அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - புனித டோமினிக் சாவியோ பற்றிய ஒரு கனவு

(டோமினிக் சாவியோ இறந்து இருபது ஆண்டுகள் கழித்து, 1876-ல் டொன் போஸ்கோ இந்தக் கனவைக் கண்டார்.)

டிசம்பர் 6 இரவில் நான் ஒரு கனவு கண்டேன். அது பின்வருமாறு:

நான் ஒரு குன்றின் மீது நின்று, கண்ணுக்கெட்டாத தூரம் வரைக்கும் பரந்து விரிந்திருந்த ஒரு பிரமாண்டமான சமவெளியைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அது பூரண அமைதியோடு இருக்கும் கடலைப் போல நீல நிறமாக இருந்தது. ஆனால் நான் பார்த்துக் கொண்டிருந்தது தண்ணீர் அல்ல; அது படிகத்தைப்போல கறைதிரையற்றதாகவும், ஒளியால் மின்னுவ தாகவும் இருந்தது.

நீண்டு அகன்ற மரங்கள் சூழ்ந்த பாதைகள் அந்தச் சமவெளியை விவரிக்க முடியாத அழகுள்ள பெரிய தோட்டங் களாகப் பிரித்தன. அவற்றில் புல்வெளிகளும், அலங்கார மரங்களின் கூட்டமும், பூச்செடிகளும், வியக்கத்தக்க பல வகையான அலங்கார மலர்களோடு கூடிய மலர்ப் பாத்திகளும் அந்தத் தோட்டங்களில் காணப்பட்டன. நீங்கள் வழக்கமாக தோட்டங்களில் காணும் காரியங்களை மட்டும் வைத்து, நான் கண்ட இந்த சமவெளி எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. அங்கே தங்கத்தால் ஆனவையாகத் தோன்றிய இலை களையும், விலையுயர்ந்த கற்களால் ஆனவையாகத் தோன்றிய கிளைகளையும், அடிமரங்களையும் கொண்ட மரங்கள் இருந்தன.

இந்தத் தோட்டங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்டடங்கள் இருந்தன. இவற்றின் தோற்றமும், பிரமாண்ட அழகும், அவை இருந்த இடங்களின் அழகோடு போட்டியிட்டன. இவற்றில் ஒன்றைக் கூட கட்டுவதற்கு எவ்வளவு மிகப் பெரும் தொகை தேவைப்படும் என்று என்னால் கணக்கிட முடியவில்லை. “என் சிறுவர்களுக்கென்று இந்தக் கட்டடங்களில் ஏதாவது ஒன்றை நான் சொந்தமாகக் கொண்டிருக்க முடியுமானால், அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள்!” என்ற எண்ணம் என் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அதிசயத்தில் ஆழ்ந்தபடி, பரவசப்பட்டவனாக நான் நின்று கொண்டிருந்த போது, மனதை மயக்கும் இனிய இசையின் ஒலி காற்றை நிரப்பியது; சாத்தியமான எல்லா இசைக்கருவிகளும் அற்புதமான ஸ்ருதி சுத்தத்தோடு இணைந்து ஒலிப்பதாகத் தோன்றியது. அவற்றோடு பாடகர் குழுக்களின் குரல்களும் சேர்ந்து ஒலித்தன.

அதன்பின் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களை நான் அந்தத் தோட்டத்தில் கண்டேன். சிலர் நடந்து கொண்டும், சிலர் உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள். எல்லோருமே மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பாடிக் கொண்டிருந் தார்கள், சிலர் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தார்கள். தாங்களே இசையை இசைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டார்களோ, அதே அளவுக்கு மற்றவர்களின் இசையைக் கேட்பதிலும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. 

அவர்கள் இலத்தீன் மொழியில்: “இருந்தவரும், இருக்கிறவரும், காலங்களைக் கடந்து ஜீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க வர இருக்கிறவருமான காலங்களுடைய சிருஷ்டிகரான எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு எல்லா வணக்கமும், மகிமையும் உண்டாவதாக” என்ற வார்த்தைகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது திடீரென சிறுவர்களின் பெரும் படையணி ஒன்று தோன்றியது. அவர்களில் பலரை நான் அறிந்திருந்தேன். அவர்கள் என்னோடு ஆரட்டரியில் இருந்தவர்கள், அல்லது நம் பள்ளிகளில் படித்தவர்கள்; ஆனால் பெரும்பாலானவர்கள் எனக்குத் தெரியாதவர்கள். இந்த முடிவில்லாத வரிசை என்னை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது. டோமினிக் சாவியோ அதை வழிநடத்தி வந்தான்; அவனுக்குப் பின்னால் பல குருக்களும், இன்னும் அநேக துறவற குருக்களும், சகோதரர்களும், ஒவ்வொரு சிறுவர் குழுவுக்கும் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார்கள்.

நான் விழித்திருக்கிறேனா, அல்லது கனவு கண்டுகொண் டிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் என் கைகளைத் தட்டினேன். நான் பார்த்துக் கொண்டிருந்தது எந்த அளவுக்கு நிஜமானது என்பதைக் காணும் முயற்சியில் நான் என் கரங்களையும் நெஞ்சையும் உணர்ந்தேன்.

இப்போது ஒரு தீவிரமான, மிகப் பிரகாசமான இப்போது சுற்றிலும் பிரகாசிக்கத் தொடங்கியது. சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஒளிவீசினர்; அந்த ஒளி அவர்களுடைய கண்களில் ஒளிர்ந்தது. அவர்களுடைய முகங்கள் வார்த்தைக்கெட்டாத சமா தானம், மனதிருப்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் தோற்றத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தனர். ஏதோ சொல்லப் போவது போலத் தோன்றினர். ஆனால் ஒரு வார்த்தையும் உச்சரிக்கப்படவில்லை.

டோமினிக் இப்போது தனியாக முன்னோக்கி நடந்து என் முன் வந்து நின்றான். அவன் ஒரு கணம் மௌனமாக நின்றபடி, என்னைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய தோற்றம் எவ்வளவு அற்புதமாயிருந்தது! அவன் எவ்வளவு பிரமிப்பூட்டும் வகையில் உடுத்தப்பட்டிருந்தான்! அவனுடைய பாதங்களைத் தொட்டுக் கொண்டிருந்த வெண் மேலங்கி பொன் நூல்களால் பின்னப்பட்டதாகவும், மின்னும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அவனுடைய இடுப்பைச் சுற்றி அவன் ஓர் அகன்ற சிவப்பு நிறக் கச்சை அணிந்திருந்தான். அதுவும் எல்லா நிறங்களிலும் உள்ள விலையுயர்ந்த கற்களால் பின்னப்பட்டிருந்தது. அந்தக் கற்கள் ஓராயிரம் ஒளிகளில் மின்னிப் பிரகாசித்தன. அவனுடைய கழுத்தைச் சுற்றி காட்டு மலர்களாலான ஒரு கழுத்தாரம் இருந்தது. ஆனால் அந்த மலர்கள் விலையுயர்ந்த கற்களால் ஆனவை. அவை பிரதிபலித்த ஒளி டோமினிக்கின் முகத்தின் அழகையும், மகத்துவத்தையும் மேலும் ஒளிர்வித்தது. ரோஜாக்களால் முடிசூட்டப்பட்டிருந்த அவனுடைய தலைமுடி அவனுடைய தோள்கள் வரை தொங்கி, அவனுடைய முழுத்தோற்றத்தின் முற்றிலும் விவரிக்கவே முடியாத அம்சத்தை நிறைவு செய்தது.

மற்றவர்கள் மகத்துவ ஒளியின் பல்வேறு அளவுகளில் உடுத்தப்பட்டிருந்தார்கள். அந்த ஒவ்வொரு அளவும் நீங்கள் புரிந்து கொள்ள முடியாத தங்களுக்கே உரிய ஒரு இரகசிய அர்த்தத்தைக் கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் பொதுவாகக் கொண் டிருந்த ஒரு காரியம், அவர்களுடைய இடுப்புகளைச் சுற்றியிருந்த அகன்ற சிவப்புக் கச்சைதான்.

“இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? நான் எங்கேதான் இருக் கிறேன்?" என்று நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். என்றாலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நான் மௌனமாக நின்றேன்.

டோமினிக் அதன்பின் பேசினான்:

“ஏன் ஊமையைப் போல் அங்கே நின்று கொண்டிருக் கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் பயமேயில்லாதவ ராகவும், கலாபனை களையும், அவதூறுகளையும், எல்லா வகையான ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வல்லவராகவும் நீங்கள் எப்போதுமே இருந்து வந்தீர்கள் அல்லவா? அப்படியிருக்க, இப்போது ஏன் தைரியத்தை இழந்து விட்டீர்கள்? ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?"

பாதி தட்டுத் தடுமாறியபடி, நான் பதில் சொன்னேன்:

“என்ன சொல்வதென எனக்குத் தெரியவில்லை. நீ உண்மை யாகவே டோமினிக் சாவியோதானா?”

“ஆம், உண்மையாகத்தான். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?”

“நீ எப்படி இங்கே இருக்கிறாய்?”

“நான் உங்களோடு பேச வந்தேன்” என்று பாசத்தோடு டோமினிக் கூறினான். “நான் உயிரோடு இருந்த போது, நாம் மிக அடிக்கடி பேசினோம். நீங்கள் எப்போதுமே என்னிடம் மிகுந்த கருணையும், தாராளமும் உள்ளவராக இருந்தீர்கள். நான் என் முழு நம்பிக்கையையும், பாசத்தையும் கொண்டு, உங்கள் அன்பிற்குப் பதிலன்பு செலுத்தினேன். நீங்கள் விரும்பும் எதை வேண்டு மானாலும் என்னிடம் கேளுங்கள்.”

“நான் எங்கே இருக்கிறேன்?” என்று நான் கேட்டேன்.

“நீங்கள் மகிழ்ச்சியின் இடம் ஒன்றில் இருக்கிறீர்கள், இங்கே அழகான எல்லாமே அனுபவிக்கப்படுகிறது” என்று அவன் பதிலளித்தான்.

“அப்படியானால் இது மோட்சமா?”

“இல்லை. இங்குள்ளது எல்லாமே பூமியைச் சேர்ந்தது, என்றாலும் கடவுளின் வல்லமையால் மனித அறிவுக்கெட்டாத அளவுக்கு மேம்படுத்தப்பட்டது. உயிருள்ள எந்த ஒரு மனிதனும் நித்தியத்தின் அற்புதங்களைக் காணவோ, கற்பனை செய்யவோ ஒருபோதும் முடியாது.”

“இதை விட அதிகப் பிரகாசமான இயற்கை ஒளியைக் கொண்டிருப்பது சாத்தியமா?”

“ஆம், முற்றிலும் சாத்தியம்தான். . . அங்கே தொலைவில் பாருங்கள்.”

நான் பார்த்தேன், அங்கே திடீரென ஓர் ஒளிக்கதிர் தோன்றியது. அது எந்த அளவுக்கு ஊடுருவக் கூடியதாகவும், மிகுந்த பிரகாசமுள்ளதாகவும் இருந்தது என்றால் நான் என் கண்களை மூட வேண்டியதாயிற்று. எந்த அளவுக்கு எச்சரிக்கையடைந்து நான் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டிருக்கிறேன் என்றால், எனக்கு அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த குருவை நான் எழுப்பி விட்டேன். (கனவில்) ஒருகண நேரத்திற்குப் பிறகு, நான் என் கண்களைத் திறந்து,

“ஆனால் அது நிச்சயமாக தெய்வீக ஒளியின் ஒரு கதிர்தான்” என்றேன்.

“இல்லை , அதுவும் கூட தெய்வீக ஒளி பற்றிய எந்த அறிவையும் உங்களுக்குத் தர முடியாது. மோட்சத்தில் நாங்கள் கடவுளைத் துய்த்தனுபவிக்கிறோம், அதுவும் எல்லாக் காரியங் களிலும்.”

இப்போது என்னுடைய தொடக்க பிரமிப்பின் நிலை யிலிருந்து நான் மீண்டிருந்தேன். என் முன் நின்று கொண்டிருந்த டோமினிக்கை நான் உற்றுப் பார்த்தபடி நான் அவனிடம்:

“ஏன் அந்த கண்ணைப் பறிக்கும் வெண் மேலங்கியை அணிந்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.

டோமினிக் பதில் சொல்லவில்லை. ஆனால் பல இசைக் கருவிகளின் இசையால் மிக அழகாகப் பொதியப்பட்ட பாடகர் குழுக்களின் குரல்கள் இலத்தினில் பின்வருமாறு பதிலளித்தன.

“இவர்கள் தங்கள் இடையை வரிந்து கட்டிக் கொண் டவர்கள், தங்கள் மேலங்கிகளை செம்மறிப்புருவையானவரின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.”

“நீங்கள் அணிந்திருக்கிற சிவப்புக் கச்சையின் பொருள் என்ன?” என்று நான் அதன்பின் கேட்டேன்.

டோமினிக் மீண்டும் பதில் சொல்லவில்லை. ஆனால், “இவர்கள் கன்னியர்கள், செம்மறிப்புருவையானவர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர்கள் அவரைப் பின்செல்கிறார்கள்” என்று ஓர் ஒற்றைக் குரல் பாடியது.

அப்போது, அந்த இரத்தச் சிவப்பான கச்சை, முற்றிலும் மாசற்றதாகிய ஒரு வாழ்வு நடத்துவதற்காக எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள், செய்யப்பட்ட பரித்தியாகங்கள், அனுபவிக்கப்பட்ட வேதசாட்சியத்தைப் போன்ற துன்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது என்று நான் உணர்ந்து கொணடேன். மேலங்கியின் கண்ணைப் பறிக்கும் வெண்மை நிறம், ஞானஸ்நானத்திலிருந்து சாவு வரை கடவுளை எந்த விதத்திலும் தீவிரமான முறையில் மறுதலிக்காமல் வாழும் வாழ்வைக் குறிக்கிறது.

என் கண்கள் டோமினிக்கிற்குப் பின்னால் நெருக்கமாக நின்று கொண்டிருந்த சிறுவர்களின் பிரிவுகளை நோக்கி ஈர்க்கப் பட்டன. நான் அவனிடம்: 

“இந்தச் சிறுவர்கள் யார்? அவர்கள் ஏன் இவ்வளவு அதிகமாக மகிழ்ச்சியால் துலங்குபவர்களாகவும், ஒளிவீசுபவர்களாகவும் இருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

இந்த முறை பதில் சிறுவர்களிடமிருந்தே வந்தது. அவர்கள் ஓர் அற்புதமான சுருதி லயத்தோடு, “இவர்கள் பரலோகத்திலுள்ள கடவுளின் தூதர்களைப் போன்றவர்கள்...” என்று பாடத் தொடங்கி னார்கள்.

டோமினிக் எல்லாரையும் விட இளையவனாக இருந்தாலும், வெளிப்படையாக அவர்களுடைய தலைவனாக இருந்தான். அவன் அவர்களுக்கு வெகு முன்னால் நின்று கொண்டிருந்தான். ஆகவே நான் அவனிடம்:

'நீ எப்படி மற்றவர்களுக்கும் மேலாக முதலிடம் பெறுகிறாய்?” என்று கேட்டேன்.

“நான்தான் எல்லோரிலும் அதிக வயதானவன்.”

“ஆனால் நீ அவர்களை விட அதிக வயதானவன் இல்லை . உன்னை விட அதிக வயதானவர்கள் இங்கே பலர் இருக்கிறார்களே” என்று நான் பதிலளித்தேன்.

“நான் கடவுளின் தூதன்.”

இது எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தம் என்பது திடீரென எனக்குப் புலப்படத் தொடங்கியது. நான் அவசரமாக:

“என்னோடும் என் வேலையோடும் தொடர்புள்ள காரியத்தைப் பற்றி நாம் பேசுவோம். ஒருவேளை ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டியிருக்கலாம் ... எங்கள் வேலை மற்றும் என் பிரியமுள்ள மகன்களின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிப் பேசு . . .” என்றேன்.

“கடந்த காலத்தைப் பொறுத்த வரை, உங்கள் சபை அதிகமான நன்மையைச் செய்துள்ளது என்பது தெளிவு. அதோ, அங்கே இருக்கிற அந்தப் பெருங்கூட்டமான சிறுவர்களைப் பாருங்கள்.”

நான் அவர்களைப் பார்த்து விட்டு, அவனிடம்:

“அவர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்கள், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!” என்றேன்.

“அந்தத் தோட்டத்தின் நுழைவாயிலுக்கு மேலாக எழுதப் பட்டுள்ளதைப் பாருங்கள்'' என்றான் டோமினிக். நானும் பார்த்தேன். அங்கே பின்வருவது எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். சலேசியத் தோட்டம்

“அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சலேசியர்கள், அல்லது உங்களாலும், உங்கள் மகன்களாலும் கல்வி கற்பிக்கப்பட்டவர்கள், அல்லது ஏதோ ஒரு வகையில் கடவுளை நோக்கிய பாதையில் அனுப்பப்பட்டு, தங்கள் இரட்சணியத்தை நிஜமாகவே சாத்திய மாக்கிக் கொண்டவர்கள். உங்களால் முடிந்தால அவர்களுடைய தொகையை எண்ணிப்பாருங்கள்! ஆனால் நீங்கள் கடவுளில் இன்னும் பெரிதான விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர்கள் இன்னும் மிக மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பார்கள்...''

இந்தக் கண்டிப்புள்ள அறிவுரையைக் கேட்டதும் நான் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினேன், எதிர்காலத்தில் அளவற்ற விதமாக கடவுளில் நம்பிக்கை வைப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

டோமினிக் அதன்பின் ஒரு மிக அழகிய மலர்க் கொத்தை என் முன் நீட்டிப் பிடித்தான். அதில் ரோஜாக்கள், வயலட்கள், சூரிய காந்திகள், லீலிகள், பசுமை மாறாத மலர்க்கிளைகள், மற்றும் ஒரு பூச்செண்டுக்கு மிகவும் வழக்கத்துக்கு மாறான விதத்தில் கோதுமைக் கதிர்கள் ஆகியவை இருந்தன. அவன் அதை என்னிடம் தந்து, “பாருங்கள்” என்றான்.

“நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை ” என்று நான் பதிலளித்தேன்.

“இதை உங்கள் சிறுவர்கள் எல்லோரும் வைத்திருப்பதையும், அவர்களிடமிருந்து இதை எடுத்து விட முயலும் யாருக்கும் எதிராக அச்சமின்றி அதை அவர்கள் காத்துக் கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மலர்கள் அவர்களிடம் பாதுகாப்பாக இருக்கும் வரையிலும், அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதில் ஒருபோதும் தவற முடியாது.”

“எனக்கு இன்னும் புரியவில்லை; தயவு செய்து விளக்கமாகச் சொல்...”

“தங்களுக்காக அன்றி, கடவுளுக்காக வாழ உங்கள் சிறுவர் களால் முடிவதற்கு அவர்களுக்குத் தேவையான புண்ணியங்களையும் நற்குணங்களையும் இந்த மலர்கள் குறிக்கின்றன. ரோஜா அன்பின் அடையாளம், வயலட் மலர் தாழ்ச்சிக்கும், சூரியகாந்தி கீழ்ப்படிதலுக்கும், மலைநீலப்பூ தவம் மற்றும் சுய ஒழுக்கத்திற்கும், கோதுமைக் கதிர்கள் அடிக்கடி நன்மை வாங்குவதற்கும், லீலி, மாசற்றதனத்திற்கும், பசுமை மாறாத மலர்க்கிளைகள் சீராகவும், நிலையாகவும் இருத்தலுக்கும் அடையாளம்.”

“உன்னை விட இந்த மலர்களால் அதிக நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தவர்கள் வேறு யாருமில்லை. நீ இறந்த போது, உனக்கிருந்த அனைத்திலும் பெரிய ஆறுதல் எது என்று எனக்குச் சொல்” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவன் பதிலுக்குக் கேட்டான்.

நான் நினைத்தது என்ன என்று சொல்ல நான் பல முறை முயற்சி செய்தேன். உதாரணமாக: ஒரு மாசற்ற வாழ்வு வாழ்ந்தது, அவனது அனைத்து நற்செயல்களையும் கொண்டு மோட்சத்தில் தனக்கென மிகப் பெரும் பொக்கிஷத்தைக் குவித்து வைத்தது, இன்னும் பல காரியங்களை நான் சொன்னேன். ஆனால் எல்லாவற் றிற்கும் அவன் ஒரு புன்னகையோடு தலையை அசைத்து மறுத்துக் கொண்டேயிருந்தான்.

“அப்படியானால் நீயே சொல்” என்றேன் நான், என் தோல்வியால் மனம் சோர்ந்தபடி. “அது என்ன?"

“நான் இறந்தபோது எனக்கு அனைத்திலும் அதிக உதவியா யிருந்ததும், எனக்கு அனைத்திலும் மேலான மகிழ்ச்சியைத் தந்ததும் என்னவென்றால், கடவுளின் மகத்துவமுள்ள திருத்தாயாரின் அன்பு மிக்க அக்கறையும், உதவியும்தான். உங்கள் மகன்கள் உயிரோ டிருக்கும் வரையிலும் தேவ அன்னைக்கு நெருக்கமாகவே இருந்து கொள்ளத் தவறிவிடாதபடி அவர்களிடம் கூறுங்கள். ஆனால் இப்போது துரிதப்படுங்கள் - கிட்டத்தட்ட நேரமாகி விட்டது” என்று பதிலளித்தான் டோமினிக்.

“எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்று நான் கேட்டேன்.

“வரும் ஆண்டில் நீங்கள் பெரும் துயரங்களைத் தாங்க வேண்டியிருக்கும். உங்கள் மகன்களில் மொத்தம் எட்டுப் பேர் இறந்து போவார்கள். ஆயினும் தைரியமாயிருங்கள் - அவர்கள் இந்த வாழ்விலிருந்து மோட்சத்திற்கே புறப்பட்டுச் செல்வார்கள். கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். இறக்கவிருக்கும் சிறுவர் களுக்குச் சமமான தகுதியுள்ள வேறு மகன்களை அவர் உங்களுக்குத் தருவார்.”

“சலேசிய சபைக்கு என்ன ஆகும்?”

"கடவுள் அதற்காக பெரிய காரியங்களைத் திட்டம் செய்து வைத்திருக்கிறார். வரும் ஆண்டில் ஒரு காரியம் துவங்கி, வடக்கு முதல் தெற்கு வரையிலும், கிழக்கு முதல் மேற்கு வரையிலும், உலகம் முழுவதும் பரவும். இது எதிர்காலத்தின் அநேக மிகப் பெரும் வளர்ச்சிகளில் ஒன்றுதான். ஆனாலும், உம் மகன்கள் தங்களுடை யவைகளை அல்ல, மாறாக, கடவுளின் வழியையும், அவருடைய திட்டத்தையும் கைக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இது இப்படி நடக்கும்.” (குறிப்பு: இது அநேகமாக சலேசிய பத்திரிகை பற்றிய தீர்க்கதரிசனமாக இருக்கலாம். அது 1877-ல் தொடங்கி, உலகம் முழுவதும் பரவியது. அது குருத்துவ, துறவற உருவாக்கத்தின் ஒரு கருவியாகவும், மூன்றாம் சலேசியக் குடும்பம், சலேசிய ஒத்துழைப்பாளர்கள் ஆகியோருக்கான தகவல் பரிமாற்றக் கருவி யாகவும் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் கிறீஸ்தவக் குடும்ப வாழ்வுக்கு அது தனது மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது.

“உங்கள் குருக்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிக்கும், கடவுள் உங்களுக்குக் காட்டியுள்ள வாழ்வு முறைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருக்க முடிந்தால், சலேசிய சபையின் எதிர்காலம் அசாதாரணமான ஒன்றாக இருக்கும். அதன் வழியாகக் கடவுளிடம் கொண்டு வரப்படுபவர்களின் தொகை எண்ணப்பட முடியாததாக இருக்கும். ஆயினும் மேலும் ஒரு மிக முக்கியமான நிபந்தனை: அதாவது நீங்கள் எல்லோரும் எப்போதும் கடவுளின் மகத்துவமுள்ள திருத்தாயாருக்கு நெருக்கமாக நிலைத்திருக்க வேண்டும். உங்கள் முன்மாதிரிகையால், கடவுளுக்கு மிகவும் பிரியமான ஒரு மாசற்ற, கற்புள்ள வாழ்வின் மேன்மையை அச்சமின்றி எப்போதும் அறிக்கையிட வேண்டும்.”

அதன்பின், “பொதுவில் திருச்சபைக்கு என்ன நிகழும்?” என்று நான் கேட்டேன்.

“திருச்சபைக்கு என்ன நிகழப் போகிறது என்பதைக் கடவுள் ஒருவரே அறிவார். இந்தக் காரியங்களை அவர் தமக்கென ஒதுக்கி வைத்துக் கொள்கிறார். அவை எந்த ஒரு சிருஷ்டிக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்பட முடியாது.”

“ஒன்பதாம் பத்திநாதரின் எதிர்காலம் என்ன?” என்று நான் கேட்டேன்.

“இந்த அளவுக்கு என்னால் சொல்ல முடியும். இன்னும் அதிக காலம் அவரால் பூமியின்மீது நிலைத்திருக்க முடியாது. அவருடைய விசுவாசமுள்ள ஊழியத்திற்காகக் கடவுள் அவருக்கு வெகுமானம் அளிப்பார். திருச்சபை தற்போதைய கஷ்டங்களால் மூழ்கிப் போய்விடாது.”

“எனக்கு என்ன ஆகும்?” என்று நான் கேட்டேன்.

“இன்னும் பல துயரங்களும், கஷ்டங்களும் உங்கள் முன் வர இருக்கின்றன. . . ஆனால் இப்போது விரைந்து செல்லுங்கள், என் நேரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.”

என்னால் முடிந்தால் அவனை நிறுத்தி வைக்கும்படி நான் என் கைகளை நீட்டினேன். ஆனால் என் கரங்களால் காற்றைத்தான் பிடிக்க முடிந்தது. டோமினிக் புன்னகைத்தபடி:

“நீங்கள் என்ன செய்ய முயல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“உன்னைப் போக விட எனக்கு விருப்பமில்லை” என்று நான் சொன்னேன். “ஆனால் நீ உன் உடலோடு இங்கே இருக்கிறாயா? நீ உண்மையாகவே என் மகன் டோமினிக்தானா?"

“காரியங்கள் நிகழும் விதம் இதுதான்: கடவுளின் பராமரிப்பில் இறந்தவர் யாராவது, இன்னும் உயிரோடிருக்கிற ஒருவருக்குத் தோன்ற வேண்டியுள்ளது என்றால், அவர் தன் சாதாரண உடல் தோற்றத்திலும், தனிப்பட்ட குணங்களோடும் தான் காட்சியளிப்பார். ஆயினும் அவருடைய உடலைத் தொட முடியாது. ஏனெனில் அவர் ஒரு சுத்த அரூபியாக (உடலற்றவராக) இருப்பார். இறுதி உயிர்த்தெழுதலில் அவர் தம் உடலோடு மீண்டும் இணைக்கப்படும் வரையிலும், இந்த உடல் தோற்றத்தை அவர் தக்க வைத்துக் கொள்கிறார்.”

''ஒரு கடைசிக் காரியம்” என்று இப்போது நான் சொன்னேன்: “என் எல்லாச் சிறுவர்களும் கடவுளின் குழந்தைகளாக வாழ்கிறார்களா? அவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவுவதை எனக்கு சாத்தியமாக்கும் எதையாவது எனக்குச் சொல்.”

“நீங்கள் உங்கள் சிறுவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம். எப்படி என்று இந்த மூன்று காகிதங்களும் குறித்துக் காட்டும்.”

அவன் முதல் காகிதத்தை என்னிடம் தந்தான். அதன்மீது பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வார்த்தை: