சிவப்புக் குதிரை!

1862 ஜூலை மாதத்தில் டொன் போஸ்கோவை மையமாக வைத்து, மேற்கொண்டு பல அதிசயமான நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ரூஃபினோ காலக் கிரமப் பதிவேடு பின்வரும் நிகழ்வைப் பதிவு செய்துள்ளது: “ஜூலை 1, 1862. இன்று இரவுணவுக்குப் பிறகு, டொன் போஸ்கோ தம்மைச் சுற்றியிருந்த சிலரிடம், “இந்த மாதம் நாம் ஒரு அடக்கச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்” என்று கூறினார். அதற்குப் பிறகு, இதை இன்னும் சில தடவைகள் சொன்னார். ஆனால் எப்போதும் ஒரு சிலரிடம் மட்டும்தான்.”

இந்த இரகசியமான வெளிப்பாடுகள் துறவிகளின் வினோதப் பிரியத்தை வெகுவாகத் தூண்டி விட்டன. ஆகவே பொழுதுபோக்கு நேரத்தில், வேறு எங்காவது வேலை எதுவும் இல்லாத சமயங்களில், அவர்கள் அவரிடமிருந்து திடுக்கிடும் தகவல் வேறு ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரைச் சுற்றி ஒன்றாகக் கூடுவர். அப்படி இந்த முறையில் அவர்கள் அறிந்து கொண்ட ஓர் உண்மை , சிறுமியர் பள்ளிகளைத் தொடங்குவதற்கான திட்டம் ஆகும். ஜான் பொனெட்டியும், சீசர் ஷியாலாவும் இதை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜூலை 6 அன்று, முந்தின இரவில் தாம் கண்டிருந்த ஒரு கனவை டொன் போஸ்கோ விவரித்தார். அவருடைய உரையைக் கேட்டவர்களில் சுவாமி ஜான் பாப்டிஸ்ட் ஃப்ரான்செஸியா, சுவாமி ஆஞ்செலோ சாவியோ, சுவாமி மைக்கிள் ருவா, பிரான்சிஸ் செர்ருட்டி, பர்தலோமேயு ஃபூஸேரோ, ஜான் போனெட்டி, செவாலியே ஃப்ரெடெரிக் ஓரேலியா, ஜான் பாப்டிஸ்ட் அன்ஃபோஸ்ஸி, செலஸ்டீன் ட்யூராண்டோ, பிரான்சிஸ் ப்ரோவேரா மற்றும் ஒரு சிலர் அடங்குவர். அவர் பின்வருமாறு பேசினார்.

நேற்றிரவு நான் ஒரு விசித்திரமான கனவு கண்டேன். நான் பரோலோ கோமகளோடு (கோமகள் ஜூலியட் கோல்பெர்ட் பரோலோ - 1785 -1864) ஒரு சிறு சதுக்கத்தில் நடந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது. அந்த சதுக்கம் ஒரு விஸ்தாரமான சமவெளியாக விரிந்தது. அங்கே ஆரட்டரியின் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மரியாதை நிமித்தமாக பரோலோ கோமகளுக்கு இடப்பக்கமாக நகர முயன்றபோது, அவர் என்னைத் தடுத்து, “இல்லை , நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்” என்று சொன்னார். அதன்பின் அவர் என் சிறுவர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். “நீங்கள் சிறுவர்களைக் கவனித்துக் கொள்கிறீர்கள் என்பது அற்புதமானது. சிறுமிகளைக் கவனித்துக் கொள்ள என்னை அனுமதியுங்கள். இதில் பிரச்சினை எதுவும் எழாதபடி அதை என்னிடம் விட்டு விடுங்கள்” என்று அவர் சொன்னார்.

“நல்லது, நம் ஆண்டவர் சிறுவர்களோடு சிறுமிகளையும் சேர்த்தே இரட்சிப்பதற்காகத்தான் உலகிற்கு வந்தார் அல்லவா?” என்று நான் பதில் கூறினேன்.

“நிச்சயமாக” என்று அவர் பதிலளித்தார்.

“அப்படியானால் அவருடைய இரத்தம் இந்த இரண்டில் ஒரு பாலாருக்குப் பயன்படாமல் போய்விடாதபடி நான் பார்த்துக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென சிறுவர்கள் மத்தியில் ஒரு வினோதமான, மர்மமான மௌனம் நிலவத் தொடங்கியது. அவர்கள் விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள். கடும் அச்ச வசப்பட்டவர்களைப் போலத் தோன்றினார்கள். தாறு மாறாக ஓடத் தொடங்கினார்கள். கோமகளும், நானும் ஒரு கணம் அசையாமல் நின்றோம். அதன்பின் இந்த அச்சத்திற்குக் காரணம் என்ன என்பதை அறிய விரைந்தோம். திடீரென்று, அந்தச் சமவெளியின் மறு முனையில் நெருப்பு மயமான ஒரு பிரமாண்ட மான குதிரையைக் கண்டோம். அது எவ்வளவு பிரமாண்டமானமாக இருந்தது என்றால், என் இரத்தமே குளிர்ந்து போய்விட்டது.

“அந்தக் குதிரை இந்த அறை அளவுக்கு பெரிதாக இருந்ததா?” என்று சுவாமிஃப்ரான்செஸியா கேட்டார்.

“ஓ, இதை விட மிகப் பெரிதாக இருந்தது! அது உண்மையாகவே ஒரு இராட்சத மிருகம்தான் - பாலாஸோ மடாமாவை* விட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரியது (பாலாஸோ மடாமா ட்யூரின் நகரத்தின் மையத்திலுள்ள பியாஸ்ஸோ காஸ்டெல்லோவின் நடுவில் அமைந்துள்ள ஒரு மிகப் பிரமாண்டமான கட்டடம் ஆகும். அதில் ரோமன், மத்தியகாலம், மற்றும் நவீன காலத்தைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு கட்டுமானப் பகுதிகள் அடங்கியுள்ளன. இவ்வாறு இக்கட்டடம் அந்த நகரத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்றைத் தன்னில் அடக்கியுள்ளது. அதன் உட்பகுதியிலுள்ள மிக அற்புதமான படிக்கட்டும், ஃபிலிப்போ யுவார்ராவால் அமைக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முகப்புத் தோற்றமும், ஐரோப்பிய பரோக் கட்டடக் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அதை ஆக்கி யுள்ளன. பாலாஸோ மடாமாவில்தான் 1840 முதல் 1860 வரை சுபால்ப்பிய பாராளு மன்றமும், அதன்பின் 1864 வரை இத்தாலிய பாராளுமன்றமும் செயல்பட்டன. தற்போது அது பழங்கலைகளுக்கான நகர அருங்காட்சியகமாக இருக்கிறது.). பரோலோ கோமகள் அதைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நானும் கூட எந்த அளவுக்கு அதிர்ந்து போனேன் என்றால் என்னால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. என்னுடைய கடும் அச்சத்தில் அருகிலிருந்த ஒரு வீட்டின் பின்னால் போய் ஒளிந்து கொண்டேன். ஆனால் அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் என்னை அங்கிருந்து துரத்தினார்கள். “போய் விடும்! போய்விடும்” என்று அவர்கள் கூச்சலிட்டார்கள். இதற்கிடையே, “இந்தக் குதிரை என்னவாக இருக்கும்? நான் ஓடுவதை நிறுத்தி, அதன் அருகில் போய்ப் பார்க்க முயற்சிக்க வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வந்துகொண்டே இருந்தது. இன்னும் அச்சத்தால் நடுங்கியபடி, நான் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, அந்தக் குதிரையை நோக்கித் திரும்பி நடந்தேன். அந்தக் காதுகளையும், அதன் அச்சமூட்டும் மூக்குப் பகுதியையும் பார்ப்பது எவ்வளவு பயங்கரமாக இருந்தது! சில சமயங்களில் அதில் நிறைய மனிதர்கள் ஏறியிருந்ததாக எனக்குத் தோன்றியது; மற்ற நேரங்களில் அதற்கு இறக்கைகள் இருந்ததாகத் தோன்றியது. “இது ஒரு பசாசாகத்தான் இருக்க வேண்டும்!” என்று நான் நினைத்துக் கொண்டேன்.

வேறு சிலரும் என்னோடு இருந்தார்கள். “இது எந்த வகையான இராட்சத மிருகம்?” என்று அவர்களில் ஒருவரிடம் நான் கேட்டேன்.

“இது காட்சியாகமத்தின் (திருவெளிப்பாடு) செந்நிறக் குதிரை” என்று அவர் பதிலளித்தார்.

இந்தச் சமயத்தில் குளிர்ந்த வியர்வையில் குளித்தவனாக நான் கண்விழித்து, படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தேன். காலை நேரம் முழுவதும், பூசை நிறைவேற்றும்போதும், பாவசங்கீர்த் தனங்கள் கேட்ட போதும், அந்த மிருகத்தின் நினைவு தொடர்ந்து என்னை ஆக்கிரமித்திருந்தது. இப்போது பரிசுத்த வேதாகமங்களில் உண்மையாகவே ஒரு சிவப்புக் குதிரையைப் பற்றிய குறிப்பு உள்ளதா என்றும், அது எதைக் குறிக்கிறது என்றும் யாராவது எனக்குப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.”

செலஸ்டீன் ட்யூராண்டோ இந்த ஆய்வைச் செய்யும்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும், அதற்குள், மார்ட்டினி கூறுகிறபடி (அண்டோனியோ மார்ட்டினி (1720 - 1809) என்னும் ஃப்ளோரென்ஸ் மாநகரப் பேராயர் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலிருந்தும், பழைய ஏற்பாட்டை வுல்காத்தா என்னும் இலத்தின் வேதாகமத்திலிருந்தும் இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார். அவருடைய இந்த மொழிபெயர்ப்பு இத்தாலியில் மிகவும் பிரசித்தி பெற்றதாக ஆனது.), திருச்சபைக்கு எதிரான கொடூரமான வேதகலாபனை யின் அடையாளமான ஒரு சிவப்புக்குதிரை உண்மையாகவே காட்சியாகமம், 6-ஆம் அத்தியாயம், 3-4 திருவாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுவாமி எம். ருவா தெரிவித்தார். அந்த வேதவாக்கியங்கள் பின்வருமாறு: “மேலும் அவர் இரண்டாம் முத் திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவஜெந்து: நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். அப்பொழுது செந்நிறமான வேறொரு குதிரை புறப்பட்டது; அதன் மேல் ஏறியிருந்தவனுக்குப் பூலோகத்தி லிருந்து சமாதானத்தை அகற்றித் தள்ளவும், ஒருவனொருவனைக் கொல்லும்படி (செய்யவும்) வல்லமை அளிக்கப்பட்டது. ஒரு பெரிய பட்டயமும் (வாளும்) அவனுக்குக் கொடுக்கப்பட்டது.”

டொன் போஸ்கோவின் கனவில் வந்த இந்த செந்நிறக் குதிரை சமகாலத்தைச் சேர்ந்த (ஐரோப்பிய) நாஸ்திக மக்களாட்சி யைக் குறிப்பதாக இருக்கலாம். இந்த மக்களாட்சி, திருச்சபைக்கு எதிராகப் புகைந்து, சமூக ஒழுங்கைச் சீரழிக்கும்படி சீராக முன்னேறிக் கொண்டிருந்தது. அது தேசிய மற்றும் மாநகர, நகர, கிராம அரசாங்கங்களையும், கல்வியையும், நீதிமன்றங்களையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு துறவற சபையையும் சொந்தமாகக் கொண் டிருக்கும் உரிமையை அழிப்பதை முழுமையாக்குவதே இந்த மக்களாட்சியின் குறிக்கோளாக இருந்தது. கண்மூடித்தனமான தேசிய அரசாங்கங்களால் இது ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது. “இந்தப் பேரழிவைத் தடுக்கும்படி, விசுவாசிகள் அனைவரும், நம் சிறிய வழியில் நாமும் கூட, பக்தியார்வத்தோடும், தைரியத்தோடும் இந்த கடிவாளமிடப்படாத அரக்கனைத் தடுத்து நிறுத்தப் பாடுபட வேண்டும்” என்று டொன் போஸ்கோ கூறுவது வழக்கம்.

எப்படி? பிறர் சிநேகத்தை அனுசரிப்பதன் மூலமாகவும், நன்மை பயக்கும் வெளியீடுகளின் மூலமாகவும் அதன் போலியான போதனைகளின் ஆபத்துக்கள் பற்றி மக்களுக்கு எச்சரிப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். மேலும் கடவுளால் தரப்படும் சகல அதிகாரங்களுக்கும் அசைவுறாத அஸ்திவாரமும், அனைத்து சமூக ஒழுங்கின் முக்கியத் திறவுகோலும், மனிதனுடைய கடமைகள்மற்றும் உரிமைகளின் மாறாத சட்டமும், தீய ஆசாபாசங்களின் வஞ்சக முகத்திரையைக் கிழிக்கும் தெய்வீக ஒளியும், இயல்பான, மற்றும் கிறீஸ்தவ நல்லொழுக்கத்தின் பிரமாணிக்கமுள்ள, வலிமையான பாதுகாவலனும், நித்திய வெகுமதி மற்றும் தண்டனையின் மாறாத உத்தரவாதியுமான புனித இராயப்பரின் ஆசனத்தை நோக்கி மக்களின் மனங்களையும், இருதயங்களையும் திருப்புவதன் மூலமும் இதைச் செய்யலாம். திருச்சபையும், புனித இராயப்பரின் ஆசனமும், பாப்பரசரும் எல்லாம் ஒன்றுதான். அதனால்தான் இந்த உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படச் செய்வதற்கு டொன் போஸ்கோ ஒரு முழுமையான முயற்சியைச் செய்ய விரும்பினார். பாப்பரசர்களால் தல சமூகங்களுக்குச் செய்யப்பட்டுள்ள அளவிட முடியாத நன்மைகளை முழுவதுமாக ஆவணப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் எல்லா அவதூறுகளையும் தக்க ஆதாரங்களோடு கண்டனம் செய்தும், பாப்பரசர்களுக்கான நன்றியையும், விசுவாசத்தையும், அன்பையும் வளர்ப்பதும் அவருடைய நோக்கங்களாக இருந்தன.

இதுவே டொன் போஸ்கோவின் மனநிலையாக இருந்தது. பாப்பரசரின் மீதான தமது அன்பில், வார்த்தையிலும், செயலிலும் அவர் உண்மையாகவே பெரியவராக இருந்தார். ஸால்ஸானோவின் திருச்சபை வரலாறு என்னும் நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் முத்தமிடத் தம்மால் முடியும், ஏனெனில் இந்த இத்தாலிய வரலாற்று ஆசிரியர் இந்நூலில் பாப்பரசர்களின் மீதான தமது அன்பைத் தெளி வாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று அவர் வழக்கமாகக் கூறுவார். தமது துறவிகளுக்கு ஒரு புத்தகத்தின் தரத்தை நிர்ணயிப்பதற்கான ஒரு நடைமுறை விதியை அவர் தந்தார்: “அதன் ஆசிரியர் ஏதாவது ஒரு விதத்தில் பாப்பரசருக்கு எதிரானவராக இருந்தால், அந்தப் புத்தகத்தை வாசிக்காதீர்கள்.”

போனெட்டி காலக்கிரமப் பதிவேடு அதே ஆண்டு 1862-ல் பின்வரும் காரியத்தைப் பதிவு செய்துள்ளது:

“டொன் போஸ்கோ பாப்பரசர்களைப் பற்றிப் பேசும்போது, அவரால் விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க முடியும். அவர் எப்போதுமே அவர்களைப் பற்றிய புதுப் புது புகழ்ச்சியான வார்த்தைகளை வைத்திருக்கிறார், தாம் பேசுவதைக் கேட்பவர்களின் மனதில் பாப்பரசர்களின்மீதான அன்பைப் பற்றியெரியச் செய்யும் அளவுக்கு மிக வசீகரமாகப் பேசுகிறார். இரண்டு காரியங்களில் அவர்தான் அனைவரிலும் சிறந்தவர்: பரிசுத்ததனம் என்னும் புண்ணியம் மற்றும் பாப்புத்துவ போதனை. இவற்றில் அவர் எல்லோரையும் வசீகரிக்கிறார், பிரமிக்கச் செய்கிறார். இதை நம்புவதற்கு அவருடைய நூல்களை, குறிப்பாக, அவருடைய “பாப்பரசர்களின் சரித்திரங்கள்” என்ற நூலை வாசிப்பது போது மானது. கடவுளின் இந்தப் பிரமாணிக்கமுள்ள ஊழியரின் வாழ்க்கை வரலாற்றை எழுத தேவ பராமரிப்பால் தெரிந்து கொள்ளப்படும் யாரும் இவற்றை வாசிப்பது அவசியம் என்று நாம் கருதுகிறோம்.”


அக்கிரமத்தின் இரகசியம்

பின்வரும் பக்கங்களில் (தேரை, திராட்சைச் செடி, நரகம் ஆகியவை பற்றிய கனவுகள்), மனித மக்களிடையே பெருங்குழப் பத்தை உருவாக்குகிற ஒரு மர்மமான சக்திக்கு எதிரான போராட் டத்தில் டொன் போஸ்கோ ஈடுபட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு பயங்கரமான அசுரப் பிறவியை, டொன் போஸ்கோவையே விழுங்கி விட விரும்பியதும், ஓர் எருதின் அளவுக்குப் பெரிதாயிருந் ததுமான மிக அருவருப்பான ஒரு தேரையை, நீங்கள் காண்பீர்கள். ஆனால் கடவுளின் திருப்பெயரில், திரும்பத் திரும்ப சிலுவை அடை யாளம் வரைந்தும், பரிசுத்த தீர்த்தம் தெளித்தும், பலத்த கூக்குரல் களாலும், டொன் போஸ்கோ அதைப் பயந்தோடச் செய்கிறார்.

சாத்தானை வெற்றி கொள்வது எளிதல்ல. அதற்கு ஒருவனுக்கு தைரியமும், பலமும் வேண்டும். விசுவாசம் நமக்கு பலம் தருகிறது. ஆனாலும், சாத்தானை நாம் ஏற்றுக் கொண்டால் தவிர, நமக்கு எதிராக எதையும் செய்ய அவனால் முடியாது. ஆயினும், மனித பலவீனம் பெரியது. நாம் ஒருபோதும் நம்மை நம்பாதிருப் போமாக. ஏனெனில் தீயவன் நம்முடைய ஒவ்வொரு பலவீனத் தையும் நமக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடியவனாக இருக்கிறான்.

சாத்தான் இருக்கிறான், நரகம் இருக்கிறது. இயேசுக் கிறீஸ்துவின் பணி, இருளின் சக்திக்கு எதிரான ஒரு முழுமையான போராகும்.

டொன் போஸ்கோ இந்த அச்சம் தரும் கனவுகளை எங்களுக்கு விவரித்துக் கூற மிகவும் தயங்கினார். ஆனால் உந்நதத்திலிருந்து வந்த ஒரு குரல் அவரிடம்: “நீர் ஏன் பேசுவதில்லை ? அவர்களுக்குக் கூறும்...” என்று அவரிடம் தெளிவாகக் கூறுகிறது.

“ஆகவே, நான் காண்பவற்றை உங்களுக்குச் சொல்வது கடவுளின் சித்தமாக இருக்கிறது' என்றார் டொன் போஸ்கோ.

கல்வியாளர்களுக்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருக்கிறது. ஒருவன் பேச வேண்டும்: நரகம் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறது. பலர் அதில் விழுகிறார்கள். சத்தியம் சாத்தானை அலறியோடச்செய்யும்.