இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - சிவந்த பெரிய பறவை நாகம்!

“வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது;

அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது... அப்பொழுது வானத்திலே ஒரு பெருஞ் சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும், வல்லமையும், நமது சர்வேசுரனுடைய இராச்சியமும், அவருடைய கிறீஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது... என்று சொன்னதைக் கேட்டேன்” என்று அர்ச். அருளப்பர் தம் காட்சியாகமம் 12-ம் அதிகாரத்தில் கூறுகிறார்.

இதன் விரிவுரையாளர்கள் பெரும்பாலும் வானத்தில் காணப் பட்ட இந்த அடையாளத்திற்கு இரட்டைப் பொருள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒன்று தேவதாயான மரியம்மாளையும், மற்றொன்று திருச்சபையையும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. மாசற்ற மாமரியின் மகிமையான இக்காட்சி, கிறீஸ்துவின் வெற்றிக்கும், அவருடைய இராச்சியம் வருவதற்கும் ஓர் அடையாளமாயிருக்கிறது.

இந்த வசனங்கள் மிகவும் கருத்துடையன. சில அர்ச்சியசிஷ்ட வர்களும், வேறு சில அன்பின் அர்ச்சியசிஷ்டவர்களும் (னிதீவிமிஷ்உவி - காட்சி தியானிகள்) கூறியுள்ளவைகளை வைத்துப் பார்க்கையில் இவை அவ்வாறு காணப்படுகின்றன. அவர்கள் உரைத்துள்ளதென்னவென் றால், கிறீஸ்துவின் இராச்சியம் உலகில் வருமுன் மாமரியின் பக்தி விரிவடைந்து வளர்ந்து, கிறீஸ்துவின் அரசின் வருகையை முன்னறி விக்கும் என்பதே.

வெற்றி சூழும் உலகில்தான் கிறீஸ்து அரசாள்வார். இதுபற்றி அர்ச். லூயிஸ் தெ மொன்போர்ட் என்பவர் தமது “மரியாயின் மீது உண்மை பக்தி” என்ற புத்தகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். மரியாயின் மாசற்ற இருதயம் வெற்றி பெறவிருப்பது பாத்திமாவில் முன்னுணர்த்தப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கிறீஸ்தவ ஐக்கியம் குறைபட்டு விடும் என்று போலிக் காரணம் கூறிக்கொண்டு மாமரி மீதுள்ள பக்தி வளருவதைத் தடைசெய்வது மிகவும் வருத்தத்துக்குரிய ஆபத்து நிறைந்த செயலாகும். தேவ அன்னை மீது வளர்ந்து வரும் பக்தியே கிறீஸ்தவ ஐக்கியத்தைக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

கிறீஸ்தவ உலகம் மீண்டும் ஐக்கியமடைய வேண்டுமென்றால், அதற்கு இன்றியமையாத ஒரு முதல் நிபந்தனை, மாமரி பற்றிய உண்மைகள் முழு வளர்ச்சியடைய வேண்டியதாகும்.

வேத சாஸ்திரம் எதை நோக்கி வளர்ச்சி பெற வேண்டும் என்று லூர்து நகரிலும், பாத்திமா பதியிலும் இக்காலத்தில் நிகழும் புதுமைகள் வழிகாட்டுகின்றன.

“அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கித்தார்கள். ஆண்டவரும் அவர்களுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து வந்த அற்புதங்களால் உறுதிப்படுத்தி வந்தார்” (மாற். 16:20).

அற்புதங்கள் என்பவை வேதாகமத்தில் அடையாளங்களாகக் கருதப்பட்டன. சத்தியங்களை உறுதிப்படுத்த புதுமைகள் பயன் பட்டன.

லூர்து நகரில் நிகழ்ந்த புதுமைகள் மரியாயின் அமல உற்பவத்தை உறுதிப்படுத்தின. அதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் 9-ம் பத்திநாதர் பாப்பரசர் அதை உரோமாபுரியில் விசுவாச சத்தியமாக உலகிற்கு பிரகடனப்படுத்தினார்.

பெர்னதெத் அம்மாள், லூர்து நகரில் தனக்குக் காட்சியளித்த மாதிடம், அவர்கள் யாரென அறிவிக்கக் கேட்டபோது, “நாமே அமலோற்பவம்” என்ற பதில் கொடுக்கப்பட்டது.

பாத்திமாவில் நடைபெற்ற பகிரங்க அதிசயம், வானத்தில் காணப்பட்ட அந்த அற்புதம், பாத்திமாவின் செய்தியை உறுதிப் படுத்தியது. “எல்லோரும் விசுவசிக்கும்படியாக” சரித்திரத்தில் இது வரை நடந்திராத ஒரு அதிசயத்தோடு அறிவிக்கப்பட்ட இந்தச் செய்தியை நாம் நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

இவ்வத்தியாயத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அர்ச். அருளப்பருடைய காட்சியாகம வசனங்கள் பெப்ருவரி 11-ம் நாள் கொண்டாடப்படும் லூர்து மாதாவின் திருநாள் பூசையிலிருந்து எடுக்கப்பட்டவை.

காட்சியாகமத்தின் இந்தப் பகுதியைப் படிக்க சற்று சிரமம் எடுத்துக் கொள்கிறவர்கள் ஒரு உண்மையைக் காண்பார்கள். அப்பூசை யைத் தயாரித்தவர்கள், அப்பகுதியில் கூறப்படும் பெண்ணும் அவளுடைய குழந்தையும் சிவந்த பறவை நாகத்தால் துன்புறுத்தப் படும் பாகத்தை விட்டு விட்டார்கள். அந்தப் பறவை நாகம் செம்மறியின் இரத்தத்தாலே மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகே, வானத்திலிருந்து ஒரு குரல் எழும்பி, “இப்பொழுது இரட்சிப்பும், வல்லமையும் உண்டாயிற்று. நமது சர்வேசுரனுடைய இராச்சியமும், அவருடைய கிறீஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது” என்று உரைத்தது.

பாத்திமாவிலும் ஒரு பெரிய அடையாளம் வானத்தில் காணப்பட்டது. 1917, அக்டோபர் 13-ம் நாள் காணப்பட்ட வான அதிசயக் காட்சியிலே அச்சிறுவர்கள் மாதாவையும், திவ்விய பாலனை ஏந்தியிருந்த அர்ச். சூசையப்பரையும் கண்டார்கள். திருக்குழந்தை உலகத்தை ஆசீர்வதித்தார். தேவதாய் சூரியனை விட அதிகப் பிரகாச மாய்க் காணப்பட்டதாக லூஸியா கூறியுள்ளாள்.

இந்த நிலைக்காட்சி பசாசுடன் நடக்கும் இறுதிப் போராட் டத்தின் ஆரம்பத்தை அறிவிக்கிறது. அந்த நாள் அக்டோபர் 13, 1917. லெனினும் ட்ராட்ஸ்க்கியும் அவ்வருடம் நவம்பர் 7-ம் நாள் நடைபெற இருந்த தங்கள் புரட்சிக்காக இறுதி ஆயத்தங்களைச் செய்து கொண் டிருந்தார்கள். அந்நாள் (நவம்பர் 7, 1917) ஒரு புதிய பயங்கர சகாப்தத்தை நவீன உலகுக்கு ஆரம்பித்து வைத்தது.

அர்ச். அருளப்பர் குறிப்பிடும் பறவை நாகத்துக்கும் (அந்தப் பெண்ணுடன்) அவள் குழந்தைக்கும் ஏற்பட்ட போராட்டம், நம்மைச் சுற்றிலும் இப்பொழுது நடைபெறும் பெரும் போராட்டத்திற்கு ஒரு உண்மைப் பொருள் இருப்பதாகக் காட்டுகிறது.

அந்தப் பெரிய பறவை நாகம் கீழே தள்ளப்பட்டது. இந்தப் பழைய சர்ப்பம், பசாசென்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் இவன், உலக முழுவதையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்பவன் (காட்சி. 12:4,9) என்கிறார் அர்ச். அருளப்பர்.

சூரியனை ஆடையாக அணிந்திருந்த பெண் வெற்றி பெற்றாள். சூரியனருகில் பாத்திமா பதியில் நின்ற பெண் உலகிற்கு மாபெரும் அடையாளத்தைக் கொடுத்தாள்--எப்போது? ரஷ்யாவில் கம்யூனிசத் தின் முதல் வெற்றி நடந்த அதே சமயத்தில்! இவள் 20-ம் நூற்றாண்டின் சிவந்த பறவை நாகத்தின் மீது தான் வெற்றி கொள்வதாக ஏற்கெனவே கூறிவிட்டாள்! “முடிவில் எனது மாசற்ற இருதயமே வெற்றி பெறும்... ரஷ்யா மனந்திரும்பும். சமாதானம் நிலவும்” என்று!