குப் போதுமானதாக இருக்கிறது.

மாமரியும் நானும் மனித சுபாவத்தின் சகல வேதனை களையும் உங்கள் மீட்பிற்குரிய சுமைகளாக ஏற்றுக் கொண்டோம். இப்போதும்கூட, நீங்கள் வரப்பிரசாதத்திற்கு செவிடர்களாகவும், எனக்கு எதிராகக் கலகம் செய்பவர்களாகவும் இருப்பதைக் காணும்போது அவர்கள் துன்பப்படுகிறார்கள். நான் திரும்பவும் சொல்கிறேன், பரிசுத்ததனம் என்பதற்கு, வேதனைகளில் இருந்து விலக்குப் பெற்றிருத்தல் என்பது பொருளல்ல, மாறாக வேதனை சுமத்தப்பட்டிருத்தல் என்பதுதான் பொருள்.

ஆகவே, ஒரு தாயின் புன்னகையோடு என்னை உங்களுக்குத் தருபவர்களாகிய மாமரிக்கு, என் தாயாயிருப்பதால் அவர்களுக்கு வந்த சகல வேதனைகளுக்காகவும் நன்றி செலுத்துங்கள். யாருடைய திருவுதரத்தில் வார்த்தையாகிய நான் மாம்சமானேனோ, அந்த என்னுடைய திருமாதாவுக்கு நன்றி செலுத்துவது பற்றி நீங்கள் ஒருபோதும் நினைப்பதேயில்லை. நித்திய ஜீவியத்திற்கென்று உங்களைப் போஷிப்பதற்காக நான் இப்போது உங்களுக்குத் தரும் இந்த சரீரம், எனக்கு அவர்கள் தந்தது!

போதும். என்னுடையவும், உங்களுடையவும் மகா பரிசுத்த அன்னையாகிய மாமரியின் திருமார்பாகிய உயிருள்ள சிங்காசனத்தின்மீது ஒளி பொருந்திய திவ்விய நற்கருணையாக இருக்கிற என்னை தியானித்து ஆராதியுங்கள்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...