அர்ச். தோமையார் வரலாறு - புனித தோமையாரின் முதல் சீடன்

பட்டணத்து வீதியொன்றின் வழியாகச் சென்று கொண்டிருக்கையில் தோமையார் பிராமண வாலிபன் ஒருவனைச் சந்தித்தார். அவன் கபடற்றவனாகவும், திறந்தமனதும், விரிந்த புத்தியும் உடையவனாகவும் காணப்பட்டான். அவன் பெயர் மலையாக்கல் அப்போஸ்தலர் அவனை அணுகினார்; இருவரும் உரையாடிக்கொண்டே வழி நடந்தனர்.

தோமையார் :- " என் மகனே! நீ எங்கிருந்து வருகின்றாய்?"

வாலிபன் :- என் காலைக் கடனை முடித்துக்கொண்டு, தேவர்களைத் துதிக்கக் கோவில் சென்று திரும்புகிறேன்.

தோமை :- அத்தேவர்கள் உன் செபத்தைக் கேட்கின்றார்கள் என்று நம்புகிறாயா ?

வாலி :- அவர்கள் எப்படிக் கேட்கக்கூடும் !

தோமை :- அப்படியானால் ஏன் அவற்றைக் கும்பிடுகிறாய் ?

வாலி : என் தகப்பனார் அங்கு போகிறார். என் பாட்டனாரும் போய் வந்து கொண்டிருந்தார். அதுவே நாட்டு வழக்கம். அப்படியிருக்க நான் வேறு விதமாக நடக்க முடியுமா ?

இதைக் கேட்ட தோமையார் அவன் மீது இரக்கம் கொண்டார்; உண்மையான கடவுளைப்பற்றி நெடுநேரம் அவனுக்கு உபதேசித்தார்; அவன் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, "ஆண்டவரின் அருள் உனக்கு என்றும் இருக்கக்கடவதாக!" என்று அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

அன்று முதல் அவன் அடிக்கடி அப்போஸ்தலரிடம் வந்து போவது வழக்கம். வந்தால் அவரது கால் மாட்டில் உட்கார்த்து அவர் போதனைகளைச் சலிப்பின்றி நெடுநேரம் கேட்பான். இயேசு நாதரையும், அவரது திருத்தாயாரையும் பற்றிப் பேசுகையில் அதிக ஆவலோடு கேட்டுக் கருத்துக்களைப் புரிந்து கொள்வான். பல நாள் இவ்வாறு போதனைகள் கேட்ட பின் தோமையார் அவனுக்குத் தோமா என்னும் பெயர் சூட்டி ஞானஸ்நானம் கொடுத்தார். இச்செய்தியைக் கேட்ட அவன் தந்தை, அவன் மீது அடங்காக் கோபம் கொண்டான்; அவனை வெறுத்தான்; கடைசியாக வீட்டினின்று அவனை விரட்டிவிட்டான். இவ்வாறு அனாதையாக நின்ற வாலிபனைத் தோமையார் அன்போடு அணைத்து "மகனே! இனிமேல் இயேசுவே உன் தந்தை. என்னிடமே இருப்பாயாக" என்று தைரியம் கூறினார். அவனும் மகிழ்ச்சியுடன் அப்போஸ்தலருக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்தான். ஆகவே, அந்நாட்டில் அவனே தோமையாரின் முதல் சீடனானான். பிற்காலத்தில் குருத்துவ நிலைக்கு உயர்த்தப்பெற்று, பரிசுத்த சுவிசேஷத்தைத் தம் இனத்தாருக்குப் போதித்தான். அதனால் அவரை "தோமா ராபன்" (போதகர்) என்று அழைத்தார்கள்.